Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தில் கற்பிட்டி தொடங்கி கிழக்குக் கரையோரமான திருகோணமலை வரை உள்ள 14ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம் இராசதானியின் பிரதேச எல்லைகளாக இருந்த பகுதியையே அவர் அவ்வாறு மேற்கோளிட்டார். இந்த மண்ணுக்காகவும், அதனை ஆளும் வல்லமைக்காகவும்தான், இலங்கை அரசுக்கும் பிரிவினைவாத தமிழ் சக்திகளுக்கும் இடையில் இடம்பெற்ற இருபத்தாறு வருடகால ஆயுதப் போராட்டத்தில் எண்ணிலடங்காத ஆண்களும் பெண்களும் போராடி உயிர்துறந்தனர். ஒரு முக்கியம் வாய்ந்த தமிழ் தேசிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் “போருக்குப் பிறகும், எங்களது இறைமையையும் விடுதலையையும் மீளப்பெற நாங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்” என என்னிடம் கூறினார். இந்நெருக்கடிநிலைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் மேலதிகமாக இன்னுமொரு பிரச்சினை பிறந்திருக்கிறது: எந்த நிலத்தைப் பாதுகாக்க தமிழ் மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, எந்த நிலத்தில் அவர்களது அடையாளம் ஆழமாக வேரூன்றியிருக்கிறதோ அதே நிலம் ஒரு புதிய, மாறுபட்ட அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.
சுவிஸ் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவரான நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்னிடம் தெரிவித்ததாவது, “இது இனிமேலும் வெறும் காலநிலை மாற்றம் அல்ல. இது ஒரு காலநிலை நெருக்கடி.” பல வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் போல இலங்கையும் காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ளப்படும் அநீதிக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. குறிப்பிடத்தக்க அளவு உயர் காபன் உமிழ்வை மேற்கொள்ளாத போதும், உலகளாவிய காபன் இடர் குறியீட்டுப் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முதல் பத்து இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி இலங்கையின் அதிகூடிய காலநிலை வெப்பநிலைத் தளங்களாக வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் இனங்காணப்பட்டுள்ளன. தமிழ்த் தாயகத்தின் பகுதிகளாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களே காலநிலை இடர்பாட்டினால் அதிகூடிய பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் மாவட்டங்களாக கருதப்படுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியங்கள் – நீண்டகால இனப் பாகுபாடு மற்றும் அரச வன்முறைகளுக்குள்ளான மாவட்டங்கள் – இக்காலநிலை இடரை எதிர்கொள்வதற்கான வளங்கள் மற்றும் வழிமுறைகளை அதிகுறைந்த அளவில் கொண்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் நடாத்தப்படும் காலநிலை மற்றும் அறிவியல் ஆய்வு மதிப்பீடுகளுடன் கூடிய கலந்துரையாடல்கள், தமிழ் தாயகத்தின் காலநிலை அவசர நிலையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்நிலைத் தரவுகளை வெளிப்படுத்துகின்றன. கடல்நீர்மட்ட உயர்வு, நிலம் உப்பாதல், வெள்ளம், வரட்சி, கரையோர மண்ணரிப்பு, பவள வெழுக்கம், வானிலையின் நிலையற்ற தன்மை மற்றும் தீவிர வெப்பம் போன்றவை ஏற்கனவே விவசாய மற்றும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த வண்ணம் உள்ளதோடு அந்நிலத்தின் தன்மை மற்றும் உற்பத்தித் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிகம் துஷ்பிரயோகிக்கப்பட்ட தமிழர்களும் அவர்களது தலைமைத்துவங்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசிய அமைப்புக்களும் இவ்வச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் வெறுமனே அவற்றை கடந்துசெல்லவே தயாராக உள்ளனர்.
நீர்வளமும் அதன் ஊடுருவலும்
“ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மழை இல்லாதபோது வயல் நிலங்களில் உப்புப் படிமங்கள் உருவாக்கியிருப்பதை காணலாம்” என மன்னார் மாவட்டம் விடத்தல் தீவைச் சேர்ந்த சூழலியலாளரான எடிசன் மேரிநாதன் என்னிடம் குறிப்பிட்டார். நிலம் மற்றும் நிலக்கீழ் நீரின் உப்புத்தன்மையை அதிகரிக்கின்ற, உப்புப் படிவாக்கம், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஏற்கனவே யாழ். குடாநாட்டின் 43 சதவீதமான விவசாய நிலங்களின் நிரந்தரமான கைவிடப்படலுக்கு காரணமாக இருந்ததோடு, அது அப்பகுதி முழுவதுமான பயிர்ப்பாசனம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 2020 இல் நிலக்கீழ் நீர்வளத்தின் உடனடி பரிபாலானத்தை வலியுறுத்தும்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, குறித்த ஆண்டில் யாழ். குடாநாட்டில் இருந்த கிட்டத்தட்ட 59 சதவீதமான கிணறுகளின் நீர், பயிர்ப் பாசனத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறியிருந்தமை குறித்து கண்டறிந்தது. தொடர் நீர்ப்பற்றாக்குறைக்காக அறியப்பட்ட வட மாகாணத்தில் இதுவொரு எளிய பிரச்சினை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை சமநிலையின்மையின் அறிகுறிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்ற ஏராளமான கரையோரக் கிராமங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் இலுப்பக்கடவையில் நீரினுள் நிற்கும் நாய். காலநிலை சமநிலையின்மையின் அச்சுறுத்தல்கள் பற்றிய விடயங்கள் இன்னும் பொதுவான கலந்துரையாடல் வடிவம் பெறவோ அல்லது தமிழ் பெரும்பான்மை கொண்ட வடக்கின் அரசியல் சிந்தனைகளாக கருத்தில் கொள்ளப்படவோ இல்லை. Photo: ஐசாக் நிக்கோ
உப்புப் படிவாக்கம் அதிகளவான நீர் பாவனையின் விளைவு என காலநிலை விஞ்ஞானி தரணி கோபாலகிருஷ்ணன் விளக்குகின்றார். சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க மக்கள் புதிது புதிதாக கிணறுகளை தோண்டிய வண்ணம் இருக்கிறார்கள். நீர்ப்பாசனம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான அதிகளவான நீர் பாவனைய, யாழின் நீர்கொள் படுகைகளாகச் செயற்படும் சுண்ணாம்புப் படுகைப் பாறைகளுக்கிடைப்பட்ட கடல் மற்றும் நன்னீர் சமநிலையை பாதிக்கின்றமை கிணறுகளிலுள்ள நீரை உவர்தன்மைமிக்கதாக மாற்றுகிறது. ஆனால், காலநிலை சமநிலையின்மையால் விளைந்த கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நிலமட்டத்தைத் தாண்டிய கடல் நீரின் மிகை ஊடுருவல் போன்றவற்றாலும்கூட உப்புப் படிவாக்கம் நிகழ்கின்றது.
உவர்நீர் ஊடுருவலின் விளைவாக யாழில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும், நூற்றுக்கணக்கான கிணறுகளும் பாவனையிலிருந்து கைவிடப்பட்டுள்ளன. கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி பல்வேறு இடங்களில் மண்ணின் உப்புப் படிவாக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. மேலும், பூநகரி அல்லது அரியாலையிலுள்ள கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்குச் சென்று பார்த்தோமானால், அங்குள்ள மண் கடல் மண்ணின் தன்மையில் காட்சியளிப்பதோடு சிலவேளைகளில் அவற்றில் சிப்பிகளையும் கண்டெடுக்க முடியும் என்று அப்பெண் தெரிவித்தார்.
