Photos: Kumanan Kanapathipilla

செம்மணி மனிதப் புதைகுழியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த சித்திரை மாதம் 27ஆம் திகதி ஆரம்பத்தில் இருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி மீண்டும் ஒருமுறை பேசுபொருளாகி இருக்கிறது.

இந்நிலையில், அண்மையில், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யயப்பட்டிருந்த, “மௌனத்தின் ஓலம்” என்ற தலைப்பிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. (எமது இனத்துக்கு இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு) நீதி கோருவதில் சமூகத்திற்கு உள்ள கூட்டுப்பொறுப்பு தொடர்பில் இந்நிகழ்வு ஆராய்ந்திருந்தது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் அரசாங்கங்களின் உதவியுன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இவ் வன்முறைகள், முழு அளவிலான யுத்தமாக பரிமாணமடைந்த பின்னர், அதிலும் 2008-2009 காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பாரதூரமானவை.

ரோம சட்டத்தின் கீழ் உள்ளடங்கும் பலவிதமான குற்றங்கள் இனப்பிரச்சினையின் போது இழைக்கப்பட்டதாக பலவிதமான விசாரணைகளின் போது மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான விசாரணையும், அதனடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையும் அதனையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறு இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்துமே பாரதூரமானவை எனினும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது இவை அனைத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது.

26 வருட கால யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிலே, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்ற குற்றத்தினைத் தவிர்ந்த ஏனைய குற்றங்கள் இடம்பெற்று முடிவடைந்துவிட்டன. ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குற்றம், அவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்ற விசாரணை, சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக நிகழ்த்தப்பட்டு, விசாரணையின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதவிடத்து, அக்குற்றச்செயல் இன்னும் முடிவடையவில்லை என்றே கருதப்படும். அதாவது ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தால், அவர் கொலை செய்யப்பட்டவுடன் அக்குற்றச்செயல் முடிவடைந்து விடும். ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலைப் பொறுத்தவரை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அல்லது அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அல்லது அவரது உடல் கண்டெடுக்கப்படாத சந்தர்ப்பத்தில் சட்டத்தில் குறித்தெழுதப்பட்டுள்ளதற்கு அமைவாக அவர் இறந்துவிட்டதாக சட்ட ரீதியாக ஊகிக்கப்பட்ட பின்னரே (legal presumption of death) அக்குற்றச் செயல் நிறைவடையும். இதனாலேயே, இது ‘தொடரும் குற்றவியல் குற்றம்’ (continuing criminal offense) என அறியப்படுகிறது.

இதன் காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் குற்றம் ஏனைய குற்றங்களில் இருந்து மாறுபடுவதோடு, பொறுப்புக்கூறலில் மிக முக்கியமான ஒரு விடயமாகவும் அமைகின்றது. அதேநேரத்தில், இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி கோரலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மிகமுக்கியமான கருவியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அமைகின்றன. இதனால்தான், இலங்கை அரசாங்கங்கள் மட்டுமல்லாமல், வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் தொடர்பில் விசாரிப்பதற்கு பின்நிற்கின்றன.

கடந்த வருடம் (2025) காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் (Office on Missing Persons – OMP), நடத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வில், ஆவணி 2025 வரை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 16,966 எனத் தெரிவிக்கப்பட்டது. இவ் எண்ணிக்கை இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து, ஆவணி 2025 வரை இடம்பெற்ற யுத்தம் மற்றும் ஏனைய வன்முறைச் சம்பவங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை உள்ளடக்கியது எனது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பலதரப்பட்ட எண்ணிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் மீது நம்பிக்கையில்லாத தன்மையும் காணப்படுகின்றது. உள்நாட்டுப் பொறிமுறைகளில் உள்ள நம்பிக்கையீனம் காரணமாகவும், அரசாங்கங்களின் அசமந்தப்போக்கு காரணமாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கடந்த மாசி மாதம் அவர்களின் தொடர் போராட்டம் பத்தாவது வருடத்திற்குள் நுழைந்துள்ளது. மன வேதனையளிக்கும் விதத்தில், முடிவு புலப்படாத இப்போராட்டத்தினை முன்னெடுத்த உறவினர்களில் பலர் (ஏறத்தாழ 400 பேர்) உயிரிழந்துள்ளார்கள்.

இதனால்தான், அடையாளம் ஏற்பாடு செய்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது. நீதிக்கான தேடலைத் தக்கவைப்பதில் கூட்டு சமூகப் பொறுப்பு மற்றும் ஒற்றுமையின் முக்கியப் பங்கை வலியுறுத்திய, அடையாளம் கொள்கை ஆய்வு மையம் ஏற்பாடு செய்ததைப் போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை இந்தத் தொடர் போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. எத்தனையோ தனி நபர்கள் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் ஒரு இனமாக நாம் பாரியளவிலான பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ளோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட தனிநபர்களும், அவர்களின் குடும்பங்களும் மட்டுமே போராடி வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை தங்கள் முதுகில் சுமந்த ஆண்கள். இவர்கள் காணாமலாக்கப்பட்டமை, இவர்களின் குடும்பங்களை நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. பொருளாதார நெருக்கடி, உளவியல் நீதியான பாதிப்பு, சமூகத்திலிருந்து ஒதுக்கப்படல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்கு இவர்களைத் தள்ளியுள்ளது. பொலிஸாராலும், இராணுவ புலனாய்வு பிரிவினராலும் தொடர்ச்சியாக தொல்லைக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவதுடன், பல சந்தர்ப்பங்களில் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர்.

பொருளாதார நெருக்கடியினை குறைக்கும் விதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட 6000.00 ரூபா உதவித் தொகையும் கோட்டபாய ஆட்சிக்கு வந்தததும் நிறுத்தப்பட்டது. இவ் உதவித் தொகை மிகச் சிறிது எனினும், மக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை அரசாங்கம் அங்கீகரிக்கிறது, மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கான அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதனையும் காட்டி நிற்பதனால் முக்கியத்துவம் பெறுகிறது. இது நிறுத்தப்பட்டது, குறித்த அங்கீகாரத்தினை அற்றுப்போகச் செய்வதுடன, இக்குடும்பங்கள் மீது பொருளாதார அழுத்தத்தையும் விதிக்கின்றது.

தங்களை சமூக ஆர்வலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர், இப்பிரச்சனையில் அவ்வப்போது மட்டுமே ஈடுபடுகின்றனர்; வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்ட மற்றும் அரசியல் சிக்கல்களை அவர்கள் பெரும்பாலும் முழுமையாகப் புரிந்துகொள்வதில்லை. இது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாகப் பரந்த அளவில் சமூகம் ஒன்று திரள்வதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், எம் உறவுகளுக்கு, எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் போராட்டத்தின் அடித்தளமாக இருக்கின்ற எம்மவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மக்கள் மயப்படுத்தப்பட்ட வேண்டும். இது மக்கள் போராட்டமாக, ஒரு இனத்தின் போராட்டமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ் உறவினர்களின் சுமைகளை ஒரு சமுதாயமாக, ஒரு இனமாக எமது தோள்களில் நாம் ஏற்றிக்கொள்ள வேண்டும். பழிவாங்குவதற்காகவோ, குரோதத்தினை வளர்ப்பதற்காகவோ அல்லாது, முடிவு புலப்படாத எமது போராட்டத்தினை சந்ததிகள் கடந்து முன்னெடுப்பதற்காக, இவர்களின் கதைகளை, எமது இனத்தின் கதைகளை இளைய சந்ததியினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஐங்கரன் குகதாசன்