படம் | TAMIL DIPLOMAT
விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு எனப்படுவது ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல. தமிழ் அச்சூடகங்களில் ஒரு பகுதியும் இணைய ஊடகங்களில் ஒரு பகுதியும் சித்தரிப்பது போல அது சுழலும் சொற்போரும் அல்ல. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கூறப்படுவது போல கொழும்பு மையநோக்கு நிலைக்கும் தமிழ் மைய நோக்கு நிலைக்கும் இடையிலான ஒரு முரண்பாடு மட்டும் அல்ல. அல்லது சுமந்திரன் கருதுவது போல அது கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட மறுக்கும் ஓர் ஒழுக்காற்றுப் பிரச்சினை மட்டுமல்ல. ஆயின், அது என்ன? அது மேற்கண்ட எல்லாவற்றையும் விட இரண்டு அடிப்படைகளில் ஆழமானது.
முதலாவது – கோட்பாட்டு அடிப்படையில்.
இரண்டாவது – கடந்த ஆறு ஆண்டுகால தமிழ் மிதவாத அரசியலைக் குறித்தும், தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் குறித்துமான ஒரு விவாதப்பரப்பு அது.
முதலில் அது எப்படி கோட்பாட்டு முரண்பாடு என்று பார்க்கலாம். விக்னேஸ்வரனின் அறிக்கை அதை ஓரளவிற்குத் தொட்டிருக்கிறது. கொழும்பு மையநோக்கு நிலைக்கும் தமிழ் மைய நோக்கு நிலைக்கும் இடையிலான ஒரு முரண்பாடு என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது நோக்குநிலைகளின் பாற்பட்ட முரண்பாடு என்பதை விடவும் ஆழமானது. ஈழத்தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது பற்றிய ஒரு விவாதப்பரப்பு அது. அல்லது ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகச் சிந்திக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிய ஒரு விவாதப்பரப்பு அது. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது ஒற்றையாட்சி முறைமைக்குள் உருவாக்கப்பட வேண்டுமா அல்லது அதற்கு வெளியே சென்று சமஸ்டி முறைமைக்குள் உருவாக்கப்பட வேண்டுமா என்பது பற்றிய ஒரு விவாதப்பரப்பு அது. அல்லது இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசு ஒரு இனப்படுகொலையைச் செய்ததன் மூலமே புலிகள் இயக்கத்தை தோற்கடித்தது என்ற கருதுகோள் சரியா இல்லையா என்பது பற்றிய ஒரு விவாதப்பரப்பு அது. அல்லது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே ஈழத் தமிழர்களுக்கான இறுதித் தீர்வாக அமையுமா இல்லையா என்பது பற்றிய ஒரு விவாதப்பரப்பு அது. அது வெறுமனே ஒரு வழக்கறிஞருக்கும் ஒரு நீதியரசருக்கும் இடையிலான தர்க்கப்போர் மட்டுமல்ல. அவர்கள் இருவருமே மக்களாணையைப் பெற்றவர்கள். எது ஆகப் பிந்திய ஆணை. எது ஆகப் பெரிய ஆணை என்ற விவாதம் இங்கு முக்கியமில்லை. மாறாக, அவர்கள் இருவருமே மக்கள் பிரதிநிதிகள் என்பது இங்கு முக்கியமானது.
கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்களில் சமஸ்டி தீர்வே கோரப்படுகின்றது. எனவே, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் உயர்பீடம் வாதிட முடியும். ஆனால், ஜனவரி 08இற்குப் பின்னரான நடைமுறை எனப்படுவது அறிக்கைகளோடு ஒத்துப்போவதாக இல்லை. மைத்திரியோ ரணிலோ ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று ஒரு தீர்வைக் கொண்டுவர தயாரில்லை என்பதனை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது அதிகாரப் பகிர்வுதான். அதாவது, ஒற்றையாட்சி முறைமைக்குட்பட்ட ஒரு தீர்வுதான்.
