Photo: REUTERS

நாங்கள் நின்றுகொண்டிருந்த பொத்துவில் பிரதான வீதியில் அமைந்திருந்த ஹாட்வெயார் கடைக்கு அருகில் நான்கு சக்கர (போர் வீல்) இயங்குதிறன் கொண்ட, அம்புலன்ஸ் வண்டியின் விளக்குகளை ஒத்த விளக்குகளுடன் ஒரு பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. வாடிக்கையாளர்கள் ஒருவரையும் காணவில்லையே என்ற அங்கலாய்ப்பில் இருந்த கடை உரிமையாளரின் முகம் வேனைக் கண்டதும் திடீரெனப் பிரகாசமடைந்தது. “இவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர், இவர் இங்கே ஒரு ஹோட்டல் கட்டுகின்றார். நான் இவரைக் கவனித்து விட்டு வருகின்றேன். நல்ல காலம் நோன்பு துறக்கக் கடையை மூட முன்னர் ஒரு வாடிக்கையாளராவது வந்திருக்கின்றார்” என்று அவர் கூறினார்.

அருகம்பேயில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 90 சுற்றுலாப் பயணிகளை நாடு கடத்திய பின்னர் வியாபாரம் மந்தமாக இருந்ததாக அவர் முன்பு முறைப்பாடு செய்து கொண்டிருந்தார். 2024 ஒக்டோபர் மாதம் அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையினை வெளியிட்ட பின்னர் ஹோட்டல்களையும் வீடுகளையும் அலைச் சறுக்கல் பாடசாலைகளையும் உணவு விடுதிகளையும் நிர்மாணித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைவடைந்தது.

உல்லாசப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மற்றொருவர் இவ்வாறு கூறினார், ‘விசாவில் வழங்கப்பட்டுள்ள நாட்களை விஞ்சித் தங்கியிருந்த 98 சுற்றுலாப் பயணிகளின் விசாவினை எம்மால் நீட்டிக்க முடியவில்லை. அவர்களுக்கு இப்போது குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது. நேற்று எனது வாடிக்கையாளர்களில் நான்கு பேர் வெளியேற வேண்டியிருந்தது. ஏனெனில், நான் முன்பு செய்ததைத் போன்று அவர்களின் விசாவினை என்னால் புதுப்பிக்க முடியவில்லை. புதுப்பிப்பது இப்போது கடினமானதாகும். குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இப்போது சட்டத்தினை இறுக்கமாகப் பின்பற்றுகின்றனர். இஸ்ரேலியர்கள் பொதுவாக இரட்டைப் பிரசாவுரிமையினை வைத்துள்ளனர் அல்லது நீண்டகால அமெரிக்க விசாவினை வைத்துள்ளனர். இவர்கள் ஒரு முதலீட்டாளராகவோ அல்லது ஏற்கனவே இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு ஹோட்டல் ஒன்றில் அல்லது உணவு விடுதியொன்றில் ஊழியராகவோ நீண்டகால இலங்கை வதிவிட விசாவினைப் பெற்றுக்கொள்வதை இது இயலுமாக்குகின்றது. இவர்கள் தங்களின் சொந்த வியாபாரங்களை நிறுவுவதற்கும் இது அனுமதியளிக்கின்றது. பல அங்கீகாரங்கள் தேவைப்பட்டாலும், இவர்கள் போதிய காலம் தங்கியிருந்து உள்நாட்டுப் பங்காளர் ஒருவருடன் சேர்ந்து ஒரு கம்பனியைப் பதிவுசெய்தால், அவர்களால் இங்கே சட்டபூர்வமாக ஒரு வியாபாரத்தினை நடத்த முடியும்.