பெரும்பாலான மக்கள் வாழும் கரையோரத்தின் சமதரையான யாழ். குடாநாட்டில் கடல்நீர்மட்ட உயர்வானது மண்ணரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கும் காரணமாக அமையும். மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதமும் பிராந்தியத்தின் விவசாய நிலங்களில் 52 சதவீதமும் 2100ஆம் ஆண்டளவில் அற்றுப்போகும் வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்ற நிலைமையில், யாழ்ப்பாணத்தின் உழைக்கும் மக்கள் தொகையில் நாலில் ஒரு பங்கினரை 2050 அளவில் நெல்லுற்பத்தியில் ஏற்படப்போவதாக கணிக்கப்படும் சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளது. சனத்தொகை பெருக்கத்தோடு கூடிய நெல்லுற்பத்தியின் வீழ்ச்சி குடாநாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு வறுமைக்கும் வழிவகுக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
இலங்கையின் வடமேற்குக் கரையோரமாக கிழக்கு அரிப்பு பகுதியில் நீரை அண்மித்த இரண்டடுக்கு செங்கல் மாளிகையொன்று தீவிர வெப்பம் மற்றும் கடலரிப்பின் விளைவாக அழிவடைந்த வண்ணம் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடம் ஒரு காலத்தில் இலங்கையின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான பிரடெரிக் நோர்த் அவர்களின் வசிப்பிடமாக இருந்தது. இன்று இது அழிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் சில மீட்டர்கள் தூரத்தில் கடலலைகளின் தொடர் மோதலால் அங்குள்ள உருளைவடிவக் கிணறொன்றின் செங்கல் அடுக்குகள் படிப்படியாக வெளித்தெரியத் தொடங்கிவிட்டன. 71 வயதான கிராமவாசியான டீ.எம்.க்ரூஸின் கூற்றுப்படி கரையோர மண்ணரிப்பானது கடந்த மூன்று அல்லது நான்கே வருடங்களில் இக்கிணற்றைச் சுற்றியுள்ள மண்ணை உட்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடலிலிருந்து கரைக்கு மீன் கொண்டுவரும் கரையோர மீனவரான எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். தற்போது இக்கிணற்றில் குடிப்பதற்கு முடியாத நிலையில், நீரில் உப்பு கலந்திருப்பதாக அவர் கூறுகிறார். என்ன காரணத்தினால் கடலரிப்பு மற்றும் உப்பேற்றம் போன்றவை நிகழ்கின்றன என்ற எந்தவித அனுமானமும் அவருக்கு இல்லை.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர்மட்ட உயர்வு கடலரிப்பு வீதத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, கரையோர கட்டுமானங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கையில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் போன்றவற்றின் விளைவுகள் கூட இவ்வாறான கடலரிப்புக்கு காரணமாக அமையலாம். கடலரிப்பின் விளைவால் பெரும்பாலான வடமேல் கரையோரங்களில் உள்ள நிலப்பரப்புக்கள் படிப்படியாக கடலினால் உள்வாங்கப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக முத்தரிப்புத்துறை மற்றும் சிலாவத்துறைக்கு இடைப்பட்ட பகுதிகளை குறிப்பிடலாம். “மக்கள் நடந்துசெல்கின்ற இடங்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டன” என்கிறார் க்ரூஸ். “எதிர்காலததில் எது என்ன விதத்தில் நடக்கும் என்பது இறைவனுக்கே தெரியும்.” என்றும் க்ரூஸ் கூறுகிறார்.
எஸ்.ஏ.பெர்னாண்டோ இக்கிணற்றிலிருந்து நன்னீரை குடிநீராகப் பயன்படுத்தி வந்தவர். ஆனால், தற்போது இக்கிணற்று நீரில் குடிப்பதற்கு முடியாத நிலையில் உப்பு கலந்திருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் காலநிலையின் உக்கிரம் உப்புப் படிவாக்கம் மற்றும் கடலரிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இருந்தும் பெர்னாண்டோ போன்றவர்களிடம் இவ்வுலகளாவிய காலநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. Photo: ஐசாக் நிக்கோ
தமிழ் தாயகத்தை கடல் உள்வாங்கிக்கொள்ளும் எதிர்வுகூறல் தமிழின் புராண வரலாற்றை எதிரொலிக்கிறது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் குமரிக் கண்டம் – தமிழர்கள் இன்று வாழ்கின்ற நிலங்களுக்கு எந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தார்களோ அந்தப் புராதன நிலத் துண்டம் – முற்றாகக் கடல் உள்வாங்கிக்கொள்ள முன்பு அந்நிலம் ஒரு பெரும் பிரளயம் அல்லது பிரளயங்களின் தொடர் போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது. இத்தொன்ம வரலாறு எமக்கு வருத்தமளிக்கிறது. புத்தளம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்பிட்டியின் தீவுகள் மற்றும் ஏனைய நிலப்பகுதிகள் இன்று கடலில் மூழ்கிக்கொண்டிருக்கின்றன. யாழ். குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகளை 2100ஆம் ஆண்டளவில் முற்றாக கடல் உள்வாங்கிக்கொள்ளும் என காலநிலை விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
அண்மைய வெள்ளப்பெருக்குகளை கருத்தில் கொள்ளும்போது கடந்தகால புராணங்களில் கூறப்பட்டுள்ள பிரளயங்கள் வினோதமான தீர்க்கதரிசனமாக தோன்றுகிறது. வருடா வருடம் இயற்கை அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்படும் பொருளிழப்பில் பெரும்பகுதியை வெள்ள அனர்த்தங்களே ஏற்படுத்துகிறன. வருடாந்தம் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்ற இத்தொகை 2030ஆம் ஆண்டளவில் 338 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கானது மண்சரிவு, தொற்றுநோய்கள் போன்ற இன்னோரன்ன அபாயங்களை அதிகரிக்கச்செய்து உயிர், வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் உள்ளது.
1964ஆம் ஆண்டு வடக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிட்ட இராமேஸ்வரம் சூறாவளிக்குப் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெள்ள அனர்த்தங்கள் நிகழ்ந்ததாக தனது கவனத்தில் இல்லை என கரையோர நகரமான விடத்தல்தீவின் விவசாயக் குடும்பமொன்றின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை சத்தியசேகரன் தெரிவித்தார். ஆனால், 2020 இல் புரெவி புயல் தாக்கியபோது பல இடங்கள் வெள்ளக்காடானதோடு சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாயினர். சத்தியசேகரத்தின் வயல் நிலம் முற்றாக நீரில் மூழ்கியதோடு அவரது மூத்த சகோதரர் அவ்வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்வருடத்துக்கான விவசாயத்தை முற்றுமுழுதாக கைவிட்டதாகச் சொன்னார். நிலக்கீழ்நீர் உப்பாகியிருக்கலாம் என ஊகித்து அடுத்த வருடமும் அவர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவில்லை.
வெள்ள அனர்த்தங்களால் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகரித்துவரும் வெள்ள அனர்த்தங்களின் நிகழ்தகவுகள் மக்கள் மத்தியில் முழுவதும் பதிவுசெய்யப்படவில்லை.