இந்த இடத்தில் ஒற்றையாட்சி பற்றியும் சமஸ்டி பற்றியும் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒற்றையாட்சி முறைமையின்படி சிறிய தேசிய இனங்களின் இருப்பானது அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒரு தேசிய இனம் அதன் கூட்டுரிமையின்பாற்பட்ட தன்னாட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையது என்பது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அங்கே அதிகாரங்கள் அனைத்தும் மைய அரசிடமே குவிந்திருக்கும். மைய அரசு இரக்கப்பட்டு மாகாணங்களுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம் அப்படிச் செய்யாமலும் விடலாம். எனவே, ஒற்றையாட்சி முறைமைக்குள் சிந்திப்பது என்பது தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளாமைதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொள்ளாமைதான். இதைச் சற்றுக் கவித்துவமாகச் சொன்னால் பெரிய தேசிய இனம் எனப்படும் ஒரு மரத்தைச் சுற்றிப் படரும் கொடிகளைப் போன்றவர்களே சிறுபான்மை இனத்தவர்கள் என்ற ஒரு நோக்கு நிலை.
அதேசமயம், சமஸ்டி முறைமை எனப்படுவது தேசிய இனங்களின் இருப்பை ஏற்றுக் கொள்கிறது. அவற்றுக்குரிய தன்னாட்சி அதிகாரங்களை அனுபவிப்பதற்கான உரிமையை அவற்றின் கூட்டுரிமையின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் அது ஏற்றுக்கொள்கிறது. எனவே, சிறிய தேசிய இனங்கள் தன்னாட்சி அதிகாரங்களை அனுபவிப்பதற்கு உரித்துடையவை. சிறிய தேசிய இனங்களின் தன்னாட்சி அதிகாரங்கள் எனப்படுபவை அவற்றின் தேசிய இருப்பிலிருந்து பிரிக்கப்படவியலாத கூட்டு உரிமைகளாகும். அந்த உரிமைகள் மத்திய அரசால் கொடையாக வழங்கப்படுகிறவை அல்ல. அல்லது பகிரப்படுபவை அல்ல. எனவே, அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனை மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டும் என்ற கருது கோளின்பாற்பட்டது. அதாவது, ஒற்றையாட்சி முறைமையின் பாற்பட்டது.
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சினை எனப்படுவது ஓர் அதிகாரப் பகிர்வின்பாற்பட்ட பிரச்சினையா அல்லது தமது இருப்பிலிருந்து பிரிக்கப்பட முடியாத கூட்டு உரிமைகளை மீளப்பெறுவதற்கான ஒரு போராட்டமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். எனவே, ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்தித்தால் மட்டும்தான் தமது கூட்டு உரிமைகளை நிலைநாட்ட முடியும். விக்னேஸ்வரனும் அவரை ஆதரிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறுதான் சிந்திக்கிறார்கள். அதாவது, ஒரு தேசமாகச் சிந்தித்தல். இவ்வாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க பிரதானிகளின் முன்னிலையில் வைத்து விக்னேஸ்வரன் அவ்வாறுதான் கூறினார், “ஒரு நாடு இரு தேசம்” என்று.
இப்படிப் பார்த்தால் அவர் அதிகமதிகம் மக்கள் முன்னணிக்கு கிட்ட வருவது போலத் தோன்றும். கஜேந்திரகுமாரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் அவ்வாறு சிந்திக்கிறார்களா? கடந்த பொதுத் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சமஸ்டி கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரணில் – மைத்திரி அரசின் பின்னணிப் பங்காளிகளாக இருந்து கொண்டு நடைமுறையில் ஒரு தேசமாக சிந்திக்க முடியுமா? இதுதான் சுமந்திரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கோட்பாட்டு முரண்பாடு.
இருவருமே பட்டப்படிப்பை பொறுத்தவரை ஒரே ஒழுக்கத்திற்கு உரியவர்கள். அரசியலுக்குள் இறங்கும்வரை கொழும்பு மையத்தில் இருந்து சிந்தித்தவர்கள். ஆனால், அரசியலில் இறங்கிய பின் வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க விளையும் விக்னேஸ்வரன் கடந்த இரண்டாண்டு காலமாக கற்றுக் கொண்டவைகளின் பிரகாரம் சிந்திப்பவர் போலத் தோன்றுகிறார். ஆனால், அவரைவிட அரசியலில் மூத்த சுமந்திரனால் ஏன் அப்படிச் சிந்திக்க முடியவில்லை? அல்லது கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் ஒருவர் கூறுவது போல அவர் கொழும்பு மையத்தில் இருந்து சிந்திக்கவில்லை. அரசு மையத்திலிருந்து சிந்திக்கிறார் என்பதுதான் சரியா?
