Photo, DBS
2026 மே 17 அன்று, டி.பி.எஸ். ஜெயராஜ் தனது இறுதிக் கட்டுரையை ‘தி மார்னிங்’ (The Morning) நாளிதழில் வெளியிட்டார். பல வருடங்களாக வெளிவந்த அவரது பத்திகளைப் போலவே, இதுவும் எந்தவொரு ஆடம்பரமுமின்றி, ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தான் கட்டாயமாக வெளியேற வேண்டியிருந்த ஒரு நாட்டைப் பற்றி, கனடாவிலிருந்து எழுதிய ஒரு மனிதனின் கவனமான, ஆழமாக சிந்தித்து எழுதப்பட்ட ஒரு பத்திரிகைப்பணியாக அமைந்திருந்தது. அந்தக் கட்டுரை வெளியாகி சில நாட்களுக்குப் பிறகு, அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது மறைவு, இலங்கைத் தமிழ் ஊடகத்துறையில் ஒழுக்கம், நெறிமுறைசார்ந்த தீவிரத்தன்மை மற்றும் அதன் பரந்த ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் வேறெதற்கும் இணையற்ற ஒரு வரலாற்றுப் பணியின் நிறைவைக் குறிக்கிறது.
பலராலும் ‘டி.பி.எஸ்.’ (DBS) என அறியப்பட்ட அவர், ஒட்டுமொத்த தலைமுறையையும் உலுக்கிய இன மோதலுக்குள் இலங்கை தள்ளப்பட்டுக்கொண்டிருந்த 1970களின் பிற்பகுதியில், வீரகேசரி தமிழ் நாளிதழில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார். 1980களின் முற்பகுதியில் இருந்து ‘தி ஐலண்ட்’ (The Island), ‘தி ஹிந்து’ (The Hindu) மற்றும் பின்னர் பிபிசி (BBC) தமிழோசை ஆகியவற்றிற்குத் தனது பங்களிப்பை வழங்கிய அவர், இலங்கை ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே நிலவிய உள்நாட்டுப் போர் குறித்து களத்திலிருந்து செய்தி வழங்கியிருந்தார்.
பரந்த அளவிலான தகவல் மூலங்களைக் கொண்டிருந்த அவர், நம்பகத்தன்மை என்பது அரிதானதாகவும், பல நேரங்களில் ஆபத்தானதாகவும் இருந்த ஒரு சூழலில், மிகவும் துல்லியமான தகவல் சரிபார்ப்புகளுடன் (Fact checking) களத்திற்கு மிக நெருக்கமாக இருந்து தனது செய்திகளை வெளியிட்டார். இதுவே அவரது பணிகளைப் பாரியளவில் நம்பகத்தன்மை மிக்கதாக மாற்றியது.
ஆபத்து என்பது வெறும் கற்பனையான ஒன்றாக இருக்கவில்லை. 1983 ஜூலை மாதத்தில் இலங்கையை உலுக்கிய தமிழர்களுக்கு எதிரான வன்முறை, அவரது ஊடகவியலாளர் குரலை வடிவமைத்தது. நிகழ்வுகள் நடந்த உடனுக்குடன் அவற்றை செய்தியாக்க வேண்டும் என்ற தீவிர உறுதியுடன் அவர் மீண்டும் கொழும்புக்குத் திரும்பினார். இந்திய இராஜதந்திர அழுத்தங்களின் மத்தியில், 1987 அக்டோபரில் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரைக் கைது செய்தது. அவர் போராளிகள் மீது காட்டிய சார்பு நிலைப்பாடு காரணமாக அது நடக்கவில்லை; மாறாக அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். அதாவது, அவர் அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கைகளை நிராகரித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ‘மகாத்தாயா’ வுடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டமையே அதற்குக் காரணமாகும்.
தீவிர மக்கள் தலையீட்டிற்குப் பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர், இறுதியில் கனடாவில் குடியேறினார். மிகவும் பாதுகாப்பான தூரத்திலிருந்தவாறு, அதேநேரம் சற்றும் தளராத அர்ப்பணிப்புடன் அவர் இலங்கையைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து அறிக்கைப்படுத்தினார்.
புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில், 1990களின் நடுப்பகுதியில் அவர் ‘மஞ்சரி’ என்ற சுதந்திர தமிழ் வார இதழைத் தொடங்கினார். பல நேரங்களில் கடுமையான ஆபத்துகளுக்கு மத்தியிலும், அது இலங்கையின் நிகழ்வுகள் குறித்து நடுநிலையாக செய்திகளை வெளியிட்டது. வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதால் 1995ஆம் ஆண்டில் அதனை மூட வேண்டியிருந்தது.
இருப்பினும், அவர் தொடர்ந்து எழுதினார். இந்தியாவின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தமிழ் கலாசாரம் குறித்து ஆராய்ந்த அவர், அரசியல் வரலாறு மற்றும் இலங்கையுடனான குடும்ப உறவுகள் பற்றிய தகவல்களைத் தேடியறிந்து வாராந்தப் பத்தி எழுத்தாக எழுதினார். அவர் ஓய்வுபெறவும் இல்லை; தனது நிலைப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளவும் இல்லை. அவர் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
டி.பி.எஸ்.-ஐ அவரது சமகாலத்தவர்கள் பலரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது, அவரிடமிருந்த அசாத்திய துணிச்சல் மட்டுமல்ல; தனது சொந்த சமூகத்திலிருந்தே சரியான பொறுப்புக்கூறலைக் (Accountability) கோருவதில் அவர் காட்டிய உறுதியான நிலைப்பாடுமாகும். அவர் இலங்கை அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகள் அமைப்பினதும் குற்றங்களை ஒரே மாதிரியான புலனாய்வுத் துல்லியத்தன்மையுடன் ஆவணப்படுத்தினார். அவர் ‘துரோகியாக்கல்’ (traitorisation) என்று அழைத்த நிகழ்வை, “ஒரு ஆபத்தான கோயபல்ஸ் பாணியிலான செயல்முறை[i]” என விவரித்து, அதன் வேர்களைத் தேடிச் சென்றார். இது ஆதாரங்களின்றி, வெறும் பிரச்சார பலத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிராளிகளுக்குத் துரோகி என்ற முத்திரையைக் குத்தும் ஒரு அவதூறான செயல்முறையாகும். ஜி. ஜி. பொன்னம்பலம் காலத்திலிருந்தும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) எழுச்சியினூடாகவும், மாற்று அரசியல் பாதையை முன்மொழிந்த எவரையும் விடுதலைப் புலிகள் அழித்தொழித்த செயல்முறை வரை நீடித்த இந்தத் ‘துரோகியாக்கல்’ போக்கின் வரலாற்றை அவர் ஆராய்ந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட ஒரு கட்டுரையில், இந்த வரலாற்றுப் போக்கை அவர் மிகக் கூர்மையாகவும் நையாண்டியாகவும் இவ்வாறு வரைபடமாக்கினார்:
“நாற்பதுகளில், ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கொள்கையை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தமிழனும் துரோகியாகக் கருதப்பட்டான். சுதந்திரத்திற்குப் பின், சமஷ்டி (கூட்டாட்சி) முறையை நிராகரித்த எந்தவொரு தமிழனும் துரோகியானான். பின்னர், தனித்தமிழ் அரசை எதிர்த்த எந்தவொரு தமிழனும் துரோகியாக்கப்பட்டான். அதற்குப் பிறகு, ஆயுதப் போராட்டத்தை எதிர்த்த எந்தவொரு தமிழனும் துரோகியாக்கப்பட்டான்.”
அந்த முத்திரை (Label) எந்தத் தரப்பால் குத்தப்பட்டது என்பதைக் கடந்து, அவரது ஊடகவியல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர் குறித்தும் ஒரே மாதிரியான துல்லியத்தன்மையுடனும் நெறிமுறைசார்ந்த தீவிரத்தன்மையுடனும் அறிக்கைப்படுத்தியது.
