பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்தப் பதம் அதிகமாகத் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சியாளர்களை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தாமல் அவர்களுக்கு அடிபணியும் கலாச்சாரமே காணப்படுவதோடு, இங்கு அரசியல் தலைவர்களை கடவுளை போல பார்க்கும் நிலையும் உள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புக்கூறல்களுக்கான கோரிக்கைகளை நியாயமாக கருதாமல் அவற்றை தட்டிக் கழித்து உதாசினப்படுத்துகின்றனர். அத்துடன், ஒப்பீட்டளவில் சிறுபான்மை சமூகங்களால் பொறுப்புக் கூறல் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போது, அதுவும் முக்கியமாக முப்பது வருடகால உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறும் படி வேண்டுகோள் விடுக்கும் போது, அவர்களது உதாசீனம் பன்மடங்காகின்றது.

போர்க்  குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலை நாடுபவர்களை விமர்சிப்பதற்கும் தாக்குவதற்கும் முன்வைக்கப்படும் வாதம் என்னவெனில், தமிழீழ விடுதலை புலிகளின் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் அவர்களைப் பொறுப்புக் கூறச் சொல்லிக் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதாகும். தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பு இன்று காணப்படாமையால் அதன் தலைமைத்துவ பொறுப்புக்கூறலுக்காக எடுக்கப்பட வேண்டிய ஒரே வழிமுறை வன்முறைகளில், ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலி அங்கத்தவர்களும், இன்றைய அரசாங்கத்தின் அங்கத்தவர்களுமான கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்தலாகும். எனினும், ராஜபக்ஷ அரசாங்கமானது தமிழீழ விடுதலை புலிகளினை தோற்கடிக்க இவர்களது ஆதரவு கிடைத்தது என்ற அடிப்படையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.

நல்லாட்சி அரசாங்கம் கூட கருணா அம்மான், பிள்ளையான் போன்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. சில சமயங்களில் பொறுப்புக்கூறலானது நாட்டிற்கும் இராணுவ வீரர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் அதிலிருந்து அவர்களைப் பாதுகாத்ததாக நல்லாட்சி அரசாங்கம் கூறியது. உதாரணமாக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர “சர்வதேச தொழிநுட்பவியல் உதவிகளை” பெறுவதன் மூலம் இராணுவத்தினரை காப்பாற்ற முடியும் என தான் நம்புவதாகவும், இலங்கை அரசாங்கத்தின் ‘வாக்குறுதி’க்கமைய ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உண்மையில் இராணுவ வீரர்கள் எந்தவொரு மனித உரிமை மீறல்களையும் செய்யாவிடின் ஏன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்? ஏன் அவர்கள் விசாரணைக்குப் பயப்படுகிறார்கள் என்றக் கேள்வி எழும்புகின்றது.

தமிழ் மக்கள் சர்வதேச பொறிமுறை மூலம் நீதியை வேண்டி நிற்பது ஏன்?

வரலாற்று ரீதியாக இலங்கையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களிடையே தாம் சம குடிமக்களாகவும் பல்லின அரசியலில் அங்கத்தவர்களாகவும் உள்ளீர்த்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையை உருவாக்கியது. மாறாக போரின் வெற்றியாளரான அன்றைய அரசாங்கத்தினர், அதாவது தற்போதைய, அரசாங்கத்தினர் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது, தங்களின் ஆதிக்கத்தை திணிக்க முயற்சித்தனர். மேலும், அவர்களை இலங்கையர் என்ற போர்வையின் கீழ் தனிச் சிங்கள அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் படி கட்டாயப்படுத்தவும் முயன்றது.

மக்கள் தங்களது மொழி, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு என்பவற்றை தனித்துவமாக கருதுவதை தடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தமை புலப்படுகின்றது. அவர்களை தம்வசப்படுத்துவதற்குப் பதிலாக இவ்வாறான செயல்கள் தமிழ் மக்கள் குறிப்பாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களிடையே, கோபம், மனக்கசப்பு போன்ற உணர்வுகளையே தோற்றுவிக்க வழிவகுக்கும். இவ்வாறான நடவடிக்கைகள் குறுகிய காலத்திலே நல்லிணக்கத்திற்கான சவாலாக அமைவதுடன், எதிர்காலத்தில் இன்னுமொரு உள்நாட்டு யுத்தத்தை தோற்றுவிக்கவும் வழி வகுக்கலாம். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலான இவ்வாறான நடவடிக்கைகள், ஜூடித் பட்லர் (Judith Butler) குறிப்பிடுவது போல ‘ஆத்திரமடைந்த, தாழ்த்தப்பட்ட மற்றும் சீற்றமடைந்த மக்களை’ மட்டுமே உருவாக்கும்.

இவ்வாறான பின்புலங்களின் அடிப்படையில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடையே பரஸ்பர அவநம்பிக்கை நிலவுகின்றது. அரசியல் அதிகார துஷ்பிரயோகம், சட்டவாட்சிக்குப் போதிய முக்கியத்துவமின்மை போன்ற காரணிகள் அரசியல் பொறிமுறைகளின் மேல் நம்பிக்கையீனத்தை உருவாக்கியுள்ளன. இதனால், தமிழ் மக்களின் பார்வையில் பெரும்பான்மை அரசால் நிறுவப்படும் அரசியல் பொறிமுறைகள் நம்பகத் தன்மையற்றே காணப்படுகின்றன. உதாரணமாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கள் பொருத்தமானவையல்ல என்பதனால் 2013ஆம் ஆண்டு வட மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க தமிழ் சமூகத்தில் சிலர் கேட்டுக் கொண்டார்கள். மேலும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை மனித உரிமை மீறல்களை இழைத்தது அரசென்பதால் அந்த அரசு குற்றவாளிகளைப் பொறுப்புக் கூறவைக்கும் என்று அவர்கள் நம்பத் தயாராகயில்லை.

தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இழைத்ததாகக் கூறப்படும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான சர்வதேச நீதியை கோரும் பொழுது போரில் புரியப்பட்ட குற்றங்களுக்காக மாத்திரம் நியாயம் கேட்கவில்லை. மாறாக வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட மீறல்கள் மற்றும் பாராபட்சம் ஆகியவற்றிற்கான நீதியையும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் அடைய முயல்கின்றனர்.

நிலைமாறு கால நீதிக்கான தேடல்

அரசியல் கோரிக்கைகளை பலம்குறைக்க அல்லது திசைதிருப்ப  நல்லிணக்கம் என்ற பதம் வெவ்வேறு அரசாங்கங்களால் பிரயோகிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் போருக்குப் பின் சிறுபான்மையினரது உரிமைகளை பாதுகாப்பதான ஒரு மாயயை உருவாக்குவதற்காக நல்லிணக்கம் என்ற பதத்தினை பயன்படுத்தினர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நிலைமாறுகால நீதியில் காணப்படும் அரசியல் உட்கூறுகளை நீக்குவதற்கு நல்லிணக்கம் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, நிலைமாறுகால நீதி செயல்முறையானது, தெற்கு வாழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகயிருக்கவும் அவர்களிடையே இது சார்ந்திருந்த அச்சத்தைக் குறைப்பதற்காகவும் சில சிவில் அமைப்புக்களும் சர்வதேச சமூகமும் நிலைமாறுகால நீதியை ‘நல்லிணக்க செயன்முறையாக” அறிமுகப்படுத்தியது. இந்த நல்லிணக்க செயற்பாட்டு முறையானது இலங்கையின் பன்முகத் தன்மையை ஓரளவு உள்ளடக்க முயற்சித்தாலும் இனப் பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களான பேரினவாதம், பாராபட்சம் ஆகியவற்றுக்கு தீர்வைத் தேட கூட அவர்கள் எத்தனிக்கவில்லை.

அரசியல் விஞ்ஞானியான அன்ரூ ஷாப் (Andrew Schaap) அவர்கள் குறிப்பிட்டது போல, நல்லிணக்கம் நிலைத்திருக்க வேண்டுமாயின் “ஒரு தேசம் மட்டுமே உள்ளது என்னும் அடிப்படையில் செயற்படாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவமான அரசியல் சமூகங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் நல்லிணக்க செயன்முறையின் அடிப்படையில் அரசியல் உரிமை கோரல்களை முன்வைக்க போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் மறுத்த காரணத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கான காரணம், அவர்கள் தங்களை ஒரு தனித்துவமான அரசியல் சமூகமாக அடையாளப்படுத்த விரும்பியதுடன், இனப் பிரச்சினையின் அடிப்படைக் காரணிகளுக்குத் தீர்வைத் தேடாத ஒரு பொறிமுறை அவர்களது அரசியல் கொள்கைகளை உதாசீனப்படுத்தி விடும் என்ற அச்சமேயாகும்.

அரைப்படி முன்னோக்கின், மூன்று படிகள் பின்னோக்கி செல்லல்

நல்லாட்சி அரசாங்கம் கடந்த கால வன்முறைகளை சரியாக கையாள்வதில் தோல்வியடைந்தமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் பிரதான காரணம் என்னவென்றால், முன்னைய அரசாங்கத்தைப் போல நல்லாட்சி அரசாங்கமும் அரச பொறிமுறைகள் பௌத்த தேசிய வாதத்தின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன என்பதையும், அவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம் சாதாரணமாக்கப்பட்டது என்பதையும் ஏற்றுக் கொள்ளாததேயாகும். இருந்தும் நல்லாட்சி போன்ற ஓரளவு முற்போக்கான அரசாங்கம் கூட சிங்கள மக்களிடையே தனது ஆதரவுத்தளத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பேரினவாதத் தன்மைக்குச் சவால்விடத் தயங்கியது. சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு அதிகமாக இடமளிப்பதாக தென்பகுதி மக்கள் கருதி தமக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற பயத்தால் பேரினவாதத்தன்மையை கேள்விக்குட்படுத்தத் தயங்கியது. இது, இலங்கையில் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலுக்குப் பாதகமான சூழ்நிலையயை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் பன்முகத் தன்மைக்கு பார்வையளவில் கூட மதிப்பளிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் அரசின் பேரினவாதத் தன்மையை மட்டுமே உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது. உதாரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி பொதுபல சேனா அமைப்பினை தடை செய்வதற்கு அரசாங்கம் மறுத்தது. அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பொது பல சேனா அமைப்பை தடை செய்வது என்பது கடினமான செயல் என்றும் அது எந்தவித நன்மையையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவரினதும் உரிமைகளையும் நல்வாழ்வையும் பாதுகாத்து அனைவரையும்  திருப்திப்படுத்தும் ஒரு நிலைமாறுகால நீதி செயன்முறையை உருவாக்குவது என்பது பல சவால்களைக் கொண்ட ஒரு கடினமான பணியாகும். இச்செயன்முறைகளின் போது முக்கியமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மேலதிக பாதிப்பிலிருந்து பாதுகாப்பது அத்தியவசியமானதாகும். நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் தொடர்பான அர்த்தமுள்ள செயற்பாடுகளை தடுக்கும் பெரும்பான்மை இனவாதம் போன்ற இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணிகளை அரசாங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தால் இப்பணியின் சிக்கல் தன்மையானது மேலும் அதிகரிக்கும்.

அம்பிகா சற்குணநாதன்

 

 


Main Photo: Selvaraja Rajasegar