AP Photo/Eranga Jayawardena via Yahoo News

“வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…”

கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில்

அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில​ அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் சென்றது போல முடிவில்லாத உழைப்பு. அவர்கள் ஒரு குவியலை துப்பரவு செய்து முடிக்கும் பொழுது கடலலைகள் மேலும் மேலும் குவியல்களை எடுத்து வந்து கொட்டுகின்றன. மீன்கள், கடற் பறவைகள், ஆமைகள், டொல்பின்கள் என்பவற்றின் சடலங்கள் கரையில் வந்து ஒதுங்குகின்றன. தடுக்கப்பட்டிருக்கக்கூடிய, ஆனால் தடுக்கத் தவறிய பேரழிவு ஒன்றின் முதல் பலிகள் அவை.

ஒரு சில மைல்களுக்கு அப்பால், யதார்த்த உலகத்திற்கு அப்பால் ராஜபக்‌ஷாக்களை பொறுத்தவரையில் வழமையாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டபாய தனது சகோதரரின் மகன் நாமலுக்கு பல முக்கிய துறைகளை உள்ளடக்கிய ராஜாங்க அமைச்யொன்றை வழங்குகின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆறு வீதிக் கட்டுமான கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றார். இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய கடல் சூழல் அனர்த்தம் வேறு யாரோ ஆட்களுக்கு நடந்திருப்பது போல் தான் தெரிகிறது. எத்தனையோ உலகங்கள் இங்கிருக்கின்றன.

எத்தனையோ உலகங்கள் இங்கே.

ராஜபக்‌ஷ ஆட்சி ஓர் உலகத்தில் நடக்கிறது. நாங்கள் வேறு ஒரு உலகத்தில் வசித்து வருகின்றோம்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் உலகத்தில் இலங்கை பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதில் உலகின் ஒரு முன்னணி நாடாக இருந்து வருவதுடன், செயல்திறன் மிக்க விதத்திலும், நியாயமான விதத்திலும் அந்த உலகம் தடுப்பூசி போடுவதில் ஒரு தலைசிறந்த முன்மாதிரியாக உள்ளது. அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்குவதற்கு போதியளவில் பணம் இருக்கின்றது. பங்களாதேஷுக்கு பல மில்லியன் டொலர்களை கடனாக அளிக்கின்றது.

ஆனால், நாங்கள் வாழும் உலகில் எல்லாமே தலைகீழாக உள்ளன.

சுற்றாடல் சேதமடையும் பொழுது பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. ஒக்ஸ்பாம் மற்றும் Swiss Re நிறுவனம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சிகளின் பிரகாரம், காலநிலை மாற்றம் காரணமாக​ G7 நாடுகள் 30 வருட காலத்திற்குள் ஆண்டொன்றுக்கு தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5%ஐ இழக்கவுள்ளன. இந்த இழப்பு பெருந்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்திலும் பார்க்க இரு மடங்கானதாகும்.

பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் அனர்த்தம் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது எடுத்து வரக்கூடிய இழப்பு கணிக்க முடியாததாக இருந்து வருகின்றது. இந்தப் பேரழிவு, கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை என்பன தொடக்கம் முக்கியமான பல துறைகளின் மீது நேரடியாக தாக்கத்தை எடுத்துவரும். பிளாஸ்ரிக் துகள்கள்  “சூழலில் விஷ இரசாயனப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதாக” கடல் உயிரியல்  நிபுணர் ஆஷா டி வொஸ் CNN க்கு கருத்து தெரிவிக்கும் பொழுது கூறியுள்ளார். அவை கண்டல் தாவரக் காடுகளில் தேங்கி நின்று, ஆறுகளுக்குள் கூட பிரவேசிக்க முடியும். அப்படி நடந்தால் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அழிவாக அது இருந்து வரும்.

“இந்தத் தாக்கம் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடிக்க முடியும். மீன் வளம் மட்டுமன்றி, கடல்புல் மற்றும் பறவைகள் கூடு கட்டும் வாழ்விடங்கள், கடல் பாலூட்டிகள் மற்றும் பாம்புகள் என்பவற்றின் மீது அது தாக்கத்தை எடுத்து வர முடியும்” என்கிறது வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்” (The Island – 6.6.2021).

