“எமது காலத்தில் மனித அனுபவங்களின் பதிவை எதிர்காலத்திற்கு வழங்குவதற்கு தகவல்களைத் தகுந்த முறையில் தேர்ந்தெடுப்பதே ஆவணக் காப்பாளர்களாகிய எமது மிக முக்கியமான மற்றும் அறிவுசார்ந்த பணியாகும்.”

ஜெரால்ட் ஹாம், 1975

சூரியா விக்ரமசிங்க 2026, ஏப்ரல் 29 காலை காலமானார். அவரைப் பற்றி நான் எழுதத் தொடங்கும்போது அவருடைய மென்மையான எதிர்ப்பை என்னால் கற்பனை செய்ய முடிகிறது: “எங்களைப் பற்றி எழுதுவதை விடவும் முக்கியமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன; இதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று சூரியா நிச்சயமாகக் கூறியிருப்பார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு வாழ்க்கையையும் பல சாதனைகளையும் கொண்டிருந்தாலும், சூரியா தன்னை முன்னிலைப்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தார்.

சூரியாவை எனக்குத் தெரிந்த குறுகிய காலத்தில், அவர் தன்னைப் பற்றி மிகக் குறைவாகவே பேசினார். ஆனால், அவர் மதித்துப் போற்றிய மனிதர்களான எஸ். நடேசன் கியூ.சி. மற்றும் ஆயர் லக்ஷ்மன் விக்ரமசிங்க ஆகியோரைப் பற்றி அதிகம் பேசினார்.

சூரியா கூட்டு முயற்சியையே (ஒருபோதும் “நான்” அல்ல, எப்போதும் “நாங்கள்”) உயர்த்திப் பிடித்தார். “அடிப்படை உரிமைகள் மீறப்படும் எந்தவொரு நபருக்காகவும் குரல் கொடுப்பது எமது கடமை” என்று அவர் வலியுறுத்தினார்.

துல்லியமான பணிகளையும் கருத்தூன்றிய கவனத்துடன் செயற்பட வேண்டிய அவசியத்தையும் அவர் எப்போதும் வலியுறுத்தினார். 1990ஆம் ஆண்டில் சிவில் உரிமைகள் இயக்கத்திற்கு (Civil Rights Movement) வழங்கப்பட்ட ‘கார்ட்டர்-மெனில்’ (Carter-Menil) விருதை ஏற்றுக்கொண்டபோது, அவர் முதலில் தனது மறைந்த சகாக்களின் உழைப்பிற்கும் அறிவுக்கும்தான் அஞ்சலி செலுத்தினார்.

சூரியாவின் மறைவைத் தொடர்ந்து, நம்மில் பலருக்கு அவருடைய அறிவுக்கும் உழைப்பிற்கும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி என்ற எண்ணமே அவரை முகம் சுளிக்க வைத்திருக்கும். அரசியல் ஆளுமைகளைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகளை அவர் விரும்பவில்லை. எனவே, அதீத புகழ்ச்சிகள் ஏதுமற்ற ஒரு நேர்மையான பதிவை இங்கே வழங்க முயற்சிக்கிறேன்.

மனித உரிமைகளுக்கான தகவல் பணி

2020ஆம் ஆண்டில், எம்பிலிபிட்டியவில் காணாமல் ஆக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கான அமைப்பின் ஆவணக் காப்பகத்தில் நான் பணியாற்றியபோத​தான் சூரியாவை முதன்முதலில் சந்தித்தேன். எனக்கு மனித உரிமைகள் பணிக்குழுவின் (Human Rights Task Force) ஆண்டறிக்கைகளும் மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நபர்கள் கடத்தப்பட்டமை அல்லது காணாமல் போனமை குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும்  தேவைப்பட்டது.

சூரியாவிற்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலுக்குப் பிறகு, மூன்று வாரங்களில் நான் கேட்ட அறிக்கைகளுடன் மேலதிகமாக இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வழக்கு விசாரணைகளின் நகல்களும் எனக்குக் கிடைத்தன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் மிகுந்த சிரமத்துடன் ஆய்வு செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தன.

அந்தத் தீர்ப்பின் நகலை

பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துடன் பகிர்ந்துகொண்டதை நான் சூரியாவிடம் சொன்னபோது, நடேசன் மையம் இவ்வாறான சேவையை வழங்குவது குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார்.

