Photo, Transcurrents
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பலர் புத்தளம் உட்பட நாட்டின் தெற்குப் பகுதிகளுக்குச் சென்றனர். அங்கு அவர்களிலே பலர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். புதிய, அறிமுகமற்ற சூழல்களில் தங்கள் வாழ்க்கையை புதிதாக உருவாக்கும் வேளையிலே, அவர்கள் கடுமையான பொருளாதார இன்னல்களை எதிர்கொண்டனர். அவர்கள் சென்று சேர்ந்த இடங்களில் வாழ்ந்த சமூகங்கள், வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தம்மத்தியில் நீண்ட காலத்துக்கு வாழ்வதனை விரும்பாமையினால், அவர்கள் சமூக தனிமைப்படுத்தலையும் அனுபவித்தனர்.
வடக்கில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள் பாழடைந்தன அல்லது இடம்பெயர்ந்த தமிழர்கள் அவற்றிலே தங்கினர்; அவர்களின் மசூதிகள் பயன்படுத்தப்படாமல் போயின; அவர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன; பாடசாலைகள் கைவிடப்பட்டன; அவர்களின் நிலங்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்கள் இல்லாத நிலையில், வடக்கு மாகாணம் ஒற்றை இனப் பிராந்தியமாக மாறியது. 2012 இல் வெளியிடப்பட்ட குடிமக்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு இணங்க, முஸ்லிம்களின் வெளியேற்றம் ஓர் இனச் சுத்திகரிப்புச் செயலாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு அகதிகளாக மாற்றப்பட்ட ஒரு சமூகம். நூற்றாண்டுகளாக அவர்களைத் தாங்கிய பொருளாதார வளங்களிலிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் கலாச்சார, மத மற்றும் சமூக வாழ்வின் மையமாக இருந்த பாடசாலைகள் மற்றும் மசூதிகளை அவர்கள் பயன்படுத்த முடியாது போயிற்று. வடக்கு முஸ்லிம்கள் அனுபவித்த சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார இழப்பு மற்றும் உரிமையின்மையின் பரிமாணம் வெளியேற்றத்தை தெளிவான இனச் சுத்திகரிப்புச் செயலாக மாற்றுகிறது.
வெளியேற்றமும் தமிழ்த் தேசியமும்
சிலர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வெறுமனே உள்நாட்டுப் போரின் மற்றொரு துயர்மிகு சம்பவமாகச் சித்தரிக்க முனைகின்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தின் ஆழ் வேர்கள் சித்தாந்த ரீதியானவை. உலகெங்கிலும் உள்ள பல இன – தேசியவாத இயக்கங்கள் நிலத்தை ஒரு இனத்துவ, இன அல்லது கலாச்சார தாயகமாக கற்பனை செய்வது போல, தமிழ்த் தேசியமும் இலங்கையின் வடக்குக் கிழக்கை தமிழர்களின் தாயகமாக உரிமை கோருகிறது. இந்தக் கருத்தாடல், வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தினை, தமிழர்கள் ஒரு தேசமாக தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு, அவர்களிடம் இருக்கும் பாராதீனப்படுத்த முடியாத அவர்களின் சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிப்பதற்கு, அவர்களுக்கு உரித்தான பிரதேசம் என வரையறுக்க முற்படுகிறது. இந்த வெளிப்பாடு சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான வேட்கையின் நியாயமான வெளிப்பாடாகப் பரவலாக நோக்கப்படுகிறது.