நிலத்தின் மதிப்பானது அதன் நிலையமைப்பு, அங்குள்ள இயற்கை பேரழிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தள விபரம் போன்ற அளவுகோல்களில் தங்கியுள்ளது என மன்னார் தீவைச் சேர்ந்த சொத்து மதிப்பீட்டாளர் செபஸ்டியன்பிள்ளை சத்யதீபன் அறிந்திருந்தார். இருப்பினும், கட்டுமானத்தை ஆரம்பித்து இரண்டாவது வருடத்திலேயே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு நிலத் துண்டில் குறித்த கட்டுமானத்தை அவர் இன்னும் தொடர்கிறார். “வெள்ளம் வடிந்ததும் நிலம் காய்ந்துவிடும்” என்றும் “அது ஒரு பெரும் பிரச்சினையல்ல” என்றும் அவர் சொல்கிறார்.
எனினும், குன்சன் மற்றும் எடிசன் மேரிநாதன் போன்ற சூழலியல் செயற்பாட்டாளர்கள் மன்னாரில் வாழும் மக்கள் தீவிர காலநிலையின் நெருக்கடி நிலை குறித்து போதிய விழிப்புணர்வின்றி அசிரத்தையாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர். கனமழையின்போது மன்னார் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் வீதியின் நீர் மட்டத்தை குன்சன் கண்காணித்து வருகிறார். இந்த வீதி விரைவில் நீரில் மூழ்கும் எனவும், அது மன்னாரை அத்தியாவசியப் பொருள் வழங்கலில் இருந்தும் துண்டித்துவிடுவதோடு, மக்களை அங்கிருந்து இடம்பெயரும் கட்டாயத்துக்கும் ஆளாக்கும் எனவும் எச்சரிக்கை செய்தார்.
வெம்மையும் அறுவடையும்
காலநிலை மாற்றம் இலங்கையில் வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவு மற்றும் தீவிரம் போன்றவற்றை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008 – 2018 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரட்சியால் நாட்டில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 2014, 2016 -17 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வரட்சியில் வெப்ப வலயமான வட மாகாணம் அசாதாரணமான பாதிப்பை எதிர்கொண்டது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் வரட்சி போன்ற காலநிலை காரணமாக இலங்கையில் பத்து மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி அவதிக்குள்ளாயினர். குறிப்பாக யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட 150,000 பேரில் 85 சதவீதமானோர் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடன் நாட்டின் விவசாய விஞ்ஞான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கையானது வெப்ப வலயங்கள் உட்பட அனைத்துப் பிரதேசங்களிலும் சீரான மழைவீழ்ச்சியை பெறும் ஒரு நாடு எனத் தெரிவிக்கிறார். அழுத்தம் மிக்க காலநிலை கொண்ட சூழலில் மோசமான நிலையில் உள்ள நீர் “மேலாண்மை” மற்றும் வளங்களின் வினைத்திறனான பரிபாலனத்தின் தேவை ஆகியன இன்னும் அழுத்தமான பிரச்சினையாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார். மேலும், “அதிக நீரை நுகரும்” சோள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டத்தை விமர்சித்தவண்ணம், உள்ளூர் சாகுபடிகள் பற்றிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு விதைத்தலுக்கான பயிர்கள் மறுபரிசீலனை செய்யப்படல் வேண்டும் என்றும், நிலத்தின் தரைத்தோற்றம், தட்பவெப்பநிலை மற்றும் வளங்களின் கிடைப்பனவுகளுக்கு ஏற்புடைய விதத்தில் விவசாயப் பயிர்களை தேர்வுசெய்வது அவசியம் எனவும் அவர் வாதிடுகிறார்.
பசுமைப் புரட்சி காலத்தில், அதிக விளைச்சலைத் தரும் நெல் மற்றும் பிற பயிர்களால் பதிலீடு செய்யப்பட முன்னர் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தில் முக்கிய இடம் வகித்துவந்த, மிகக் குறைந்தளவு நீரின் கிடைப்பனவிலும் செழிப்பாக வளரக்கூடிய, தீவிர காலநிலையின் தாங்குதிறன் மிக்க பயிரான ‘தினை’யை தனது பாட்டன் காலத்து மக்கள் உண்டு பிழைத்த கதைகளை அவர் நினைவுகூர்ந்தார். புராணங்களில் முருகப் பெருமானின் மனைவி வள்ளி, தினை வயல்களுக்கு காவலரணாக இருந்ததை குறிப்பிட்டு, “கதிர்காமம் முருகன் கோவிலில் பிரசாதமாக தினை வழங்கப்படுவது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது” என்றும் ஸ்ரீஸ்கந்தராஜா கூறினார்.
காலநிலை சமநிலையின்மையால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பானது அதிகரித்த வரட்சி மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தெற்காசியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வட பகுதி இதனால் அதிக தாக்கத்துக்கு உள்ளாகும் – சில எதிர்வுகூறல்களுக்கமைய இந்நூற்றாண்டின் முடிவில் 35 பாகை செல்சியஸை அண்மித்த சராசரி வெப்பநிலையை இப்பிராந்தியம் எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டில் மட்டும் வெப்ப அலைகள் வட மாகாணத்தில் குறைந்தபட்சம் ஏழு பேரையேனும் கொன்றிருக்கும். தீவிர வெப்பநிலை அதிகரிப்பானது முறையான குளிரூட்டல் வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் வேலை செய்யும்இ வடக்கிலுள்ள பல்லாயிரக்கணான விவசாயிகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்.
உயர் வெப்பநிலையால் விவசாய விளைச்சல்களும் பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக இலங்கையின் முக்கிய சாகுபடியான நெற்பயிர் வெப்பநிலைக்கு உணர்திறன் கூடியது. வெப்பநிலை அதிகரிப்பால் விளைச்சலில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, குடும்ப மற்றும் தேசிய உணவு கிடைப்பனவை அச்சுறுத்துவதோடு, குறிப்பிடத்தக்களவு வறுமை வீதத்தையும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. மதிப்பீடொன்றின்படி தீவிர காலநிலை மாற்றம் இல்லாத நிலைமையில் ஏற்படக்கூடிய வறுமை வீத அதிகரிப்பை விட இது 12 இலிருந்து 26 சதவீதம் அதிகமாகும். சில இடங்களில் வெப்பநிலை அதிகரிப்போடு கூடிய விளைச்சல் வீழ்ச்சி ஏற்கனவே நலிவு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வளைபாடு பிரதேசத்தில் யுத்தத்தில் கணவர்களை இழந்த பெண்கள் மேற்கொள்ளும் கடற்பாசி விவசாயத்தில் 2024ஆம் ஆண்டின் வெப்ப அலைகளின் தாக்கத்தால் 80 சதவீதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
2024 இல் வெப்ப அலைகளாலும் 2022 இல் குளிராலும் கால்நடைகளை இழந்த இலங்கையின் வடக்கைச் சேர்ந்த கால்நடை விவசாயி. காலநிலை நெருக்கடிக்கு மத்தியில், விவசாய வாழ்வாதாரங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கணிக்க முடியாத வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. Photo: ஐசாக் நிக்கோ
அதிக வெப்பநிலையானது உணவூட்டல் மற்றும் வளர்சிதை மாற்ற (உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கும், வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், உடலில் உள்ள அனைத்து வேதிவினைகளின் தொகுப்பாகும்) விகிதங்களை துரிதப்படுத்தும். ஆகையால், இதன்மூலம் ஒரு சில குறிப்பிட்ட பீடைகளின் குடித்தொகை பரம்பலின் பெருக்கம் அதிகரிப்பதினூடு பயிர்ச்சேத வீதமும் அதிகரிக்கும். அதிகரித்த வெப்பத்துடன் கூடிய மழைப்பொழிவு ஆசியாவின் மிகவும் அழிவுகரமான நெல் பூச்சிகளில் ஒன்றான பழுப்பு நிற தத்தியின் திடீர் பரவலுக்கு வழிவகுக்கும். வெப்பநிலை உயர்வு மந்தைகளையும் பாதிக்கும் – கடுமையான வெயில் காலங்களில் வட பகுதி விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இழந்துள்ளனர் மற்றும் அனுமானிக்க முடியாத அழிவுகரமான வெப்பநிலை ஏற்ற இறக்கங்களும்கூட இவ்விழப்புக்கள் ஏற்படக் காரணமாக அமையலாம். டிசம்பர் 2022 இல் மாண்டூஸ் சூறாவளியின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிகையான குளிரின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன.