அந்த முதல் சந்திப்பிலேயே அவருடைய தாராளத் தன்மையும் ஆலோசனைகளும் என்னை வியக்க வைத்தன. தகவல் தேவைப்படுபவர்களுக்கு அதை வழங்குவதற்காக அவர் தனது எல்லையைத் தாண்டி உழைப்பதை நான் பின்னர் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர் எப்போதும் சொல்வது போல, “நடேசன் மையம்தான் அந்தப் பணியைச்  செய்கிறது” என்பார்.

வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், தகவல் பணியின் சில அம்சங்களில் சூரியா மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஒரு மதிப்பிற்குரிய சிரேஷ்ட சட்டத்தரணியான அவர், நடேசன் மையத்தின் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக பிற துறைகளிலும் ஆர்வம் காட்டினார். அவர் களமிறங்கி வேலை செய்தார். அட்டவணைப்படுத்தினார், பட்டியலிட்டார், சுருக்கக் குறிப்புகளை எழுதினார். இதனாலேயே அவர் ஆவணக் காப்பாளர்களையும் (archivists) நூலகர்களையும் ஒருபோதும் குறைவாக மதிப்பிடவில்லை.

அவர் நூலகத் துறையில் பரிச்சயம் கொண்டிருந்தார். ஆவணக் காப்பக நடைமுறைகள் நூலகத்திலிருந்து வேறுபட்டவை என்பதால், வகைப்படுத்துதல் குறித்த எமது உரையாடல்கள் சுருக்கமாகவே இருக்கும். ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் முறைகள் பற்றி நான் விளக்கும் போது, அவர் தனது நாற்காலியின் கைப்பிடியில் விரல்களைத் தட்டியபடி மிகக் கவனமாகக் கேட்பார்.

சில கேள்விகளுக்குப் பிறகு, “நாங்கள் இதை உங்களின் திறமையான கைகளிடம் ஒப்படைக்கிறோம்” என்று பண்புடன் கூறுவார். ஆனாலும், எனது தொழில்முறைத் தேவைகளுக்கு இடமளிக்கும் அதேவேளையில், அவர் தனது சொந்தப் பட்டியலைத் தயாரிப்பதில் உறுதியாக இருந்தார்.

தகவல் பணியில் அவரது அர்ப்பணிப்புக்குச் சிறந்த உதாரணம், “21 Years of CRM” (இலங்கை சிவில் உரிமைகள் இயக்கத்தின் ஆவணங்கள் 1971-1992 பற்றிய விளக்கப் பட்டியல்) என்ற வெளியீடாகும். இது அவரது நீண்டகாலத் தோழர் மானெல் பொன்சேகாவுடன் இணைந்து தொகுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு முக்கிய ஆவணமும் அதன் தலைப்பு, திகதி, பக்க எண் மற்றும் குறிப்புகளுடன் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.

பலரும் இத்தகைய நிலையில் ஒரு வரலாற்றை எழுதவே முற்படுவார்கள். ஆனால், சூரியாவைப் பொறுத்தவரை, முக்கியமான ஆவணங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதும், அதன் பின்னணியை விளக்குவதும் மிகவும் பயனுள்ள செயலாக அமைந்தது. இது ஒரு அரசியல் ரீதியான செயல்பாடாகும்.

நடேசன்  மனித உரிமைகள் சட்ட மையம்

ஆவணக்காப்பகங்கள் மற்றும் ஆவண மேலாண்மையின் மதிப்பையோ அல்லது தேவையையோ உணராத பல சிவில் சமூக நிறுவனங்கள் நிறைந்த ஒரு நாட்டில், சூரியாவும் அவர் ‘நடேசன் மையத்தை’ வழிநடத்திய விதமும் முற்றிலும் மாறுபட்டவை. ஆவணக்காப்பகங்களின் முக்கியத்துவத்தையும் அவற்றை அணுகக் கூடியதாக மாற்றுவதன் அவசியத்தையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

1987ஆம் நிறுவப்பட்ட நடேசன் மையத்தில் இருந்த நூலகத்தைத் தாண்டிய பல்வேறு ஆவணத் தொகுப்புகள், தற்போதைய செயல்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் முக்கிய பங்காற்ற வேண்டியவை என்பதில் அவர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தார். மையத்தில் உள்ள ஆவணங்களை பயனர்கள் பயன்படுத்துவதை இந்திரா ஜாசிங்க தொடர்ந்து ஆவணப்படுத்தி வந்தமை இதற்குச் சான்றாகும். அந்தப் பொருட்கள் கொண்டுள்ள நீடித்த மதிப்பு, தகவல்களினதும் ஆதாரங்களினதும் களஞ்சியமாக அந்த நிறுவனத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றை அந்தப் பயன்பாட்டுத் தரவுகள் வெளிப்படுத்தியதால், அவற்றைப் பற்றி அறிக்கை அளிப்பதில் சூரியா பெருமிதம் கொண்டார்.