கடந்த வருடம் அமெரிக்கத் தூதரகத்தின் எச்சரிக்கையினைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்ட போதும் அதனைத் தொடர்ந்து, காசா யுத்தத்தின் வருடப் பூர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கை பொலிஸும் இஸ்ரேல் பாதுகாப்புச் சபையும் எச்சரித்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொலிஸாரும் புலனாய்வு அதிகாரிகளும் நகருக்குள் படையெடுத்து ரோந்துச் சேவையினை அதிகரித்து வீதித் தடைகளையும் உருவாக்கியுள்ளனர். இஸ்ரேலியர்கள், குறிப்பாக யூதர்கள் அதிகம் செறிந்துள்ள பிரதான வீதியில் நாம் நான்கு சோதனைச் சாவடிகளைக் கண்டோம். இச்சோதனைச் சாவடிகள் ஒரு வகையில் ஒன்றிணைக்கப்பட்டு ஆயுதப் படைகளால் காவல் காக்கப்படுகின்றன. இந்த ஊகங்களைத் தொடர்ந்து நான்கு கைதுகள் இடம்பெற்றுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் பல்வேறிடங்களில் இருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா வழங்கிய பயண எச்சரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தியமையினை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது. மிக அண்மையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுல்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு இஸ்லாமியத் தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், பொத்துவில் பிரதான வீதியில் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்ட போது உள்ளூர் மக்கள் அவற்றினை எதிர்க்கவில்லை. ஏனெனில், சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்புத் தேவை என அவர்கள் நினைத்தனர். சோதனைச் சாவடிகள் நிரந்தரமானவையாக மாறும் என அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. இப்போது அவை அவர்களின் வாழ்வாதாரத்தினையே அச்சுறுத்துகின்றன. அருகம்பே வீதிகளில் இராணுவ ரோந்தும் நடைபெறுகின்றது. நாங்கள் அங்கிருந்த சில மணி நேரங்களில், இராணுவக் கனரக வாகனங்கள் இரண்டு பிரதேசத்தினை ரோந்து செய்வதைக் கண்டோம். அது எமக்கு வடக்கின் யுத்த வலயங்களை நினைவூட்டின. அருகம்பேயில் உள்ள பிரதான வீதி வெறும் 5 கிலோ மீற்றர்களே நீளமானது. ஆனால், அவ்வீதியில் நான்கு சோதனைச் சாவடிகளும் தொடர்ச்சியான இராணுவ ரோந்தும் காணப்பட்டன. இவற்றால் உள்ளூர் மக்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ பாதுகாப்பினை உணரவில்லை.

அருகம்பேயில் உள்ள குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாவர் (சுமார் 95%). இப்பிரதேசத்தில் இருக்கும் 200 ஹோட்டல்களில் சுமார் 60% ஆனவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகும். இங்கே பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்றும் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் நீச்சலுடையுடனும் கட்டைக் காற்சட்டைகளுடனும் சுற்றித் திரியுமளவுக்கு துன்புறுத்தல்கள் அற்ற ஒரே இடம் அருகம்பே என்றும் இவர்கள் கூறுகின்றார்கள். அலைச் சறுக்கல் விளையாட்டினை வழங்கும் ஏனைய கடற்கரைப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் அருகம்பே மலிவான இடமாகக் காணப்படுகின்றது. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் குறிப்பாக இஸ்ரேலியர்கள் அலைச் சறுக்கலை மிகவும் விரும்புபவர்களாக உள்ளனர். அண்மையில், ஒரு படையணியை ஒத்தவாறு 200 அல்லது 300 பேர் கொண்ட பெரும் குழுக்களாக இளம் இஸ்ரேலியர்கள் வருகை தந்தமையினை உள்ளூர் மக்கள் அவதானித்துள்ளனர். இவர்கள் அலைச் சறுக்கல் துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதில் பயிற்சிப் பாடசாலைகளும் சில அலைச் சறுக்கல் இடங்களும் அடங்குகின்றன.

இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகள் அவர்களின் சொந்த மருத்துவ ஆளணியினரை அவர்களின் சுகாதார நலன்களுக்காகக் கொண்டுவருவதாக நாம் சுகாதார அதிகாரி ஒருவருடன் பேசியபோது தெரியவந்தது. மாறாக, ஏனைய சுற்றுலாப் பயணிகள் சுகவீனமடைகையில், உள்ளூர் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைப் பணியாளர்கள் உதவிக்காக அழைக்கப்படுகின்றனர். இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகள் முற்றுமுழுவதும் அவர்களின் வளங்களில் தங்கியுள்ளனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இவர்கள் தங்களின் தனிப்பட்ட பாவனைக்காக ஸ்கூட்டர்களையும் முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்கின்றனர். இவர்கள் இலங்கையை விட்டுச் செல்கையில் அவற்றினை ஏனைய இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இவர்கள் தங்களின் சொந்தச் சுற்றுலா வலையமைப்பினை அருகம்பேயில் உருவாக்குவது போன்றே தென்படுகின்றது. இது உள்ளூர் வியாபாரங்களுக்கான வாய்ப்புக்களைப் பறிப்பதாகவே அமைகின்றது.

இந்தச் சோதனைச் சாவடிகள் ஹோட்டல் உரிமையாளர்களதும் அவர்களின் பணியாளர்களதும் சுற்றுலாத் துறையில் தங்கி வாழ்பவர்களதும் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கின்றன. சுவாரஸ்யமாக, நாங்கள் இச்சோதனைச் சாவடிகளைக் கடந்து மூன்று தடவைகள் சென்றாலும் ஒரு வாகனமாவது நிறுத்திச் சோதிக்கப்படவில்லை. எந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரோ அல்லது இராணுவத்தினரோ எம்மிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவுமில்லை அல்லது எங்களை நிறுத்தவுமில்லை. தேவைக்கு மிகையான இந்த இராணுவப் பிரசன்னத்தின் நோக்கம் என்ன என்றும் மிகவும் செழிப்பு மிக்க சுற்றுலா அமைவிடத்தில் 5 கிலோ மீற்றர் நீள வீதியில் இந்தச் சோதனைச் சாவடிகளின் நோக்கம்தான் என்ன என்றும் நாம் ஆச்சரியப்படுவதைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை.

அலைச் சறுக்கல் காலம் ஏப்ரலில் ஆரம்பிக்கின்றது என்றும் இந்தச் சோதனைச் சாவடிகளின் தொடர்ச்சியானது சுற்றுலாப் பயணிகளைக் கிழக்கில் இருந்து தெற்கினை நோக்கி விரட்டுவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகும் என்றும் உள்ளூர் மக்கள் நினைக்கின்றனர். பொத்துவிலில் சுற்றுலாத் துறையினை அழித்து, சொத்துக்களின் பெறுமதியைக் குறைத்து, வெளியார்கள் (பிரதானமாக வெளிநாட்டு முகவர்கள்) ஹோட்டல்களைப் பொறுப்பேற்பதை அனுமதிப்பதற்கான கபட நோக்கம் இதில் உள்ளது என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே உள்ளூர் மக்கள் மூலம் காணிகளை வாங்கி வியாபாரங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். அலைச் சறுக்கல் பாடசாலைகளை நடத்துவதிலும் பிரபல ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை நடத்துவதிலும் இவர்கள் பிரபலமாக உள்ளனர். ஹீப்ரு மொழியில் மாத்திரம் அமைந்த பெயர்ப்பலகைகளையும் விளம்பரப் பதாகைகளையும் போஸ்டர்களையும் படங்களையும் நாம் கண்டோம்.