சிலவேளைகளில் மிதமான காலநிலை இருந்தாலும்கூட அதன் கணிக்கமுடியாத தன்மை மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கும். “நாங்கள் காற்றை எதிர்பார்க்கும்போது, அது வீசாது. நாங்கள் மழையை எதிர்பார்க்கும்போது, அது பெய்யாது. நாங்கள் முன்பு பெற்ற விளைச்சலை இனிப் பெற இயலாது” என மன்னார் மாவட்டம், இலுப்பைக் கடவையைச் சேர்ந்த விவசாயியொருவரின் மனைவி மகாதேவி குறைகூறினார். இவ்வாறான எதிர்வுகூறமுடியாத தன்மை கூட மீனவர்களைப் பாதிக்கும். “முன்பெல்லாம் எமது மூதாதையர்கள் ஒரு குறித்த நாளில் மழை பெய்யும் என்று சொன்னால், அது நடக்கும். இன்று நிலைமை அப்படியல்ல” என அந்தோனியார்புரம் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கனகசபை குகசிரி கூறினார். இளைஞர்களின் கைகளிலுள்ள திறன்பேசிகள் வாயிலாக குகசிரிக்கு வானிலை தொடர்பான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும், வானிலை எதிர்வுகூறல்கள் எல்லா வேளைகளிலும் துல்லியமாக இருக்காது என அவர் அறிந்திருக்கிறார். “அவர்கள் இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென்று சொன்னார்கள், ஆனால் அப்படி இல்லை” என்று சலித்துக்கொண்டார்.
இலங்கை, மன்னார் மாவட்டத்தின் ஓய்வுபெற்ற மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எஸ் மிரன்டா, ஓர் சேற்று நண்டோடு. இலங்கையின் நீர்நிலைகளில் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சேற்று நண்டுகளின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான காரணங்களை நிர்ணயிக்கும் வகையில் எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. Photo: ஐசாக் நிக்கோ
நிச்சயமற்ற வானிலையைத் தவிர, காலநிலை சமனிலையின்மை குறித்து மீனவர்கள் வேறெந்த சந்தர்ப்பத்திலும் விசனம் தெரிவிக்கவில்லை. அது கடல்சார் சுற்றுச் சூழலின் அமைப்பில் ஏற்படுத்தவல்ல தாக்கங்களை அவதானித்தல், அளவிடல் அல்லது விளங்கிக்கொள்ளல் எளிதல்ல. மிதமிஞ்சிய மீன்பிடி, அழிவுகரமான செயன்முறைகளான டைனமைட் மீன்பிடி, இழுவை வலை மீன்பிடிப்பு, அடிவலை மீன்பிடி போன்ற செயற்பாடுகளால் உள்நாட்டு நீரினங்களின் பல்வகைமை வீழ்ச்சி போன்ற காலநிலைச் சமநிலையின்மையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிகரான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. யாழ். நகரின் குருநகரில் உள்ள மீனவர்கள் தங்களது நீர்நிலைகளில் முன்பைவிட மீன்களின் அளவும், அதன் பல்வகைமை குறைந்துள்ளதாகவும், ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தமான ஏற்றுமதி பொருளாக இருந்த சிங்க இறால்கள் போன்ற சில மீனினங்கள் அங்கு முற்றாக அற்றுப்போயுள்ளதாகவும் குறிப்பிட்டனர். காலநிலை சமநிலையின்மையால் அதிகரிக்கும் நிகழ்தகவுடைய நீரின் வெப்பநிலை அல்லது அதன் உப்புத்தன்மையால் நீர்வாழ் விலங்குகளின் இனப்பெருக்க இயல்புகள் பாதிக்கப்படலாம் என்பது தெரிந்திருந்தும், என்னோடு பேசிய சிலர் இம்மாற்றங்களுக்கு மிகை மீன்பிடி மற்றும் அடிவலை மீன்பிடியையே காரணம் காட்டினர். மற்றுமொரு அதிக இலாபம் தரும் ஏற்றுமதி உயிரினமான சேற்று நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்து வருவதாக மன்னார் மாவட்டத்திற்கான மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.மிராண்டா சுட்டிக்காட்டினார். ஆனால், “அதற்கான காரணங்கள் பற்றி அறிந்துகொள்ள போதிய ஆய்வுகள் எம்மிடம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
காலநிலை சமநிலையின்மையின் பாதிப்புக்கள் பற்றி உய்த்தறிய மீனவர்கள் சிரமப்படுகின்றனர். “ஆனால் அப்பாதிப்புகள் கடுமையானவை” என பவளப்பாறை சூழலியலாளர், இலாப நோக்கற்ற உள்நாட்டு கடல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இணை நிறுவனர் நிஷான் பெரேரா வலியுறுத்தினார். குறிப்பாக ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது, பவள வெளுப்பு மற்றும் பவள இறப்புக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இலங்கையின் கரையோரங்களில் முக்கிய பவள வெளுப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அதேசமயம், கிழக்குக் கரையோரமானது 2019 இல் ஒரு சிறிய வெளுப்பு நிகழ்வை எதிர்கொண்டது. பவள வெளுப்பு நிகழ்வுகள் முருகைக் கற்பாறைகளில் வாழும் உயிரினங்களை அழிப்பதோடு, சில மீனினங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கீழ்நிலைகளில் அவற்றை உண்ணும் உயிரினங்களையும் இல்லாதொழிக்கும். 2023 இல் ஏற்பட்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு திருகோணமலையை அண்மித்த பகுதிகளில் ஆய்வாளர்கள் பவள வெழுப்பை அவதானித்தனர். அத்தோடு, மன்னாரிலும் வெளுப்பு நிகழ்வுகள் ஏற்படலாம் என அதிகாரசபைகள் அஞ்சின.