அணுகல்தன்மை (Accessibility) என்பது சூரியாவின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. அவரது அரசியல் நம்பிக்கைகள், ‘இன்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்’ (Index on Censorship) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தளங்களில் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் 1980கள் மற்றும் 1990 களில் அவசரகாலச் சட்டங்களின் முறையற்ற பயன்பாட்டிற்கு எதிராகப் பணியாற்றிய ஒரு வழக்கறிஞர் என்ற அனுபவம் போன்றவை இந்தக் கொள்கையை வடிவமைத்திருக்கலாம்.

1992ஆம் ஆண்டில் அவர் எழுதிய “அவசரகாலச் சட்டங்களை அணுகுவதில் உள்ள சிக்கல்கள்” (Inaccessibility of Emergency Regulations) என்ற கட்டுரையில் அவர் இவ்வாறு வாதிட்டார்; ‘சட்டம் தெரியாது என்பது ஒரு சாக்குப் போக்கல்ல’ என்ற விதி, ‘ஒவ்வொருவரும் சட்டத்தை அறிந்திருப்பதாகக் கருதப்படுகிறது’ என்ற அடிப்படையைக் கொண்டது. சட்டமானது எப்போதுமே கண்டறியப்படக் கூடியது (ascertainable) என்ற அடிப்படையிலேயே இந்த ஊகம் அமைகிறது.”

தகவல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவை எப்போதும் “கண்டறியப்படக்கூடியதாக” இருக்க வேண்டும் என்று சூரியா ஆழமாக நம்பினார் என்று இந்த வாதத்தை நாம் விரிவுபடுத்தலாம்.

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்குவதற்காகவே நடேசன் மையம் நிறுவப்பட்டது. சிவில் உரிமைகள் இயக்கத்திற்கு ஒரு “துணை அமைப்பாக” விளங்கும் இந்த மையம், ஒரு பிரச்சார அமைப்பாக இல்லாமல், ஒரு விசேட நூலகத்தின் உதவியுடன் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் “சேவை சார்ந்த அமைப்பாக” இருப்பதாக மானெல் பொன்சேகா குறிப்பிடுகிறார்.

சூரியா இந்த மையத்தின் நூலகம், ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் சேவைகளை வடிவமைத்ததுடன் சிவில் உரிமைகள் இயக்கத்தினதும் இதர அமைப்புகளினதும் ஆவணக் காப்பகங்களை தம்மால் இயன்றவரை சிறப்பாக நிர்வகித்தார். அவருக்கு மானெல் பொன்சேகா, ஞான ஹேமசிறி மற்றும் பலரும் உதவினர்.

சரியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளால் கட்டியெழுப்பப்பட்ட இந்த நிறுவனக் கட்டமைப்பின் காரணமாகவே, கடந்த கால வன்முறைச் சம்பவங்களையும் நீதிக்கான போராட்டங்களையும் புரிந்துகொள்வதற்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் இன்றும் எஞ்சியுள்ளன.

பல தசாப்த கால அறிவுசார் உழைப்பையும் சேகரிப்பு முயற்சியையும் கொண்ட சிவில் உரிமைகள் இயக்கத்தின் விரிவான ஆவணங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகக் கிடைத்து வரும் புதிய கவனம் சூரியாவுக்கு ஒரு நிம்மதியை அளித்தது.

உதாரணமாக, எங்களது ஆரம்பக்காலத் தொடர்பிற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, 1971-76 சிறைக் கடிதத் தொகுப்பை (Prison Letters collection) அட்டவணைப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை என்னால் தொடங்க முடிந்தது. இதில் சிவில் உரிமைகள் இயக்கத்துக்கு கைதிகளின் குடும்பத்தினர் (அல்லது பாதிக்கப்பட்டவர்கள்) அனுப்பிய கடிதங்களும், சூரியாவுக்கு ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து வந்த கடிதங்களும் அடங்கும்.

1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் போதும் அதற்குப் பின்னரும் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான – பரவலான கைதுகளின் பின்னணியில் இந்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. சூரியாவும் அவரது நம்பிக்கைக்குரிய தோழரும் எழுத்தாளருமான ரஞ்சித் பெரேராவும் என்னுடன் பல மாதங்கள் நெருக்கமாகப் பணியாற்றி, அட்டவணைகளை உருவாக்கி, பல்வேறு குறிப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு, பின்னர் தயாளினி சிவலிங்கத்தின் உதவியுடன் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கினோம்.

