Photo, Tamil Guardian

உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் கணிசமானளவுக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை என்று பரவலான ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது.

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் அரசாங்கத் தலைவர்கள் அதுவரைக்குமாவது மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவதற்கு வகைசெய்வதில் அக்கறை காட்டுவதாக இல்லை.

மாகாண சபைகள் முறை இலங்கை மீது இந்தியாவினால் திணிக்கப்பட்டது என்பதே பொதுவில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் குறிப்பாக சிங்கள தேசியவாத சக்திகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை அன்றைய அரசாங்கம் உண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழர்களுக்கு பிரத்தியேகமாக எதையும் வழங்கவில்லை என்று சிங்கள மக்களுக்கு காட்டுவதற்காக இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் மாகாண சபைகளை அமைத்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வாக அதிகாரப்பரவலாக்கத்தை கோரிய வடக்கு, கிழக்கு மக்களுக்கு மாத்திரம் மாகாண சபைகளை வழங்காமல் தென்னிலங்கையிலும் மாகாண சபைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் சிங்கள மக்கள் மீது உண்மையில் அவற்றை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவே திணித்தார்.

மாகாண சபைகள் முறை 37 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், கடந்த எட்டு வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் மாகாண நிர்வாகங்கள் ஆளுநர்களின் கீழ் இயங்குவது குறித்து தென்னிலங்கை அரசியல் கட்சிகளோ அல்லது மக்களோ எந்தவிதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்டு மாகாணங்களின் நிர்வாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று தென்னிலங்கையில் அடிக்கடி வலியுறுத்துபவராக முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய விளங்குகிறார்.

கட்சி அரசியலில் இருந்து விலகிய ஜெயசூரியவின் தலைமையில் தற்போது இயங்கிவரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று கடந்த வாரமும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அரசின் ஏனைய சகல பிரதிநிதித்துவ நிறுவனங்களும் இயங்கிவருகின்ற ஒரு நேரத்தில், மாகாண சபைகளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனது  கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற ஒரு செயல் மாத்திரமல்ல, தங்களது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்களுக்கு இருக்கும் உரிமையை மீறுவதாகவும் அமைகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு மாகாண சபையிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று கூறியிருக்கிறது. இறுதியாக மாகாண சபை தேர்தல்கள் 2014ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டன.

“ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஊடாக மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவதன் மூலமாக அவை அதிகாரத்துவ கட்டுப்பாட்டு நிறுவனங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அது ஜனநாயக விரோதமானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். இந்த நிலைவரம் குறித்து ஜனநாயகத்தை மதிப்பவர்கள் சகலரும் அக்கறை செலுத்த வேண்டும்.

“அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தியினால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை விளக்க அறிக்கையின் பிரகாரம் சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் அடுத்த நான்கு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டுமானால், தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாகக் கையாளவேண்டும்.

“தொடர்ச்சியான தாமதம் மக்களின் குறிப்பாக,தேசிய பிரச்சினைகளுக்கு நீதியானதும் நிலைபேறானதுமான தீர்வு காணப்பட வேண்டும் என்று கோருபவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக அமைகிறது. தற்போதைய மாகாண சபை முறையில் உள்ள குறைபாடுகளையும் விமர்சனங்களையும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டியது முக்கியமானது என்ற போதிலும், அதைத் தேர்தல்களை பின்போடுவதற்கான ஒரு சாட்டாக பயன்படுத்தக் கூடாது.

“இந்தப் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு ஏற்கெனவே மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியான யோசனைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். தேவையானால், முறைமையை மீளாய்வு செய்வதற்கும் சிபாரிசுகளைச் செய்வதற்கும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தச் செயன்முறைகளில் எந்த ஒன்றுமே தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான மக்களின் உரிமையை தாமதிக்கக்கூடாது” என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜெயசேகர அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தைப் போன்று தேசிய சமாதானப் பேரவையும் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளினால் ஒழுங்கான முறையில் நிர்வகிக்கப்படுவதற்கு பெரும் இடையூறாக விளங்கும் ஆளுநரின் மட்டுமீறிய அதிகாரங்களைக் குறைக்கும் சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவை உபகுழுவை நியமிக்க வேண்டும் என்று கூட சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா கோரிக்கை விடுத்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யும் சாத்தியம் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவரிடமிருந்து இந்த கோரிக்கை வந்தது.

