Photo, SELVARAJA RAJASEGAR

மலையக இலக்கியப் பரப்பிலும், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் தடம்பதித்த ஈடு இணையற்ற சிந்தனையாளர் மு. சிவலிங்கம் அவர்களின் மறைவு, ஈழத்து அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் ஒரு பேரிழப்பாகும். ஒரு சமூகத்தின் வலிகளை வெறும் வார்த்தைகளால் அல்லாமல், ஆழமான வர்க்க உணர்வோடும், வரலாற்றுத் தெளிவோடும் ஆவணப்படுத்திய ஒரு பேனா ஓய்ந்திருக்கிறது. ஆயினும், அவர் விட்டுச்சென்ற தத்துவார்த்த, இலக்கியப் பதிவுகள் மலையக மக்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான உயிர்ப்புள்ள வரைபடங்களாகத் தொடர்ந்தும் நிலைத்திருக்கும்.

ஒரு மாபெரும் ஆளுமையின் மறைவுக்குப் பின்னர், அவர் முன்னெடுத்த போராட்டங்களையும், அரசியல் சிந்தனைகளையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் சமகால இளைய தலைமுறை எதிர்கொள்ளும் சவால்கள் எவை? அந்தச் சவால்களின் கட்டமைப்பு சார் பின்னணிகள் எவை? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை, மு. சிவலிங்கம் அவர்களின் எழுத்துக்களைக் குறியீடாகக் கொண்டு, சமூகவியல் மற்றும் அரசியல் கோட்பாடுகளினூடாக ஆழமாக ஆராய்வது இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.

விளிம்புநிலை வரலாற்று வரைவியலும் (Subaltern Historiography) மு.சியின் வகிபாகமும்

வரலாறு எப்போதுமே ஆதிக்க வர்க்கத்தின் பார்வையிலேயே எழுதப்படுகின்றது என்ற அன்டோனியோ கிராம்சியின் (Antonio Gramsci) சிந்தனையை மலையகக் களத்தில் உடைத்தெறிந்தவர் மு. சிவலிங்கம். பிரித்தானியக் காலனித்துவவாதிகளும் பின்னர் வந்த தேசிய முதலாளித்துவ அரசும் மலையக மக்களை வெறும் ‘மலிவு உழைப்புச் சக்தியாகவும்’, புள்ளிவிவரங்களாகவும் மட்டுமே பதிவுசெய்ய முற்பட்டன. ஆனால், மு.சி. தனது ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’, ‘உயிர்’ போன்ற நாவல்கள் மற்றும் ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ போன்ற ஆய்வுகள் ஊடாக விளிம்புநிலை மக்களின் அக-புற வாழ்க்கையை வரலாற்றின் மையக் கருப்பொருளாக மாற்றினார்.

காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak) முன்வைக்கும் “விளிம்புநிலை மக்களால் பேச முடியுமா?” (Can the Subaltern Speak?) என்ற புகழ்பெற்ற கேள்விக்கு, மு.சி. அவர்கள் மலையக மக்களின் ஒப்பாரிகள் மற்றும் உழைப்புப் பாடல்களினூடாகப் பதிலளித்தார். எழுத்து ஆவணங்கள் மறுக்கப்பட்ட, முறையான பாடசாலைக் கல்வி எட்டாக்கனியாக இருந்த ஒரு சமூகத்தின் வாழ்வியலை, அவர்களின் வாய்மொழி மரபினூடாகவே வரலாற்றுச் சாட்சியங்களாக அவர் நிறுவினார்.

இத்தகைய ஒரு மாபெரும் அறிவுச் சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் இன்று பெரும் கட்டமைப்புச் சவால்கள் நிலவுகின்றன.