ஆனால், இருவருமே தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைக்கிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த கிழமை விக்னேஸ்வரனைப் பற்றி நான் எழுதிய கட்டுரை தொடர்பாக கிழக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் தொலைபேசியில் எடுத்துக் கதைத்தார், “தமிழ் மக்கள் தனிநபர்களின் மீது தமது நம்பிக்கைகளை முதலீடு செய்வதற்குப் பதிலாக மக்கள் மயப்பட்ட ஒரு வெகுசன மைய அரசியலை குறித்த விவாதக் களங்ளைத் திறப்பதே நல்லது” என்று அவர் சுட்டிக்காட்டினார். சுமந்திரனைப் போலவே சம்பந்தரைப் போலவே விக்னேஸ்வரனும் அப்படி ஓர் அரசியல் ஒழுக்கத்திற்கூடாக வந்தவரல்ல என்று எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதப்பட்டு வருவதை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த மூன்று பேர்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது அப்படிப்பட்ட ஓர் அரசியல் ஒழுக்கத்தைக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள இரண்டாவது விவாதப்பரப்பு இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறது.
சுமந்திரனும் அவரைப் போன்று சிந்திப்பவர்களும் அவர்களை விமர்சிப்பவர்களால் கூறப்படுவதைப் போல உலகளாவிய மற்றும் ரணில் – மைத்திரி அரசின் நிகழ்ச்சி நிரலின்படியே இயங்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அவர்களுடையது ஒரு செயல்பூர்வ அரசியலே. அவர்கள் அரசுடைய தரப்பை பிரதிபலிக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலைப்பாடுகள் செயல்களாக மாறுவதற்கான அதிகரித்த வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், விக்னேஸ்வரனும் அவரை ஆதரிப்பவர்களும் அரசற்ற தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அல்லது அதிகாரமற்ற ஒரு மாகாண சபையை நிர்வகிக்கிறார்கள்.
இந்த நிலையில், தன்னைப் போன்று சிந்திப்பவர்களை விக்னேஸ்வரன் அடிக்கடி சந்திக்கிறாரா? அவர்களுக்குத் தலைமை தாங்க அவர் தயாரா? மாகாண சபைக்குள் இருக்கும் அநேகமானவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் கனவுகள் உண்டு. அப்படிக் கனவுகாணும் எவரும் தலைமையோடு முட்டுப்படத் தயாராக இருக்கமாட்டார்கள். கூட்டமைப்புக்குள் தமது பதவி நிலைகளைத் தக்கவைக்க முற்படும் எவரும் தலைமையோடு முட்டுப்பட தயாராக இருக்கமாட்டார்கள். விக்னேஸ்வரனுக்கு இப்படிப்பட்ட ஆசைகள் குறைவு என்றே தோன்றுகின்றது. அவருடைய பலமும் அதுதான். பலவீனமும் அதுதான். இப்போதிருப்பதைவிட உயர்வான ஒரு பதவியைக் குறித்து ஆசைகள் அதிகம் அற்றவராக அவர் தோன்றுகிறார். அதுவும் அவர் துணிந்து தலைமையோடு முரண்பட ஒரு காரணம். அதேசமயம், தனது நம்பிக்கைகளுக்குத் தலைமை தாங்க அவர் தயாரற்றிருப்பதற்கும் அதுவே காரணம். தன்னைப் போன்று சிந்திப்பவர்களை அவர் அடிக்கடி சந்திப்பதில்லை. தனக்கு வாக்களித்த மக்களோடும் அவர் அடிக்கடி நெருங்கி உரையாடுவதில்லை. தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியலுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற வேணவா எதுவும் இப்போதைக்கு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த இரண்டாண்டுகால படிப்பினைகள் அவரை முன்னைய நம்பிக்கைகளில் இருந்து பெயர்த்தெடுத்தது போல எதிர்காலத்தில் சிலவேளை அவர் தன்னுடைய தலைமைத்துவப் பண்பை நிரூபிக்கக்கூடும்.
ஆனால், கடந்த இரண்டாண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால் அவர் ஒரு கலகக் குரலாக மட்டுமே தோன்றுகிறார். தனது நம்பிக்கைகளை செயலுருப்படுத்தும் வெகுசன மைய அரசியல் ஒழுக்கத்திற்கு உரியவராக அவர் இன்னமும் மேலெழவில்லை. மிகத் தீவிரமான தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். மிகத் தீவிரமான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். தன்னைச் சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அவர் தனது தீவிர நிலைப்பாடுகளை ஒழிவுமறைவின்றி வெளிக்காட்டி வருகின்றார். ஆனால், அவருடைய நிலைப்பாடுகளிற் பெரும்பாலானவை அடுத்த கட்ட வளர்ச்சிகளுக்கு போகவில்லை. தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்பு வரதராஜப் பெருமாளும் ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருந்தார். ஒரு தமிழ் முதலமைச்சர் வெளியிடக் கூடிய உச்சபட்சம் தீவிரமான ஒரு பிரகடனம் அது. அது ஒரு தனிநாட்டுப் பிரகடனம்.
ஆனால், வரதராஜப்பெருமாள் தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து அதை வெளியிடவில்லை. பிரேமதாச அரசிற்கு நெருக்கடிகளைக் கொடுப்பதற்காக இந்திய நோக்கு நிலையில் இருந்து அதை வெளியிட்டார். ஜெயலலிதா தமிழ்த் தேசிய அரசியலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறார். தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய இன உணர்வாளர்கள் தனது கையை மீறிப் போகக் கூடாது என்றும் அவர் சிந்திக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலுக்கு செயற்பாட்டு இயக்கங்கள் தலைமை தாங்குவததைத் தடுத்து அதை வாக்குவேட்டை அரசியலுக்குரிய ஓர் உணர்ச்சிக் கோசமாக தொடர்ந்தும் பேண வேண்டும் என்றும் அவர் சிந்திக்கிறார்.
ஆனால், விக்னேஸ்வரன் அப்படிச் சிந்திக்கவில்லை. அவர் வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறார். தனக்குக் கிடைத்த மக்களாணையைத் திரித்து வியாக்கியானப்படுத்த அவர் விரும்பவில்லை. இதுதான் அவரை கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆனால், அதேசமயம் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களைப் போலவே அவரும் வெகுசனமைய அரசியல் ஒழுக்கத்திற்கு உரிய ஒருவராகக் காணப்படவில்லை.
தென்னிலங்கையில் இருக்கும் தலைவர்கள் மாற்றத்தைப் பலப்படுத்தும் போக்கில் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அதிகாரப் பகிர்வாக சுருக்கிக் காட்ட எத்தனிக்கிறார்கள். அரசியல் அமைப்பில் செய்யப்படக் கூடிய திருத்தங்கள், போர்க்குற்ற விசாரணையில் செய்யப்படக்கூடிய சுதாகரிப்புகள் போன்ற எல்லாவற்றுக்கூடாகவும் அவர்கள் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை எனப்படுவதை ராஜபக்ஷ சகோதரர்களின் பிரச்சினையாகவே காட்டப்பார்க்கிறார்கள். ஆனால், தமிழ் மிதவாதத் தலைமைகளோ அறிக்கைகளுக்கும் பிரகடனங்களுக்கும் சந்திப்புக்களுக்கும் அப்பால் மிகக்குறைந்தளவே நகர்ந்திருக்கிறார்கள்.
சுமார் மூன்று தசாப்தகால நிஜப்போரைக் கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டம் ஒரு நீதியரசருக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான அறிக்கைப்போரின் பார்வையாளர்களாகக் காணப்படுகிறது. தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் எது என்பதை தாயகம் – டயஸ்பொறா – தமிழகம் ஆகிய மூன்று களங்களும் ஒன்றிணைந்த வெகுசன மைய அரசியல் ஒழுக்கத்திற்கூடாகவும், செயற்பாட்டு ஒழுக்கங்களுக்கூடாகவுமே சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஓரளவுக்குப் பலப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமே தமிழ் மக்களின் தலையில் கட்டிவிடப்படும். அது முதலாவது முள்ளிவாய்க்காலை விடவும் மிகச்சூழ்ச்சிகரமான, மீளக் கடினமான ஓர் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக அமைந்தாலும் அமையலாம்.