“இரண்டு துறைமுகங்கள் அனுமதி மறுத்த ஒரு கப்பலுக்கு கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்” என்பது தொடக்கம் இதில் பல கேள்விகள் பதில் வேண்டிக் கிடக்கின்றன (இந்தக் கொள்கலன் முனையம் சீனாவின் CM Ports கம்பனியினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது). மேலும், கப்பலின் கப்டன் அனுப்பி வைத்திருந்த மின்னஞ்சலை இலங்கை முகவர் அழித்தது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், அதிகாரிகள் எவ்வித ஆதாரமுமற்ற அடிப்படையில் ‘அனைத்தும் சுபமாகவே இருந்து வருகின்றன’ என்ற விதத்தில் மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டிருந்தது தான் இங்கிருந்த பிரச்சினை. அந்த அணுகுமுறையை பின்பற்றாதிருந்தால் பிந்திய கட்டத்திலாகிலும் ஒரு சில பொருட்களை பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும்.

Groundviews தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் சூழலியலாளர் ஜயந்த விஜேசிங்க இப்படி கூட்டிக்காட்டுகிறார்: “நிச்சயமாக ஓர் அனர்த்தம் நிகழப் போகின்றது என்கிற நிலையில் இது தொடர்பான மிகச் சிறந்த நிலவரத்தின் (Best Case Stenario) அடிப்படையில் திட்டமிடுவது புத்திசாலித்தனமான ஒரு காரியமல்ல. நிலைமை மிக மோசமாக வருமிடத்து, அதனை எவ்வாறு கையாள்வது என்பதற்குப் பதிலாக, “நிலைமை  மிகச் சிறப்பாக இருந்து வரும்” என்ற அனுமானத்தில் சுமார் ஒரு வார காலமாக இலங்கை திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுதும், கூட இன்னமும் போதியளவிலான எண்ணெய் கசிவுத் தடுப்பு உபரகணங்களை இலங்கை பெற்றுக்கொள்ளவில்லை….”

‘நடப்பன அனைத்தும் நல்லனவாகவே அமையும்’ என்ற விதத்திலான அபரிமிதமான நம்பிக்கை, நிபுணத்துவ அபிப்பிராயங்கள் மீதான வெறுப்பு மற்றும் அறியாமை என்பன ராஜபக்‌ஷ ஆட்சியின் ஒரு சில தனித்துவமான பண்புக்கூறுகளாக இருந்து வருகின்றன. பொருளாதார செயற்பாடுகள் (2019ஆம் ஆண்டின் வரிக் குறைப்புக்கள் மற்றும் தொடர்ச்சியாக நாணயத் தாள்களை அச்சிட்டு வரும் வேகம்)  தொடக்கம் சர்வதேச உறவுகள் (சீனாவை நோக்கிய நகர்வு) வரையில் ஒரு பரந்த வீச்சில் எதனை எடுத்தாலும் அவர்கள் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும், பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்திலேயே இந்தத் தனித்துவ பண்புக்கூறுகளை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது (அவை பல தாக்கங்களையும் எடுத்து வந்துள்ளன). எதற்குமே தயாரில்லாத நிலை, அழிவுகரமான விதத்தில் காரியங்களை ஒத்திவைத்தல், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் மூடநம்பிக்கை என்பவற்றுக்கு முதலிடமளித்து, விஞ்ஞானத்தை தரம் தாழ்த்தும் வழக்கம்  என்பவற்றை பண்புகளாகக் கொண்ட ஓர் அரசை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

முதலாவது அல்லது இரண்டாவது தொற்று அலைகளை தவறான விதத்தில் கையாண்டது கூட பரவாயில்லை. ஆனால், மூன்றாவது அலையைப் பற்றி என்ன சொல்வது? அதாவது, சிறிசேன – விக்கிரமசிங்க நிர்வாகம் உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் தவறியிருந்தது என்பதற்கு இணையான ஒரு காரியமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

ராஜபக்‌ஷாகள் ஆட்சி செய்யும் வரையில் இலங்கை தொடர்ந்தும் தவிர்த்துக் கொள்ளக்கூடிய ஓர் அனர்த்தத்திலிருந்து மற்றொரு அனர்த்தத்ததை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும். ஒரு சாகுபடி பருவத்திலிருந்து மற்றைய பருவம் வருவதற்குள் முழு நாட்டிலும் இரசாயன உர வகைகளிலிருந்து சேதன உர வகைகளை நோக்கிய ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கான ஜனாதிபதியின் திட்டம் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.

இரசாயன உர வகைகளிலிருந்து சேதன உர வகைகளை நோக்கிய நிலை மாற்றம் பாராட்டத்தக்கதாக இருந்து வருவதுடன், ஒரு அவசியமான குறிக்கோளாகவும் உள்ளது. ஆனால், அதற்கு ஆராய்ச்சி, திட்டமிடல் மற்றும் காலம் என்பன தேவைப்படுகின்றன. எத்தகைய முன்யோசனைகளும் இல்லாமல் (அநேகமாக ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றவராக வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்ற விருப்பினால் தூண்டப்பட்ட விதத்தில்) ஒரு சில மாதங்களுக்குள் அதனை முன்னெடுப்பதற்கு முயற்சிப்பது, அபாயகரமான இரசாயனப் பொருட்களை கசியச் செய்யும் கப்பல் ஒன்றை எமது ஆள்புல நீர்ப்பரப்புக்குள் அனுமதித்ததற்கு இணையான ஒரு குற்றச்செயலாகும்.

இலங்கையை பொறுத்தவரையில் பேரழிவு என்பது இப்பொழுது ஒரு சகஜ நிலைமையாக இருந்து வருகின்றது.

கோமாளிகளின் கும்மாளம்

நகரத்தில் இப்பொழுது புதிய அனுமான விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ‘பயணத் தடைகளுடன்’ கூடிய தற்போதைய நிலைமை எது வரையில் நீடிக்கும்? அது ஜூன் 14ஆம் திகதி முடிவுக்கு வருமா? அல்லது மற்றொரு வாரம் அல்லது இரு வாரங்கள் நீடிக்கப்படுமா? ஒவ்வொரு நாளும் புதிய புதிய அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொவிட் – 19 நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணங்களை இராணுவத் தளபதி விளக்குகிறார். இலங்கையில் மூன்றாம் தர பத்திரிகையாளர்களே கொல்லப்படுகின்றார்கள் என்கிறார் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பின்னர் அவர் இந்தக் கூற்றை விலக்கிக் கொண்டுள்ளார்). ஜனாதிபதியின் சகோதரரின் மகனும், பிரதமரின் மகனுமானவர் தடுப்பு மருந்தேற்றம் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதேவேளையில், மருத்துவ நிபுணரான பெருந்தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தெழுகிறார் (அல்லது வாழ்க்கை குறித்து தியானித்துக் கொண்டிருக்கிறார்). பெருந்தொற்று காரணமாக தமது கிளைகளை ஒரு வாரத்திற்கு மூடிவிடுவது என வர்த்தக வங்கிகள் முடிவு செய்கின்றன. வங்கிகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென கட்டளையிடும் விசேட சுற்றறிக்கை ஒன்றை மத்திய வங்கி வெளியிடுகின்றது.

தொற்று பரவல் எண்ணிக்கையை காட்டும் வளைகோடு இன்னமும் தட்டையாக இருந்து வரும் அதே நேரத்தில், பரிசோதனைகள் சுமார் மூன்றில் ஒன்று அளவில் குறைவடைந்துள்ளன. ஒரு நபர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் பொழுது, குடும்பத்தைச் சேர்ந்த ஏனையவர்களுக்கும் அந்தத் தொற்று ஏற்பட்டிருக்க முடியும் என்ற அனுமானத்தில் வெளியேறும் பொழுது மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறுகின்றார். நோய்த் தொற்றை பெற்றுக்கொண்டிருக்க முடியுமென அனுமானிக்கப்படும் (ஆனால், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாத) இந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளாந்த தொற்று எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றதா? அல்லது பரிசோதனைகளை (செயற்கையாகவும், தவறான விதத்திலும்) குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்ளும் அதே பழைய விளையாட்டின் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றதா?

இன்னமும் இலக்க விளையாட்டே இடம்பெற்று வருகின்றது. கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையை கணிப்பது எப்படி என்பது குறித்து ஒரு புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. மரணிப்பவரின் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது என கண்டறிப்பட்டாலும் கூட, அவர் வேறு ஏதேனும் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் மரணம் கொவிட் -19 தொற்று காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பதனை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒரு பிரேத பரிசோதனை நடத்தப்படுதல் வேண்டும். முன்னர், வேறு பல நாடுகளைப் போலவே, மரணம் கொவிட் மரண எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதே வேளையில், வேறு நோய்களும் இருந்தன என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பொழுது மரண எண்ணிக்கைகளை குறைத்து வைத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக வேலைப்பளு மிகுந்த எமது மருத்துவர்கள் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி ஒன்று மட்டும் போட்டால் போதுமானது எனக் கூறி கண்டியைச் சேர்ந்த மக்கள் ஆவணமொன்றில் கையொப்பமிடுவதற்கு  நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள் (ஸ்புட்னிக் V தடுப்பூசி இரண்டு தடவை போடப்படுதல் வேண்டும். ஸ்புட்னிக் Lite தடுப்பூசியை மட்டுமே ஒரு தடவை போட்டால் போதுமானது). ஸ்புட்னிக் V தடுப்பூசி தொடர்பாக தடுப்பூசி வழங்கல் சங்கிலியில் இடையூறுகள் எவையும் இல்லாத நிலையிலும், தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கென உலக வங்கி 80.5 மில்லியன் டொலர் கடனொன்றை வழங்கியிருக்கும் நிலையிலும் மக்கள் ஒரு தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொள்ள வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திப்பது ஏன்? (இந்த புத்திகெட்ட செயற்பாடுகளில் ராஜபக்‌ஷவின் சகாக்களுக்கு தானும் இணையாக இருந்து வர முடியும் என்ற விடயத்தை நிரூபிப்பதற்கோ என்னவோ தடுப்பூசி வழங்கும் விடயத்தில் அனைத்து சமயத் தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்).

உலகில் மிக மோசமாக அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்தைக் கொண்டுள்ள நாடு என்ற பெருமைக்கு இலங்கை உரிமை கோர முடியும். அரசாங்க ஆதரவு Lanka C News இணையதளத்தின் பிரகாரம், தமது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, தமது பிரதேசங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதாதைகளை வைத்துள்ளார்கள். தமக்கு வேண்டியவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் ‘சிட்’ முறை மாத்தறை, காலி மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள மொரட்டுவையில் பின்பற்றப்பட்ட நடைமுறையை பாராட்டிய விடயம் Lanka C News இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது: “அது சரியான வழிதான்;. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அதிகாரிகள் படித்த மிருகங்கள்” (அநேகமாக ஒரு படிக்காத மிருகமாக இருந்து வரக் கூடிய) அந்தக் கனவான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்.

மொரட்டுவ நகர பிதா கைது செய்யப்பட்ட சம்பவம், தடுப்பூசியேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒட்டுமொத்தமான அரசியல்மயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்து வரவில்லை என்பது தெளிவாகும். அதற்கு மாறாக, அது ஒரு நாடகமாகவே இருந்து வந்தது. தனது சகாக்கள் அரசியல் ரீதியில் தூண்டப்பட்ட தடுப்பூசியேற்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வகை செய்யும் விதத்திலேயே அவர் பலி கொடுக்கப்பட்டுள்ளார்.

அந்தஸ்து, செல்வம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆட்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகள் என்பவற்றை எவ்விதத்திலும் பொருட்படுத்தாத விதத்தில் பயணத் தடைகள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பிறந்ததின கொண்டாட்டம் ஒன்றை நடத்தியது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஷங்ரிலா போன்ற ஹோட்டல்கள் மீது யாரும் கைவைக்கப் போவதில்லை. புத்தளம் நகர பிதாவின் இறுதிக் கிரியைகளின் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஆயிரக் கணக்காணோர் ஒன்று திரண்டிருந்தார்கள். அதே வேளையில், மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரதமர் அடிக்கல் நாட்டிய அதிவேக நெடுஞ்சாலையில் மூதலீடு செய்யப்பட்ட தொகையை ஈடுசெய்து கொள்ளும் வரையில், அது சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டு, உரித்தாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வரும். பிரித்தானியர்கள் இலங்கையை விட்டுச் சென்ற பின்னர் வெளிநாடு ஒன்றுக்குச் சொந்தமான முதலாவது நெடுஞ்சாலையாக அது இருந்து வரும். Fonterra Lanka லிமிடெட் நிறுவனம் அதன் பொதிப்படுத்தலில் தமிழை விடுத்து சிங்களம், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்ட விடயத்தை நியாயப்படுத்தியிருந்தது. பொதிப்படுத்தலில்; “இந்நாடுகளில் பொதுவாக பேசப்படும் மொழிகளை உள்ளடக்கியிருந்ததாக” கூறப்பட்டது (யூன் – 4). சீன மொழி இலங்கையில் (அல்லது தென்னாசியாவிலும் கூட) பொதுவாக பேசப்பட்டு வரும் ஒரு மொழியாக இருந்து வருகின்றதா? அதே வேளையில், தமிழ் பொதுவாக பேசப்பட்டு வரும் ஒரு மொழியாக இருந்து வரவில்லையா? சாதாரண இலங்கையர்களாகிய நாங்கள் அறிந்திராக இலங்கையின் குடிசனவியல் பண்புகள் குறித்த ஏதேனும் விடயங்களை  Fonterra Lanka கம்பனி தெரிந்து வைத்துள்ளதா?

(அகிலத்தின் ஜெனரல் என தன்னைக் கூறிக் கொள்ளும்) பெயரற்ற சர்வாதிகாரி (‘Autumn of the Patriarch’ என்ற நூலில்) தான் கடன் வாங்கியிருந்த பணத்தை அமெரிக்க போசகர்களுக்கு திருப்பிச் செலுத்தத் தவறுகிறார். அமெரிக்கர்கள் பழிவாங்கும் ஒரு செயலாக கரிபியாவை புறம்பாக பிரித்தெடுத்து, அதை அரிசோனாவில் கொண்டு போய் வைக்கிறார்கள். மணல் தூசுடன் கூடிய ஒரு பாலைவனம் மட்டுமே எஞ்சுகின்றது. சர்வாதிகாரி ஒரு காற்றாலையை மட்டும் வைத்துக்கொண்டு திருப்தியடைகின்றார். இழந்த காற்றுக்களின் ஆவிகளை அனுபவிப்பதற்கு அது அவருக்கு இடமளிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு கட்டடத்தில் சீன தேசியக்கொடி பறக்கும் படம் ஒன்றை இந்த வாரம் பல இணையதளங்கள் வெளியிட்டிருந்தன. ஒரு சில நாட்களுக்கு முன்னர் Belt and Road Sri Lanka இணையதளம் சீனாவில் உண்மையில் ஒரு இலங்கை இளவரசி இருந்து வருகின்றார் எனத் தெரிவித்திருந்தது. 6ஆம் பராக்கிரமபாகு மன்னனின் அரண்மனையிலிருந்து சென்ற இளவரசர் ஒருவரின் 19ஆவது தலைமுறை வாரிசாக அவர் குறிப்பிடப்படுகின்றார். மறைந்திருக்கும் அந்த இளவரசி பீஜிங்கில் எமது தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த வெசாக் கொண்டாட்டங்களின் போது முதல் தடவையாக முகம் காட்டியிருந்தார்.

அசாதாரணம் மற்றும் சகஜ நிலைமை என்பவற்றுக்கிடையிலான வித்தியாசம் மறைந்து போய், எந்த அபத்தங்களும் அபத்தங்களாக கருதப்படாத தற்போதைய நிலையில், இன்று சாத்தியப்படாத விடயங்கள் நாளை சாத்தியமாக முடியும். அதே போல, முன்னர் பொன்மயமான கடற்கரைகளாக இருந்த இடங்கள் விஷக் கழிவுகள் திரண்டிருக்கும் நிலங்களாக மாற்றமடைய முடியும்.

முடிவு காலத்தை குறைத்து மதிப்பிடாதிருப்பது நல்லது.

மரணப் பள்ளத்தாக்தை நோக்கி?

சர்வாதிகாரம் என்ற அவலட்சணத்தில் அடிப்படை உள்ளீடுகளாக பயங்கரம் மற்றும் கோமாளித்தனம் என்பன இருந்து வருகின்றன. ‘Autumn of the Patriarch’ நூலில் ஆட்களை சித்திரவதை செய்யும் மற்றும் கொலை செய்யும் சர்வாதிகாரி அழகு ராணியை தெரிவு செய்வதற்கான போட்டியையும் வருடாந்தம் ஏற்பாடு செய்கிறார். மக்களுக்கு கூட்டிப்பெருக்குவதை சொல்லிக் கொடுப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திலும் இலவசப் பாடசாலைகளையும் அமைக்கிறார். ‘இல்லை’ என்று சொல்பவர்கள் அல்லது அதிகாரத்தை வைத்திருப்பவரின் வெறுப்பை தெரியாமலேயே தேடிக் கொள்பவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மீதே பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இணைந்து பயணிக்க விரும்புவர்கள், தம்மைச் சூழவிருக்கும் யதார்த்ததைப் பார்க்க மறுப்பவர்கள், கேட்க மறுப்பவர்கள் போன்ற பெரும்பான்மையினருக்கு கோமாளிக்கூத்து அரங்கேற்றப்படுகின்றது.

பெருந்தொற்று ராஜபக்‌ஷாக்கள் தமது அதிகாரத்தை மேலும் உயரளவில் துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பளித்துள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் காணாமலாக்கப்பட்ட ஆட்கள் தொடர்பான அலுவலகத்தின் (OMP) தலைவராக கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். லசந்த விக்கிரமதுங்கவின் கொலை புலன் விசாரணையை தவறான விதத்தில் நெறிப்படுத்தியிருந்ததாக இதே அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. OMPயின் தற்போதைய தலைவர் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருந்து வருவதுடன், அவர் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் தலைவர் என்ற முறையில் OMPயினால் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கேட்கப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்ட சம்பவங்களை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பல சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்திருந்தார். ராஜபக்‌ஷாக்கள் கோழிக்கூட்டை அகற்றுவதில்லை. அவர்கள் வெறுமனே நரிகளை கோழிக்கூட்டின் காவலர்களாகவும், கோழிகளின் பாதுகாவலர்களாகவும் ஆக்குகின்றார்கள்.

தமது குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற வெலிகமையைச் சேர்ந்த சுனில் இந்திரிஜித் மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர் ஆகியோரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 22 வயதான சந்திரன் விதுசன் என்பவரும் போதைப் பொருட்களை வைத்திருந்ததாக கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இப்பொழுது அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டார்கள் என அக்குடும்பங்கள் இப்பொழுது குற்றம் சாட்டுகின்றன.

பெருந்தொற்று தவறான விதத்தில் கையாளப்பட்டு வரும் ஒரு பின்புலத்தில், வறியவர்கள் மற்றும் அதிகாரமற்றவர்கள் அனுபவித்து வரும் நிச்சமற்ற வாழ்க்கைக்கான ஒரு குறியீடாகவே இவர்களுடைய கதைகள் இருந்து வருகின்றன.

