Photo, SELVARAJA RAJASEGAR
நுவரெலியா மாவட்டம், கந்தபொல – மத்துரட்ட, காவத்தை தோட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மலையகக் குடும்பங்கள், நீதிமன்றத்தின் கட்டளையினால் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தற்காலிகக் கூடாரங்களில் நிர்க்கதியாக வாழும் துயரம் அரங்கேறியுள்ளது.
மாரிமுத்து நிர்மலாதேவி, சுப்பையா லலிதா ஆகியோரின் குடும்பங்கள் உட்பட ஐந்து குடும்பங்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக இத்தோட்டத்தில் வாழ்ந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு அப்போதைய தோட்ட முகாமையாளரால் ஒதுக்கப்பட்ட இரட்டை வீடுகளை, இவர்கள் தமது சொந்தச் செலவில் புனரமைத்து வசித்து வந்தனர். பின்னர் வந்த முகாமையாளர்களும் இவர்களது குடியிருப்பை ஏற்றுக்கொண்ட போதிலும், 2021ஆம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தற்போது நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு குடும்பங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்துவிட்டன. எஞ்சிய மூன்று குடும்பங்களும் எந்நேரமும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்திலேயே நாட்களைக் கடத்துகின்றன.
வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் பிள்ளைகளுடன் கூடாரங்களிலேயே தங்கியுள்ளன. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் கூடாரங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதுடன், பிள்ளைகளை காட்டில் மேல் அமர்த்திவிட்டு, பெற்றோர் இரவு முழுதும் கண்விழித்துக் காவல்காக்கும் அவல நிலை தொடர்கிறது.
தமது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பகிர்ந்துகொள்ளும் மாரிமுத்து நிர்மலாதேவி மற்றும் சுப்பையா லலிதா ஆகியோரின் காணொளிப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.