ஆனால், பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடம் இருந்து மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வருவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமரை அல்லது இந்திய இராஜதந்திரிகளைச் சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று  அவர்களை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அவற்றைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை.

விடுதலை புலிகள் 13ஆவது திருத்தத்தை எதிர்த்த காரணத்தினால், அந்த இயக்கத்தின் மீதான தங்களின் விசுவாசத்தை இன்னமும்  வெளிக்காட்டும் ஒரு அறிகுறியாக மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தம் பற்றி பேசுவதை சில தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்து வருகிறார்கள். ஆனால், மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் பட்சத்தில் அவர்களின் கட்சிகள் நிச்சயம் போட்டியிடும்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருடங்களாக பெரும்பாலான  தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த காலப் போராட்டங்களின் தியாகங்களின் நினைவுகளுடன் மக்களை பிணைத்து வைத்திருப்பதற்காக வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை எழுப்புவதைத் தவிர வேறு எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான பாதையையும் காட்ட முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள்.

அவர்களது கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் மீது வெறுப்படைந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்னிலங்கை கட்சியொன்றுக்கு இதுகாலவரையில் அளித்திராத ஆதரவை ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். தங்களுக்கு தமிழ் மக்கள் ஒரு பாடத்தை புகட்ட விரும்பியதை விளங்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் அண்மைய உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எதிராக ஆவேசமான பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் உணர்வுகளையும் உகந்த முறையில் விளங்கிக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டிருந்தால், உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் அவற்றின் செல்வாக்கை மீட்டெடுக்க முடியாமல் போயிருக்கும். ஆனால், தேசிய இனப்பிரச்சினை உட்பட போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் வேறுபட்ட முறையில் செயற்படுவதில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியதாக அரசாங்கம் நடந்துகொள்ளவில்லை.

உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தமிழர்களின் ஐக்கியம் பற்றியும் மக்களின் நலன்கள் பற்றியும் உரத்துப் பேசிய தமிழ்க் கட்சிகள் அண்மைக்காலமாக உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் எந்தளவுக்கு சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை கடைப்பிடித்தன என்பதை நாம் எல்லோரும் கண்டோம்.

தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகள் கடந்த சில நாட்களாக நிறைவேற்றிவரும் தீர்மானங்கள் மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்றதும் வெறுமனே மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்றதுமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலேயே தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டுகின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது.

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான முதலாவது வட மாகாண சபை எத்தகைய நூற்றுக்கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காலத்தைச் செலவிட்டது என்பதையும் அதனால் மாகாண சபைக்கு இருக்கக்கூடிய குறைந்தட்ச அதிகாரங்களையாவது பயன்படுத்தி மக்களுக்கு உருப்படியான எந்தச் சேவையையும் செய்யமுடியாமல் போனது என்பதையும் நன்றாக தெரிந்து கொண்ட பின்னரும் கூட தமிழ்ப்பகுதிகளின் புதிய  உள்ளூராட்சி சபைகள்  அதே பிரயோசனமில்லாத  பாதையில்  செல்லத் தொடங்கியிருக்கின்றன.

இத்தகைய பின்புலத்தில், இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் மாகாண ஆட்சிமுறையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கவனத்துக்கு உரியதாகிறது.

தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்காகவோ அல்லது மீண்டும் பதவிகளைப் பெறுவதற்காகவோ இந்த முயற்சியில் இறங்கவில்லை என்று கூறும் பெருமாள் தமிழ் கட்சிகளையும் சகல மட்டங்களிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் அபிலாசைகளில் அக்கறையுடைய புத்திஜீவிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக கூறியிருக்கிறார்.

முதற்கட்டமாக பெருமாள் தனது முன்னாள் தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) கடந்தவாரம் யாழ்பாணத்தில் கலந்தாலோசனை நடத்தினார்.

மாகாண சபைகளை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவரான பிரேமச்சந்திரனின் கட்சி தற்போது அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையுடன் செய்துகொண்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து 13ஆவது திருத்தம் தொடர்பில் அவரது தற்போதைய நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது.

அந்த உடன்படிக்கையில், “13ஆவது திருத்தம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையானதோ அல்லது இறுதியானதோ தீர்வு அல்ல” என்று கூறப்பட்டிருக்கிறது. சமஷ்டிமுறையின் அடிப்படையிலான தீர்வொன்றை நோக்கிய பயணத்தில் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் ஒரு இடைக்கால ஏற்பாடாகப் பயன்படுத்தவேண்டும் என்பது பெரும்பாலான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்துவரும் நிலையில், உடன்படிக்கையின் அந்த வாசகம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், வரதராஜப் பெருமாளை சந்தித்த பிறகு கடந்த வாரம் பிரேமச்சந்திரன்  வெளியிட்ட அறிக்கை மாகாண சபைகள் தொடர்பான அவரின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கிறது.

“தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அடுத்த நான்கு வருடங்களில் எத்தகைய பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி செய்வதுதான் அதன் தலைவர்களின் சிந்தனையாக இருக்கிறது. சர்ச்சைகளை தோற்றுவிக்கக்கூடிய பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதை தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

“தமிழ்த் தரப்புகள் ஒன்றுபட்டு உறுதியான நெருக்குதலைக் கொடுக்காவிட்டால், மாகாண சபை தேர்தல்கள் கானல் நீராகவே இருக்கும். தற்போதைய ஆட்சியாளர்களும் அதிகாரப் பகிர்வில் விருப்பம் இல்லாதவர்களே.

“இத்தகைய சூழ்நிலையில், தமிழ் மக்கள் தங்களுக்கான அதிகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அதிமுக்கியமானது.

“தமிழ் மக்களுக்கு குறைந்தபட்சம் கிடைத்திருக்கும் அதிகாரங்களை கையில் எடுப்பதன் மூலமாகவே வடக்கு, கிழக்கை பாதுகாக்க முடியும் என்பதுடன் இரு மாகாணங்களிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை ஓரவுக்காவது தடுத்து நிறுத்தமுடியும். அதிகாரங்கள் கையில் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக முன்னெடுக்கின்ற சகல நடவடிக்கைகளையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாகாண சபையும் 13ஆவது  திருத்தத்தின் மூலமான அதிகாரங்கள் மாத்திரமே தற்போது எம் கைவசம் இருக்கின்றன.

“தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரையில் மாகாண சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருவதே புத்திசாலித்தனமானது. இவை குறித்து கலந்தாலோசித்து ஒரு பொதுவான கருத்தொருமிப்பை காணவேண்டியதே இன்றைய கட்டத்தில் மிகவும் முக்கியமானது” என்று பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வரதராஜப்பெருமாளின் முயற்சி தொடர்பில் மற்றைய தமிழ்க் கட்சிகள் எத்தகைய பிரதிபலிப்பையும் இதுவரையில் வெளிக்காட்டவில்லை. அவர் தனது முயற்சி தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கவில்லை என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.

தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை, மாகாண சபைகள் இயங்கினால்தான் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் என்றில்லை. மத்திய அரசாங்கமே ஏழு மாகாணங்களிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரை, மாகாண ஆட்சிமுறை அவர்களிடம் இருந்தால் மாத்திரமே ஓரளவுக்கேனும் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகவும் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அத்துமீறல்களை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். அதனால், மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களிடம் இருந்து கிளம்பவேண்டும்.

மாகாண சபைக்கும் 13ஆவது திருத்தத்துக்கும் எதிராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழ் அரசியல்வாதிகள் பேசிவந்திருப்பதால் தமிழ் மக்களும் அவை பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால், மாகாண சபை ஆட்சிமுறை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரதராஜப்பெருமாளின் முயற்சிகளுக்கு தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகமும் ஒத்துழைப்பு கொடுத்து தற்போதைக்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் அக்கறை காட்ட வேண்டும்.

இந்தக் கட்டுரையாளர் 13ஆவது திருத்தத்தின் ஒரு இரசிகர் அல்ல. அதுவும் இல்லாத மக்கள் கூட்டமாக வடக்கு , கிழக்கு தமிழ் மக்கள் அவலப்படக்கூடாது என்பதே அக்கறையாகும்.

மாகாண சபை தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பது மாத்திரமல்ல, மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பது வடக்கு, கிழக்கில் ஒரு வெகுஜனக் கோரிக்கையாக வெளிக்கிளம்ப வேண்டும்.

வீரகத்தி தனபாலசிங்கம்