பட மூலம், Selvaraja Rajasegar

வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எல்ரீரீஈ இயக்கத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தத் தினம் தீவிர அரசியல்மயமானதாக மாறியுள்ளது. அதே சந்தர்ப்பத்தில், முக்கியமாக யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாள் இதுவென்பதை இலங்கைப் பிரஜைகள் நினைவில் வைத்திருப்பது முக்கியமானது.

நினைவுகூர்தலும் (நினைவேந்தல்), நல்லிணக்கமும்

பெரும்பாலும் நினைவுகூர்தலும் (நினைவேந்தலும்), நல்லிணக்கமும் வலுவான சொற்களாகத் தொனிக்கின்றன. இலங்கையில், இவ்விரு சொற்களுக்கும் ‘தேசத்துரோகி’ என்ற அர்த்தம் தொனிப்பதாகவும் கருதப்படலாம். கடந்த காலத்தை நினைவுகூர்வதும், நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதி முதலான வகையறாக்கள் பற்றிப் பேசுவதும், தேசியத்திற்கு எதிரான மேற்குலகின் சூழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பது போன்று பார்க்கப்படும். இலங்கையின் சமாதானத்திற்கும், ஐக்கியத்திற்கும் துரோகமிழைப்பதாகவும் கருதப்படும்.

இந்த விடயத்தை இவ்வாறு சொல்வோம், “ஒவ்வொரு இலங்கையினரதும் வலியை நினைவில் கொள்வோம். அப்போது, அவர்கள் தரப்பில் இருந்து வலியை உணர்ந்து, மன்னித்து, சமாதானத்தை ஏற்படுத்தலாம்.” இதுவும் தேசத்திற்கு எதிரானதாகத் தோன்றும். அப்படித் தானே?

நினைவுகூர்தல் என்பது பெரும்பாலும் ஒரு தேசத்தின் பிரஜைகள் கடந்தகால ஞாபகங்களைப் பிரதிபலித்து, நினைவுகூர்ந்து, அவற்றுடன் இயைந்து போகும் ஒரு நடைமுறை (http://historicaldialogue.lk/glossary). எனினும், இன்று இலங்கையிலும், உலகம் முழுதிலும், நல்லிணக்கத்திற்கான மற்றும் காயங்களை ஆற்றுவதற்கான நினைவுகூர்தல், அது தேசத்திற்கு எதிரானதாக கருதப்படாத பட்சத்தில், பெரும்பாலும் வெற்றியாளரால், பலம்பொருந்தியவரால், ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுவதாகவே இருக்கிறது.

இலங்கையில், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இலங்கையின் படைகளில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நாம் இழந்தவர்கள் தேசிய மட்டத்தில் நினைவுகூரப்படுகிறார்கள். எல்ரீரீஈ இயக்கம் கட்டவிழ்த்த படுகொலைகளை நினைவுகூரும் அரந்தலாவ படுகொலைகள் போன்ற நினைவு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. யுத்தத்தில் அடைந்த வெற்றி, போருக்கான நினைவுத் தூபிகளால் பிரதிபலிக்கப்படுகிறது. இந்தப் போர் நினைவுத் தூபிகள், இலங்கையர்கள் மத்தியில் நிகழந்ததும், இலங்கையர்களால் இலங்கையர்கள் கொல்லப்பட்டதுமான யுத்தத்தை நினைவுகூர்வதில் குறைந்த பணியையே நிறைவேற்றுகிறது. சில நினைவுச் சின்னங்கள் பார்ப்பதற்கு சகிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.

பயங்கரவாதத்தின் பின்புலம்

கடந்த செப்ரெம்பர் மாதம் லெப்ரினன் கேர்ணல் திலிபனை நினைவு கூர்வதற்கு விதிக்கப்பட்ட தடை, தமிழர்கள் மற்றும் வடக்கில் உள்ளவர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல், பரந்துபட்ட இலங்கையர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. திலீபனின் வாழ்க்கை பற்றியும் யதார்த்தம் பற்றியும் அல்லது அவர் எதற்காக குரல் கொடுத்தார் என்பது பற்றியும் நான் அத்தாட்சிப்படுத்தப் போவதில்லை. நாமெல்லாம் ஒரே விடயம் குறித்து கருத்தொற்றுமை காண முடியும். 70களில் உருவான பல ஆயுதப் போராட்டக் குழுக்களில் எல்ரீரீஈ யும் ஒன்றென்பதே அது. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதால், அந்த மாற்றம் நடந்தது.

