படம் | Indilens

ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவினரும், இதற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட மூவரும், அடுத்து வரவுள்ள பத்து மாத காலப்பகுதியில்,மேற்படி விசாரணையை தொடர்வர். இந்த விசாரணைகளின் இறுதி விளைவாக அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதற்கு முன்னரே எதிர்வரும் செப்படெம்பரில் இடம்பெறவுள்ள 27ஆவது கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் மேற்படி விசாரணையின் விளைவு என்னவாகும் என்பதெல்லாம் சர்வதேச சக்திகளின் திருவிளையாடல்களிலேயே தங்கியிருக்கிறது.

அற்புதங்கள் நிகழலாம் அல்லது நிகழாதும் போகலாம். அற்புதங்கள் நிகழும் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே. அதாவது, கடவுள் நிச்சயம் அருள் பாலிப்பார் என்று ஒரு பக்தன் நம்புவது போன்று. தமிழ் மக்களை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ‘சர்வதேசம்’ என்பது ஒரு நரசிம்ம அவதாரம் போன்றே காட்டப்படுகிறது. எனவே, சர்வதேசம் தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் அதிசயங்களை நிகழ்த்தவல்லதென்று மக்கள் நம்பின், அவ் இறை நம்பிக்கையுடன் விளையாட நான் யார்? இங்கு நான் உரைக்க எடுத்துக்கொண்ட விடயமோ வேறு – புதிதாக இந்தியாவை பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசு மேற்படி விசாரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. வழமைபோல் இந்தியா தனது கொள்கை சார்ந்து முன்வைக்கும் கருத்துக்களின் முடிச்சுகளை அவிழ்க்கத் தெரியாமல, தமிழ் தேசியவாதிகள் என்போர், ஒப்பாரிவைக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், இந்தியா எப்போதும் போல் அப்படியேதான் இருக்கிறது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பர்டீன், இது ஒரு குறிப்பிட்ட நாட்டின் விவகாரம் அல்ல, கொள்கை ரீதியான விவகாரம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதேவேளை, ஜ.நா. விசாரனைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், அந்த குறிப்பிட்ட பிரிவை எதிர்த்து வாக்களித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். வெளிவிவகார அணுகுமுறையில் காங்கிரஸ் – பா.ஜ.க. என்னும் பாகுபாடுகள் எதுவும் இல்லை என்பதையே மேற்படி தகவல் உணர்த்திநிற்கிறது.

ஆரம்பத்தில் அமெரிக்கப் பிரேரணையை இந்தியா ஆதரித்தே வாக்களித்திருந்தது. ஆனால், மூன்றாவது பிரேரணையில் மனித உரிமைகள் பேரவையின கீழ் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்துரைக்கப்பட்டிருந்த பின்னனியிலேயே அதற்கு இந்தியா ஆதரவு தர மறுத்திருந்தது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியா சக்தி என்னும் வகையில், வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்திருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா, இரண்டு பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. கடுமையாக விமர்சித்திருந்தது. இன்று பா.ஜ.க. அரசின் முடிவால் ஏதோ மரத்தில் ஏறும்போது தேள் கொட்டியது போன்று அலறுபவர்கள், அன்று பா.ஜ.கவினர் தெரிவித்திருந்த கருத்துக்களை மறந்துவிட்டனர் போலும் அல்லது இது குறித்து அவர்கள் அறியாது இருக்கலாம். அன்று பிரதான எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.கவினர், அமெரிக்கப் பிரேரணைகளுக்கு, காங்கிரஸ் இந்தியா, ஆதரவு தெரிவிப்பதானது ஒரு தூரநோக்கற்ற செயலாகும் என்று விமர்சித்திருந்தனர்.

பா.ஜ.கவுக்கு நெருக்கமான முன்னனி சிந்தனை குழாமான, புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கிவரும் விவேகானந்தா சர்வதேச நிலையத்தின் ஆக்கங்களில் இதனை தெளிவாக காணலாம். இந்திய வெளியக உளவுத் துறையான றோவின் முன்னைநாள் தலைவர்களில் ஒருவரான ஏ.கே. வெர்மா மற்றும் இந்திய படையதிகாரிகளின் முன்னாள் தலைமைத் தளபதியான ஜெனரல் வி.என். சர்மா ஆகியோரை ஆலோசகர்களாகக் கொண்டியங்கிவரும் மேற்படி சிந்தனை குழாமின் தலைவராக இருந்த அஜித் குமார் டோவல்தான் தற்போதைய பா.ஜ.கவின் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராவார். இதனை அழுத்திக் குறித்துக்கொள்ளவது நல்லது. முன்னாள் இந்தியா உள்ளக உளவுத் துறையின் (Intelligence Bureau) தலைவராக கடைமையாற்றிய டோவல், 2005இல் ஓய்வுபெற்ற பின்னர் மேற்படி நிலையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றிருந்தார். அன்றைய சூழலில் இலங்கை விடயங்கள் தொடர்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஆக்கங்களில் சில விடயங்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருந்தன. அதன் சாரம்சம் இதுதான் –