‘Estate to State’: கோட்பாட்டு ரீதியான மறுவரையறை

நாட்டின் ஏனைய குடிமக்கள் அனைவரும் ‘அரசமைப்புச் சார்ந்த மக்களாக’ (State People) நாட்டின் சகல உரிமைகளையும், அரச நலன்களையும், அபிவிருத்திகளையும் அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கையில், மலையக மக்கள் மட்டும் ‘தோட்டப்புற மக்கள் ‘ (Estate People) ஒரு குறுகிய உற்பத்தி எல்லைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று அநீதியை மு.சி. மிகக் கூர்மையாகச் சுட்டிக்காட்டினார்.

சமூகவியலாளர் ஜோஹன் கால்டுங் (Johan Galtung) வரையறுக்கும் ‘கட்டமைப்புச் சார் வன்முறை’ (Structural Violence) என்ற கோட்பாட்டின் வழியே இதனை நாம் விரிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

‘Estate People’ (தோட்டப்புற  மக்கள்): பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டக் கட்டமைப்புக்குள்ளும் லயன்களுக்குள்ளும் முடக்கப்பட்ட மலையக மக்கள், முதலாளித்துவத்தின் ‘மலிவு உழைப்புச் சக்தியாக’ மட்டுமே பார்க்கப்பட்டனர். சொந்தக் காணி உரிமை மறுக்கப்பட்டு, உள்ளூராட்சி அமைப்புகளின் நிர்வாக எல்லைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டு, நிர்வாக ரீதியாகத் தோட்ட நிர்வாகத்தின் (Estate Management) அதிகாரக் கட்டுப்பாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

‘State People’ (அரசமைப்புச் சார்ந்த மக்கள்): நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் அரசினால் வழங்கப்படும் காணி உரிமைகளையும், உள்ளூராட்சிச் சபைகளின் வீடமைப்பு மற்றும் உழைப்புச் சலுகைகளையும், முழுமையான குடியுரிமைப் பலன்களையும் இயல்பாகவே அனுபவித்து ‘ஸ்டேட்’ இன் அங்கமாக வாழ்கிறார்கள்.

இதனை அடிப்படையாகக் கொண்டே, மு. சிவலிங்கம் தனது ‘எஸ்டேட் டு ஸ்டேட்’ என்ற அரசியல் குரலை எழுப்பினார். “தோட்டப்புற மனிதர்களாகிய மலையக மக்களும், நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போல அரசமைப்புச் சார்ந்த குடிமக்களாக உயர்த்தப்பட்டு, நாட்டின் சகல வளங்களையும் உரிமைகளையும் அனுபவிக்கும் நிலை உருவாக வேண்டும்” என்பதே அந்த முழக்கத்தின் மையப் பொருளாகும்.

1948 இல் சுதந்திர இலங்கையில் அரங்கேற்றப்பட்ட பிரஜாவுரிமைப் பறிப்பு, வாக்குரிமை இழப்பு, சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடான பலவந்தமான நாடுகடத்தல் ஆகியவை ‘தோட்டப்புற மக்கள் ‘ மேலும் அரசின் நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்தின. மு.சி.யின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நாவல், இந்த வரலாற்று அவலத்தை வெறும் புனைவாக அல்லாமல், ‘Estate’ என்ற அடிமை எல்லைக்குள் முடக்கப்பட்ட ஒரு சமூகம் ‘State’ இன் சமத்துவ உரிமைக்காக நடத்திய நெடிய போராட்டத்தின் சாட்சியமாகப் பதிவு செய்தது.

