முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது.
அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் அலுவலகம் எங்கும் அந்தப் பையுடனேயே அழைந்து திரிகிறார்.
இரண்டு மகன்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறும் யோகரதி, இவனைத் தானே வளர்த்ததாகவும் கூறுகிறார். “இருக்கும் தன்னுடைய பேரப்பிள்ளைகளின் படிப்புக்கும், சாப்பாட்டுக்குமே எனது மகளும் மருமகனும் நாள் முழுவதும் உழைக்கிறார்கள். நான் இன்னும் எவ்வளவு காலம்தான் இருப்பேன். நான் செத்த பிறகு இவர்கள் மகனுக்காக அலைந்துதிரிய முடியுமா? இருப்பவர்களைக் கவனிக்கவேண்டாமா?” தனக்குப் பின்னால் பேரனைத் தேடுவதற்கு இயலாத குடும்ப சூழ்நிலை யோகரதியின் ஏக்கத்தில் தெரிகிறது.
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கை அரசாங்கங்கள் நீதி வழங்க முன்வராத நிலையில் இதுவே ஒவ்வொரு காணாமலாக்கப்பட்ட குடும்பங்களும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யோகரதியின் கதையை 360 டிகிரியில் சுழலும் வகையிலான காணொளிகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறோம். விர்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் மூலமும் இதனைப் பார்க்கலாம்.