Photo, NEWSWAVE.LK (13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தினர், அப்போது பிக்குகள் சிலர் அந்தத் திருத்தச் சட்டத்தின் நகலை எரிப்பதைக் காண முடிந்தது.)
இலங்கையின் அரசியலமைப்புப் பயணம் இன்னும் தீர்க்கப்படாத இக்கட்டான நிலைகளாலேயே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆழமாக வேரூன்றிய நிறைவேற்று அதிகார மேலாதிக்கம், பலவீனமான அடிப்படை உரிமைகள், நிறைவேற்றப்படாத சீர்திருத்த வாக்குறுதிகள் மற்றும் தொடர்ந்தும் நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினை ஆகியவையே அவை.
இந்தச் சவால்கள் சமத்துவமின்மையை ஆழமாக்கியுள்ளதுடன், இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பாதித்து, ஜனநாயகப் பொறுப்புக் கூறலையும் பலவீனப்படுத்தியுள்ளன. தற்காலிக அரசியல் பெரும்பான்மைகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பு மேலாதிக்கம் உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் சட்டங்கள் உட்பட அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கும் வகையில் நீதிமன்ற மறுஆய்வு அதிகாரம் (judicial review) விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கட்டுரையாளர் வாதிடுகிறார்.
நாடாளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி, மக்கள் இறையாண்மையைக் குறைத்து மதிப்பிட்டுள்ள, அதிகாரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே இந்தத் தொலைநோக்குப் பார்வையின் மையப்பகுதியாகும்.
அதேபோன்று, சமத்துவம், சமூக நீதி மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும், சுதந்திரமான நீதித்துறையினால் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஒரு நவீன உரிமைகள் சாசனம் (bill of rights) ஏற்றுக் கொள்ளப்படுவதும் இன்றியமையாததாகும். அதிகாரப் பகிர்வு என்பது ஏதோ ஒரு சலுகையாக அன்றி, ஒரு அரசியலமைப்பு ரீதியான தேவையாக முன்வைக்கப்படுகிறது – இது பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் காண்பதற்கும், இன நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் அவசியமான ஒன்றாகும்.
2015 – 2019 அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயல்முறையின் வழிநடத்தல் குழு மற்றும் துணைக் குழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் கூறுவதானால், அப்போது ஓர் அரசியலமைப்பு சாத்தியமாகியிருந்தால், அது ஒரு “சீர்திருத்தவாத” (reformist) மற்றும் “மாற்றத்தை ஏற்படுத்தும்” (transformative) அரசியலமைப்புக்கு இடைப்பட்ட ஒன்றாக அது இருந்திருக்கும். மறுபுறம், 2000ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், புதிய அரசியலமைப்பானது “மாற்றத்தை ஏற்படுத்தும்” ஒரு அரசியலமைப்பாக அமைந்திருந்திருக்கும்.
இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் 54ஆவது ஆண்டு நிறைவில், (2026 மே 22) கட்டுரையாளர் வெறும் “சீர்திருத்தவாத” ஒன்றாக இல்லாமல் “மாற்றத்தை ஏற்படுத்தும்” ஒரு மூன்றாம் குடியரசு அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கிறார்.
‘அறகலய‘ (போராட்டத்தின்) முக்கியத்துவம்
2000ஆம் ஆண்டிற்குப் பிறகு பல விடயங்கள் நடந்துள்ளன. பிரிவினைவாதப் போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், இன முரண்பாடுகள் இன்னும் நீடிக்கின்றன. 2022ஆம் ஆண்டின் ‘அறகலய’ போராட்டமானது சர்வாதிகாரம், ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் தவறான பொருளாதார நிர்வாகத்திற்கு எதிராக குடிமக்களால் வழிநடத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியாகும்.
இது நாட்டின் ஜனநாயகப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது பொதுவெளியை மக்கள் மீண்டும் மீட்டெடுத்ததையும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையையும், சாதாரண குடிமக்கள் – குறிப்பாக இளைஞர்கள் – வேரூன்றிய அரசியல் வம்சங்களுக்கு சவால் விடுக்க முடியும் என்பதையும் அடையாளப்படுத்தியது. இந்த முன்னேற்றங்களுக்கு புதிய அரசியலமைப்பு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?