தமிழ் மக்கள் மொழியை மாத்திரமின்றி, தமது தொழில், வேலை வாய்ப்புக்கள், கல்விக்கான உரிமைகள் போன்றவற்றை இழந்து, 80களில் தமது அடையாளத்தையும் இழக்கத் தொடங்கினார்கள். தாம் அணிந்தவற்றிற்காக (குறிப்பாக பொட்டு) தமிழ்ப் பெண்கள் இம்சைப்படுத்தப்பட்டனர். அப்போதெல்லாம் மாறத் தலைப்பட்டன. 1983 இல், சுமார் 100 அங்கத்தவர்களை மாத்திரம் கொண்டிருந்த எல்ரீரீஈ இயக்கம் பலாலியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 13 படைவீரர்கள் பலியானார்கள். இறந்தவர்களை எங்கே புதைப்பது என்ற கேள்வியின் அடிப்படையில் குடும்பத்தவர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் பதற்றநிலை தீவிரம் பெற்றபோது, அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் மத்தியில் உணர்வுக் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில், தேசத்தை ஆட்கொண்ட வலியின் தீவிரத்தை உணர்தல் கடினம். சில கும்பல்கள் வீதிகளில் இறங்கி, வன்முறை தலைதூக்கிய சமயம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசாங்கம், நீதியை நிலைநாட்டி, காயங்களை ஆற்றுவதற்கான வழியைத் தேர்ந்தெடுக்காமல், பெருந்தொகை அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இடமளித்தது. அரசாங்கம் தொடர்ந்து பாராமுகம் காட்டிய நிலையில், பல அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகள் தாக்கப்பட்டு வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டபோது, ‘எல்ரீரீஈ இயக்கத்தின் கரங்கள்’ (Voices of Peace, 2018) மாத்திரமே தாம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஒரே இடம் எனத் தாம் கண்டறிந்ததாக அவர்கள் கூறினார்கள். இலங்கை அரசாங்கத்திற்காக பணியாற்றும் வாழ்க்கை பற்றி பெருமை பேசிய சிலர், ஈற்றில் மூன்று தசாப்தங்கள் எல்ரீரீஈ இயக்கத்திற்காக வேலை செய்தனர்.

1983ஆம் ஆண்டு தொடக்கம் 10,000 பேர் ஆட்சேர்க்கப்பட்ட படையாக எல்ரீரீஈ இயக்கம் வளர்ச்சி கண்டது. இவர்களில் பலருக்கு “வேறு தெரிவுகள் இருக்கவில்லை” (VOP, 2018). இவர்களில் பலர் எல்ரீரீஈ தலைமைத்துவத்தின் இரக்கமற்ற ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். எனினும், தமது சொந்த அரசாங்கத்தின் மூலமும், தமது நாட்டைச் சேர்ந்த சக பிரஜைகள் மூலமும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சொந்த ஊர்களில் இம்சைப்படுத்தப்பட்டு, மறைந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பணம் இல்லாதவர்கள் வடக்கிற்குச் சென்றார்கள்.