சமகால இளைய தலைமுறை எதிர்கொள்ளும் கட்டமைப்பு சார் சவால்கள்

மு. சிவலிங்கம் விட்டுச்சென்ற வரலாற்றுப் பதிவுகளை உள்வாங்கி, மலையகத்தின் அரசியல் விடுதலையை நோக்கி நகர வேண்டிய சமகால இளைய சமூகத்தின் முன், பல கண்ணுக்குத் தெரியாத கட்டமைப்புச் சவால்கள் விரிந்து கிடக்கின்றன.அரச பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாறு, மலையக மக்களின் உழைப்பையும் அவர்கள் சிந்திய இரத்தத்தையும் தேசிய நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்தியே வைத்திருக்கிறது. இதனால், இன்றைய இளைய தலைமுறையில் பலருக்கு மு. சிவலிங்கம், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்களின் படைப்புகள் குறித்த பரிச்சயமோ, தமது மூதாதையர் எதிர்கொண்ட வர்க்கப் போராட்டங்களின் வீரியமோ முழுமையாகச் சென்றடையவில்லை. வரலாற்று வேர்களுடனான இந்தத் தொடர்பறுதல், இளைஞர்களைப் பின்காலனித்துவச் சமூகத்தின் நுகர்வுவாதத்திற்குள் எளிதில் தள்ளிவிடுகிறது. மலையக இளைஞர்கள் இன்று தோட்டத்து லயன்களிலிருந்து வெளியேறி நகரங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். கொழும்பின் வர்த்தக நிலையங்களிலும், ஆடைத் தொழிற்சாலைகளிலும், உணவகங்களிலும் அவர்கள் ஈடுபடும் உழைப்பு, மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘தோட்ட அடிமைத்தனத்திலிருந்து’ கிடைத்த விடுதலையாகத் தோன்றலாம். ஆனால், மார்க்சியக் கோட்பாட்டின்படி நோக்கினால், இது உழைப்புச் சுரண்டலின் இன்னொரு வடிவமேயாகும். அமைப்புசாராத் தொழிலாளர்களாக, எவ்விதத் தொழிற்சங்கப் பாதுகாப்புமின்றி, மிகக் குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் தமது உழைப்பை விற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வர்க்க உணர்வற்ற இந்த நகரமயமாதல், இளைஞர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைய விடாமல், தனிநபர் பிழைப்புவாதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிவிடுகிறது. மலையக அரசியலைக் கடந்த பல தசாப்தங்களாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரம்பரியத் தொழிற்சங்கங்கள், ஒரு வகையான அதிகார மேலாண்மையை (Hegemony) நிறுவியுள்ளன. இந்த அமைப்புகள் உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளான காணி உரிமை, முறையான வீடமைப்பு போன்றவற்றிற்கான தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்து, சமரச அரசியலையே கையாளுகின்றன. மு. சிவலிங்கம் தனது ‘வெந்து தணிந்தது காலம்’ தொகுப்பில் இத்தகைய தொழிற்சங்க வேடதாரிகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்துள்ளார். இன்று ஒரு மாற்று அரசியல் சிந்தனையோடு எழ முற்படும் இளைஞர்கள், இந்த ஆழமாக வேரூன்றிய அதிகாரக் கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டு வெளியே வருவதில் பெரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கின்றனர்.

கோட்பாடுகளைத் தாண்டிய இளைய தலைமுறையின் வரலாற்றுப் பொறுப்புகள்

மு. சிவலிங்கத்தின் அரசியல் மற்றும் இலக்கிய மரபைத் தொடர்வது என்பது, அவரது நூல்களைப் போற்றுவதுடன் மட்டும் முற்றுப்பெறுவதல்ல. அது, அந்தப் படைப்புகள் சுட்டிக்காட்டும் அரசியல் இலக்குகளை நோக்கி நடைமுறைச் செயற்திட்டங்களை முன்னெடுப்பதாகும்.