‘அறகலய’வின் முதன்மை முக்கியத்துவம் என்பது, சாதாரண குடிமக்கள் இன மற்றும் வர்க்கப் பாகுபாடுகளைக் கடந்து, பொதுவெளியை மீட்டு, அதிகாரத்தில் இருந்த உயர் வர்க்கத்தவரிடம் பொறுப்புக்கூறலை வலியுறுத்திய ஒரு ஜனநாயக விழிப்புணர்வாக அது இருந்தமையில்தான் தங்கியிருக்கிறது. இது ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் கட்டுப்பாடற்ற நிறைவேற்று அதிகாரம் ஆகியவற்றை நிராகரித்த அதேவேளையில், முறையான (அமைப்பு ரீதியான) மாற்றத்தைக் கொண்டுவர அடிமட்ட அளவிலான, இளைஞர்கள் வழிநடத்தும் எழுச்சியால் முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.
ஒரு புதிய அரசியலமைப்பிற்கான அடிப்படையாக, அரசியலமைப்பு மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், நிறைவேற்று அதிகார மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நிறுவன ரீதியான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் வேண்டிய அவசரத் தேவையை ‘அறகலய’ அடிக்கோடிட்டுக் காட்டியது .
இதன் மூலம் இறையாண்மை உண்மையிலேயே மக்களிடமே இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்பதுடன், ஆட்சி அதிகாரம் மீண்டும் ஒருபோதும் குடும்ப ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சியால் ஆக்கிரமிக்கப்பட முடியாதது என்பதும் உறுதியாக்கப்படுகிறது. ‘அறகலய’ இலங்கையின் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களுக்கு இடையே முன்னெப்போதுமில்லாத ஒற்றுமையை ஏற்படுத்தியது. இது இன, மத எல்லைகளைக் கடந்து பிணைப்புகளை உருவாக்கியதுடன், பிரித்தாளும் சக்திகள் மீண்டும் ஒருமுறை இன, மத வெறுப்பைத் தூண்டுவதை இன்று மிகவும் கடினமாக்கியுள்ளது.
குடும்ப ஆட்சியை நிராகரித்ததன் மூலமும் இளைஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தை ஊக்குவித்ததன் மூலமும் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை தேர்தல் நிகழ்ச்சி நிரலில் ஆழமாகப் பதித்ததன் மூலமும் ‘அறகலய’ இலங்கையின் 2024 தேர்தல்களை நேரடியாக வடிவமைத்தது. பழைய நிலையே தொடர்வதை வாக்காளர்கள் தீர்க்கமாக நிராகரித்து, அமைப்பு ரீதியான மாற்றத்தை உறுதியளிக்கும் தலைமையை நாடுவதற்கான அரசியல் சூழலை இந்தப் போராட்டங்கள் உருவாக்கின.
2024 தேசிய மக்கள் சக்தியின் வெற்றி
2019ஆம் ஆண்டில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அரசியல் குழுக்கள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகளுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கியது. 2019 ஜனாதிபதி தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த அளவு மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்ற போதிலும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பாரம்பரிய அரசியல் கட்டமைப்புக்கு எதிராக வெடித்த முன்னென்றும் இல்லாத வகையிலான மக்கள் போராட்டங்களின் முக்கிய பயனாளியாக தேசிய மக்கள் சக்தி மாறியது. இந்தப் போராட்டங்களின் உச்சக்கட்டமாக அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முதலாம் சுற்றில் 42.31 சதவீத வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் சுற்றில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கு (திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச) வெளியில் உள்ள ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் மறுபகிர்வு செய்யப்பட்டதன் பின்னர், திசாநாயக்க மொத்த வாக்குகளில் 55.89 சதவீதத்தைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பதவியேற்றவுடன் ஜனாதிபதி திசாநாயக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத்தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைத் தந்தது; தேசிய மக்கள் சக்தி 61.56 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான தீர்க்கமான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அக்கட்சி பெற்றது.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்திருந்தது. குறிப்பாக, 2015 – 2019 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையை விரைவாக நிறைவு செய்வதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமைக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சி முறைமையைக் கொண்டு வருதல், புதிய தேர்தல் முறைமை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உள்ளடக்கிய அடிப்படை உரிமைகள், அத்துடன் மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் ஆகியன இந்தப் புதிய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று கூறப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல் எதிரியான ஐக்கிய மக்கள் சக்தியும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உறுதியளித்தது. இது அரசாங்க வடிவத்தை நாடாளுமன்ற முறைமையாக மாற்றுவதோடு, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை உள்ளடக்கியதாகவும் ஒற்றையாட்சி நாட்டிற்குள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதாகவும் அமையும்.