வெளியேற்றத்தின் பின்னணியிலுள்ள சித்தாந்த உந்துதலை புரிந்துகொள்ள, தமிழ் சூழலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் சுயநிர்ணய உரிமை மூலம் முன்னிறுத்தப்படும் பிரதேசம் மற்றும் கலாச்சாரம் பற்றிய தர்க்கங்களை நாம் அலசிப்பார்ப்பது அவசியம். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது காலனித்துவம் மற்றும் பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய சமூகங்களால் முன்னிறுத்தப்படும் ஓர் அரசியல் – சட்ட இலட்சியமாகப் பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட தேசங்கள் – அல்லது அரசு அதிகாரம் இல்லாத தேசங்கள் – இறையாண்மையைப் பெறுவதற்கான தங்கள் முயற்சியில் இந்த உரிமையை முன்னிறுத்தியுள்ளன. இருப்பினும், இந்தக் கொள்கையின் தாராளவாத மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள், பல சுயநிர்ணய அரசியல் முயற்சிகளில் வேரூன்றி இருக்கும் அதன் உள்ளார்ந்த புறமொதுக்கும் தன்மையினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். தேசியவாதத்தினால் முன்னெடுக்கப்படும் புறமொதுக்கும் நிலக் கட்டுமானங்களினை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சிகள், பல்லின மக்கள் வாழும் பிராந்தியங்களை ஒற்றைக் குழுவின் கற்பனை செய்யப்பட்ட தாயகங்களாக எவ்வாறு மாற்றுகின்றன என்பதை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை.
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமும், இலங்கையிலும் உலகின் பிற பகுதிகளிலும் இடம்பெற்ற புறமொதுக்கும் வன்முறைகளும், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து எழும் இன – தேசிய சுயநிர்ணய வெளிப்பாடுகள் உள்ளடங்கலாக, எல்லா இன – தேசிய சுயநிர்ணய வெளிப்பாடுகளிலும், இன அழிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்புக்கான சாத்தியங்கள் புதைந்திருக்கின்றன என்பதனை நாம் விளங்கிக்கொள்ளுவது அவசியம் என்பதனையே எமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
வடக்கில் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தின் சித்தாந்த மையம் தமிழ் தேசியத்திலிருந்து உருவானது என்று கூறுவது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. தமிழ்த் தேசத்தின் ஒரே பிரதிநிதி மற்றும் பாதுகாவலராக தன்னை நிலைநிறுத்திய விடுதலைப் புலிகள், வடக்கு மாகாணத்தில் யார் வாழலாம், யார் வாழக்கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டோராகத் தம்மை முன்னிறுத்தினர். முஸ்லிம்களை வெளியேற்றியதற்காக விடுதலைப் புலிகள் பின்னர் வருத்தம் தெரிவித்தாலும், அந்த இயக்கத்தின் அனுதாபிகள் இந்த அரசியல் குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதைத் தொடர்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமங்களில் நடந்த படுகொலைகளில் இலங்கை அரசுடன் இணைந்த முஸ்லிம் ஊர்க்காவலர்களின் பங்குக்கு எதிர்வினையாகவே வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று சிலர் வாதிடுகின்றனர். சில வடக்கு முஸ்லிம்கள் அரசுடன் ஒத்துழைத்தனர் எனவும் அதற்கான எதிர் நடவடிக்கையாகவே புலிகள் வெளியேற்றத்தை உத்தரவிட்டனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த ‘விளக்கங்கள்’ வடக்கில் யார் வாழலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை விடுதலைப் புலிகள் எந்த அரசியல் அடித்தளத்திலிருந்து பெற்றனர் என்பதை விசாரிக்கத் தவறுகின்றன. அந்த அடித்தளம் தமிழ் தேசியமே. அரசு அல்லாத ஒரு தரப்பினரால் நடத்தப்பட்ட இந்த வன்முறை, தேசிய – அரசுகள் பெரும்பாலும் தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தமது இறையாண்மையினைப் பயன்படுத்திக் கட்டவிழ்த்து விடும் வன்முறையை ஒத்து இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளின் தர்க்கத்தை நீட்டித்து, சில தமிழர்களும் இலங்கை அரசுடன் ஒத்துழைத்த போதிலும், தமிழர்கள் ஏன் முஸ்லிம் மக்களைப் போல வெளியேற்றப்படவில்லை என்று கேட்டால், புலிகளின் விடுதலைப் பார்வை மற்றும் தமிழ் தேசியத்தின் பரந்த சித்தாந்தம் ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக இருந்த விலக்கல் அரசியலை நாம் அறிய முடியும். வெளியேற்றத்தினை ‘விளக்க’ முற்படும் அனுதாபிகளினால் ஒப்புக்கொள்ள முடியாத சங்கடமான உண்மை என்னவென்றால், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் சுயநிர்ணயப் போராட்டத்தின் பார்வையில், தமிழ் உயிர்கள் மற்றவர்களை விட முக்கியமானவை என்ற நிலைப்பாடே. தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியுடைய “நிலத்தின் மக்கள்” என கற்பனை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் உட்பட மற்றவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக அல்லது புறக்கணிக்கத்தக்க, வெளியேற்றக்கூடிய மக்களாக குறைத்து நோக்கப்பட்டனர். இது விடுதலைக்கான பார்வை அல்ல. இது இலங்கையை சிங்கள – பௌத்தர்களின் நிலமாக உருவாக்கும் சித்தாந்தத்தின் கட்டமைப்பினை ஒத்த, மக்கள் கூட்டங்களைப் படிநிலை வரிசைப்படுத்தும் ஒரு சிந்தனை முறையே.
பெரும்பான்மை அரசுக்கு எதிராக போராடிய ஒரு விடுதலை இயக்கம் தனது பிரதேசங்களுக்குள் இருக்கும் ஒரு சிறுபான்மை சமூகத்தை ஒரு நாள் வெளியேற்றும் என்பதை எம்மால் முற்கூட்டியே நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பது, சுயநிர்ணய உரிமை பற்றிய அனைத்து இன – தேசியவாத கூற்றுகளின் உள்ளார்ந்த, மறைந்த கூறாக, மற்றவர்களுக்கு எதிரான வன்முறை உள்ளது என்பதை நாம் அவதானிக்கத் தவறியிருந்திருக்கிறோம் என்பதை எமக்கு நினைவூட்ட வேண்டும். முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நாம் கண்டது போல், கள நிலைமைகள் ஒருங்கிசையும் போது, தேசியவாதங்களில் புதைந்திருக்கும் மற்றவர்களுக்கு எதிரான புறமொதுக்கல் கருத்தியல் ஒரு வெடிப்பாகவும் வன்முறையாகவும் எம்முன் எழுகிறது. வெளியேற்றம் நமக்கு ஒரு முக்கியமான அரசியல் பாடத்தை வழங்குகிறது. முற்போக்கான மற்றும் ஒடுக்குமுறையான தேசியவாதங்களுக்கு இடையில் நாம் வேறுபாடுகளை மேற்கொள்வதன் வீண்தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய வேறுபாடுகள் வரலாற்று அடிப்படைகளைக் கொண்டிராதவை. சகவாழ்வு மற்றும் சமத்துவம் என்பவற்றினை விட, பெரும்பான்மைவாதம் மற்றும் பூர்வீகவாதத்தை ஏதோ ஒரு வகையில் மேன்மைப்படுத்தும் கட்டமைப்புக்களில் இருந்தே எல்லா விதமான இனத் தேசியவாதங்களும் உருவாகின்றன.
