Photo, Takingtea
கவிஞர் பராக்கிரம கொடித்துவக்கு இச் சமூகத்தை ‘கடவுளின் மனிதர்கள்’ என்று வர்ணித்தார். கடந்த இரு நூற்றாண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தோள்கொடுத்தவர்கள் அவர்களே. இரு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் அவர்களே. ஆனால், நமது சமூகம் கடுகளவுக்காவது அவர்களுக்குப் பெறுமதி அளித்ததா?
இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, மலையகத் தோட்டங்களில் பணிபுரிய வந்த தமிழ் மக்கள் இந்நாட்டிற்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகள் நிறவடைந்திருக்கின்ற நிலையிலும், முகவரியற்ற மனிதர்களாக வாழ வேண்டிய அவலநிலையே அவர்களுக்கு உள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ‘லயன் அரைகளில்’ இன்றும் அவர்களில் பெருமளவிலானோர் வாழ்வதைப் பார்க்கும்போது, மனிதநேயமிக்க சமூகமாக உலகிற்கு நம்மை நாம் காட்டிக்கொண்டாலும், நமது சொந்த நாட்டில் வாழும் சகோதர மக்களை மனிதர்களாகக் கூட நாம் மதிப்பதில்லை என்பது தெளிவாகிறதல்லவா?
இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட அவர்கள், நமது நாட்டின் தேயிலை, இறப்பர், தென்னை பொருளாதாரத்தின் முக்கிய ஆண், பெண் தொழிலாளர்கள் ஆவர். தேயிலைத் தோட்டங்கள், தென்னந்தோட்டங்கள் அல்லது இறப்பர்த் தோட்டங்கள் அனைத்தும் அவர்களின் உழைப்பாலேயே உருவாயின. சிறிது காலத்திற்கு முன்பு வரை முழு நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்தது இவ்வாறான ஏற்றுமதிகளே ஆகும். இன்றுவரை நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியை இத்தேயிலை, இறப்பர், தென்னை பொருளாதாரமே தாங்கிப் பிடிக்கிறது.
வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து 1948இல் சுதந்திரம் பெற்று, இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தின் கைக்கு அதிகாரம் மாறிய உடனேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம், அதுவரை இந்நாட்டின் பிரதான வருமான மூலமாக இருந்த தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் பணிபுரிந்த, அதுவரை இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்த மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அதுவொரு குற்றமாகும்.
அச்சமயத்தில் நாடாளுமன்றத்தில் இச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக நாட்டிற்குள் ஒரு உரையாடல் உருவாக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். உண்மையில், நாட்டின் ஒரு சகோதர மக்கள் குழுவின் குடியுரிமையை ரத்து செய்தது ஒரு இழிவான, சாபக்கேடான செயலாகும். இருப்பினும், இலங்கை அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் இந்தச் சாபக்கேடான செயலைச் செய்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் இதில் மௌனம் காத்ததன் மூலம் அக்குற்றத்தின் பங்காளிகளாக மாறினர்.
உண்மையில், சிங்கள சமூகத்திற்குள் இம் மக்களைப் பற்றிச் சிறிய அளவிலான சிந்தனை கூட எழக்கூடிய ஒரு சூழல் உருவாகியிருக்கவில்லை. நான் மேலே குறிப்பிட்டது போல, இது சாபத்திற்குரிய ஒரு குற்றமாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் அனைத்து மானுட உரிமைகளையும் ரத்து செய்து, அவர்களைப் பூமியில் அனாதைகளாக்கியது திட்டமிட்டுச் செய்யப்பட்ட குற்றமாகும் என்பதாலேயே அது குற்றமாகிறது.
எனவே, அக்குற்றம் எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறிந்து, அதில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து சட்ட உடன்படிக்கைகளையும் ரத்து செய்து, இன்று அவர்களுக்கு அக்குற்றத்திற்கான இழப்பீட்டை வழங்கி, தவறைச் சரிசெய்ய வேண்டும் என்பதே எனது புரிதலாகும்.
இப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள நான் ஒரு உதாரணத்தைச் சேர்க்கிறேன். இன்று இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கும் ஏனைய பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த இலங்கை வம்சாவளியினரின் எண்ணிக்கை 3 மில்லியனையும் தாண்டுகிறது. இவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி புலம்பெயர்வது 70 ஆண்டுகால இடைவெளியிலாகும். அதிலும் பெருமளவிலானோர் புலம்பெயர்வது 50 ஆண்டுகளுக்கும் குறைந்த காலப்பகுதியிலாகும். இவர்கள் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடியுரிமையையும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கிறார்கள்.
