Photo, SELVARAJA RAJASEGAR

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ரிலாமுல்ல அருணோதயா ஆரம்பப் பாடசாலை போன்ற பெருந்தோட்டப் பாடசாலைகளில் பயிலும் மலையகத் தமிழ் மாணவர்கள், பாதுகாப்பான வகுப்பறைகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற மிக அடிப்படைத் தேவைகளுக்காகவே போராட வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

பழைய தேயிலைத் தொழிற்சாலையின் கைவிடப்பட்ட கட்டடத்திலேயே ரிலாமுல்ல பாடசாலை இயங்கி வருகிறது. ஓட்டைகள் விழுந்த பாதுகாப்பற்ற மரத்தளங்கள், புறா எச்சங்களின் துர்நாற்றம், உடைந்த ஜன்னல்கள் மற்றும் மழைநீர் கசியும் வகுப்பறைகள் என மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழலிலேயே கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மேலும், பாடசாலைக்கு நிரந்தர குடிநீர் வசதியோ, விளையாட்டு மைதானமோ கிடையாது.

பாடசாலையின் பிரதான மண்டபமாகப் பயன்படுத்தப்படும் பழைய தொழிற்சாலையின் மேல் மாடி மரப்பலகைகளில் பாரிய துளைகள் விழுந்து, கீழ் வகுப்பறைகள் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது. புறாக்களின் எச்சங்களும் தூசியும் நிறைந்த இந்த இடத்திலேயே மாணவர்கள் ஒன்றுகூடவும், விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் உடைந்த யன்னல்கள் வழியாக வகுப்பறைகளுக்குள் நீர் புகுவதுடன், மண்சரிவு ஏற்படும் காலங்களில் இப்பாடசாலை இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக முகாம்களாக மாறுவதால் மாணவர்களின் கல்வி முற்றாகப் பாதிக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாடசாலைக் கட்டடப் புனரமைப்புக்காக 4.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகப் பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், களத்தில் எவ்வித முன்னேற்றமும் காணமுடியவில்லை. மேலும், பெயர்ப்பலகையில் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே (2021 ஜனவரி) திட்டம் நிறைவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை நிதிப் பயன்பாடு குறித்த பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முறையான பஸ் வசதிகள் இன்மையால் மாணவர்கள் கரடுமுரடான பாதைகளில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வழியில் குளவிக் கொட்டு அபாயங்களினால் மாணவர்களின் கற்றல் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ‘மாற்றம்’ தளத்துக்கு பெற்றோர் தெரிவித்த கருத்துக்களடங்கிய வீடியோ தொகுப்பை கீழே பார்க்கலாம்.