பல வருடங்களாக, காஷ்மீர் விடயத்தை முன்னிலைப்படுத்தி ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் நாங்கள் சண்டைபிடித்து வருகிறோம். மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்களால் இன்று, இலங்கை எவ்வாறு ஜெனிவாவில் அவமானப்படுத்தப்படுகிறதோ, அதற்கு எந்த வகையிலும் குறையாதளவில் இந்தியாவையும் மேற்படி அமைப்புக்கள் அவமானப்படுத்தியுள்ளன. இன்று இலங்கை மீதான பிரேரணைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், மறுபுறுத்தில் தன்னுடைய வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இந்தியாவை காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியா தன்னுடைய கடந்த கால அனுபவங்களை மறக்கலாகாது. மனித உரிமைகள் விவகாரத்தை ஒரு அரசியல் கருவியாக (Political Instrument) பயன்படுத்துவதை நாம் வன்மையாக எதிர்க்கவேண்டும். இலங்கையின் மீதான இந்தியாவின் வகிபாகமானது, அமெரிக்க ஈடுபாட்டிற்கு வெகு தொலைவில் உள்ளது. அந்த வகையில், எமது அயலவர்கள் தொடர்பான மனித உரிமைச் செயற்பாடுகள் சிக்கல் நிறைந்தவை ஆகும். நாங்கள் சூழ்சிகளுக்குள் அகப்பட்டு, இப்படியான விடயங்களை உள்வாங்கிக் கொள்ளுவோமாயின், நாம் எங்களுக்கான இராஜதந்திர வாய்ப்புக்களை அயல் நாடுகளில் இழக்க வேண்டிவரும். அவ்வாறு இந்தியா செயற்படின் அது ஒரு மேலதிக பிராந்திய முன்னெடுப்பாகாகவே (Extra-Regional Initiatives) அமையும். இது கொள்கைசார் பதற்றங்களை (Policy Tensions) உருவாக்கும். அமெரிக்காவுடனான எமது மூலோபாய கூட்டானது, இப்பிராந்தியத்தில் எமது ஆர்வங்களுக்கு முக்கியத்துவமளிப்பதாக இருக்க வேண்டுமேயன்றி, மாறாக சங்கடமான நிலைப்பாடுகளுக்கு வழிவகுப்பதாக இருந்துவிடக் கூடாது. எனவே, இந்தியா ஆகக் குறைந்தது அயலுறவு விவகாரங்களிலாவது, அமெரிக்க வற்புறுத்தல்களுக்கு இடமளிக்காது, சுயாதீனமான கொள்கை ஒன்றை கைக்கொள்ள வேண்டும். இதுவே அன்று பா.ஜ.க. சார் அரசியல் திட்டமிடலாளர்களின் வாதமாக இருந்தது.

எனவே, இந்த வாதத்தை கருத்தில் கொண்டு தற்போது பா.ஜ.க. எடுத்திருக்கும் நிலைப்பாட்டை நோக்குவோமாயின் இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

இந்தியா இலங்கை மீதான மனித உரிமைகள் விவகாரத்தில் ஒரு எல்லைக்கு மேல் செல்லக்கூடாது என்று கருதுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்க அணுசரனையின் கீழ் கொண்டுவரப்பட்ட விசாரணை யோசனையை உள்ளடக்கிய மூன்றாவது பிரேரணைக்கு இந்தியா, ஆதரவாக வாக்களித்திருக்கவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் இந்தியக் கவலை, விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றல்ல. ஏற்கனவே, காஷ்மீர் மற்றும் இன்னும் சில உள்ளக விவகாரங்களில் இந்தியா சிக்கியுள்ளது. எனவே, உடனடி அயல் நாடாக விளங்கும் இலங்கையின் மீதான ஜ.நா. விசாரணைக்கு இந்தியா பகிரங்கமாக ஒத்துழைப்பு வழங்கினால், அதுவே பின்னர் ஒரு பூமறங்காக இந்தியாவை நோக்கியும் திரும்பாது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இவ்வுலகில் இல்லை. நிரந்தர நண்பர்களை கொண்டிராத உலக அரசியல் அரங்கில் எவர், எப்போது வேட்டைக்காரனாக மாறுவார் என்பதை எவரும் அறியார். இந்த விடயங்களை கருத்தில் கொண்டுதான் இந்தியா, இலங்கையின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை நோக்குகிறது. எனவே, தற்போதைய பா.ஜ.க. அரசு எடுத்திருக்கும் நிலைப்பாட்டை எண்ணி ஒப்பாரி வைப்பதைவிடுத்து, இதுதான் உலகம் என்பதை விளங்கிக்கொண்டு, இவ் உலகில் தமிழர்கள் எவ்வாறு சிந்தித்தால், உயர்வுண்டாமென்று சிந்திப்பதே நன்று. நன்றாக சிந்திக்கக் கற்றுக்கொள்வது மட்டுத்தான் இப்போதைக்கு தமிழர்களுக்கு கைகொடுக்கக் கூடிய ஒன்று. வேறு எதுவுமில்லை. “ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டவர்கள் மீள்வதில்லை” என்பதுபோல, என்னதான் ஒப்பாரி வைத்தாலும், திட்டித் தீர்த்தாலும் பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகள் தங்களின் நலன்களைவிட்டு கீழிறங்கப் போவதில்லை. இது விளங்கியவர்களுக்கு யதார்த்தம் – விளங்காதவர்களுக்கு அநீதி, அதர்மம், ஒடுக்குமுறை, மேலாதிக்கம் – இன்னும் பல சொற்கள். எனவே, இப்போது பிரச்சினை,தமிழர்கள் விளங்கியவர்களா அல்லது விளங்காதவர்களா?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Jathindra