பிரதேசத்தில் உள்ள பொலிஸார் தங்கள் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த நாட்டவர்கள் என்பதைத் தமக்கு நாளாந்தம் இற்றைப்படுத்துமாறு கேட்பதாக அருகம்பே ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவர் கூறினார். ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களின் விபரங்களுடன் பேணப்படும் பதிவினைப் பொருட்படுத்தாமலேயே இவ்வாறு விபரங்கள் கோரப்படுகின்றன. “சுற்றுலாப் பயணிகளின் விபரங்களை ஒரு பொதுவான வட்ஸ் அப் குழுமத்தில் இற்றைப்படுத்துமாறு பொலிஸார் எம்மைக் கேட்கின்றனர். குறிப்பாக, நாம் பேணுகின்ற பதிவேட்டுக்கு மேலதிகமாக ஒவ்வொரு சுற்றுலாப் பயணியினதும் நாட்டின் விபரங்களைப் பதிவிடுமாறு கேட்கின்றனர்” என ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த விபரங்கள் குறிப்பிட்ட சுற்றுலாப் பயணிகளின் குழுமத்தினை அடையாளம் கண்டு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இது சுற்றுலாப் பயணிகளின் அந்தரங்கத்தினை மீறுகின்றது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். இன்னொருவர் பின்வருமாறு குறிப்பிட்டார், “இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணி ஒருவர் இருந்தார், அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் பொலிஸாரை அனுப்பிவைத்தனர். ஏனைய சுற்றுலாப் பயணிகள் குழப்பமுற்றனர். ஏனெனில், அவர்கள் குளிக்கச் செல்கையில் பொலிஸாரும் பின்தொடர்ந்து சென்றனர். இது முட்டாள்தனமானது, ஏனெனில், எமது ஹோட்டல்களுக்கு அடிக்கடி வரும் உள்நாட்டுப் பயணிகளைக் கூட இந்தச் செயல் விரட்டியடித்து விடும்.”

வேறு பல மேற்கத்தேயச் சுற்றுலாப் பயணிகள் அருகம்பேக்கு அடிக்கடி வந்து போகின்றனர். ஆனால் அவர்களுக்காகக் கோவில்களோ அல்லது ஏனைய வணக்கத்தலங்களோ நிர்மாணிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், இஸ்ரேலியர்களுக்காக சபாத் இல்லம் எனும் பிரத்தியேக வணக்கத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் அங்கே செல்கின்றனர். ஒரு கம்பனியாகப் பதிவுசெய்யப்பட்ட இடமொன்றிலேயே சபாத் இல்லம் இயங்குகின்றது. விருந்தினர்களிடம் நன்கொடையளிக்குமாறு கூறப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் அங்கு சென்றால், அது இஸ்ரேலின் ஒரு சிறிய பகுதி போலத் தென்படுகின்றது. அவர்கள் காலை வரை பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த இடம் சத்தமிக்கதாகவும் சனநெரிசல் மிக்கதாகவும் காணப்படுகின்றது. சபாத் இல்லம் அமைந்துள்ள வீதி மபாசா பள்ளிவாயல் வீதி என அழைக்கப்படுகின்றது. இந்த வீதி பள்ளிவாயலுக்கே செல்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இப்பள்ளிவாயல் ஓரளவு சிதைவடைந்த நிலையில் உள்ளது. பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் இந்தக் காணியினை பொத்துவிலுக்கு வெளியே வாழும் இலங்கையர் ஒருவருக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர். இறுதியில், சபாத் இல்லம் என்ன கம்பனியின் கீழ் இயங்குகின்றதோ அந்தக் கம்பனிக்கு இது கொடுக்கப்பட்டுள்ளது. யூதர்களின் அதிகரித்த நடமாட்டத்தினால் உள்ளூர் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தினைப் பயன்படுத்துவதில்லை. ஒட்டுமொத்தத் தெருவும் யூதர்களினால் எடுக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு யூதர்கள் நிறைந்து காணப்படுவது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கான சாத்தியமுள்ள இடமாக இந்த இடத்தினை ஆக்கலாம் என உள்ளூர் மக்கள் உணர்கின்றனர்.