சிங்கள – பௌத்த தேசியத்தைப் போல தமிழ்த் தேசியமும் முழுமையாக கைவிடப்பட வேண்டிய ஒன்று என்பதை வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தெளிவுபடுத்துகிறது. தமிழ்த் தேசியத்தை முஸ்லிம் – நட்பு மிக்க ஒன்றாகவோ அல்லது ஜனநாயகத் தன்மையானதாகவோ அல்லது முற்போக்கானதாகவோ மீள்கட்டமைக்க எடுக்கப்படும் முயற்சிகளினாலும், கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் சுயநிர்ணய உரிமையை நாடும் தனித் தேசமாக முஸ்லிம்கள் தங்களை முன்னிறுத்த வேண்டும் என ஊக்குவிக்கும் முயற்சிகளினாலும் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படாது. இன அடையாளங்களினைப் பிரதேசப்படுத்தும் கருத்தியல்களிலே தோய்ந்திருக்கும் இத்தகைய திட்டங்கள், மோதல் மற்றும் புறமொதுக்கும் வன்முறையை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யக் கூடியன. இலங்கை கண்ணுற்ற இன – தேசியவாதப் புறமொதுக்கல்களின் நச்சு வட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமாயின், மையத்திலும் பிராந்தியங்களிலும் சகவாழ்வு பற்றிய புதிய அரசியல் தரிசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
திரும்புதல், மீள்குடியேற்றம் மற்றும் நீதிக்கான கேள்வி
முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தில் தமிழ் தேசியத்துக்கு இருக்கும் பங்கினை நாம் ஆராயும் அதேவேளை, மீளத்திரும்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்க அரசு தவறியதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து பல முஸ்லிம் மக்கள் வடக்கிற்குத் திரும்பியிருந்தாலும், அவர்களின் மீள்குடியேற்றத்துக்குப் போதுமான அளவு ஆதரவு கிடைக்கவில்லை. முப்பது வருட இடப்பெயர்வின் போது குடும்பங்கள் வளர்ந்துள்ளதால், திரும்பி வரும் சமூகங்களைப் பொறுத்த வரையில் நிலப் பற்றாக்குறை ஒரு தீவிரமான பிரச்சினையாக உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மீளத் திரும்பிய முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்கு மின்சாரம் பெறுவதிலும், விவசாயத்திற்காக கிணறு தோண்ட அனுமதி பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக முறையிடுகின்றனர். ஏனெனில், அவர்கள் தற்போது வசிக்கும் நிலங்களின் உரிமையை நிரூபிக்கத் தேவையான உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. திரும்பியவர்கள் போரின் போது தங்கள் ஆவணங்களை இழந்துவிட்டனர் அல்லது அவர்கள் இப்போது வைத்திருக்கும் ஆவணங்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரச நிர்வாகிகளுக்கு ஏற்புடையனவாக இல்லை.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் சரவதேச நாணய நிதியத்தின் தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் சிக்கனக் கொள்கைகளால் மோசமடைந்திருக்கும் ஒரு பொருளாதார சூழலில், அரசினால் மீளத்திரும்பும் மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அம்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடப் போதுமானதாக இல்லை. மன்னாரில், வாழ்வாதார வாய்ப்புகளைத் தேடும் முஸ்லிம் பெண்கள் சிறிய அளவிலான, வீட்டில் இருந்து மேற்கொள்ளக் கூடிய உற்பத்தியில் ஈடுபடுவதற்கோ அல்லது கோழி வளர்ப்பில் ஈடுபடுவதற்கோ தமது வீட்டு வளவுகள் சிறிதாக இருக்கின்றமை ஒரு தடையாக இருக்கின்றமையினைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் தமது வீட்டுப் பொறுப்புக்களைப் பார்த்துக் கொள்ளும் அதேவேளை, பொருளாதார முயற்சிகளிலும் சமநேரத்தில் பங்கேற்க விரும்புகின்றனர். மேலும், சிறு தொழில்களைத் தொடங்குவதற்குக் குறைந்த வட்டியுடனான கடன் பெறக்கூடிய வாய்ப்புக்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அனுபவங்கள் மீள்குடியேற்றம் எல்லா வடக்கு முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் ஒரே மாதிரியான ஒரு செயல்முறையாக அமையவில்லை என்பதைக் காட்டுகிறது; திரும்பியவர்களின் எதிர்பார்க்கைகளும், தேவைகளும் அவர்களின் பொருளாதார நிலை மற்றும் பால்நிலை போன்ற காரணிகளினால் வடிவமைக்கப்படுகின்றன என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உண்மையான மீள்குடியேற்றத்தை ஏற்படுத்த, அரச கட்டமைப்புக்களினால் ஏற்படுத்தப்படும் தடைகள் யாவும் தாமதமின்றி நீக்கப்பட வேண்டும். இராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மேலும், அரசு போதுமான பொருளாதார உதவியை மீளத்திரும்பும் மக்களுக்கு வழங்க வேண்டும். வடக்கை நிர்வகிக்கும் தமிழ் அதிகாரிகள் மீள் திரும்பும் முஸ்லிம்களை சந்தேகத்துடனும் விரோதத்துடன் பார்ப்பதை விடுத்து, அவர்களை வரவேற்க வேண்டும்.