சூரியா எல்லாவற்றையும் கண்காணித்தார், எங்களோடு பல மணிநேரம் அமர்ந்தார், பட்டியல்களை ஆய்வு செய்தார், கதைகளைக் கூறினார், சூழல்களை விளக்கினார். நடேசன்  மையத்தின் குறைந்த வளங்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தின் நிர்வாகச் சுமையை அவர் எனக்கு நினைவுபடுத்தத் தவறியதில்லை. இருந்தபோதிலும், இந்தத் திட்டம் எங்களது உறவின் தொடக்கமாக அமைந்தது, இது இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்று நான் உண்மையாகவே நம்பியிருந்தேன்.

டோஸ்ட் செய்யப்பட்ட பட்டர் கேக்

சூரியாவுடன் அவரது ஆய்வு அறையில் அமர்ந்து காப்பி அருந்தும் போதோ அல்லது எப்போதாவது டோஸ்ட் செய்யப்பட்ட பட்டர் கேக் மற்றும் யோகர்ட் சாப்பிடும் போதோ (கிளாசீஸில் (Klassy’s) சிறந்தவை கிடைக்கின்றன), அவர் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். எங்களது உரையாடல்களில் சிவில் உரிமைகள் இயக்கமும் நடேசன் மையமுமே அதிக இடத்தைப் பிடித்தன.

தொடக்கத்திலிருந்தே நடேசன் மையம் சாதித்தவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, நான் சூரியாவிடம் அடிக்கடி மையத்தை ஒரு ஆவணக்காப்பகமாகவும்  நூலகமாகவும் மட்டுமல்லாது, தகவல்களை மனித உரிமைகளுக்காகச் சேகரிக்கும் ஒரு களமாகவும் பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

சூரியா எனது கருத்துக்களில் ஈடுபாடு காட்டி, இதைப் பற்றி நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிப்பதாக உறுதியளித்தாலும், இந்த உரையாடலை முன்னெடுப்பதற்கு நான் ஒரு தசாப்தம் தாமதமாக வந்துவிட்டேனோ என்ற உணர்வுடன் நான் அங்கிருந்து திரும்புவேன்.

சூரியாவின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையாக இருந்த போதிலும், அவர் உடல் ரீதியாகச் சோர்வடைந்திருந்தார். அவரது உடல்நிலை ஒரு நிறுவனச் சீர்திருத்தம் போன்ற ஆழமான ஈடுபாடுகளுக்கு இடமளிக்கவில்லை. ஆனால், நடேசன்  மையத்தின் மீதான அவரது அன்பும் அர்ப்பணிப்பும் ஒருபோதும் குறையவில்லை.

மையத்தில் புதிய திட்டங்களோ அல்லது ஆவணங்களைப் பார்ப்பதற்கான கோரிக்கைகளோ வரும்போது, மையம் மீண்டும் ஒரு சுறுசுறுப்பான இடமாக மாறுவதைக் கண்டு அவர் அடையும் மகிழ்ச்சியைத் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகப் பகிர்ந்து கொள்வார்.

எனவே, சார்லஸ் வட்டாரத்தில்  (Charles Circus) உள்ள எமது வரலாற்றுப் புகலிடத்தைப் பற்றிய ஒரு கேள்வியுடன் இந்த அஞ்சலியை முடிப்பது தவிர்க்க முடியாதது. சூரியாவின் மகத்தான பணிகளில் ஒன்றான நடேசன் மையம் நீதிக்கான நமது கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதற்கு இனி என்ன நடக்கும்? அங்குள்ள எதுவும் தேவையற்றதோ அல்லது மறக்கப்பட்ட கடந்த காலத்தைச் சார்ந்ததோ அல்ல; அங்குள்ள ஒவ்வொரு அலுமாரி, கோப்பு மற்றும் ஆவணங்கள் ஒரு எதிர்காலத்திற்காகக் குரல் எழுப்புகின்றன.

நடேசன் மையத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தவும், அதன் நோக்கத்தை மறுசீரமைக்கவும் ஒரு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. நிகழ்கால மற்றும் எதிர்கால மனித உரிமைப் போராட்டங்களின் சவால்களை எதிர்கொள்ள, தகவல் சார்ந்த பணிகளை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனம் இலங்கைக்கு இப்போதும் தேவைப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், சூரியா… நிம்மதியாக இருங்கள், அங்கு கண்டிப்பாக ‘டோஸ்ட் செய்யப்பட்ட பட்டர் கேக்’ இருக்கும்.

நைஜல் நுகவெல