Photo, AP Photo/Eranga Jayawardena

நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு வழங்குவதற்காக தனியான பிரிவு ஒன்று நல்லாட்சி அரசாங்கத்தில் தோட்டத்துறை அமைச்சராகவிருந்த லக்ஸ்மன் கிரியெல்லவின் கீழ் உருவாக்கப்பட்டது. பின்னர் அச்செயற்பாட்டில் சில தில்லுமுல்லுகள் ஏற்பட்டமையினால் பின்னர் அவ்வரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த கபீர் ஹாசிம்மின் தலைமையின் கீழ் அப்பொறுப்பு கொண்டுவரப்பட்டது.

தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கும் போது அத்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களது, வேலைவாய்ப்பு, சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட நியதி உரிமைகள், வீடு கட்டுவதற்கான காணி வழங்கல் என்பன பற்றி கருத்திற் கொள்ளப்படாமலே மேற்கொள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பில் அன்றைய ஆட்சியில் அமைச்சரவை அமைச்சராகவிருந்த மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு சமூக அபிவிருத்தி நிறுவகம் கொண்டு சென்றதுடன் சில தோட்டங்களின் தொழிலாளர்களும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். அவ்வமைச்சர்கள் இருவரும் இத்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத்திற் பணியாற்றாது தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு காணி வழங்குதல் மற்றும் தொழில் உரிமைகள் முதலிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் விளைவாக எந்தவொரு தோட்டத்தையும் குத்தகையாளர்களுக்கு வழங்க முன் இவ்விரு அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டுச் சென்று அதன் பின்னரே குத்தகைக்கு விட வேண்டும் எனும் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டது. அவ்வரசாங்கம் வீழ்ச்சியுற்றதன் பின்னர் அதே கொள்கையை கோட்டபாயவின் அரசாங்கமும் முன்னெடுக்க முனைந்தது. ஆனால், அதற்குள் அரசாங்கம் கவிழ்ந்து விட்டது.

இவ்வாறு கைவிடப்பட்ட முயற்சியை இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. முன்னைய அரசாங்கத்தை விட இன்றைய அரசாங்கம் குறிப்பிட்ட தோட்டங்களில் என்ன வகையான திட்டங்களை மேற்கொள்ளலாம் என்பதுடன் மனுக்கோரலை கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளியிட்டுள்ளதுடன் 2025 செப்டம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் விருப்பு மனுக்கோரலை தோட்டத்ததுறை அமைச்சிற்கு சமர்ப்பிக்கும் படி கோரியுள்ளது. குறிப்பிட்ட தோட்டங்களில் என்ன வகையான கருத்திட்டங்களை மேற்கொள்ளலாம் என அமைச்சின் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

சுருக்கச் சொற்கள்:
EPL: Elkaduwa Plantation Limited
SLSPC: Sri Lankan State Plantation Corporation
JEDB: Janatha Estate Development Board

ஆதாரம்: அமைச்சு இணையதளம்

முப்பது 30 வருட குத்தகைக்கு விடும் இவ்முயற்சியின் போது அத்தோட்டங்களில் வாழும் மக்களின் தொழில் சார் உரிமைகள் எவ்வாறு கைமாற்றப்படும் மற்றும் அவர்களுக்கான வீட்டு மற்றும் வாழ்வாதார காணிகள் தொடர்பில் எவ்வாறான திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்பது பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. மலையக மக்களது வீட்டிற்கான காணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தனியாருக்குக் குத்தகைக்கு விட முனையும் தோட்டங்களில் வாழும் மக்களின் காணியுடனான வீட்டுரிமைப் பற்றியோ அல்லது அவர்களது வாழ்வாதாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஏலவே அரச தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி கோடிக்கணக்கில் நிலுவையிலுள்ளது. இவ்விடயம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தோட்டங்களை குத்தகைக்கு எடுப்போர் தற்போது பணிபுரியும் தொழிலாளர்களின் சேவைக்காலத்தை அவ்வாறே எடுத்துக் கொள்வார்களா அல்லது புதிய தொழிலாளர்களாக இணைத்து கொள்வார்களா என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை. அவர்களது சேவைக்கால கொடுப்பனவு காலம் பற்றி குறிப்பிடப்படவில்லை. மேலும், தோட்டத்தில் பணிபுரியாது வசிப்போரின் நிலை எவ்வாறானதாக அமையும். அவர்கள் வெளியேற்றப்படுவார்களா என்பது பற்றி குறிப்பிடவில்லை. இவ்வாறான அடிப்படை விடயங்கள் பற்றி அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டுள்ளது என்பது பற்றி வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

ஆட்சியிலிருக்கும் மலையகப் பிரதிநிதிகள் மற்றும் எதிரணியில் இருக்கும் மலையகப் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரை சந்தித்து அல்லது நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் இவ்விடயம் பற்றி கேள்வி எழுப்பி இம்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை கோர வேண்டும். இன்றைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சில தினங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் நடைப் பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய அமர்வில் மலையக மக்களை தனித்து இனமாக அங்கீகரிப்பதுடன் அவர்களது சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறப்பு முயற்சியினை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். எனவே, இச்சந்தர்ப்பத்தை மலையக பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஏன் நட்டமடையும் தோட்டங்களில் கூட்டுறவு முறையிலான முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்த முடியாது என்ற கேள்வியையெழுப்ப வேண்டும். இலங்கையில் சிறந்த இரண்டு கூட்டுறவு தோட்டங்கள் இயங்குகின்றன. அவற்றில் தெனியாய கொட்டப் பொல கூட்டுறவு தேயிலைக் கம்பனி சிறப்பாக இயங்கும் கூட்டுறவு கம்பனியாகும். இங்கு தேயிலாக் காணிகள் உற்பத்தியாளர்களுக் சொந்தமாக உள்ளது. அவர்களுக்கு பயிற்சி உப்பட நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் இதனை முன் உதாரணமாகக் கொண்டு நட்டமடையும் தோட்டங்களில் கூட்டுறவு முறைமையை உருவாக்க முடியாது. அவ்வாறு உருவாக்கினால் இத்தோட்ட மக்களின் வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிரச்சினையை மிகச் சிறப்பாக தீர்க்கலாம். எனவே, இவ்விடயம் தொடர்பில் மலையகப் பிரதிநிதிகள் உடனே குரலெழுப்ப வேண்டியுள்ளது.

பெ.முத்துலிங்கம்