Photo, npp.lk

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு   முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு முயற்சி எதுவுமே வெற்றி பெறவில்லை என்பதும் சிறுபான்மைச் சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயம் விரும்பவில்லை என்பதும் வரலாறு ரீதியாக எமக்கு கிடைத்த அனுபவம்.

இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே மாகாண சபைகள் முறை கொண்டுவரப்பட்டது. அதையும் கூட 38 வருடங்களாக அரசாங்கங்கள் உருப்படியாக செயற்பட அனுமதிக்கவில்லை. அதிகாரப்பகிர்வுக் கோட்பாட்டை அர்த்தமற்றதாக்கும் வகையில் கடந்த ஏழு வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் மாகாண சபைகள் ஆளுநர்களின் நிருவாகத்தின் கீழ் இருந்துவருகின்றன. இந்தியாவினால் கூட இலங்கை அரசாங்கங்களை இது விடயத்தில் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை என்றாலும் கூட, மாகாண சபைகள் முறையும் அதை அறிமுகப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

இந்திய தலையீட்டை அடுத்து கொண்டுவரப்பட்ட காரணத்தினால் மாத்திரமே இன்றுவரை மாகாண சபைகள் முறை தப்பிப்பிழைத்திருக்கிறது. ஆனால், இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற இந்த ஒரேயொரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டுக்கும் தற்போது ஆபத்து நெருங்குகிறது போன்று தெரிகிறது.

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வடக்கிலும் தெற்கிலும் தீவிரமடைந்திருப்பதற்கு மத்தியில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டு வருகின்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அடுத்த வருடத்திலாவது தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்களில் நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கிறது.

இத்தகைய பின்புலத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்கு உரியவையாகின்றன.

Photo: The Sunday Times

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் போது மாகாண சபைகள் முறை நீக்கப்படும் என்று கூறிய சில்வா புதிய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் மாத்திரமே மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியும் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். அத்துடன், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் பிறகு அதற்குப் பதிலாக உண்மையான தேசிய ஐக்கியத்தை தோற்றுவிக்கக்கூடிய ஏற்பாடு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் அவர் கூறினார். மாகாண சபை முறை இலங்கையில் தேசிய ஒற்றுமையை தோற்றுவிப்பதில் வெற்றியடையவில்லை என்பதே அவரின் நிலைப்பாடாக இருக்கிறது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இணக்கப் போக்கை தோற்றுவிக்கக்கூடிய புதிய முறைமை ஒன்று அடையாளம் காணப்படும் வரை மாகாண சபைகள் முறை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள். ஆனால், அந்த புதிய முறைமை எத்தகையதாக இருக்கும் என்று அவர்கள் ஒருபோதும் கூறவில்லை என்பது மாத்திரமல்ல, அது குறித்து விளக்கம் தருமாறு அவர்களிடம் இதுவரையில் எவரும் கேட்டதாகவும் இல்லை. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் கூட உறுதியான பதிலைத் தரவில்லை.

ஆனால், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளையும் ஜே.வி.பி. வரலாற்று ரீதியாக எதிர்த்து வந்திருக்கிறது என்பதும் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு வந்திருக்கின்ற போதிலும், அதிகாரப்பகிர்வுக்கு எதிரான தங்களது கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் மாகாண சபைகளுக்கு எதிரானவர்கள் என்பதும் எம்மெல்லோருக்கும் தெரிந்ததே.

பதவிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அளித்த உறுதிமொழியை அதன் தலைவர்களில் எத்தனை பேர்  நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், தற்போது அந்தத் தேர்தல்களை இயன்றவரை தாமதிப்பதற்கு அரசாங்கம் முன்வைக்கின்ற காரணங்களை நோக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களை தாமதிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கடைப்பிடித்த அதே அணுகுமுறையையே இவர்களும் பின்பற்றுகிறார்கள் போன்று தெரிகிறது.

ஏழு வருடங்களாக முட்டுக்கட்டை நிலையில் இருக்கும் எல்லை நிர்ணயச் செயன்முறையை அரசாங்கம் மீண்டும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அந்த செயன்முறையை தற்போது ஆரம்பிப்பதாக இருந்தாலும் கூட, அது நிறைவடைவதற்கு ஒரு வருடமாவது எடுக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே கூறியிருந்தது.