முன்னோக்கிச் செல்லும் பாதை பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜனநாயகம் ஊடாகவே அமைந்துள்ளது என நம்பிய தமிழ் தலைவர்களின் அரசியல் நிபுணத்துவமும் சர்வதேச அங்கீகாரமும், தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாங்களே என்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உரிமைக்கோரலுக்கு சவாலாக அமைந்தன. இதன் காரணமாக அந்த அமைப்பினால் படுகொலை செய்யப்பட்ட தலைவர்கள் குறித்து அவர் விசேட கவனம் செலுத்தினார்.
டி.பி.எஸ். தெளிவான நெறிமுறைசார் ஒழுக்கத்துடன் அந்தப் படுகொலைகளை நோக்கினார். விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களைப் படுகொலை செய்தமைக்கு, அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பது காரணமல்ல; மாறாக, அதற்காக அவர்களிடம் இருந்த அர்ப்பணிப்பே காரணம் என்பதை அவர் புரிந்துகொண்டார். தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர் இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகிய அமைப்புகள் அவரது பணிகளில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டன. புலம்பெயர் சமூகத்தின் பல வாசகர்கள் அவர்பக்கம் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம், வேறெங்கும் கண்டடைய முடியாத தகவல்களை அவர் வழங்கியமையே ஆகும். அதாவது, ஒற்றைக் கருத்துக்குள் மட்டும் சுருங்கிவிடாமல், உண்மைகளின் சிக்கலான தன்மையை ஏற்றுக்கொண்ட மற்றும் சமூகத்தை அதன் சொந்தச் செயற்பாடுகளுக்குப் பொறுப்புக்கூறச் செய்த ஓர் ஊடகவியலை அவர் கொண்டிருந்தார்.
அவரது நம்பகத்தன்மை இன எல்லைகளைக் கடந்து பரந்திருந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பரங்கியர் (Burghers) என அனைத்து இலங்கை மக்களும் அவரை வாசித்தனர்; அவரை ஆழமாக நம்பினர். அந்த நம்பிக்கை, தசாப்த காலங்களாக உண்மைகளைத் திரித்துக் கூற மறுத்த அவரது நேர்மையால் சம்பாதிக்கப்பட்டதாகும்.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி, அவரால் உறுதிப்படுத்த முடியாத எதனையும் அவர் ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை. தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக அவர் பின்பற்றிய மிக நுணுக்கமான வழிமுறையை, அவரது தனித்துவமான பண்புக்கூறாக அவரது சக ஊழியர்கள் விவரித்தனர். செய்தியை முதலாவதாகத் தருவதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை, துல்லியமாகத் தருவதிலேயே அவர் கண்ணும்கருத்துமாய் இருந்தார்.
பல்வேறு தரப்பிலிருந்தும் வரும் போலிப் பிரச்சாரங்களால் நிறைந்திருந்த ஒரு சூழலில், அந்த ஒழுக்கம் என்பது வெறும் ஒரு தொழில்சார் பண்பாக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு வகையான எதிர்ப்பின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.
அவரது மரபு (legacy) என்பது ஒரு மாபெரும் ஆவணக்காப்பகமாகும்: தசாப்த காலங்களாக அவர் எழுதிய செய்திகள், பத்திகள் மற்றும் ஆய்வுகள் என அனைத்தும் ஒரு தமிழ் கண்ணோட்டத்திலிருந்து இலங்கை இன முரண்பாட்டை மிக விரிவாக விவரிக்கும் உன்னதமான ஊடகவியல் பதிவாகத் திகழ்கிறது. எதிர்கால வரலாற்றாசிரியர்கள் இதனை நிச்சயம் நாடி வருவார்கள். இது வன்முறைகள் மற்றும் அரசியல் தோல்விகளை மட்டுமல்லாமல், படுகொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் தலைவர்கள், இடம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் கைவிட நேரிட்ட எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, அந்தச் சமூகத்திற்குள் ஆழமாகப் பயணித்த ஒருவரால் மட்டுமே வழங்கக்கூடிய ஒரு தனித்துவமான துல்லியத்தன்மையுடன் ஆவணப்படுத்தி முன்வைத்துள்ளது.