சுனில் இந்திரஜித் என்பவரின் மகள் கொக்கலையில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதுடன், அங்கு நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். பெரும்பாலான ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் மிகக் குறைந்த வசதிகள் மற்றும் சம்பள வெட்டுக்கள் என்பவற்றுக்கு மத்தியில் பெருந்தொற்றுக் காலம் நெடுகிலும் வேலை செய்து வந்துள்ளார்கள். அவர்கள் (தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து) உள்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியில் பகுத்தறிவைக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசியேற்றியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, சுகாதார ஒழுங்குவிதிகள் தொடர்பாக கிஞ்சித்தும் கரிசனை காட்டாமல் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

(இரண்டாவது கொவிட் அலையின் மையத்திலிருந்து வந்த அதே Brandix கம்பனியினால் நிர்வகிக்கப்பட்டு வரும்) தொழிற்சாலை ஒன்றுக்கு விஜயம் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முயற்சித்த பொழுது, தாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வருவதை அவர் உணர்ந்தார். ஊடக அறிக்கைகளின் பிரகாரம், பொலிஸார் அவருடைய வீட்டுக்குச் சென்று, தொழிற்சாலைக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் அங்கு சென்றிருந்த பொழுது, அத்தொழிற்சாலை ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு வலயமாக இராணுவம் மற்றும் பொலிஸார் ஆகியோரின் காவலின் கீழ் இருந்து வந்ததைப் பார்த்தார்.

இந்த வாரம் ஜனாதிபதி மற்றொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.  அதில் பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு அலகு, ஒரு தடுத்து வைப்பு நிலையமாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரு மௌலவிமார், தாம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை அறியாதிருந்த போதிலும், அவர் மீது குற்றம் சுமத்துமாறு தம் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள். அவர்களுடைய வழக்கறிஞர் சமர்ப்பித்திருந்த அடிப்படை மனு ஒன்றின் பிரகாரம் அது தெரிய வந்துள்ளது (டெய்லி மிரர் – 1.6.2021). ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஷானி அபசேகரவை போலவே அதிகாரத்தை வைத்திருக்கும் நபர் ஒருவருக்கு தொந்தரவு அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தாரா? இலங்கை தகவல் தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் ராஜீவ் குருவிட்டகே மேத்யூ என்பவரின் கதி என்னவாகப் போகின்றது? பொய்யான வாக்குமூலங்களை வழங்கியதாக இந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இலக்கு வைக்கப்பட்ட கைதுகளின் ஊடாக மாற்றுக் கருத்துக்களை அடக்கியொடுக்கும் தொடர்ச்சியான முயற்சியின் மற்றொரு படியாக இது இருந்து வருகின்றதா?

இலங்கை ஒரு சாபக்கேட்டின் கீழ் இருந்து வருவதாக அண்மையில் கார்டினல் மல்கம் ரஞ்சித் கூறியிருந்தார். முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் அப்படியே நினைக்கின்றார். கடவுளின் கோபப் பார்வையை தணிப்பதற்கு தொடரான சில முயற்சிகளையும் அவர் திட்டமிட்டு வருகின்றார்.

தமது வம்சத்தை கட்டியெழுப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஒரு அரசாங்கத்தின் சாபமே இலங்கையை பீடித்துள்ளது. தமது சொந்த நலனுக்காக மக்கள் மீது இனத்துவ சமய ரீதியான அச்சமொன்றை அவர்கள் தோற்றுவித்துள்ளார்கள். பாராட்டத்தக்க ஒரு சில விதிவிலக்குகள் தவிர, அதனுடைய சொந்த அரசியல் செயற்திட்டத்திலும், அரசியல் சில்லறைத் தனங்களிலும் எதிர்க்கட்சி சிக்கியுள்ளது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருக்கும் ஒரு இடத்தில் நாங்கள் சிக்கியிருக்கின்றோம். விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில பிரஜைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் துணிகரமான சமூகச் செயற்பாடுகளே இந்த சோதனை மிக்க காலப் பிரிவில் ஓரளவுக்கு நம்பிக்கையை தந்து கொண்டிருக்கின்றன.

திஸரணி குணசேகர

Kali Yugayan now? என்ற தலைப்பில் ஜூன் 9 2021 ‘டெய்லி எவ்டி’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.