ஒருவேளை இன்று இவ் அனைத்து நாடுகளிலும் 50 ஆண்டுகளாகக் குடியுரிமை உரிமைகளை அனுபவிப்பவர்களின் குடியுரிமையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் இலங்கைக்குச் செல்லுமாறு கூறினால் என்ன நிலை ஏற்படும்? குறிப்பாக, அவர்களின் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இலங்கை ஒரு அந்நிய நாடாகும். அதிர்ஷ்டவசமாக, இவர்கள் வாழும் நாடுகளில் மனிதநேயத்தைப் போற்றும், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஜனநாயக சமூகங்கள் உள்ளன. அவர்கள் அந்நாடுகளில் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதால், அவர்களுக்கு இத்தகைய ஒரு நிலையை எதிர்கொள்ள நேரிடாது என்பதை நான் அறிவேன். நமது நாட்டில் நடந்துள்ள குற்றத்தின் அளவைப் புரிந்துகொள்வதற்காகவே நான் இக் கருத்தை இவ்வாறு முன்வைக்கிறேன்.
‘இந்திய வம்சாவளி’ மக்களின் உரிமைகள் குறித்துப் பேசுவது இந் நாட்களில் இடம்பெற்று வருகிறது. நான் அதில் ‘இந்திய வம்சாவளி’ என்ற சொல்லைப் பயன்படுத்திய போதிலும், அது முற்றிலும் சரியானது அல்ல என்பதை நான் அறிவேன். இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட பயன்பாடு ‘மலையகத் தமிழ் சமூகம்’ என்பதாகும்.
இந்திய வம்சாவளி என்ற விடயத்திற்கு வரும்போது, நான் அறிந்த வரையில் இலங்கையில் வாழும் அனைத்து மக்கள் பிரிவினரும் – அவர்கள் கூறிக்கொள்வது போல – இந்திய வம்சாவளியைக் கொண்டவர்களே. சிங்களவர்கள் தங்களை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்ததாகக் கூறுகிறார்கள். சில சிங்கள சாதிப் பிரிவினர் 600-700 ஆண்டுகளுக்கு முன்பே வந்துள்ளனர். தமிழ் மக்களும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு முன்பே இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்களாவர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த மக்களை மட்டுமே நாம் இந்திய வம்சாவளி மக்கள் என அடையாளம் காண்கிறோம். அப்படியானால் அவர்களுக்கு மட்டும் நாம் இந்திய வம்சாவளி என்று கூறுவது சரியானதா?
நாம் விருந்தோம்பல் பற்றிப் பேசுவோம். விருந்தோம்பல் நிறைந்த ஒரு மனித சமூகம் என்று நாம் பல நேரங்களில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் அது உண்மையா? விருந்தினர்களை உபசரிக்கிறோம் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது அல்லவா? தோட்டப் பகுதிகளில் வாழும் நமது சொந்த சகோதர மனிதர்களைப் பற்றிய உணர்வோ, அனுதாபமோ இல்லாத நாம், விருந்தினர்களுக்கு உபசரனை செய்வோமா?
சுற்றுலாப் பயணிகள் வரும்போது அவர்களை நாம் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஏனெனில் அவர்கள் நமக்கு டொலர்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால், மனதிற்குள் அவர்களை ‘கரப்பான் பூச்சி வெள்ளையர்கள்’ (කැරපොතු සුද්දන් සහ සුද්දියන්) என்றே அழைக்கிறோம். நமது நாட்டின் உண்மையான விருந்தோம்பலை அடையாளம் காண வேண்டுமெனில், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 35 ரோஹிங்யா அகதிகள் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தைப் பார்க்க வேண்டும். அகதிகள் தங்கியிருந்த வீடுகளைச் சூழ்ந்துகொண்டு பல நாட்கள் மக்கள் தாக்குதல் நடத்தியும் கூச்சலிட்டும் நமது விருந்தோம்பலின் உண்மையான சொரூபத்தைத் தெளிவாகக் காட்டினர்.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டில் சட்டப்பூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அகதிகளாக இருந்த பாகிஸ்தான் சிறுபான்மை மதக் குழுவொன்றை கம்பஹா பகுதி மக்களும் அவ்வாறே நடத்தினார்கள். இறுதியில் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக, பொலிஸாரும் இராணுவத்தினரும் அவர்களை இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்க வேண்டியிருந்தது.
இத்தகைய வரவேற்பு கலசாரத்தைக் கொண்ட நாம், நமது நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அந்நாடுகளில் உள்ள விருந்தோம்பலையும் மனிதநேயத்தையும் அனுபவிப்பதை மறந்துவிடக் கூடாது.
