Photo: Selvaraja Rajasegar
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அனைத்து வயதினரையும், அனைத்து இனங்களையும், அனைத்து சமூக வர்க்கங்களையும் கொண்ட இலங்கையர்களின் வாழ்க்கையைத் தொட்டே முடிவுக்கு வந்தது. தந்தைகள், மகன்கள், மகள்கள், மனைவிகள் என யாவரும் கொல்லப்பட்டனர். படுமோசமாகக் காயமடைந்தனர். போரில் தப்பிய ஆயிரக்கணக்கானோர் உடலிலும் மனதிலும் போரின் வடுக்களுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆயினும்கூட, நம்மில் பலருக்கு, போர் என்பது தொலைக்காட்சித் திரையொன்றில் உலகின் தொலைதூரப் பகுதிகளில் சண்டையிடுவதைப் பற்றிய ஒரு பத்திரிகையாளரின் அறிக்கை மூலம் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்வாகவேயுள்ளது. எங்கள் குடும்ப அறையில் நெருங்கிய ஒருவரின் உணர்ச்சி அனுபவம் போர்க்கால நினைவுகளின் முழு சேகரமாக இருக்கலாம். ஆனால் புகைப்படங்கள், சீரான பேட்ஜ்கள், பதக்கங்கள், நாற்குறிப்பேடுகள் போன்ற உருப்படிகள் கூட தெளிவற்றதாகவும் அவற்றின் உரிமையாளரின் வாழ்க்கையுடன் தொடர்பில்லாததாகவும் தோன்றலாம். ஆம், சமாதான காலத்தில் பிறந்தவர்களுக்கு அல்லது போரின் எந்த வாடையையும் நுகர்ந்தில்லாதவர்களுக்கு போர் என்பது அன்றாட வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இருப்பது.
போரின் வெற்றியை மட்டுமே கொண்டாடும் ஒரு நாட்டில் நாங்கள் வாழ்கிறோம். இங்கே, வெகுஜன குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் தெருக்களில் சுதந்திரமாகவும் கம்பீரமாகவும் நடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் இன்று அதிகார நாற்காலிகளில் அமர்ந்து நாட்டிற்கான சட்டங்களை உருவாக்கும் துரதிர்ஷ்டத்தை கொண்டிருக்கிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாடு நீதியை மீட்டெடுக்கும் கருப்பொருளை எட்ட முடியாத பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொடூரமான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மீட்டெடுப்பதில் நான்கு அத்தியாவசிய கூறுகள் இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது:
- குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல்
- குற்றத்திற்கு வழிவகுத்த செயல்களைக் கண்டித்தல்
- உயிர் பிழைத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல்
- நினைவுகூரல், என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்துதல். இதனால் செயல்கள் மீண்டும் நிகழாது.
என்ன நடந்தது என்பதை ஒப்புக்கொள்வது மக்களுக்கு – தனிநபர்களுக்கும் நாடுகளுக்கும் – கடந்த காலத்துடன் இணங்க உதவக்கூடியது மட்டுமல்ல, சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேற உதவக்கூடியது. ஒப்புதல் என்பது ஒரு நாட்டின் முறையான மன்னிப்பு. குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுந்தான் ஓர் அரசினால் மன்னிப்புக் கோர முடியும். நிறவெறி சகாப்தத்திற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிலும், மொராக்கோ, சிலி, ஆர்ஜென்டினாவிலும், முன்னாள் யூகோஸ்லாவியாவிலும் நடந்த அட்டூழியங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான பொறிமுறை சாதகமாக அமைவதற்கு உண்மையறிதல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் பெரிதும் உதவின.
அநீதிகள் ஒப்புக் கொள்ளப்படாவிட்டால் அவற்றைத் தீர்க்க முடியாது. ரோமா மக்களின் துன்பம் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அப்படியானால், ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் நினைவுகளை இன்னும் பச்சையாகக் கொண்ட மக்களுக்கு உதவ வலுவான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்; அவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாகுபாடுகளைத் தடுக்க அவர்கள் இன்னும் அதிகமாகச் செயல்புரிய வேண்டும்.
குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான பொறுப்புக்கூறல் நிலையை இலங்கையில் இன்னும் காண்பதற்கில்லை. மாறி மாறி ஆட்சியில் இருந்த சிங்களப் பேரினவாத அரசாங்கங்கள் தம் பங்கிற்கு செய்த தவறுகளையும் குற்றங்களையும் ஒப்புக் கொள்ளும் நிலையில் இன்னும் இல்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் கடந்த 12 ஆண்டுகள் காலத்தில் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையும் நிகழ்ச்சிகளையும் யதார்த்தத்திற்குப் புறம்பாகச் சோடிப்பதிலும் விவாதிப்பதிலுமே இலங்கை அரசாங்கங்கள் கவனஞ்செலுத்தியிருந்தன.
குற்றங்களை ஆராய்ந்தறிய ஒரு முழு விசாரணை தேவை. அவை பொறுப்புமிக்கவர்களால் கண்டனம் செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டுவரப்பட வேண்டும். இறுதிப் போரில் சரணடைந்தவர்கள், போரின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த எந்தவொரு தகவலையும் அரசாங்கத்தால் இன்னும் நியாயமான முறையில் முன்வைக்க முடியவில்லை. நிகழ்கால அரசாங்கம் பெயருக்கேனும் இருந்த உண்மையறியும் விசாரணை ஆணைக்குழுக்களையும் இல்லாமல் செய்துவிட்டது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து தகவலறிந்து விசாரிக்கும் செயன்முறைகளின் கதவுகளும் சாத்தப்பட்டுள்ளன.
நீதியை மறுசீரமைப்பதற்கான முக்கியமான கூறுகளில் இழப்பீடு என்பது தவிர்க்க முடியாத ஒரு படிமுறை. இழப்பீடு என்று இங்கு குறிப்பிடப்படுவது, ”போர் வீரர்கள்” என்று புகழப்படும் சிங்களப் படைகளுக்கு மட்டுமானதில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்குமான இழப்பீடு! ஆனால், இன்றும் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் முகாம்களில் வசித்து வருகின்றனர். இராணுவம் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. போரில் சிக்குண்டு உடல் சிதைந்த மக்கள் இன்னமும் மீளமுடியாத துன்பத்தில் உள்ளனர்.
ஒப்புதல், கண்டனம், இழப்பீடு, நினைவூட்டல் இவை எதுவுமே இல்லாத, அநீதி, வெகுஜன மனித உரிமை மீறல்களின் நினைவகம் நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பயன்படும். தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் நோக்கத்திற்காக கூட்டு நினைவுகூரல்களைக் கையாளுவது கிழக்கிலும் வடக்கு முழுவதும் கடுமையான அச்சுறுத்தலான நடவடிக்கையாக உள்ளது.
நீதியின் மறுசீரமைப்புக்கான முழு கட்டமைப்பும் சிதைந்திருக்கும் சூழலில், சமூகங்களை இணைக்க முயற்சிப்பதற்கும், நிகழ்ந்த தீங்குகளைச் சரிசெய்வதிலும் கவனம் செலுத்துவதற்கும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
போரையும், அதன் வடுக்களையும் நினைவுகூர்வது நீதியின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை உயிர்ப்பிப்பதற்கான ஒரு செயன்முறை. நினைவுகூருவதன் மூலம் மட்டுமே வரலாற்றைக் காப்பாற்ற முடியும். நினைவூட்டுவதன் மூலம் காயங்களை குணப்படுத்த முடியும். நிலத்துக்காகவும், வீடுகளுக்காகவும், குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், அவர்கள் வளர்த்துக் கொண்ட மரபுகளின் தொகுப்பிற்காகவும், அவர்கள் நம்பிய எதிர்காலத்திற்காகவும் இறந்த தோழர்களை நினைவில் ஏந்தியிருப்பதை யாரும் தடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. புல்டோசர்களால் முழுவதும் தோண்டியெறிந்து அழித்தாலும், அந்த சிதைகளின் பொருள் நமது கூட்டு தேசிய நனவில் உள்ளது.
