செப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town) இராணுவ முகாமுக்கு வரிசையாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் எவரும் வீடுதிரும்பவில்லை. மொத்தமாக 184 பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
படுகொலைக்களத்திலிருந்து ஒருவர் மட்டும் உயிர்தப்பி நடந்தவற்றைக் கூற சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரியவருகிறது.
அப்போது திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக இருந்தவரும் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் உறுப்பினருமாக இருந்த கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை சம்பவம் நடந்த மறுதினம் இராணுவத்தின் துணையுடன் படுகொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார். “முழுவதும் எரியூட்டப்பட்டிருந்தது. ஆனால், முழுவதும் எரியாத நிலையில் தலைகள், உடல் அங்கங்கள் கிடந்தன. அப்போது, என்னை அழைத்துச் சென்ற இராணுவ கர்ணல் பேர்சி பெர்ணான்டோ, “எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. எங்களுடைய ஆட்கள்தான் செய்திருக்கிறார்கள். எனவே, நான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக தற்போது ஓய்வுநிலையில் இருக்கும் முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்ததை மாற்றத்துடன் பகிர்ந்துகொண்டார்.
படுகொலை சம்பவம் இடம்பெற்ற ‘போய்ஸ் டவுன்’ இராணுவ முகாமிலிருந்து கால் மைல் தூரத்தில், குளக்கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சாப்பைப் புற்காட்டில் உயிர்ப்பயத்துடன் மறைந்திருந்தவாறு, அலறல் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இரத்தினஐயாவும் அன்று கண்ட சம்பவத்தை மாற்றத்துடன் பகிர்ந்துகொண்டார்.
சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்று 30 ஆண்டுகளாகிறது. நீதியற்று தொடரும் படுகொலையின் சாட்சியங்கள் இன்றும் பேசுகின்றன.