“எமக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்கு பணமிருந்தால் நான் லண்டனுக்குப் போயிருப்பேன். பணக்காரர்கள் செல்ல முடிந்தது. அவர்களால் தப்பிக்க முடிந்தது. பணக்காரர்களுக்குத் தெரிவுகள் இருந்தன. வறியவர்களைப் பொறுத்தவரையில், ஆயுதக் குழுக்களுடன் இணைவது மாத்திரமே ஒரே வழியாக இருந்தது. ஈற்றில், வறியவர்களே தமிழர்களுக்காக போராடினர்கள். நானும் அவர்களில் ஒருவன்.. நீங்களாயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” (கதை சொல்லி, Voices of Peace, 2018)

எல்ரீரீஈ இயக்கம் கையாண்ட வன்முறைகளையும், அவ்வியக்கம் மனித உயிர்களையும், உரிமைகளையும் துச்சமெனக் கருதியதையும் எவரும் குறைத்துக் கூற முடியாது. பெரும்பாலான தமிழர்கள் எல்ரீரீஈ இயக்கத்தின் அனுதாபிகளாக இருந்தார்கள் என்று நம்புவது தவறானது. அந்த இயக்கத்திற்காக சண்டையிட்டவர்கள் சிலரும், அமைப்பால் பாதிக்கப்பட்டவர்களே. எல்ரீரீஈ இயக்கத்தின் கரங்களில் தமிழர்கள் அடங்கலாக பல இலங்கையர்கள் கஷ்டப்பட்டார்கள். அதனால் தான், எல்ரீரீஈ பயங்கரவாதக் குழுவாக இருக்கிறது. அரசாங்கத்தையும், அதன் இராணுவத்தையும் அதே அளவுகோலால் மதிப்பிட முடியாது. மதிப்பிடவும் கூடாது. ஏனெனில், அவர்கள் செய்தார்கள் என்பதற்காக, அதே வகையில் நாமும் பழிவாங்குவது சரியாக மாட்டாது. ஒரு பயங்கரவாத இயக்கம் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது அல்லது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதற்காக தமது நாட்டைச் சேர்ந்த அப்பாவிப் பிரஜைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அரசுகளின் அதே செயற்பாடுகளையோ, செயலின்மையோ நாம் நியாயப்படுத்தக் கூடாது என்பதை பிரஜைகள் என்ற ரீதியில் நாம் புரிந்து கொள்வது முக்கியமானது.