நாம் சபாத் இல்லத்திற்குச் சென்ற போது அதன் கதவுகள் மூடப்பட்டிருந்தன. உள்ளே பொலிஸார் இருந்தனர். சபாத் இல்லத்தின் விரிவாக்க நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் உள்ளூர்ப் பங்காளர்களும் காணியினை உயர்ந்த விலைக்கு வாங்கியுள்ளதாகப் பிரதேசத்தினைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்தனர். பிரதேசத்தின் இந்தக் குழப்ப நிலையைக் கண்கூடாகக் கண்டுவரும் வறியவர்களான உள்ளூர் மக்கள் இப்போது அவர்களின் காணிகளை விற்றுவிட்டு வெளியேறவே விரும்புகின்றனர்.

இஸ்ரேலியர்கள் இன்னும் காணிகளைக் கொள்வனவு செய்கின்றனர் என்றும் அவர்கள் அமெரிக்கப் பிரசைகளாகவும் இருக்கின்றனர் என்றும் எமது கூட்டத்தில் கலந்துகொண்ட உள்ளூர் நிர்வாகத்தவர்களில் ஒருவர் முறைப்பாடு செய்தார். அமெரிக்கக் கடவுச்சீட்டினை வைத்திருக்கும் இஸ்ரேலியர்களால் நீண்டகால விசாக்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. சிலர் எட்டு வெவ்வேறு அரசாங்க அமைப்புக்களிடம் இருந்து அங்கீகாரம் பெறுவதைத் தேவைப்படுத்தும் வியாபாரங்களை நடத்துகின்றனர். இந்த அங்கீகாரங்களைப் பெறுவதற்கு இவர்களின் சட்டத்தரணிகள் இவர்களுக்கு உதவுகின்றனர். பாலஸ்தீன யுத்தத்தின் பின்னர், இங்கே வருகை தரும் இஸ்ரேலியர்கள் யுத்தத்துடன் தொடர்புடைய உள்ளடக்கங்களைப் (இராணுவத்தினரின் படங்கள் மற்றும் இறந்த வீரர்களுக்கான அஞ்சலிகள்) பொதுவிடங்களில் பதிவிடுகின்றனர். அநாகரிகமான முறையில் ஆடை அணிதல், போதைப்பொருட்களை உட்கொள்ளல், ஆக்ரோசத்துடன் நடத்தல் உள்ளிட்ட இவர்களின் நடத்தைகள் கரிசணைகளை எழுப்பியுள்ளன. அருகம்பே சமுதாயத்தினைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் பின்வருமாறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர், “வீதிகளில் அல்லது பொதுவிடங்களில் பிகினி இல்லை”, ஆனால் பொலிஸார் இவர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பிரதானமாக இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகளே பொதுவிடங்களிலும், குறிப்பாகச் சிறுவர்கள் அதிகம் உள்ள இடங்களிலும் இரு துண்டுகளைக் கொண்ட குளியலாடைகளை அணிகின்றனர் என்றும் ஏனைய சுற்றுலாப் பயணிகள் அவற்றினைக் கடற்கரைக்கென ஒதுக்கியுள்ளனர் என்றும் ஹோட்டல் உரிமையாளர்களும் பள்ளிவாயல் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் அவதானிப்புக்களை வெளியிட்டுள்ளனர். சுற்றியுள்ள இடங்களுள் பாடசாலைகளும் பள்ளிவாயல்களும் அடங்குவதால் இது கரிசணைகளை எழுப்பியுள்ளது. பாலஸ்தீனிய ஆதரவாக நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்த ஒருவர் தொடர்ச்சியாகப் பொலிஸாரினால் துன்புறுத்தப்பட்டு இப்போது இஸ்லாமியத் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுள்ளார். “எமது இருப்பினைப் பாதுகாப்பதற்கு நாம் எம்மைத் தூரப்படுத்த வேண்டும். பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் செய்வதால் நாம் எதை அடைந்துகொண்டோம்”? என மற்றொரு ஹோட்டல் உரிமையாளர் கேட்டார்.

