படம் | செல்வராஜா ராஜசேகர் (மொபைல் படம்)
நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும் எனத் தெரிவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல், அரசியல்கைதிகள் பிணையில் அல்லது புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்புகிறார்.
‘மாற்றம்’ தளத்துக்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்க்காணலின் போதே அருட்தந்தை மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“உண்ணாவிரதம் இருக்கின்ற கைதிகள் தாங்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். புனர்வாழ்வுக்கு உட்படுவது குறித்து அவர்களுக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை, ஆனால், அதில் உள்ள நிபந்தனைகள் எவை என்பதே அவர்களது கேள்வி.
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டால், தங்களை மீண்டும் இந்த அரசு கைதுசெய்யுமா? என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் உள்ளது.
மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலம் இருக்கின்ற குகநாதன் என்கிற ஒருவரைச் சந்தித்தேன். அவர் இவ்வாறு என்னிடம் கூறினார், “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டேன். பூஸாவில் இருந்தேன், மகசினில் இருந்தேன். அங்கிருந்தவாறு ஒருவருடம் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டு, விடுதலையாகி குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து மூன்றாவது மாதத்தில் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன்” என்று.
எனவே, புனர்வாழ்வு என்பது சந்தேகத்துக்குரியதொன்று; பிணை வழங்குவதென்பதும் அதுபோன்றுதான். ஆகவே, இவர்கள் எதுவித நிபந்தனையுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை” – என்றார் அவர்.
அவரது முழுமையான நேர்க்காணலை கீழே காணலாம்.