உண்மையில், லட்சக்கணக்கான மக்களின் குடியுரிமைகளை ரத்து செய்வது என்பது, அவர்களை இப் பூமியில் எதுவும் அற்ற, எதற்கும் உரிமையற்ற விலங்குகள் கூட்டமாகச் சட்டப்பூர்வமாக மாற்றுவதாகும். அது ஒரு குற்றமாகும். அதற்கு எதிராக நிற்காமல் போனதன் மூலம், இலங்கை அரசு மட்டுமல்லாது மக்களும் அக்குற்றத்தின் பங்காளிகளாக மாறுகிறார்கள்.
அப்படியானால், அக்குற்றத்தின் பங்காளிகளான நமது மக்கள், 21ஆம் நூற்றாண்டில் உலகம் மனிதநேயத்தை வேறு கோணத்தில் பார்க்கும் இந்த வேளையிலாவது, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், இழைக்கப்பட்ட தவற்றைச் சரிசெய்வதற்கும், நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோரி அத்தவற்றைச் சரிசெய்யும் பணியை இன்றே தொடங்க வேண்டும்.
இழைக்கப்பட்ட தவறைச் சரி செய்வதற்கான அடித்தளத்தை இடவும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் திட்டத்தைத் தொடங்கவும், அவர்களுக்கு நாம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கவும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதே நமது புரிதலாகும்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் சில மக்கள் குழுக்களுக்கு இழைக்கப்பட்ட இதுபோன்ற குற்றங்களைச் சரிசெய்யும் நடைமுறைகள் உலகின் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன; இன்னமும் நடந்து வருகின்றன. தொடக்கத்தில் இயக்கங்கள் சிறிய சிவில் சமூக இயக்கங்களாகத் தொடங்கப்பட்ட போதிலும், இறுதியில் அரசுகளே தலையிடும் அளவிற்கு அந்தச் சக்திகள் வலுவாக வளர்ந்துள்ளன. ஏனெனில், இக்காலகட்டம் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்துத் திறந்த மனதுடன் யோசிக்கும் சமூக சக்திகள் கட்டியெழுப்பப்படும் ஒரு காலகட்டமாகும்.
உதாரணமாக, அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான இயக்கங்கள், அவை குறித்துத் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் மற்றும் அவற்றுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவைக் குறிப்பிடலாம். மற்றொரு உதாரணம், கனடாவில் பழங்குடி மக்களின் உரிமைகளை நசுக்கி, இனப்படுகொலை செய்த நடவடிக்கைகளுக்காக அரசு மட்டத்திலேயே மன்னிப்பு கேட்கும் நிலையும், இழப்பீடு வழங்கும் நடைமுறையும் நிலவுவதாகும்.
ஆஸ்திரேலியாவில் பழங்குடியினரை ஓரங்கட்டி, அவர்களின் கலாச்சாரத்தை அழித்து அவர்களுக்குச் செய்த அழிவுக்கு எதிராகச் சமூகத்தில் உருவெடுத்த சிவில் சமூக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, இன்று அவுஸ்திரேலிய அரசு அம் மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கும், தவறுகளைச் சரிசெய்வதற்கும் ஒரு திட்டத்தை வகுக்கும் திசையை நோக்கி நகர்கிறது.
ஜெர்மனிய இராணுவத்தால் நமீபியாவின் ஹெரெரோ மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு இழப்பீடு வழங்கி, இன்று நமீபிய மக்களிடம் ஜெர்மன் அரசு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு வந்துள்ளது.
இவ்வாறாகப் பல்வேறு இடங்களில் கடந்த காலத்தில் செய்யப்பட்ட தவறுகளைச் சரிசெய்து, அதன் மூலம் ஜனநாயக ரீதியான சரியான அரசியலை வெளிக்கொணரும் போக்கு இன்று உலகில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
அப்படியானால், மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்தமைக்காக இன்று நாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து பாகுபாடின்றி வாழவும், இலங்கைச் சமூகத்தில் சாதாரண உரிமைகளைக் கொண்ட மனிதர்களாக அவர்களை மாற்றவும் சமூகத்தில் ஒரு விரிவான உரையாடலை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக, சிங்கள மக்கள் இம் மலையகத் தமிழ் சமூகத்தைச் சொந்த நாட்டின் மக்களாகக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், அந்தத் தவறான எண்ணத்தைச் சரிசெய்யும் சமூக உரையாடலைத் தொடங்க வேண்டும். பாடசாலைக் கல்வியில் அதை ஒரு பாடமாகச் சேர்ப்பது ஒரு படியாக இருக்கலாம். அத் தவறைச் சரி செய்யுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது எங்காவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும்.
ரஞ்சித் ஹேனாயக்க ஆரச்சி