மாகாண சபை தேர்தல்கள் ஒத்திவைப்பு உண்மையில் ஒரு அரசியல் பிரச்சினையே. அரசாங்கத்தின் மீது நெருக்குதலை பிரயோகிப்பதே இதற்குத் தீர்வைக் காண்பதற்கான பயனுறுதியுடைய வழியாகும். ஆனால், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தைக் கோரும் கட்சிகள் சகலதும் ஒன்றிணைந்து அரசியல் போராட்டங்களை நடத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

மாகாண சபை தேர்தல்கள் விவகாரத்தில் உள்ள சட்டப் பரிமாணம் ஒன்று குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய சில தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார். மாகாண சபைகள் மக்களினால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களினாலேயே நிருவகிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றை மீறும் வகையில் ஆளுநர்கள் அந்தச் சபைகளை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி நன்கு தெரிந்தவரான தேசப்பிரிய கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மேலும் தாமதமின்றி மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் நீதித்துறையின் தலையீட்டை நாடமுடியும். ஆனால், இதுவரையில் எவரும் அதில் நாட்டம் காட்டவில்லை.

முன்னைய அரசாங்கக் காலத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைத்தபோது தேசிய மக்கள் சக்தி அவரை கடுமையாக  விமர்சித்தது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மதித்துச் செயற்படவேண்டும் என்று அன்றைய அரசாங்கத்தைக் கோருவதில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி இணைந்துகொண்டது. முன்னாள் தேர்தல் ஆணையாளரின் வாதத்தின் பிரகாரம் நோக்கும்போது இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் தலைவர்களும் விக்கிரமசிங்கவின் வழியிலேயே செயற்படுகிறார்கள். அவர்கள் சட்ட விரோதமாக மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் வைத்திருக்கிறார்கள்.

எல்லை நிர்ணய முட்டுக்கட்டை காரணமாக மாகாண சபை தேர்தல்கள் மேலும் தாமதமாவதைத் தவிர்ப்பதற்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு அரசாங்கத்தினால் இலகுவாக வழிசெய்யமுடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையே போதுமானது என்று தேசப்பிரிய கூறுகிறார். கலப்பு முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திருத்துவதற்கு அல்லது புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை பலம் இருக்கிறது. முட்டுக்கட்டையை அகற்றுவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலகுவான ஒரு விடயம்.

நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 2026 பட்ஜெட்டை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராயிருக்கிறது என்றும் அதற்கென்று 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். ஆனால், தேர்தலுக்கான தினத்தை தீர்மானிப்பது தானல்ல என்று கூறி பொறுப்பில் இருந்து அவர் நழுவிக்கொண்டார். “மாகாண சபைகளுக்கான தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் இருப்பதன் காரணத்தினாலேயே தேர்தல்கள் தாமதமாகின்றன. முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா எல்லை நிர்ணயத்துக்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், அது நிறைவேற்றப்படாததால் முட்டுக்கட்டை நிலை தொடருகிறது. அதற்கு நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு சகல அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அழைத்து அரசாங்கம் மகாநாடொன்றை நடத்தவிருப்பதாக பொதுநிருவாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன கடந்த வாரம் கூறினார். சட்டச் சிக்கல் காரணமாக எந்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது என்பது தொடர்பில் தெளிவு இல்லை என்பதனாலேயே மகாநாட்டைக் கூட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தவாரம் இந்தியாவின் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டியிருக்கிறது என்றும் புதிய சட்டம் ஒன்று தேவையா அல்லது பழைய முறைமையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு நாடாளுமன்றம் இணங்குவதா என்பது குறித்து ஆராயவேண்டியிருக்கிறது என்றும் கூறினார். இறுதியாக, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமால் இரத்நாயக்க மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான சட்டக் கட்டமைப்பை மீளாய்வு செய்வதற்கு விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் தேர்தல் செயன்முறைகளை துரிதப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கக் காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நேர்ந்த கதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களுக்கு நேராது என்று நம்புவோமாக.

இது இவ்வாறிருக்க, புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் இருக்கப்போவதில்லை என்ற ரில்வின் சில்வாவின் கூற்று எதிர்காலத்தில் அதிகாரப்பகிர்வின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

மாகாணங்களை அதிகாரப்பகிர்வு அலகுகாகக்கொண்ட ஏற்பாடு நீக்கப்படும் பட்சத்தில் எத்தகைய நிலப்பிராந்திய எல்லையைக் கொண்டதாக புதிய அதிகாரப்பகிர்வு ஏற்பாடு இருக்கும்? மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களையாவது புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படக்கூடிய அதிகாரப்பகிர்வு ஏற்பாடு கொண்டிருக்குமா? அல்லது அதிகாரப் பகிர்வுக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் எதிரான தேசியவாத சக்திகளை திருப்திப்படுத்தும் வகையில்தான் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு செயன்முறைகள் நிறைவடையுமா?

வீரகத்தி தனபாலசிங்கம்