25 ஆண்டுகளாக அலங்கார மீன்களைப் பிடித்து வரும் முஹம்மது சதாத், பவளப்பாறை வெளுப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை அவதானித்ததாக கூறினார். திருகோணமலையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து ஏற்றுமதிக்காக கடல்வாழ் உயிரினங்களை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு கரையோரமாக மட்டக்களப்பு, கல்பிட்டி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்கு அவர் பயணிப்பவர். பவளவெழுப்பின்போது ஏற்படும் வெளிறலைப்போல முருகைக்கற் பாறைகள் இறந்து வெண்மையாக மாறும்போது தமது நடத்தைகள் மூலம் பவளப்பாறைகளின் ஆரோக்கியத்தை அளவிட்டுக் காட்டும் கருவியாகவும் மீன் இனங்கள் ஆபத்தில் உள்ளமை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை வெளிப்படுத்தும் தன்மையுமுள்ளதாகவும் கருதப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சி மீன்களில் சிலவற்றை அவதானித்ததாக சாதாத் விளக்கிக் கூறினார். தான் அவதானித்த பவள இறப்புக்கு 2004ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், தொழில்முறை மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைந்த வெப்பநிலை அதிகரிப்பு போன்றவையே காரணம் என சாதாத் கருதுகிறார். நான் சந்தித்தவர்களில் அலங்கார மீன்பிடி வியாபாரத்தில் ஈடுபடும் சதாத் போன்ற வெகு சிலரே மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு வெப்பநிலை மாற்றத்தை காரணமாகக் கூறினர். “ஏனைய மீனவர்கள் பிரச்சினைக்கான புள்ளிகளை உரிய முறையில் இணைப்பதாகத் தோன்றவில்லை” என பெரேரா அவர்கள் தெரிவித்தார்.
அலங்கார மீன்களை பிடித்து வாழ்வாதாரம் செய்யும் முகமது சதாத் ஓர் தாமரைக்காத்தான் மீனுடன். இலங்கையில் உள்ள அலங்கார மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் கடல் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறை வெளுப்பதை முதலில் கவனித்துள்ளனர். Photo: ஐசாக் நிக்கோ
மோசமான தாக்கம்: தயாரற்ற நிலை
2022 இல் உச்சம் தொட்ட, இலங்கை எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வீழ்ச்சி, நாட்டின் காலநிலை நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் திறனை குறைத்துள்ளது. ஒப்பீட்டளவில் வடமேல் மாகாணம் வளமானதாகக் காணப்பட்டாலும் காலநிலை அசாதாரண நிலைமையினால் அதிகளவு பாதிப்படையும் பத்து பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் வளம் குன்றிய வட மாகாணத்தில் உள்ளன. பாதிப்படையும் அபாயம் உள்ள முதல் பத்து மாவட்டங்களில் இடம்பெறும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நாட்டின் வறிய மாவட்டங்களுமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உட்பட தமிழ் பேசுபவர்கள் அதிகம் வாழும் பல்வேறு பகுதிகள், 2009 இல் பாரிய அட்டூழியங்கள் மற்றும் சிலரது வாதத்தின்படி இனப்படுகொலையுடன் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போதான கடுமையான சண்டை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. இருந்தும், போரினால் சோர்வடைந்த தமிழ் மக்கள் இன்றும் தொடர்ச்சியான வன்முறைகளையும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டவண்ணமுள்ளனர். உள்ளூர் வளங்களின் பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட சேதம் போன்றவற்றோடு சுரண்டல், சந்தர்ப்பவாதம், மற்றும் போருக்குப் பின்னான சுற்றுச் சூழலை அழிவுக்குள்ளாக்கும் மோசமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் விளைவால் இன்னும் மோசமான நிலையையே எட்டியுள்ளது.
போருக்குப் பின் பவளப் பாறைகள், அதன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் எளிய படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை சேதப்படுத்தும் வகையில் இந்தியாவின் இயந்திரமயமாக்கப்பட்ட கீழ்-விசைப்படகுகள் வட கரையோரத்தின் கடற்படுக்கையின் அடிவரை தங்கள் வலைகளை இழுத்துவந்தன. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்பரப்பில் கீழ்-விசைப்படகுகள் தடைசெய்யப்பட்டபோதும், இந்த வழக்கங்களும் டைனமைட் மீன்பிடித்தல் போன்ற பிற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. அதேபோல உள்ளூர் நிலப்பரப்பை மீளமுடியாத அளவில் மாற்றியமைக்கும் அச்சுறுத்தல்மிக்க அபிவிருத்திச் செயற்பாடுகளை தனியார் மண்ணகழ்வு நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் மேற்கொண்டுவருகின்றன. பல்லுயிர் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தின் நிலைபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்ற நிலையில், இந்திய கூட்டு வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் கடந்த ஆண்டு பூநகரி மற்றும் மன்னாரில் பல மில்லியன் டாலர் செலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அரசிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அத்திட்டத்தின் விலை நிர்ணயங்கள் மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி பகுப்பாய்ந்த அரச செயற்றிட்ட ஆய்வாளர் ரோஹித் பெதியகொட அதனை “நாட்டை வறுமைக்குத் தள்ளும் வீண் மோசடி” என அழைக்கிறார்.
“இது அனைத்தும் பணம் சம்பந்தப்பட்டது” என விடத்தல்தீவு சூழலியலாளர் எடிசன் மேரிநாதன் கூறுகிறார். இயற்கை பற்றி அறிந்துகொள்வதற்காக மேரிநாதன் தனது இளைய மகன்களை அடிக்கடி கண்டல் நிலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். விடத்தல்தீவு இயற்கை காப்பகம் தொடர்பான சில உறுப்புரைகளை மாற்றியமைத்து அக்காப்பாகத்தின் வளமான சதுப்புநிலங்கள் தனியார் மீன்வளர்ப்பு வணிகங்களால் சுரண்டப்படக்கூடிய வகையில் மீள் வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இக்காப்பகமானது ஒரு முக்கிய கரிமத் தேக்கம் மட்டுமல்லாது, பல்வேறு நீர்வாழ் இனங்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவான கரையோர பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. இலங்கை அரசின் இந்த நகர்வானது இலங்கையின் மூன்றாவது முக்கிய கடலோரப் பாதுகாப்பு வலயத்தை அழிவுக்குள்ளாக்கக் கூடியது என்றும் இதுபோன்ற ஏனைய வலயங்களுக்கு அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஈரநிலங்களையும் கரிமத் தேக்கங்களையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருக்கின்ற வாக்குறுதியை “காலநிலை பாசாங்கு நடவடிக்கை” என இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ‘பேர்ல் ப்ரொடெக்டர்ஸ்’ (Pearl Protectors) எனும் கடலோர பாதுகாப்பு அமைப்பு விளிக்கின்றது. “ஒட்டுமொத்த சூழலியல் மற்றும் பாதுகாப்புச் சமூகமும் இந்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டிய வண்ணம் உள்ளது. பெருமளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கெடுபிடிகளுக்குள் இப்பிரச்சினை இலகுவாக நழுவிப்போய்விடுகிறது” என லங்கா சுற்றாடல் நிதியத்தின் வினோத் மல்வத்தை அவர்கள் கூறினார்.
