Photo, ROOM TO READ
இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் அறிமுகம் முக்கியமான சமூக மாற்றமாக கருதப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு C.W.W. கன்னங்கரா தலைமையிலான கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அறிமுகமான இலவசக் கல்வித் திட்டம் சமூகத்தினை பொருளாதார அடிப்படையில் பிரிக்காமல் ஒவ்வொரு பிள்ளைக்கும் இலவசமாக கல்வி பெறும் உரிமையை வழங்கியது. இதன் மூலம் கல்வி வாய்ப்பு நகரங்களிலிருந்து கிராமங்களுக்குப் பரவியது. பல போராட்டங்களினால் 30 வருடங்களிற்குப் பிறகு இலவசக் கல்வி மலையக மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. இதுவே மலையக சமூகத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளமானது.
1960 களிலிருந்து பரீட்சை மையப்படுத்தப்பட்ட கல்வி முறை அதிகரித்ததுடன் 1971களில் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தலின் விளைவாக தனியார் வகுப்பு முறை அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சில பாடங்களில் மட்டுமே கூடுதல் பயிற்சிக்காகத் தொடங்கிய இந்த முறை பின்னர் வர்த்தக ரீதியாக விரிவடைந்து கல்வியின் ஒரு பகுதியாக மாறியது. 1980 களுக்குப் பின் பெரியளவிலான வகுப்பு மையங்கள் உருவாகி கல்வியை ஒரு வர்த்தகப்பொருளாக மாற்றியது. மலையகப் பகுதியிலும் இம்முறை பரவியதால் கல்வியில் சமத்துவமும், பொருளாதார வித்தியாசங்களும் உருவாகின. இலவசக் கல்வி மலையக மக்களுக்கு கல்வி வாய்ப்பைத் திறந்தது என்றாலும், தனியார் வகுப்புகள் அந்த சமத்துவத்தை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறது. ஆரம்பக் காலத்தை விட தற்போது தனியார் வகுப்பு முறை மிகவும் வேகமாக ஊடுருவி வருகின்றது. மாணவர்களை சந்தையில் பொருட்களாகக் கருதி மிகக் கடுமையான போட்டிகளுடன் டியூசன் வழங்கும் நிலையங்கள் சமீப காலத்தில் பெருகி வந்துள்ளன. பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்காக உயரளவிலான கட்டணங்களை செலுத்துவதற்கு பெற்றோர் நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். இப்போக்கு கல்விக்கான செலவினை அதிகரிப்பதோடு நெருக்கடி மத்தியில் உள்ள குடும்பங்களினை மேலும் கஷ்ட நிலைக்கு உள்ளாக்குகின்றது. தனியார் டியூசன் முறையின் இன்றைய நிலை பரீட்சை பெறுபேறுகளுக்கும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையில் நிலவி வரும் மிக நெருக்கமான பிணைப்பை பிரதிபலிப்பதாக இருந்து வருகின்றது.
ஆரம்பக் காலங்களில் சற்று கடினமான பாடங்களுக்கு இவ்வாறான டியூசன் வகுப்புக்கள் காணப்பட்டதோடு பெற்றோர்களும் குறித்த பாடங்களுக்கு மட்டுமே தமது பிள்ளைகளை அனுப்பி வந்தனர். ஆனால், தற்போது அனைத்து பாடங்களுக்கும் தனியார் வகுப்புக்கள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் கற்பிக்கும் அதே ஆசிரியர்களே இவ்வாறான தனியார் வகுப்புகளையும் செய்து வருகின்றனர். எனவே, மாணவர்களும் பாடசாலையில் கற்பது போக அதே ஆசிரியரிடம் தனியார் வகுப்பிற்கும் சென்று மேலதிகமாக அதிக நேரத்தையும், பணத்தையும் செலவழித்து கல்வியைப் பெறுகின்றனர். ஆசிரியர்களும் பாடசாலைகளில் மேலோட்டமாக கற்பிக்கின்ற அதேவேளை தனியார் வகுப்புக்களிலும் கற்பிக்க முயற்சிக்கின்றனர். தனியார் வகுப்புகளுக்குள்ளே ஆசிரியர்களிடம் போட்டி நிலையும் அதிகரித்து காணப்படுகின்றது. அதாவது, பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் போது எந்த டியூசன் வகுப்பு கூடிய பெறுபேற்றினை பெற்றுள்ளது என்ற ஒரு நிலையும் இன்று உருவாகியுள்ளது. பாடசாலை பெறுபேறுகளை விடவும் எந்த டியூசன் கூடிய பெறுபேற்றினை எடுக்கின்றது என்ற ஒரு நிலையைப் பார்க்கும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறிவிட்டது.
கல்வியும் சமூக மாற்றமும்
மலையகத்தைப் பொறுத்தவரையில் கல்வி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வறுமையிலிருந்து விடுபடும் வழிகளிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறை, வளங்களின் குறைபாடு மற்றும் கல்வித் தரத்தில் நிலவும் சீரற்ற தன்மை காரணமாக பல மாணவர்கள் டியூசன் வகுப்புகளை ஒரு அத்தியாவசிய ஆதரவாகக் கருதி வருகின்றனர். இதன் பின்னணியில் மறைக்க முடியாத பொருளாதார, சமூக விளைவுகளும் உள்ளன. அதேநேரம் டியூசன் வகுப்புகள் மலையக மாணவர்களுக்கு பல சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. டியூசன் முறையில் ஏற்றுக் கொள்ளப்படும் பிரதானமான அனுகூலம் மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளை பெறுவதற்கும் அதன் மூலம் உயர் கல்விக்கான அனுமதியினை அல்லது வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கும் உதவியாக உள்ளது. அதேநேரம் பாடசாலைகளில் கிடைக்காத அறிவை இவ் வகுப்புகள் வழங்குவதால் மாணவர்கள் பாடங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு தேர்வுகளில் சிறப்பாகச் செயற்பட முடிகிறது. குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் மாணவர்களின் திறமைகள் மேம்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் உயர்க் கல்வியை தொடரும் வாய்ப்புகளையும் பெருந்தோட்ட தொழிலாளர் வாழ்க்கையிலிருந்து விலகி வேறு துறைகளில் வேலை பெறும் திறனையும் அடைகின்றனர். டியூசன் வகுப்புகளில் பிள்ளைகள் முன்னேறுவதைக் கண்ட பெற்றோர்களும் கல்வியின் மதிப்பை அதிகம் உணர்ந்து தங்கள் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் கல்வியில் தான் இருக்கிறது என்பதில் உறுதியாகியுள்ளனர். இது சமூக முன்னேற்றத்திற்கு நிச்சயமாக உதவியாகும். ஆனால், இதன் பாதகங்களும் மக்கள் மீதுள்ள சுமையும் புறக்கணிக்க முடியாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் மிகக் குறைவு என்பதால் டியூசன் கட்டணத்தைச் செலுத்துவது பெரும் சுமையாக மாறுகிறது. சில குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளைக் குறைத்து வைத்தே இந்தச் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதன் விளைவாக செலவுகளைச் சமாளிக்க முடிந்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே முன்னேறுகின்றார்கள்; அதேசமயம் வறிய குடும்பங்களின் பிள்ளைகள் பின்தங்குகின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது. இது கல்வியில் சமத்துவமின்மையை மேலும் அதிகரித்துள்ளது.
டியூசன் முறை பரவலாகியுள்ள சூழலில் பாடசாலைக் கல்வி தரமும் பாதிக்கப்படுகிறது. சிலர் வகுப்பறையில் முழுமையாக கற்பிக்காமல் டியூசனில் தான் உண்மையான கற்பித்தல் நடக்கிறது என்ற மனப்போக்கை உருவாக்குகின்றனர். இது பாடசாலைகளின் நம்பகத்தன்மையை குறைத்து கல்வியை வணிக ரீதியாகக் கருதும் நிலையை வலுப்படுத்துகின்றது. அத்துடன், மாணவர்கள் பாடசாலை நேரம் முடிந்ததும் டியூசனுக்குச் செல்வதால் பிள்ளைகள் மத்தியில் ஓய்வு நேரம், விளையாட்டு, சமூகத் தொடர்புகள் ஆகியவை குறைந்து விடுகின்றன. குழந்தைப் பருவம் தேர்வுகளுக்கும் மதிப்பெண்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டுவிடும் போது மன அழுத்தமும் ஆரோக்கியப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. மிகவும் முக்கியமானதாக டியூசன் முறை கல்வி நோக்கத்தையே மாற்றி வருகின்றது. அறிவைப் பெறுவதற்காக அல்லாமல் மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டுமே படிப்பது என்ற குறுகிய மனப்போக்கு வலுவடைகிறது. இது மாணவர்களை விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைக்கின்றது.
கல்வி வாங்கிக்கொள்ளவேண்டிய பண்டம் இல்லை, அது அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய ஒரு உரிமையாகும். நெருக்கடி மத்தியில் பல மாணவர்களுக்கு இலவசக்கல்வியை அணுக முடியாத நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அது பொருளாதாரச் சுமை, சமத்துவமின்மை மற்றும் கல்வி நோக்கில் வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையை சமநிலைப்படுத்த அரசு தோட்டத்துறை பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். மேலும், உட்கட்டுமான வசதிகள் வழங்கப்படவேண்டும். கல்வியின் அடிப்படை நோக்கம் அறிவும் சமூக முன்னேற்றமும்தான் என்ற உண்மையை மறக்காமல் பயன்படுத்தினால் மட்டுமே இலவசக் கல்விமுறை மலையக சமூகத்திற்கு நன்மை அளிக்கும் வழியாக இருக்கும்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் கல்விக்காக செலவழிக்க முடியாத குடும்பங்கள் எண்ணிக்கையால் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அரசின் இலவசக் கல்வித் திட்டம் மட்டுமே பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நம்பிக்கை தூணாக நிற்கிறது. கல்வி என்பது வெறும் அறிவைப் பெறுவதற்கான சாதனம் அல்ல. அது சமூக மாற்றத்திற்கும், வறுமை ஒழிப்பிற்கும், சமூகநீதி நிலைநாட்டலுக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
செல்வகுமார் ஸ்டோனிலியானி
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி)
இளம் ஆய்வாளர்கள் வலையமைப்பு, மலையகம்