“அமைப்பை மாற்றியமைக்கும்” முற்போக்கான அரசியலமைப்பு
இலங்கையில் புதிய அரசியலமைப்பு எவ்வாறு “அறகலய” காலத்தின்போது மக்களால் எழுப்பப்பட்ட, பின்னர் 2024 தேர்தல்களிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும்?
சுருக்கமாகக் கூறின், “அறகலய” போராட்டத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட “அமைப்பு ரீதியான மாற்றம்” (system change) என்ற கோரிக்கை, இறையாண்மை உண்மையிலேயே மக்களிடமே தங்கியிருக்கக்கூடிய மற்றும் நிறுவனங்கள் சர்வாதிகார ஆதிக்கத்திற்குள் சிக்குவதைத் தடுக்கக்கூடிய ஒரு அரசியலமைப்பு கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும்.
அனைத்து அதிகாரங்களும் மக்களிடமிருந்தே பிறக்கின்றன என்பதும், அவை நம்பிக்கையின் அடிப்படையிலும், பொறுப்புக்கூறலுடனும், நீதிக்கு அமைவாகவுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற அதிகாரம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவற்றின் ஆபத்துக்களை உணர்ந்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் மற்றும் நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணும் ஓர் அரசியலமைப்பு ஒழுங்கிற்கான தெளிவான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவற்றை வெறும் “சீர்திருத்தவாத அரசியலமைப்பு” (reformist constitution) மூலம் சாதிக்க முடியாது; மாறாக, “அமைப்பு ரீதியான மாற்றத்திற்கு” அர்ப்பணிக்கப்பட்ட ஒரு “மாற்றத்திற்கான அரசியலமைப்பு” (transformative constitution) மூலமே இதனை யதார்த்தமாக்க முடியும். இத்தகைய அரசியலமைப்பின் அத்தியாவசிய அம்சம் என்னவென்றால், இது ஒரு தேக்கநிலையான உரை அல்ல, மாறாக நிர்வாகத்தின் ஒரு மாறும், உருவாகி வரும் கட்டமைப்பு என்பதை அங்கீகரிப்பதாகும்.
சமகால யதார்த்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு விதிகளை விளக்குவதற்கு இது நீதிமன்றங்களுக்கு இடமளிக்க வேண்டும். எனவே, ஒரு புதிய அரசியலமைப்பு சமூக நீதிக்கான வலுவான அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க வேண்டும். இது முறையான (அமைப்பு ரீதியான) பாகுபாடுகளைக் களைவதற்கும், ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு நியாயத்தையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதற்கும் அரசை வற்புறுத்த வேண்டும். அதன் சட்டபூர்வத்தன்மை என்பது பங்களிப்பு ஜனநாயகத்தின் (participatory democracy) மீது கட்டியெழுப்பப்பட வேண்டும்; அங்கு குடிமக்கள் நிறுவனங்களை வடிவமைப்பதிலும், அரசியலமைப்பு ஒழுங்கின் தொடர்ச்சியான வளர்ச்சியிலும் தீவிர பங்கினை வகிக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு புதிய அரசியலமைப்பு என்பது ஒரு “வாழும் ஆவணமாக” (living instrument) புரிந்து கொள்ளப்பட வேண்டும் – இது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு உண்மையாக இருக்கும் அதே வேளை, மாறிவரும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த வகையில், அரசியலமைப்பவாதத்தின் (constitutionalism) நோக்கம் அரசியலமைப்பு ஒழுங்கைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மாறிவரும் சமூகத்தில் நீதி, சமத்துவம், உள்ளடக்கம் மற்றும் அர்த்தமுள்ள ஜனநாயக ஈடுபாட்டை ஊக்குவிப்பதும் ஆகும்.
உரிமைகள் சாசனம்
இலங்கைக்கு சமத்துவம், சமூக நீதி மற்றும் மனித கண்ணியம் உள்ளிட்ட சமகால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நவீன, விரிவான உரிமைகள் சாசனம் (bill of rights) தேவைப்படுகிறது. உரிமைகள் வெறும் ஆசை வார்த்தைகளாக இல்லாமல், உண்மையானவையாகவும் நடைமுறைப்படுத்தக்கூடியவையாகவும் இருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு என்பது ஒரு சுதந்திரமான மற்றும் துணிச்சலான நீதித்துறையிலேயே தங்கியுள்ளது.