தமிழர் தாயகத்தில் அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் நிலவும் சவால்களின் உடனடித் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு முகம் கொடுக்கப்போகும் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றைக் கருத்தில் கொள்கையில், மக்கள் மத்தியில் காலநிலை நெருக்கடி நிலை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவென்றே கணிக்கலாம். மீன்பிடிக் குடில்களும், நடைபாதைகளும் ஏற்கனவே கடலால் விழுங்கப்பட்ட நிலையிலும் அந்தோனியார்புர மீனவர்களுக்கு அது பற்றிக் கருத்தில்கொள்வதற்கான அவகாசமோ உணர்வு ரீதியான புரிதலோ இல்லை. “ஓரிரண்டு அடி நிலம் கடலால் அரித்துச் செல்லப்படுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது எடுக்கும். இதுபற்றி எதிர்கால சந்ததியினரே சிந்திக்க வேண்டும்.” என நாளூதியமே ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கும் குகசிரி கூறினார்.
மன்னாரில் உள்ள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன், இலங்கையின் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்க தேவையான வளங்கள், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து முறையிட்டார். Photo: ஐசாக் நிக்கோ
ஊடகவியலாளர்கள்கூட அடிப்படை அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர வினைத்திறன்மிக்க வேறெந்த செயற்பாடுகளையும் செய்யத் தலைப்படுவதில்லை. மூன்று தமிழ் செய்தி நாளிதழ்களில் இடம்பெற்ற நீர் பாதுகாப்பு குறித்த ஆய்வொன்றில் 80 சதவீதமான நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை வழங்குகின்றனவே தவிர நிகழ்ச்சி நிரல் அமைத்தல், கலந்துரையாடல்களை உருவாக்குதல் அல்லது சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற விடயங்களை தங்கள் ஊடக செயற்பாட்டில் உள்ளடக்குவதில்லை. போதியளவு ஆய்வுகளின்மை இப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கின்றது. “பல்கலைக்கழக ஆய்வுத் தேவைக்காக மட்டுமே கிட்டத்தட்ட சுமார் 25 ஆண்டுகள் வரையான கால நீட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் வெறும் ஆறு மாதகால குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன” என மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உதயன் குறிப்பிட்டார்.
“நிலைபேறான ஏற்பாடுகளுக்கு நீண்டகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் உள்ளீடு அவசியம்” என்ற கருத்தை பவளப்பாறை சூழலியல் வல்லுனர் நிஷான் பெரேரா முன்வைத்தார். மீன்களின் இடம்பெயர்வு மாற்றங்கள், முட்டையிடும் இயல்பின் தளம்பல்கள் போன்ற காலநிலை மாற்றத்தின் படிப்படியான தாக்கங்களை கண்காணிப்பதற்கு வெறும் அடிப்படை ஆய்வுகள் மற்றும் குறுகிய கால திட்ட அடிப்படையிலான ஆராய்ச்சிகளுக்குப் பதிலாக நீண்டகால தொடர்-நேர தரவுகள் நமக்குத் தேவை. ஆனால் அவசியமான தரவு சேகரிப்பு வளங்கள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் அவ்வாறான ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டுள்ளன.
“மழை அளவீட்டுக் கருவிகள் போன்ற உபகரணங்கள் ஓரிரண்டு நகரங்களிலேயே கிடைக்கக்கூடியதாக இருக்கும். ஆனாலும் அவை எல்லா பகுதிகளிலும் இல்லை” எனவும் உதயன் குறிப்பிட்டார். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் “போதுமான வளங்கள் இல்லாத நிலையில் பெரிய பகுதிகளை நிர்வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சில சிற்றலுவலகங்களில் அடிப்படை தளபாட வசதிகள் கூட கிடையாது. மீன்வளத் துறையைச் சேர்ந்த மீன்வள ஆய்வாளர்களிடம் உள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருக்கலாம் அல்லது அவர்களிடம் எரிபொருளுக்கான போதிய நிதிவசதிகூட இல்லாமலிருக்கலாம். ஆதலால், அவர்களுடைய கடமையை ஏற்புடைய விதத்தில் நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள சிரமம் உண்மையிலேயே ஒரு சவாலான விடயம்தான் என்கிறார் பெரேரா.
இத்தரவுப் பற்றாக்குறை, நிறுவனங்களின் திறன்குறைபாடு, ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான பின்னூட்ட வழிமுறைகள் ஆகிய பல்வேறு காரணிகளால் ஒன்றுசேர்ந்தது. உதயனின் குறிப்புப்படி இலங்கை முழுவதுமுள்ள வானிலை ஆய்வு மற்றும் விவசாய திணைக்களங்களுக்கிடையில் ஓர் சிறிய ஒருங்கிணைவு உள்ளது. பெரும்பாலும் நிர்வாக மொழியாக சிங்களத்தைப் பயன்படுத்தும் மத்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிராந்தியங்களுக்கும் இடையிலிருக்கின்ற தொடர்பாடல் தடைகள் மற்றும் மோதல் வரலாறுகள் போன்றவை தரவுகளின் பரிமாற்றத்துக்கு இடையூறாக இருக்கின்றது. காலநிலை சமநிலையின்மையைத் தணிக்கும் முயற்சிகளுக்காக மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மத்திய அரசின் நடவடிக்கைகளால் குழப்பப்பட்டிருக்கலாம். ஆனால், காலநிலை மாற்றங்கள் குறித்து சிரத்தைக்கொள்ளவேண்டிய மாவட்ட நிலை அதிகாரிகள், மாகாணங்களின் தேவைகள் மற்றும் அவற்றுக்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பான தொடர்பாடல்களில் நலிவான கீழிருந்து மேலான பின்னூட்ட வழிமுறைகளில் தங்கியுள்ளனர். அதேவேளை, “உயர் மட்டங்களில் காலந்துரையாடப்படுகின்ற விடயங்கள், உயர் மட்டங்களில் அவ்வாறான கலந்துரையாடல்கள் நிகழுமிடத்து, அவற்றில் சீர்தூக்கப்படும் அம்சங்கள் நிச்சயமாக அடிமட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு அதே முறையில் தொடர்பாடப்படுவதில்லை” என்று ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிடுகிறார்.
இலங்கையில் சர்வதேச சுற்றாடல் அமைப்புக்களின் வெற்றிடங்களும் வளங்களின் கிடைப்பனவை மட்டுப்படுத்துகின்றன. நாங்கள் உலகின் முக்கியமான 36 பல்லுயிர் மையங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், இங்கே உலக வனவிலங்கு நிதியம் (WWF) இல்லை. கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் (Conservation International) இல்லை. நேச்சர் கணசர்வென்ஸி (Nature Conservancy) இல்லை என்கிறார் மல்வத்தை. “இங்கே ஓர் கருந்துளை இருப்பதுபோல இருக்கிறது.” போர், இலங்கையில் சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதில் உள்ள சிரமங்கள், சர்வதேசத்தின் இலங்கை மீதான கவனத்தில் அரசுக்குள்ள நீண்டநாள் வெறுப்புணர்வு போன்றவற்றையே கருந்துளை என மல்வத்தை அவர்கள் விபரிக்கிறார்.
இயற்கையும் தேசமும்
“என்னைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் தம்முடைய நிலத்துடன் கொண்டிருக்கும் உறவு” என யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான மகேந்திரன் திருவரங்கம் கூறுகிறார். தமிழ் கவி புதுவை ரத்னதுரை அவர்களின் புகழ்பெற்ற தேசியவாத கவிதையான ‘மண்’ஐ அவர் மேற்கோளிடுகிறார்.
மண்
நிலமிழந்து போனால்,
பலமிழந்து போகும்.
பலமிழந்து போனால்,
இனம் அழிந்து போகும்.
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக்
கற்றுக் கொள்!
கடந்த காலங்களில் தமிழர்களுக்கும் இந்த மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு “தமிழீழ தாயகமே புலிகளின் வேட்கை” போன்ற விடுதலைப் புலிகளின் பிரபல கோஷங்களினூடாகவும் “இந்த நிலம் எங்கள் நிலம்’ மற்றும் வடகிழக்கின் மரங்கள், பூக்கள், மேய்ச்சல் நிலங்கள், ஏரிகள் மற்றும் பனை மரங்கள் அணிவகுத்த கடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘பசுமை வெளிகள்’ போன்ற தேசியவாத பாடல்கள் போன்றவற்றால் பகிரங்கமாக கொண்டாடப்பட்டது.
“எங்கள் தாயகமானது எங்கள் உயிர், எங்கள் உதிரம், எங்கள் உடலுடன் ஒன்றியது” என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் என்னிடம் கூறினார். ஆனால், தமிழர்களுக்கும் அவர்களின் தாயகத்திற்கும் இடையில் இவ்வாறான பிணைப்பு இருந்தபோதிலும், காலநிலை நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வு தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய இடத்தைப் பெறவில்லை.
“நாங்கள் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் நிறைய மரங்கள் நட வேண்டும். சூழல் மாசை குறைக்க நாங்கள் வழிமுறைகளை கண்டடைய வேண்டும் போன்ற சொற்றொடர்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், காலநிலை மாற்றம் பற்றிய கலந்துரையாடல்களில் மக்கள் ஈடுபடுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்கிறார் திருவரங்கன். வாழ்வாதாரம் மற்றும் தொழில்வாய்ப்பு போன்றவை குறித்து அவரது கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருந்தாலும், காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களை மேற்கொண்ட சந்தர்ப்பங்கள் குறித்து அவரால் நினைவுகூர முடியவில்லை என இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் நிலத்தை மையப்படுத்தியதாகவும் விவசாயமும் மீன்பிடியும் அத்தேர்தல் தொகுதியின் மிக முக்கியமான தொழில்துறைகளாகவும் இருக்கின்ற வேளையில், சமீபமான எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் குறித்த விடயங்கள் தமிழ் தேசியத்தின் மேலாதிக்க சிந்தனைகளில் எந்தவித செல்வாக்கும் செலுத்தப்போவதாக தான் காணவில்லை எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் நிறுவனர் பி.ஐங்கரநேசன் பேசுகையில், இலங்கையில் சுற்றுச்சூழல் தமிழ் தேசியவாதத்தின் முக்கியமான பகுதி எனவும் அது தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். Photo: ஐசாக் நிக்கோ
இலங்கையின் முதல் பசுமைக் கட்சியான தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஸ்தாபகரின் பார்வை வேறாக இருந்தது. தமிழ் தேசியவாதத்தில் சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் எப்போதும் பொதிந்துள்ளன என்று தான் நம்புவதாக பீ. ஐங்கரநேசன் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஓர் சுற்றுச் சூழல் அலகு இருந்ததாகவும், அதன் தலைவர் பிரபாகரன் இயற்கையை தன் நண்பன் என மேற்கோளிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “மொழி, கலாசாரம், சுற்றுச் சூழல் – தமிழ் தேசியம் இம்மூன்றாலும் ஒருசேரக் கட்டமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள மக்கள் கோதுமையை தங்கள் பிரதான உணவாக உட்கொள்ளும்வேளை தமிழர்கள் அரிசியையே தங்கள் பிரதான உணவாகப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் அது எமது காலநிலையில் இயல்பாகவே வளரக்கூடியது” என்கிறார் ஐங்கரநேசன். உணவைப்போலவே மொழியும் சூழலின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சங்க கால தமிழ் இலக்கியம் ஐந்து வெவ்வேறு திணைகளை தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது – குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்)இ பாலை (மணலும் மணல் சார்ந்த இடமும்)இ மற்றும் மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்). ஒவ்வொரு திணையும் தனித்துவமான தரைத்தோற்றத்தையும் புணர்தல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலைகளையும் குறித்து நிற்கின்றது. ஐங்கரநேசனைப் பொறுத்தவரை, தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாட்டில் சுற்றுச்சூழல் எத்துணை முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதற்கு இவ்வாறான குறியீடுகள் ஒரு பெரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
ஆனால், யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் உடற்கூற்றியல் முதுகலை பட்டம் பெற்ற ஐங்கரநேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் அரசியலில் மிக அரிதானவர்கள். தற்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்ற பசுமைக் கட்சிகளை தான் இனங்கண்டுகொண்டாலும், தனது வாக்காளர்கள் மத்தியில் பசுமை அரசியல் பிரசித்தம் பெறவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் ஸ்ரீதரன் ஒப்புக்கொள்கிறார். ஏனையவர்கள் மிக வெளிப்படையாக இருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரீஸ்கந்தராஜாவின் கூற்றின் பிரகாரம், அரசியல் மட்டத்தில் காலநிலை நெருக்கடி என்று வரும்போது, “அவர்கள் அது தொடர்பாக ஆனந்தமான அறியாமையில் இருக்கிறார்கள்.”
“எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரைகாலமும் இப்பிரச்சினை பற்றி இங்கு வந்து பேசிய வரலாறு இல்லை” என இலுப்பைக்கடவை விவசாயி ஒருவரின் மனைவியான மகாதேவி கூறினார். உயரடுக்கு மக்களின் குடியகல்வின் பின்னர் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றத்தின் பிறகும், தமிழ் அரசியல் மற்றும் தமிழ் உயர்மட்ட தொழில்சார் வர்க்கங்கள் ஆகியவை ஆதிக்க-சாதி சமூகத்தினரால் நிறைந்துள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் அங்கு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் வட மாகாணத்தில் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் ஆய்வாளர் அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். அழிவுகரமான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கிராமப்புற மக்களின் கடன்சுமை ஆகியவற்றை தமிழ் அரசியலால் புறக்கணிக்கப்பட்ட கிராமிய பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் என அவர் மேற்கோளிடுகிறார். “புத்திஜீவிகளும் கல்வியியலாளர்களும் கூட மீனவர்களினதும் விவசாயிகளினதும் இடர்களை நிவர்த்தி செய்ய மிகக் குறைந்தளவு பங்களிப்புக்களையே வழங்கியுள்ளனர்” என்கிறார் அவர்.
இலங்கையின் வடக்கு கரையோரத்தில் உள்ள இலுப்பைகடவையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி மகாதேவி, வெப்ப அலைகள் மற்றும் கொந்தளிப்பான வானிலை குறித்து புகார் கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களை தான் கேட்டதில்லை என்றும் கூறினார். Photo: ஐசாக் நிக்கோ
கட்டமைக்கப்பட்ட இனவாதம், வன்முறை மற்றும் நீதிவழங்கலில் உள்ள பாரபட்சங்கள் போன்றவை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் தமிழர் நிலையை பறைசாற்றும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மாகாண ஆளுகைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தம் போன்ற நீண்டகால தமிழ் அரசியல் கோரிக்கைகள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாமலே இருக்கின்றன. “மன்னாரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருக்கோணமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில எமது நிலங்கள் தினமும் பறிக்கப்பட்டுவருகின்றன” என அரசியலின் தற்போதைய உடனடி சவால்களைப் பற்றி விவரிக்கும்போது ஸ்ரீதரன் கூறினார். இந்தப் பின்னணியில் வளம் குறைந்த மற்றும் நிறுவன ரீதியில் வலுவிழந்த தமிழ்த் தலைமைகளுக்கு பருவநிலை மாற்றத்தில் ஒரு புதிய, சரியாகப் புரிந்துகொள்ளப்படாத மற்றும் அருவமான ஓர் ‘எதிரியை’ எதிர்த்துப் போராடுவதற்காக, தமது அரசியல் மூலதனத்தைச் செலவிடுவது கடினமாக இருக்கலாம்.