அரசின் அலட்சியம் ஒரு புறம் இருக்கையில், திரும்பும் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையும் சவால்கள் மிக்கதாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் பல சம்பவங்கள் வடக்கிலே நடந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் முசலியில் பாதுகாக்கப்பட்ட வன பாதுகாப்புப் பகுதிகளாகத் தன்னிச்சையான முறையில் அறிவிக்கப்பட்ட தங்கள் நிலங்களை மீளத் திரும்பிய முஸ்லிம் மக்கள் மீட்டெடுக்க முயன்றபோது, வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் மேலாதிக்கக் குழுக்களால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட சில செய்தித்தாள்கள் முஸ்லிம்களையும் அவர்களின் மதத் தலைவர்களையும் அடிப்படைவாதிகள் எனவும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என சித்தரிக்கும் விஷமிக்க தலையங்கங்களை வெளியிட்டன. சில பாடசாலைகளில், முஸ்லிம் மாணவிகள் தமது பாரம்பரிய உடையை அணிந்துவரக்கூடாது என்ற அழுத்தத்தை எதிர்கொண்டனர். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இரும்பு சேகரிப்பாளர்கள் கிராமப்புற யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வன்முறையை எதிர்கொண்டனர். வடக்கில் எழுச்சி பெற்று வரும் இந்துத்துவ சக்திகள் முஸ்லிம் வணிக நிறுவனங்களுக்கு எதிராகப் பிரசாரங்களில் ஈடுபட்டன. போருக்குப் பிந்தைய காலத்தில் வடக்கில் அவதானிக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள், நாட்டின் தெற்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் அனுபவித்த உடல்ரீதியான மற்றும் கருத்தியல் ரீதியான வன்முறைகளைப் போல கடுமையாக இல்லாவிட்டாலும், வடக்கில் முஸ்லிம்கள் அந்நியப்படுதல் மற்றும் ஓரங்கட்டப்படுதலினை சில காலப்பகுதிகளில் அனுபவித்தனர் என்பதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
இத்தகைய சிக்கலான சூழலில் சமூகப் பன்மைத்துவம் மற்றும் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்திற்கான நீதியைத் தேடுதல் போன்ற விடயங்கள், வடக்கு முஸ்லிம்கள் குறித்தும் மற்றும் வடக்கு மாகாணம் குறித்தும் எதிர்காலம் தொடர்பில் நாம் கொண்டிருக்கும் பார்வையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதனவாக இருக்கின்றன. வட மாகாணத்தினை பல – இன, பல – மத பிராந்தியமாகவும் அதன் அனைத்து குடியிருப்பாளர்களும் ஒற்றுமையுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு பிரதேசமாகவும் நாம் மறு தரிசனம் செய்வது எந்தவொரு ஜனநாயகச் செயன்முறைக்கும், அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கும் அவசியம் ஆகும். அதிகாரப் பரவலாக்கத்தின் கட்டமைப்புகள் வட மாகாணத்திற்குள் இருக்கும் அனைத்து சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு, கண்ணியம், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் சமத்துவமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றினை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
ஒற்றுமை மற்றும் சகவாழ்வை நோக்கி
வெளியேற்றத்தை நாம் கூட்டாக நினைவுகூரும் அதேவேளை, வடக்கிலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தப் புதிய வழிகளை நாம் தேட வேண்டும். ஒரு சமூகத்தை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்துவதன் மூலமும், ஏனைய வழிகளிலும் அரசு தொடர்ந்து தம்மை ஓரங்கட்டுவதற்கு எதிராக இரு சமூகங்களும் – மற்றவர்களுடன் சேர்ந்து – பொறுப்புக்கூறலினை வலியுறுத்திச் செயற்பட வேண்டும். சிறுபான்மை மக்களுடன் நட்பினைப் பேணும் ஓர் அரசாங்கம் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை அறிவித்துக்கொண்டாலும், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இராணுவமயமாக்கல் காரணமாக இழந்த நிலங்களை அவர்களிடம் மீளக் கையளிப்பதில் மிகவும் மந்த கதியிலேயே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. தொல்பொருள், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனத்துறை போன்ற அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்வதாக உறுதியளித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கி வருகின்றனர். சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பன்மைத்துவத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு நம்பகத்தன்மை அற்றது என்பதனையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாறான புறமொதுக்கல்களை எதிர்கொள்ளவும், எதிர்க்கவும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும்.
இருப்பினும், கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஊக்கமளிக்கும் சில செயன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் இனவழிப்பு நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர் (முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்திற்கான நினைவேந்தல் எதுவும் பல்கலைக்கழகத்தில் இதுவரை நடத்தப்படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது). அதேபோல், 2014, 2018 மற்றும் 2019 இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போதும், கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம் மக்களின் உடலங்களைத் தகனம் செய்வதை அரசு கட்டாயப்படுத்தியபோதும், தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவானவர்கள் உட்பட தமிழ் சிவில் சமூக குழுக்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக நின்றனர். 2021 இல், பொத்துவில் முதல் பொலிகண்டி என்ற அணிதிரட்டல் முயற்சி இரு சமூகங்களையும் ஒன்றிணைத்தது. இரு சமூகங்களுக்கும் பொதுவான கோரிக்கைகளையும், ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்துவமான பிரச்சினைகளையும் இந்த அணிதிரட்டல் முன்னிலைப்படுத்தியது. இருப்பினும், நடைபயணத்தின் இறுதிக் கட்டத்திலே தமிழ் தேசியவாத கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒருதலைப்பட்ச முயற்சிகளால் போராட்டத்தின் ஒன்றிணைக்கும் வலு மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.
வடக்கில் கூட்டுறவுத் துறை மீளத்திரும்பும் முஸ்லிம் சமூகங்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியம் மற்றும் வல்லமை (சமூக மாற்றத்திற்கான பெண்கள் குழு) போன்ற வேறுபட்ட இனக்குழுமங்களைச் சேர்ந்தோரினை ஒன்றிணைக்கும் முன்முயற்சிகள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உரையாடல்களை இனத் தேசியவாதக் கட்டமைப்புக்களைத் தாண்டிய வகையில் ஊக்குவிக்கின்றன. இந்த முயற்சிகளின் வாயிலாக இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியங்களும் ஆராயப்படுகின்றன.
இந்த முயற்சிகள் வலுப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட வேண்டும். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான நீதி இந்த அனைத்து செயல்முறைகளையும், வேறு பல விடயங்களையும் உள்ளடக்கியது. இந்த விடயம் தொடர்பிலே நாம் பயணிப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தேசியவாதத்தினைப் புறந்தள்ளி, சமூகங்களுக்கு இடையில் தோழமையினையும், கூட்டுறவினையும் ஊக்குவிக்கும் ஓர் அரசியல் பார்வையின் மூலம் மட்டுமே நாம் வலுவான, பகிரப்பட்ட, சமத்துவமான எதிர்காலத்தை எம்மனைவருக்குமாகவும் உருவாக்க முடியும். 35 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுகூரும் இன்றைய தருணத்திலே, இந்த சகவாழ்வுப் பார்வைக்காகவும், செயற்பாட்டுக்காகவும் நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
மகேந்திரன் திருவரங்கன்
கட்டுரையாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.