Photo, AP Photo/Eranga Jayawardena

1972 முதல் 1975 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதிகளில் ரூபாய் கம்பனிகளுக்கும் (இலங்கையர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொந்தமான தோட்டங்கள்) ஸ்ரேலிங் கம்பனிகளுக்கும் (ஆங்கிலேயே கம்பனிகளுக்கு) சொந்தமான தோட்டங்கள் அரசுடமைக்கப்பட்டன. அரசுடமையாக்கப்பட்ட தோட்டங்கள் பல்வேறு அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகங்களின் கீழ் கொண்ட​வரப்பட்டன. முறையே ஜனவசம, அரச பெருந்தோட்டயாக்கம், உசவசம, ஜனாவாச முதலிய அரசாங்க கூட்டுத்தாபனங்களின் கீழ் 502 தேயிலை, றப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பிட்ட சில காலம் செல்ல உசவசம மற்றும் ஜனாவாச ஸ்தாபனங்கள் இல்லாதொழிக்கப்பட்டதுடன்  ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்டயாக்கம் மட்டும் செயற்பட்டு வந்தன. 1990 களில் இவ்விரண்டு கூட்டுத்தாபனங்களும் 400 மில்லியன் டாலர் கடனைக் கொண்டிருந்தன என அரசாங்க அறிக்கை வெளிப்படுத்தியது. இந்நிலையில் உலக வங்கியின் ஆலோசனையின் படி இவ்விரு கூட்டுத்தாபனங்களின் கீழிருந்த தோட்டங்களை தனியார் முகாமைத்துவத்திற்கு வழங்க அரசாங்கம் 1991 இல் முனைந்தது.

தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு வழங்க முன்னர் ஜனவசமவின் கீழ் 263 தோட்டங்களும் அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் 240 தோட்டங்களும் இருந்தன. 1992ஆம் ஆண்டு அரசாங்கம் 23 பிராந்திய தோட்டக் கம்பனிகளை உருவாக்கி ஒவ்வொன்றின் கீழ் முறையே 12 முதல் 17 தோட்டங்களை உள்ளடக்கி 442 தோட்டங்களை 23 அரச கம்பனிகளின் கீழ் பிரித்து அதன் முகாமைத்துவத்தை தனியார் கம்பனிகளுக்கு வழங்கியது. ஆனால், 23 கம்பனிகளில் 21 கம்பனிகளின் முகாமைத்துவத்தையே தனியார் கம்பனிகள் பெற்றுக் கொண்டன. குறிப்பாக எல்கடுவ, சிலாபம் மற்றும் குருணாகல் பிராந்திய கம்பனிகளின் முகாமைத்துவத்தை ஏற்க தனியார் கம்பனிகள் முன்வரவில்லை. அதேவேளை, ஜனவசம மற்றும் அரசபெருந்தோட்டயாக்கம் முறையே 33, 32 தோட்டங்களை தம்வசம் கொண்டிருந்தன.

தோட்டங்கள் தனியார்மயமாக்குவதற்கு முன்னர் அதாவது 1991ஆம் ஆண்டு ஜனவசமவின் கீழ் 1,92,886 தொழிலாளர்களும், அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் 1,75,572 நிரந்தர தொழிலாளர் பணியாற்றினர். இவர்களைத் தவிர மேலதிகமாக தற்காலிக மற்றும் சமயாசமய தொழிலாளர்களும் கணிசமான அளவு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். 21 பிராந்திய தோட்ட கம்பனிகளை தனியார் கம்பனிகள் பாரமெடுக்கையில் தற்காலிக தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 3,27,123 தொழிலாளர்கள் தனியார் கம்பனிகளின் கீழ் பணியாற்றினர் (ஆதாரம்: Plantation Sector statistical Pocket book – 1995).

தோட்டங்கள் நட்டமடைவதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அதிகளவு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எனக் கூறப்பட்டது. எனவே, அதனைக் குறைப்பதற்கு வழிமுறைகளை காணவேண்டும் எனும் கருத்து பரலாக முன்வைக்கப்பட்டிருந்தது. அதனால் தனியார் கம்பனிகள் தோட்ட முகாமைத்துவத்தை பாரமெடுத்தவுடன் முதற் பணியாக தற்காலிக தொழிலாளர்களைப் பணியிலிருந்த நீக்கியதுன் உரிய வயதினை அடைவதற்கு முன்னரே பணியிலிருந்து விலகிக் கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அதன்படி 1992 முதல் 1994ஆம் ஆண்டும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள்  3,27,123 ஆக இருந்த தொழிலாளர்களை 2,95,802 ஆகக் குறைத்துக் கொண்டன. அதாவது, மூன்று வருடத்திற்குள் 31,321 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டன. வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைப்பதை ஒரு நீண்ட காலத்திட்டமாக அனைத்து கம்பனிகளுக்கும் பின்பற்ற ஆரம்பித்தன. கம்பனிகளின் இத்திட்டமிட்ட தொழிலாளர் குறைப்பினை அவதானித்த தொழிற்சங்கங்கள் 2003 ஆண்டு கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில் ஓய்வு பெறும் காலத்திற்கு முன்னர் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்குவதை நிறுத்தவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துடன் ஓய்வு வயதை அடைவதற்கு முன்னரே ஓய்வு பெறுவதை ஊக்குவிக்கக் கூடாது எனும் பகுதியை உட்சேர்ப்பதில் வெற்றிகண்டன. 2003ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் பின்வரும் பகுதி உட்சேர்க்ப்பட்டது. ஓய்வு பெறும் வயது 60 ஆகும். முன்கூட்டியே தொழிலிருந்து விலகிக் கொள்வதை ஊக்குவிக்கலாகாது. (Retirement  age for employee 60 years. It is agreed that premature will be discourage. Collective agreement – 2003) எனக் குறிப்பிடப்பட்டது.

ஆனால், கம்பனிகள் அதனை நடை முறையில் கடைப்பிடிக்கவில்லை. மாறாக நிரந்தர தொழிலாளர் குறைப்பினை தொடர்ந்தன. 2008ஆம் ஆண்டிற்கும் 2022ஆம் ஆண்டிற்கும் இடையில் 53 சதவீத நிரந்தரத் தொழிலாளர்களை தொழிலிலிருந்து நீக்கியுள்ளது. அதாவது, 2008ஆம் ஆண்டு 2,17,035 தொழிலாளர்கள் பணியில் இருந்ததுடன் 2022ஆம் ஆண்டாகும் போது 1,01,365 நிரந்தரத் தொழிலாளார்களாக காணப்பட்டனர் (இப்பாரிய தொழிலாளர் குறைப்பினைப் பற்றி தொழிற்சங்கங்கள் கவனத்திற் கொள்ளவில்லை. இத்தொடர்ச்சியான திட்டமிட்ட நிரந்தரத் தொழிலாளர் குறைப்பின் காரணமாக 2023ஆம் ஆண்டு அறிக்கையின் படி 73,331 பேரே நிரந்தரத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். இதன்படி பார்க்கின் வருடத்திற்கு 10 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களை சேவையிலிருந்து நீக்குவதை தோட்ட முகாமைத்துவக் கம்பனிகள் மேற்கொண்டு வருவதை அவதானிக்கும் போது 2030 ஆண்டை அடைகையில் அதாவது இன்னும் நான்கு வருடத்தில் மலையக பெருந்தோட்டங்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேரே நிரந்தரத் தொழிலாளர்களாகக் காணப்படுவர்.

இதேவேளை அரசாங்கத்தின் கீழ் இருக்கும் ஜனவசம, அரசபெருந்தோட்டயாக்கம் மற்றும் எல்கடுவ, சிலாபம் மற்றும் குருணாகல் பிராந்தியக் கம்பனிகளும் தொழிலாளர் குறைப்பினை மேற்கொண்டு வந்துள்ளன. 1992ஆம் ஆண்டு ஜனவசம தோட்டங்களில் 13,479 நிரந்தரத் தொழிலாளர்களும் அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் 16,652 நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். 2023ஆம் ஆண்டு அறிக்கையின் படி இவ்விரு கூட்டுத்தாபனங்களிலும் மொத்தமாக 7,846 நிரந்தரத் தொழிலாளர்களே இருக்கின்றனர்.

மறுபுறம் தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்களை வழங்கும் போது அரசாங்கத்தின் கீழிருந்த 502 தோட்டங்களில், 442 தோட்டங்களின் முகாமைத்துவத்தை  தனியார் கம்பனிகள் பொறுப்பேற்றுள்ளன. 1993ஆம் ஆண்டு அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் பிராந்தியக் கம்பனிகளான ஜனவசம, அரசபெருந்தோட்டயாக்கம், எல்கடுவ, சிலாபம், குருணாகல் கம்பனிகள் மற்றும் TRIயின் கீழ் ஏனையத் தோட்டங்கள் இருந்துள்ளன. 2023ஆம் ஆண்டு அறிக்கையின்படி தனியார் கம்பனிகளின் கீழ் 297 தோட்டங்களே உள்ளன. அதேபோல் அரசாங்கத்தின் கீழுள்ள கூட்டத்தாபனங்களின் கீழ் 44 தோட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இதன் படி பார்க்கின் பிராந்தியக் கம்பனிகளின் கீழிருந்த 442 தோட்டங்களில் 145 தோட்டங்கள் தற்போது அதன் கீழ் இல்லை. அதேபோல் அரசாங்க கூட்டுத்தாபனங்களின் கீழிருந்த தோட்டங்களில் தற்போது 44 தோட்டங்களே உள்ளன. இதன்படி 161 பெருந்தோட்டங்கள் தற்போது எதன் கீழ் இருக்கின்றன? அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களது நிலையென்ன என்பதனைத் தேட வேண்டியுள்ளது.

இத்திட்டமிட்ட ஆட்குறைப்பானது தோட்டங்களில் வாழும் மக்களின் இருப்பினை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. தோட்டங்களில் பணியாற்றாத குடும்பங்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றும் முயற்சி 1993 முதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொழிற்சங்கங்களின் பலத்தினால் அம்முயற்றி காலத்திற்கு காலம் கைவிடப்பட்டு வந்தது. இன்று சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தோட்டத்தில் வாழ்கின்றனர். இப்பின்புலத்தில் தற்போதை அரசாங்கம் மேற்கொண்டுள்ள அமைச்சரவை தீர்மானம் தோட்டத்தில் பணியாற்றாத இக்குடும்பங்களை வெளியேற்ற வழிசமைக்கும் என்பதை கவனத்திற் கொள்வேண்டியுள்ளது.

பெ.முத்துலிங்கம்