நினைவு தினங்கள்

நினைவுகூரல்கள் பல வடிவம் பெறலாம். இது தனிப்பட்டதாக அல்லது பகிரங்கமானதாக இருக்கலாம். இதற்கு பௌதீக அல்லது உணர்வுபூர்வமான வெளி தேவைப்படலாம். இதில் சுவடியாக்கல், கதை சொல்லல், போர் நினைவுத் தூபிகள், ஞாபக சின்னங்கள், அரும்பொருள் காட்சியகங்கள், சமயக் கிரியைகள், நினைவு தினங்கள் முதலான வைபவங்கள் போன்றவையும் உள்ளடங்கலாம். எல்ரீரீஈ இயக்கத்துடன் தொடர்புடைய நினைவு தினங்களைப் பொறுத்தவரையில், அவை பெரும்பாலும் சகோதர சகோதரிகள், தாய் தந்தையர், பிள்ளைகள் அடங்கலாக மரித்தவர்களை நினைவுகூர்பவையாக இருக்கின்றன. அவையும் பெரும்பாலும் எல்ரீரீஈ இயக்கத்தையும், கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களையும் நியாயப்படுத்தி, வீரத்தனமாக சித்தரித்து, கொண்டாடுவதுடன் கலந்ததாக இருக்கிறது. இது இரு பக்கங்களில் நிகழ்கிறது. எல்ரீரீஈ இயக்கத்தின் தரப்பில் பலியான உயிர்களை நினைவு கூர்வதை ஆட்சேபிப்பவர்கள் ஒரு தரப்பினர். தவறான காரணங்களுக்காக நினைவுகூர்தலை ஊக்குவிப்பவர்கள் மற்றைய தரப்பினர். ‘வீரர்கள்’ என்ற கருத்தியல் மீது கவனத்தை ஈர்க்கச் செய்யும் பின்னையவர்களின் பிரயத்தனங்கள் பாதக விளைவுகளை ஏற்படுத்துபவை. அவை இலங்கையின் நினைவுப் பதிவேட்டில் எல்ரீரீஈ இயக்கத்திற்கு எந்த இடமும் இருக்கக்கூடாது என்று கூறும் எதிர்ப்பாளர்களின் கருத்தை மென்மேலும் வலுப்படுத்தும். அத்துடன், தமது அன்பானவரை இழந்த தாயோ, தந்தையோ, மகனோ அவரை வெறுமனே நினைவுகூர்வதையும் கடினமாக்கும். இதனை முன்னாள் எல்ரீரீஈ அங்கத்தவரின் வார்த்தைகளில் கூறுவதாயின், “ஜேவிபி யிற்கு ஒரு தினம் இருப்பதைப் போன்று, ஆரவாரம் செய்யாமல், எமது அன்புக்குரியவர்களை நாம் நினைவுகூர அவர்கள் இடமளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், சில வருடங்களில் மக்கள் பிரச்சினைப்படுத்த மாட்டார்கள். அதனை நாம் செய்யக்கூடாது என நீங்கள் சொல்வீர்களாயின், அவர்கள் கூடுதலாக செய்ய விரும்புவார்கள். தடை செய்யப்படுவதால், அது பிரச்சினையாக மாறுகிறது. இந்த விவகாரத்தை தமது அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்தும் பயன்படுத்துவதே மிகவும் மோசமானது” (கதை சொல்லி. Voices of Peace, 2018). நினைவுகூரப்படுபவர்கள் இலங்கையர்களே என்பதே இரு சாராரும் முதலில் நினைவில் வைத்திருக்க வேண்டிய விடயமாகும். வடக்கில் உள்ளவர்கள் விளக்கை ஏற்றுவது, கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களை நினைவுகூர்வதற்காக அல்ல. மாறாக உயிர்நீத்த அன்புக்குரியவர்களை இழந்ததற்காக, அவர்களை ஞாபகப்படுத்தி, கௌரவிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய ஜேவிபியிற்கு இறந்தவர்களை ‘விரு செமரும’ என்ற பெயரில் பகிரங்கமாக நினைவுகூர நீண்டகாலமாக அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இயக்கத்திற்காக உயிரிழந்தவர்கள் ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தப்படுவது கிடையாது. ஆயுதங்களை ஏந்தாத முதியவர்களும் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். இது 2009ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முயற்சிகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. நினைவுகூரப்படுபவர்கள் யாவரும் எல்ரீரீஈ அங்கத்தவர்களே என்ற தப்பெண்ணம் காரணமாக, 2017 ஆம் ஆண்டில் சில முயற்சிகள் மீது பொலிஸார் கட்டுப்பாடு விதித்தார்கள் (https://rukiiiii.wordpress.com/category/memory/). சிலர் கல்லுக்கும் கடப்பாரைக்கும் இடையில் சிக்கியிருந்தார்கள் என்பதே யதார்த்தம். ஒரு பயங்கரவாத இயக்கத்தால் தாக்கப்படுவது வேறு, தமது சொந்த அரசாங்கத்தாலும், அதன் படைகளாலும் தாக்கப்படுவது வேறு.