ஒரு காலத்தில் தமிழ் சமூகத்தின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் அவர்களின் கூட்டாளிகளாக கருதப்பட்ட மேற்கத்தேய, முன்னேறிய, தொழில்மயமான நாடுகளின் நடவடிக்கைகளாலேயே எப்படி காலநிலை நெருக்கடியின் பின்னணியில் உள்ள இடப்பெயர்வு, வன்முறை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவை தூண்டப்பட்டது என்பது மற்றொரு சிக்கல். பாதை சார்ந்திருத்தலும் பாரம்பரிய அரசியல் கூட்டாளிகளை எதிரிகளாக மறுகற்பனை செய்வதில் உள்ள சிரமமும்கூட தமிழ் பொது உரையாடல்களில் காலநிலை நெருக்கடி தொடர்பான விடயங்கள் வெளித்தெரியாமை பற்றிய விளக்கத்தை வழங்கலாம்.
பாரம்பரிய அரசியலில் ஒரு சிறு அளவு புத்தாக்கத்தை உட்புகுத்துவதன் வாயிலாக புதிய நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை அவற்றில் உள்ளடக்கத்தகுந்த அவகாசங்களை உருவாக்கலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள், அரசிறை வரும்படியின் மையப்படுத்தல் ஆகியவை தமிழ் பேசும் மக்கள் காலநிலை நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் செயன்முறைக்கு தடையாக இருக்கும். அத்தோடு, தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கான மேம்பட்ட சுயநிர்ணயம் மற்றும் சுயாட்சி ஆகிய வழிகளில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தமிழர்களின் வரலாற்றுக் கோரிக்கைகளோடு இணங்கிப்போகும்.
விவசாயம் மற்றும் மீன்பிடி தொடர்பான நிலைபேறான கொள்கை வகுத்தல்களுக்கான முன்மொழிவு மற்றும் செயல்படுத்தல்களை மேற்கொள்ள, உள்ளூர் நிலப்பரப்பு, காலநிலை, வளங்கள் கிடைக்கும் தன்மை, உணவுக் கலாச்சாரங்கள், முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் போன்ற அப்பிராந்தியம் பற்றிய பரிச்சியமும் அது தொடர்பான நெருக்கமான புரிதலும் இருப்பது அவசியம் என பருவநிலை விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். மேலும், தாம் வாழும் பிராந்தியம் பற்றிய பரிச்சியமே வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும் அதனை ஆள்வதற்கும் தமிழர்களை பொருத்தமானவர்களாக ஆக்கும் என ஐங்கரநேசன் வலியுறுத்துகிறார். “நீங்கள் தென்பகுதியில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் தலகொயா (Asian water monitor) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், அந்த விலங்கு இங்கு எங்களிடம் இல்லை. தென் பகுதியில் கித்துள் மரங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு பனை மரங்கள்தான் பரிச்சியமானவை. அவர்களிடம் சிங்கராஜ வனம் உள்ளது. ஆனால் எங்களிடம் வரண்ட காடுகளே உள்ளன.”
இலங்கையில் பிரபலமான தமிழ் அரசியலில் பசுமை அரசியல் ஒரு பகுதி அல்ல என்பதை தமிழ் தேசியவாதக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் ஒப்புக்கொண்டார். ஆனால் “எதுவும் தொடக்கத்தில் சிறியது” என்று அவர் கூறினார்.
இறுதியாக அது நிலத்துடனான தமிழின் தொடர்பாகும் – தமிழ்க் கவிதை, பாடல், அரசியல் சொல்லாட்சி, எழுத்து மற்றும் கலை ஆகியவை அத்தொடர்புக்கு ஆதாரமாக விளங்குகிறது – தமிழர்கள் தங்கள் பருவநிலைமாற்றம் குறித்த இசைவாக்க முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாடுகளில் வெற்றிபெறுவதற்கான ஒரு பெரும் ஊக்கத்தை அது வழங்கும். உண்மையில் தமிழர் அடையாளம் அவர்களது மண்ணில் வேரூன்றியிருந்தால், அதுபோலவே முக்கியமாக தமிழரின் நிலத்துடனான உறவாக தமிழ் தேசியம் இருந்தால், அந்நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தமிழ் அரசியல்வாதிகளை காலநிலை அவசரநிலை குறித்து அதிகம் குரல்கொடுப்பதற்குத் தூண்டவேண்டும்.
தமிழ் தேசியவாதிகளோ அல்லது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் நெருக்கடிநிலையின் முக்கிய பங்குதாரர்களான தமிழால் அறியப்படும் சமூகத்தினர் மட்டுமல்ல – தமிழர் தாயகமாக அறியப்பட்ட பிரதேசங்களில் காலாகாலமாக வாழ்ந்துவருகின்ற இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்களும்கூட அதில் அடக்கம் என திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் தேசியவாதத்தின் சில புறக்கணிப்புப் போக்குகளை விவரிக்கும்போது, பருவநிலை மாற்றத்தின் நெருக்கடிநிலை ஏனைய சமூகங்களைப் புறந்தள்ளி குறித்த ஒரு சமூகத்தின் ஆதிக்கத்தை முன்நிறுத்திய கதையாடலின் பகுதியாக ஆக்கப்படுவதை தவிர்ப்பது மிக அவசியம் எனவும் வகுப்பு, சாதி, இனம் மற்றும் யுத்தம் போன்றவற்றின் வழியில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் அவர் எச்சரித்தார்.
காலப்போக்கில், காலநிலை நெருக்கடிநிலையைப் புறக்கணிப்பது அல்லது நிராகரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியங்களில் காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுக்களின் வீச்சு இன்னும் பிரதான அரசியல் உரையாடல்களில் உள்வாங்கிக்கொள்ளப்படாவிடினும், கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. தமிழ் தாயகத்தில் பசுமை அரசியலின் வளர்ச்சி பற்றி மேற்கோளிட்டு பேசும்போது, “தொடக்கத்தில் எதுவுமே சிறியதாகத்தான் இருக்கும். ஆனால், அந்த சிந்தனை தோன்றும். காலப்போக்கில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ஸ்ரீதரன் நம்பிக்கையூட்டினார்.
அமித்தா அருட்பிரகாசம்
இலங்கையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஆய்வாளர், மற்றும் சுயாதீன திட்ட வரைவு பகுப்பாய்வாளர்.
இக்கட்டுரைக்கான அனுசரணை புலிட்சர் மைய மானியத்தால் வழங்கப்பட்டதோடு இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் முதலில் ஹிமால் சவுத் ஏசியன் (Himal Southasian) இதழில் வெளியிடப்பட்டது. தமிழாக்கம்: ருக்ஷானா ஷரிபுதீன்.