தமிழ் சமூகங்கள் தங்களது வரலாற்று ரீதியான தாயகப் பகுதிகளிலிருந்து நிரந்தரமாக சிதறடிக்கப்பட்டதையும், அதனுடன் தொடர்ந்த அரசியல் அவலங்களையும், வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாத அசாத்திய துல்லியத்துடனும் தீவிரத்துடனும் அவர் வரலாறாகப் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது தொழில்முறை வாழ்க்கையின் பெரும்பகுதியை கிட்டத்தட்ட ஒரு நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே கழித்தார்; இருந்தபோதிலும், இலங்கை மீதான அவரது அன்பும், அதன் ஜனநாயக எதிர்காலத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் ஒருபோதும் குறைந்துவிடவில்லை.
தனது நலிவடைந்து வந்த ஆரோக்கிய நிலையையும் பொருட்படுத்தாமல், தனது இறுதிக்காலம் வரை தன் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர், இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னரும் கூட கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். அந்த தளராத உறுதிப்பாடு மற்றும் சற்றும் பின்வாங்காத குணம் என்பன ஓர் ஊடகவியலில் இருக்கக்கூடிய உச்சக்கட்ட உன்னதப் பண்புகளுக்கான ஒரு சிறந்த சான்றாகும்.
நான்கு தசாப்த காலங்களாக, ஒருவன் தன் சொந்த சமூகத்தை நேசித்துக் கொண்டே, அச்சமூகத்தைப் பற்றிய உண்மைகளையும் பேச முடியும் என்பதை டி.பி.எஸ். நிரூபித்துக் காட்டினார். அத்தகைய தார்மீகத் துணிச்சல் என்பது ஒற்றுமைக்குச் செய்யும் துரோகமல்ல, மாறாக அதன் மிக உன்னதமான வெளிப்பாடாகும். நேர்மையைக் கோருபவர்களுக்கு எதிராக மிகவும் இலகுவாக ‘துரோகி’ என்ற முத்திரையைக் குத்துவதானது, அந்த முத்திரையை குத்துபவர்களின் தன்மையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறதே தவிர, அதனால் இலக்கு வைக்கப்படும் நபர்களைப் பற்றி எதனையும் கூறிவிடாது.
அவர் உண்மையை வலியுறுத்தியதன் மூலமாகவே வாழ்வைக் கொண்டாடினார். தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோதும் அவர் அதைச் செய்தார். தனது பத்திரிகையை இழக்க நேரிட்டபோதும் அவர் அதைச் செய்தார். அதற்குப் பின்னரான தசாப்தங்களில், புலம்பெயர் வாழ்விலும் ஒரு பத்திரிகைப்பணியாகவும் சாட்சியமாகவும் விளங்கும் ஒரு மாபெரும் படைப்புலகைக் கட்டியெழுப்பியவாறு அவர் அதனைத் தொடர்ந்து செய்து முடித்தார்.
அவர் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது; அநேகமாக அது நிரப்பப்படாமலேயே கூடப் போகலாம். அவருடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் அவரை அறிந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாரோ, அவ்வாறே நாம் அவருக்கு நமது மரியாதையைச் செலுத்துவோம்: நிதானமாக, நேர்மையாக மற்றும் அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ள உன்னதப் பணிகளுக்கான நன்றியுணர்வோடு.
லயனல் போபகே
[i] நாஜி கட்சியின் முதன்மைப் பிரச்சாரகராகவும், பின்னர் 1933 முதல் 1945 இல் தற்கொலை செய்துகொள்ளும் வரை ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராகவும் பணியாற்றிய ஜோசப் கோயபல்ஸின் (Joseph Goebbels) பெயரால் உருவானது. பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, முறையான மற்றும் தொடர்ச்சியான முறையில் பயன்படுத்தப்படும் ஏமாற்றுத்தனமான செய்தியிடல் மற்றும் தந்திரோபாயப் பிரச்சார உத்திகளை இது குறிக்கிறது.