அதேபோன்று, அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் சலுகையாகக் கருதப்படாமல், அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களை வலுப்படுத்துவதற்கான ஓர் அரசியலமைப்புத் தேவையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில், பன்முகத்தன்மையை மதித்து தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் இன அமைதிக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இன்றியமையாததாகும்.
அரசியலமைப்பின் மேலாதிக்கம்
எந்தவொரு உண்மையான மாற்றத்திற்கான அரசியலமைப்பு ஒழுங்கிற்கும் அரசியலமைப்பின் மேலாதிக்கமே (Supremacy of the Constitution) அடித்தளமாக இருக்கவேண்டும். இலங்கைச் சூழலில் இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு அரசு நிறுவனமோ அல்லது எந்தவொரு தனிநபரோ, குடும்பமோ அல்லது அரசியல் கட்சியோ சட்டத்திற்கு மேலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நிறுவனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தவோ முடியாது என்பதாகும்.
எனவே, ஒரு மாற்றத்திற்கான அரசியலமைப்பு, அனைத்து அரசாங்க அதிகாரங்களும் அரசியலமைப்பில் இருந்தே பெறப்படுகின்றன; அதனாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கொள்கையையும் அதற்கு முரணான எந்தவொரு செயலும் செல்லுபடியற்றது என்ற கொள்கையையும் நிலைநாட்ட வேண்டும்.
மாற்றியமைக்க முடியாத அடிப்படைக் கட்டமைப்பு
ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆளுங்கட்சி பெரும்பாலும் பொதுஜன வாக்கெடுப்பு (referendum) ஒன்றில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் பொருள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், 50 சதவீதத்துடன் கூடுதலாக ஒரு வாக்காளரைக் கொண்ட மக்கள் இணைந்து எந்தவொரு அரசியலமைப்பையும் திணிக்க முடியும் என்பதா?
உதாரணத்திற்கு, பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரத்தை அது மறுக்க முடியுமா அல்லது ஒருகட்சி ஆட்சியை நிலைநிறுத்த முடியுமா? உறுதியான பாதுகாப்புகள் இல்லாத பட்சத்தில், இத்தகைய அபாயகரமான அரசியலமைப்பு மாற்றங்களுக்கான ஆபத்து தடையின்றித் தொடர்கிறது.
இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தச் செயல்முறையானது, பாதுகாப்புகளை நிலைநிறுத்துவதில் (entrenchment) மிகவும் கவனமாக சமநிலைப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். துஷ்பிரயோகம் அல்லது தற்காலிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திருத்தங்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக, அடிப்படைத் தத்துவங்களைப் பாதுகாக்கும் விதிகள் அவசியமானவையாகும்.
இருப்பினும், இத்தகைய பாதுகாப்புகள் துல்லியமாகவும் கட்டுப்பாடுடனும் வரையறுக்கப்பட வேண்டும். இந்த உறுதியான பாதுகாப்புகள் மிகவும் பரந்தளவில் வடிவமைக்கப்பட்டால், அது விரிவான அல்லது தொழில்நுட்ப விதிகளை முடக்கி, கடுமையான நெகிழ்வற்ற தன்மைக்கு வழிவகுப்பதோடு, உருவாகி வரும் ஜனநாயக யதார்த்தங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் அரசியலமைப்பின் திறனையும் பலவீனப்படுத்திவிடும்.
அரசியலமைப்பின் முக்கிய அடையாளத்திற்குள் மட்டும் இத்தகைய பாதுகாப்புகளை மட்டுப்படுத்துவதுடன், அதேநேரத்தில் அந்த அடிப்படைத் தத்துவங்களுக்கு முரணாக வரும் அரசியலமைப்புத் திருத்தங்களை உன்னிப்பாகப் பரிசீலிக்கும் (ஆய்வு செய்யும்) அதிகாரத்தை நீதித்துறைக்கு வழங்குவதுமே மிகச் சிறந்த பாதுகாப்பாக அமையும்.
இந்த அணுகுமுறை, நிர்வாகத்தின் பிற பகுதிகளில் நெகிழ்வுத் தன்மையைப் பேணுகின்ற அதேவேளை, மிகவும் அவசியமான இடங்களில் நிரந்தரத் தன்மையைப் பாதுகாக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை, முக்கிய பாடம் என்னவெனில், ஜனநாயகத்தின் தழுவிக்கொள்ளும் (மாற்றமடையும்) திறனைப் பலிகொடுத்து அரசியலமைப்பு ஸ்திரத்தன்மையை எட்டக்கூடாது என்பதாகும்.