நினைவுகூருவதற்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலான தொடர்பு காலப்போக்கில் பின்னோக்கியும் முன்னோக்கியும் நீட்டிக்கப்பட வேண்டும். மனித நடவடிக்கை அல்லது செயலற்ற தன்மை மூலம் கொண்டுவரப்பட்ட பயங்கரமான நிகழ்வுகள் கடந்த காலங்களில் அழிந்துபோன அல்லது வேறுவிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான அடையாளமாக ஓரளவு நினைவில் வைக்கப்பட வேண்டும். ஆயினும், நினைவுகூரலின் முன்னோக்கு அம்சத்திற்குச் சமமாக முக்கியமான ஒரு விடயம், நினைவுகூரல் என்பது சொந்தத் தவறுகளையும் குற்றங்களையும் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கியது என்பதை உணர்வது. பயங்கரமான வன்முறை நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதில் நமது சொந்த பங்கை உணர்வது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றது. இந்தப் புறந்தள்ளும் மனநிலையுடன் மேற்கொள்ளும் நினைவுகூரலுக்கு எந்தப் பொருளும் இருக்கமுடியாது. நினைவுகூரலின் தொடர்ச்சியான படிமுறைகளின்போது பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பை உண்டாக்கிய தரப்பினரும் தத்தம் கறைகளை மெல்ல போக்கிக் கொள்வதற்கான ஒரு உணர்வுப்பாலம் சமைக்கப்படுவது அவசியம்.
இலங்கையில், உள்நாட்டுப் போருக்குப் பின்னரான உத்தியோகபூர்வ நினைவுகூரல் பொதுவாக அரசாங்கங்களால் ஒருதலைப்பட்சமாகவே ஒழுங்கமைக்கப்படுகிறது. கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளவோ அல்லது மனித உரிமைகள் அடிப்படையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திய செயல்களின் பாதிப்புக்களுக்கு உணர்வுபூர்வமான ஆற்றுப்படுத்தல்களையோ மேற்கொள்வதற்கு அரசாங்கங்கள் எப்போதும் தயாராக இல்லை. அரசாங்கங்கள் தங்களது சொந்த வெற்றிகளையும், பாதிக்கப்பட்டவர்களாகத் தங்கள் சொந்த இனத்தவர்களையுமே நினைவில் வைத்திருக்கின்றன. பிற இனத்தவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அரிதாகவே ஒப்புக்கொள்கின்றன. இது ஆகப்பெரிய சாபக்கேடு. நாட்டு மக்கள் அனைவரையும் தனது மக்கள் என்று கருதாத ஒரு அரசாங்கத்திடம் நாம் நீதி மறுசீரமைப்பையும் பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கிறோம்.
எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களைத் தவிர்ப்பதற்காக நினைவுகூருவதாக இருந்தால், நம்மைத் திரும்பிப் பார்ப்பது குறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டும்! மனித உரிமை மீறல்களைக் கொண்டுவரக்கூடிய உத்தியோகபூர்வ கொள்கைகளின் விளைவுகள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும், இப்போது நாம் செய்கிறவற்றைக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் நாம் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம்.
கென்ய எழுத்தாளரும் கல்வியியலாளருமான நுகூகி வா தியாங்கோ (Ngũgĩ wa Thiong’o), “நினைவாற்றல் இல்லாத மக்கள் தங்கள் ஆன்மாவை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்” என்கிறார். அவர் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன். நமக்கு என்ன நேர்ந்தது என்பதையும், நாம் யார் என்பதையும் மறந்து, காலத்தால் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கவேண்டிய ஒரு நிகழ்வை மறந்து வாழ்கின்ற சமூகம் அடையாளமற்றது. கடந்த காலத்தை மறந்தவர்களின் நிகழ்காலம் மட்டுமல்ல, எதிர்காலமும் இருண்டுவிடும். கூட்டுத் தீபங்களால் காலத்தின் வெளிச்சத்தை எதிர்காலத்திடம் கையளிப்பது ஒவ்வொரிவரினதும் உரிமையும் பொறுப்பும்.
ஸர்மிளா ஸெய்யித்