மலையக மக்கள் வெறும் ‘தொழிலாளர்கள்’ என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு, ஓர் ‘தேசிய இனம்’ என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமாயின், அதற்கான அடிப்படை நிலவுரிமையாகும். லயன் அறைகளுக்குப் பதிலாக, தனித்து வாழக்கூடிய காணிகளை வென்றெடுக்கும் போராட்டத்தை இளைய தலைமுறை கையில் எடுக்க வேண்டும். நிலமற்ற சமூகம் எக்காலத்திலும் தன் பண்பாட்டையோ, பொருளாதாரத்தையோ தன்னாட்சி செய்ய முடியாது என்ற அரசியல் பாடத்தை அவர்கள் சமூக மட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். தமது வரலாற்றைத் தாமே எழுதும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்க வேண்டும். மு.சி. அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை ஆவணப்படுத்தியதைப் போல, இன்றைய இளைஞர்கள் நவீன ஊடகங்களையும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மலையகத்தின் சமகாலப் பிரச்சினைகளை, மனித உரிமை மீறல்களை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சமூக ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக அன்றி, அரசியல் அணிதிரட்டலுக்கான (Political Mobilization) ஆயுதமாகப் பயன்படுத்த ஆயத்தமாக வேண்டும். பாரம்பரியத் தொழிற்சங்க அரசியலின் சமரசப் போக்கிலிருந்து விடுபட்டு, மாற்று அரசியல் தளங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. பெண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல், பாடசாலை இடைவிலகல், சுகாதாரச் சீர்கேடுகள் ஆகியவற்றை வெறுமனே தொண்டு நிறுவனங்களின் (NGO) பார்வையில் அணுகாமல், உரிமையடிப்படையிலான அரசியல் கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும்.

மு. சிவலிங்கம் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் ஓர் உண்மையான பாட்டாளி வர்க்கக் குரலாக ஒலித்தார். ஏகாதிபத்தியத்தின் பெருந்தோட்டக் கங்காணிகளிலிருந்து, நவீன காலத்தின் அரசியல் கங்காணிகள் வரை அனைவரின் முகத்திரையையும் தனது எழுத்துக்களால் கிழித்தெறிந்தார். அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது எளிதல்ல. ஆனால், அவர் காட்டிய வழியில், மலையகச் சமூகம் தன்னை ‘Estate’ என்ற அடிமை இருளிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொண்டு, சமத்துவமான அரசியல் உரிமைகளைக் கொண்ட சுதந்திர மனிதர்களாக நிமிர்ந்து நிற்கும் அன்றே, அந்தப் போராளிக்கான உண்மையான வரலாற்று அஞ்சலி செலுத்தப்பட்டதாக அமையும்.

அருள்கார்க்கி

உசாத்துணைகள் (References)

மு. சிவலிங்கம் (2007). மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். (மலையக உழைக்கும் மக்களின் வாய்மொழி வரலாற்றையும், ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் உளவியலையும் பதிவு செய்த ஆய்வு நூல்).

மு. சிவலிங்கம் (1992). மலைகளின் மக்கள் (சிறுகதைத் தொகுப்பு). இலங்கை: மலையக வெளியீட்டகம்.

மு. சிவலிங்கம் (2004). ஒரு விதை நெல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

மு. சிவலிங்கம் (2003). தேயிலை தேசம் (மொழிபெயர்ப்பு). கொழும்பு: சவுத் ஏசியன் புக்ஸ். (பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் சர்வதேசப் பரிமாணங்களை விளக்கும் ஆவணம்).

மு. சிவலிங்கம் (2013). வெந்து தணிந்தது காலம். (தொழிற்சங்க அரசியலின் பின்னடைவுகளையும், வர்க்க மோதல்களையும் விமர்சிக்கும் சமூகப் பதிவு).

Gramsci, Antonio (1971). Selections from the Prison Notebooks. (விளிம்புநிலை வரலாற்று வரைவியலுக்கான தத்துவார்த்த அடிப்படை).

Galtung, Johan (1969). Violence, Peace, and Peace Research. Journal of Peace Research. (கட்டமைப்புச் சார் வன்முறை – Structural Violence கோட்பாடு குறித்த அடிப்படை வரைவிலக்கணம்).

Spivak, Gayatri Chakravorty (1988). Can the Subaltern Speak? in Marxism and the Interpretation of Culture. (விளிம்புநிலை மக்களின் குரலற்ற தன்மை மற்றும் அதனை ஆவணப்படுத்துவதன் அரசியல் முக்கியத்துவம் குறித்த ஆய்வு).