குறுகிய அளவில் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியான நீதித்துறை மறுஆய்வு (judicial review) ஆகியவற்றின் சிந்தனைமிக்க ஒருங்கிணைப்பு, நெகிழ்ச்சியுடனும் அதேநேரம் பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு அரசியலமைப்பு ஒழுங்கிற்கு மிகவும் நம்பகமான அடித்தளத்தை வழங்குகிறது.
எதிர்கால அரசியலமைப்பானது, மாற்றியமைக்க முடியாத ஓர் அடிப்படைத் கட்டமைப்பை உருவாக்கும் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டுரையாளர் சமர்ப்பிக்கிறார்.
2024 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைக் கொண்ட குழுவான ‘ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான கூட்டமைப்பு’ (Collective for Democracy and Rule of Law), ஒரு புதிய அரசியலமைப்பில் ‘அரசியலமைப்பு கொள்கைகள்’ சேர்க்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது. அவை ‘ஜனநாயகக் குடியரசுவாதத்தின் மாறாத மற்றும் மீறமுடியாத மதிப்புகள்’ என்று விவரிக்கப்பட வேண்டும்.
இந்தக் கொள்கைகள், புதிய அரசியலமைப்பிற்கும் அதன் பிரிவுகளின் எதிர்கால நீதித்துறை விளக்கங்களுக்கும் வழிகாட்டும் அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஜனநாயகக் குடியரசுவாதம் மற்றும் கூட்டாண்மைவாதம் (consociationalism) ஆகியவற்றின் பின்வரும் மாறாத மற்றும் மீறமுடியாத விழுமியங்களை அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என்று அக்கூட்டமைப்பு முன்மொழிந்தது;
* மனித கண்ணியம், சமூக நீதி, பொருளாதார நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் மேம்பாடு;
* இன, பாலின மற்றும் சமூக சமத்துவம்;
* அரசியலமைப்பின் மேலாதிக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி;
* வழக்கமான, தடையற்ற, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மற்றும் ஜனநாயக அரசாங்கத்தின் பல்லினக் கட்சி முறை;
* ஒரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ அரசு அதிகாரம் குவிக்கப்படாமை;
* நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக்கூறல், பதிலளிக்கும் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்தல்;
* பொது அதிகாரிகள் பொது நம்பிக்கைக் கோட்பாட்டிற்கு (doctrine of public trust) இணங்க அதிகாரங்களைக் கொண்டிருப்பதும் அதனைப் பயன்படுத்துவதும்;
மேற்குறிப்பிட்ட கொள்கைகள் மாற்றியமைக்க முடியாத ஓர் அடிப்படைத் தட்டமைப்பிற்கான அடிப்படையாக அமையலாம் என்று கட்டுரையாளர் சமர்ப்பிக்கிறார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சர்வாதிகாரக் கட்டமைப்புகளைத் தகர்த்து, அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை வழங்குவதற்கான தெளிவான மக்கள் ஆணை (mandate) வழங்கப்பட்ட போதிலும், அதன் தொடர்ச்சியான செயலற்ற தன்மை அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது. இலங்கை இனிமேலும் தாமதங்களை தாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில், சீர்திருத்தம் இல்லாத ஒவ்வொரு நாளும் நிறைவேற்று அதிகாரத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதோடு, ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைத்துவிடுகிறது.
இறைமை என்பது உண்மையான அர்த்தத்தில் மக்களிடமே நிலைத்திருப்பதற்கும் ஒரு நியாயமான, ஜனநாயகக் குடியரசின் வாக்குறுதி இறுதியாக நிறைவேற்றப்படுவதற்கும் இப்போது தேவைப்படுபவை பின்வருமாறு;
* நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது,
* அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது (நிலைநிறுத்துவது),
* அதிகாரப் பகிர்வை முன்னெடுப்பது
* சமூக நீதிக்கான வழியை ஏற்படுத்துவது
ஆகியவற்றுக்கான தீர்க்கமான நடவடிக்கையாகும்.
கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன
(விரைவில் வெளியாகவிருக்கும் ‘அரசியலமைப்பு உரையாடல்கள்’ (Constitutional Conversations) என்ற கட்டுரையாளரின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி)