Photo, THE HINDU
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மே மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன. கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டவர்களையும் விட கூடுதல் எண்ணிக்கையானவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு போக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் கூடுதலான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் அக்கறை காட்டாமல் இருக்கவும் கூடும் என்று தோன்றுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தாங்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவது குறித்து மக்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளில் தணிவை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு குறையத் தொடங்கிவிட்டதா இல்லையா என்பதை உள்ளூராட்சி தேர்தல்கள் நிச்சயமாக வெளிக்காட்டும்.
ஆனால், தங்களது எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை காரணமாக விரக்தியடைந்திருக்கும் மக்கள் எதிர்க்கட்சிகள் பக்கமாக கணிசமானளவில் திரும்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சகல எதிர்க்கட்சிகளுமே மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நிற்பதுடன் அமைப்பு ரீதியாக நிலைகுலைந்து போயிருக்கின்றன. அதனால் தென்னிலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பாணியிலேயே மக்கள் வாக்களிக்கக்கூடிய வாய்ப்பே காணப்படுகிறது.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள். இரு மாகாணங்களிலும் பாரம்பரியமாக மக்களின் ஆதரவைக் கொண்டிருந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளைவிடவும் கூடுதல் ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பாணியிலேயே உள்ளூராட்சி தேர்தல்களிலும் அவர்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் கடற்தொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தி போட்டியிடும் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரான ஐந்து மாதகாலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அணுகுமுறைகளும் அதன் செயற்பாடுகளும் அவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்கு உள்ளூராட்சி தேர்தல்கள் உதவும் என்று நம்பலாம்.
வடக்கு தமிழ்த் தேசியவாத கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளில் இருந்து ஒழுங்கான பாடத்தை படித்துக்கொண்டதாகத் தெரியவில்லை. பிரிந்து நின்று போட்டியிட்டதால் மாத்திரமே தங்களை வடக்கில் மக்கள் பெருமளவில் ஆதரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியவாத கட்சிகள் இன்னமும் நம்புகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியவாத கட்சிகளுக்குப் பாடத்தைப் புகட்டுவதற்கு விரும்பியதாக குறிப்பிட்டிருந்தார்.
“எங்களது கட்சி உட்பட பாரம்பரிய தமிழ் தேசியவாத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பாடத்தைப் புகட்ட விரும்பினார்கள். எமது வாக்குகள் அரைவாசியாகக் குறைந்துவிட்டன. நேரப்போகின்ற ஆபத்தை உணர்ந்து விவேகமான முறையில் செயற்படத் தவறினால், அடுத்த தேர்தல் பெரிய அனர்த்தமாகவே இருக்கும். நாடாளுமன்றத்தில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்க்கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டை வலியுறுத்தியிருக்கும் பொன்னம்பலம் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கூட தமிழ்க் கட்சிகள் சிலவற்றுடன் ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முதல் தடவையாக முன்வந்திருக்கிறார். ஒரு கோட்பாட்டுப் பிடிவாதத்துடன் செயற்பட்டுவந்திருக்கும் அவர் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டணிகளை அமைப்பதற்கு இதுகாலவரையில் காட்டிவந்த தயக்கத்தை கைவிட்டிருக்கிறார்.
ஆனால், அவரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற சிறிய தமிழ்க் கட்சிகள் முதலில் வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் மாத்திரமே அவை இறுதியில் வேறு வழியின்றி அவரிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. அதனால் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்திருப்பதாக அவர்கள் செய்திருக்கும் அறிவிப்பு நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போன்ற வேறு அணிகளும் கூட்டணிகளை விஸ்தரித்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் பயனளிக்கவில்லை. கூட்டணிகளில் சேருவதற்கு முன்வரும் தமிழ்க் கட்சிகள் சிலவற்றில் தலைவரையும் பொதுச் செயலாளரையும் தவிர்த்துப் பார்த்தால் ஒரு முச்சக்கரவண்டியில் அல்லது சிறிய வானில் ஏற்றிச் செல்லக்கூடிய எண்ணிக்கையிலேயே அவற்றின் உறுப்பினர்கள் இருக்கவும் கூடும். அதனால் அவற்றின் வாக்கு வங்கியின் இலட்சணத்தைப் புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இராது. அந்தக் கட்சிகள் இன்றைய அரசியல் அரங்கில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்கு மல்லுக்கடடுகின்றன.
இலங்கை தமிழரசு கட்சி சகல உள்ளூராட்சி சபைகளிலும் தனியாகவே போட்டியிடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகத்தை அமைப்பதில் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்துகொள்வது என்ற நிலைப்பாட்டில் அந்தக் கட்சி இருக்கிறது. எந்தவொரு கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு உள்ளூராட்சி தேர்தல் முறை அனுமதிக்காது என்று கூறி தமிழரசு கட்சி அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது.
தற்போது தமிழரசு கட்சி அதன் பதில் பொதுச் செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால், வடக்கில் களத்தில் நிற்கும் கூட்டணிகளுக்கு தேசிய மக்கள் சக்தி காலூன்ற அனுமதிக்கக்கூடாது என்பதில் இருக்கின்ற அதே முனைப்பு தமிழரசு கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதிலும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.
அதேவேளை, தமிழரசு கட்சி அதற்குள் நிலவும் கடுமையான உட்பூசல்களையும் சமாளித்துக்கொண்டு தேர்தலை எதிர்நோக்க வேண்டியிருப்பது முக்கியமான ஒரு சவால். நாடாளுமன்றத் தேர்தலைப் போன்றே இந்தத் தேர்தலிலும் குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகளினதும் உள்நாட்டில் உள்ள தன்னல அக்கறைச் சக்திகளினதும் தூண்டுதலினால் பெருவாரியான சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து தேர்தல் தொகுதிகளில் சாவகச்சேரியையும் ஊர்காவற்துறையையும் தவிர, மற்றைய எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தியே முதலாவதாக வந்தது. பழைய தேர்தல் முறையின் பிரகாரம் நோக்கினால் இன்று யாழ்ப்பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேர் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்தத் தேர்தலில் வாக்களித்த பாணியில் வடக்கில் மக்கள் உள்ளூராட்சித் தேர்தலிலும் வாக்களித்தால் அதனால் ஏற்படக்கூடிய ஒரு அடிப்படைப் பிரச்சினை குறித்து சில அரசியல் அவதானிகள் செய்திருக்கும் எச்சரிக்கை முக்கிய கவனத்துக்குரியது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் தேசிய மக்கள் சக்திக்கு குறிப்பாக, அதன் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) அக்கறை கிடையாது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் வரை மாகாண சபைகள் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள். ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தைப் பற்றி அவர்கள் எதுவும் பேசுவதில்லை.
இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் சகல சமூகங்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சமத்துவமாக நடத்துவதே தங்கள் கொள்கை என்றும் இடையறாது கூறிவரும் அவர்கள் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பது வரலாறு. இனவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்றால், அதே இனவாதம் இதுகாலவரையில் உருவாக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணவேண்டியது அவசியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்வதாக இல்லை.
அதனால் அத்தகையவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றினால் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாக தீர்வொன்றைக் காண்பதற்கான தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்ப்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பயன்படுத்த முயற்சிக்கின்றார்களே தவிர, அந்த மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதிலோ அல்லது அதற்கான உகந்த சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு தென்னிலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதிலோ அக்கறை காட்டுவதற்கு அவர்கள் தயாராயில்லை.
இத்தகைய சூழ்நிலையில், வடக்கு தமிழ் மக்கள் தங்களது பல தசாப்தகால போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டை மலினப்படுத்தக்கூடிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்களில் நடந்துகொள்ளக்கூடாது. அந்த மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்கக் கூடியதாக கற்பனாவாத சுலோகங்களில் தங்கியிருக்காமல் சமகால நிலைவரத்துக்கு இசைவான முறையில் தமிழ் தேசியவாத கட்சிகள் அவற்றின் பழைய போக்கை மாற்றிக்கொள்வதில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.
வீரகத்தி தனபாலசிங்கம்