ஆம், மாவீரர் நாளில் எல்ரீரீஈ இயக்கத்திற்காகப் போராடிய அங்கத்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதும், அதன் காரணமாக அத்தகைய தினத்தை அனுமதிப்பதில் உள்ள தயக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். ஆனால், 30 வருடகால முரண்பாட்டில் பலியான எமது படைவீரர்களை நாம் நினைவுகூர்கிறோம். அவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தியிருக்கலாம், ஒருவரையொருவர் சுட்டிருக்கலாம், சுடப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்பது முக்கியமானது, முதன்மையானது. நாம் நல்லிணக்கத்தில் உண்மையாக இருந்தால், ‘இனியும் வேண்டாம்’ என்ற வார்த்தைகளில் நேர்மையானவர்களாக இருந்தால், ஒரு யுத்தத்தில் சண்டையிடும் இரு தரப்புக்கள் இருந்ததை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, அவர்கள் ஒரே தாய்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ‘ஒருவனின் பகையாளி மற்றவனின் வீரனாக’ இருப்பதாலும், ‘பகைவனை’ வரையறுப்பது கடினம் என்பதாலும், ‘பலியானவர்கள்’ மற்றும் ‘குற்றமிழைத்தவர்கள்’ தான் நினைவு கூரப்படுகின்றனர் என்பது முக்கியமானது. எமது நாட்டில் 30 வருடகால இரத்தக்களரியால் பாதிக்கப்பட்ட சகலரும் நினைவுகூர்ந்து, துயரைப் பகிர இடமளிப்பது முக்கியமானது. போரினால் நிகழ்ந்த தவிர்க்கக்கூடிய உயிரிழப்புக்களை ஞாபகப்படுத்தி, அவை மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நினைவுகூரல் தினங்கள் முக்கியமானவை. மூன்று தசாப்தகால யுத்தத்திலும், மூன்று தசாப்த காலத்திலும் நிகழ்ந்த சிங்களம் மட்டும் சட்டம், பிரஜாவுரிமை சட்டம், யாழ் நூலக எரிப்பு, அரந்தலாவ படுகொலைகள், மத்திய வங்கி குண்டுத் தாக்குதல், ஆனையிறவு சண்டை, கறுப்பு ஜூலை போன்றவை எமது நினைவில் இருக்க வேண்டும். இதன்மூலம், எப்போதும் காரணிகளும், விளைவுகளும் இருப்பதை நாம் புரிந்து கொண்டு, அதே தவறுகள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்யலாம். “நாம் கடந்த காலத்தைப் பார்க்காமல் கண்களை மூடினால், சமகாலத்தை நோக்காத குருடர்களாக இருப்போம்.” (ஜனாதிபதி ரிச்சேர்ட் வொன் வெயிஸ்ஸக்கர், 1985)

எல்ரீரீஈ இயக்கத்திற்காக சண்டையிட்டவர்களை நாம் புறக்கணித்து, நினைவுகளை இலங்கைத் தீவில் இருந்து இல்லாமல் செய்து விட வேண்டும் என நாம் விரும்பலாம். ஆனால், அவர்களும் எமது சொந்தப் பிரஜைகளே. அன்று இறந்து இன்று நினைவு கூரப்படுவோரில் பெரும்பாலானவர்கள் இரத்தவெறி கொண்டு எல்ரீரீஈ இயக்கத்தில் இணைந்தவர்களோ, இலங்கையின் அப்பாவிப் பிரஜைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அரக்க சிந்தனை கொண்டவர்களோ அல்லர். இணைந்தவர்கள் பலர் வேறு தெரிவுகள் இல்லாமல் இணைந்தவர்களே. தமது உரிமைகள் பறிக்கப்பட்டதாலும், தாம் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் இணைந்தவர்களே. தமது சொந்த அரசாங்கம் தம்மைப் பாதுகாக்கத் தவறியதால், அவர்கள் இணைந்தார்கள். கொலையாளிகளை வீரர்களாக சித்தரிக்கக் கூடாதெனினும், சகல எல்ரீரீஈ அங்கத்தவர்களையும், அவர்களது குடும்பத்தவர்களையும் அரக்கத்தனமானவர்களாக கருதவும் கூடாது. ஒரு விளக்கை ஏற்றுகையில், நம்மைப் போன்று அவர்களுக்கும் குடும்பமொன்று – அவர்கள் எதற்காக வீடு திரும்ப நினைத்தார்களோ அத்தகைய அன்பானவர்கள் இருப்பதை ஞாபகப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறோம். அவர்களும் மனிதர்கள் என்பதை ஞாபகப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறோம். அவர்களின் கதைகளை ஞாபகப்படுத்த வேண்டும். ‘ஏன்’ இவ்வாறு நடந்தது என்பதை ஞாபகப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். அதன்மூலம், இனிமேல் எந்தவொரு இலங்கையரும் தம்மண்ணில் வாழ்வோருக்கு எதிராக ஆயுதமேந்த நாம் நிர்ப்பந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

ஒரே தேசம் என்ற ரீதியில், நாம் நினைவுகூர்வோம். நினைவுகூர்ந்து காயங்களை ஆற்றுவோம்.

சாரா கபீர்