95 சதவிகிதம் முஸ்லிம்கள் செறிந்துள்ள பொத்துவில் பிரதேசத்தின் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். “சுற்றுலாப் பயணிகள் இங்கே மிகவும் பாதுகாப்பாக இருப்பதை உணர்கின்றனர், இதில் பரஸ்பர நிலை இருக்க வேண்டும். நாங்களும் இந்தத் தொழிற்துறையில் இருந்தே பிழைப்பு நடத்துகின்றோம், சுற்றுலாப் பயணிகள் எங்கிருந்து வந்தாலும் பரவாயில்லை, நாம் அவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்த மாட்டோம் என்பதை அனைவரும் அறிவார்கள்” என ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறினார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சுற்றுலாத் துறை அமைச்சிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அவர்கள் உள்ளூர் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதற்காக சிவில் ஆடைகளில் அதிக பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த விரும்புகின்றனர்.

சபாத் இல்லத்தில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை நிறுத்தப்பட வேண்டும் – அவர்கள் வணங்குவதை எதிர்ப்பதல்ல அதற்கு அர்த்தம். ஆனால், அதிக சனக் கூட்டம் மற்றும் அதிக சத்தத்துடன் பின்னிரவு வேளைகளில் பிரார்த்தனைகளில் ஈடுபடுவது தேவையற்ற கவனத்தினை ஈர்க்கலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

“இது பாதுகாப்பற்றதாகவே தோன்றுகின்றது. வீதித் தடைகள், பொலிஸ்  பாதுகாப்புச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் என்பன பாரிய பிரச்சினையாகும் என்பதுடன் ஒரு யுத்த வலயத்தில் இருக்கும் உணர்வினையே அவை எமக்கு ஏற்படுத்துகின்றன” என உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

ஹோட்டல் உரிமையாளரான இளம் நபர் ஒருவர் பின்வருமாறு கூறினார், “எனது ஹோட்டலில் 3 அறைகள் உள்ளன. அவற்றில் இரண்டில் இஸ்ரேலியச் சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். மற்றைய அறையினை அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் எடுத்துள்ளனர். சீருடை அணிந்த நபர்கள் எமது வளவினையும் எமது வாடிக்கையாளர்களையும் சுற்றித் திரிகையில் இந்த ஹோட்டல் வியாபாரத்தினை நாம் எவ்வாறு நடத்துவது?”

காசாவில் யுத்தம் முடிந்த பின்னர் ஒரு பட்டாளமாக இஸ்ரேலியப் படைவீரர்களும் வந்து கொண்டிருக்கின்றார்கள். பயண எச்சரிக்கைக்குப் பின்னர் பொலிஸாரும் இராணுவமும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றனர். அருகம்பேயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு திட்டம் இருக்கலாம் எனப் பொத்துவில் பிரதேசவாசிகள் அச்சப்படுகின்றனர். இராணுவச் சோதனைச் சாவடிக்கு பதிலாகவும் சுற்றித்திரியும் இராணுவக் கனரக வாகனங்களுக்கு பதிலாகவும், சுற்றுலாத் துறைக்கான பொலிஸார் பிரதேசத்தினைப் பாதுகாப்பதற்குக் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்தலாம் என பிரதேசவாசி ஒருவர் கருத்து வெளியிட்டார்.

சுற்றுலாத் துறை என்பது உள்ளூர்ப் பொருளாதாரத்தின் இன்றியமையாத பாகமாகும். குறிப்பாக இந்த நிலைமை ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நிலவுகின்றது. “பொலிஸ் சாவடிகளும் இராணுவத் தளங்களும் இங்கே உள்ளன. ஆனால், போதைப்பொருள் துஷ்பிரயோகமும் கட்டுப்பாடற்ற உல்லாச விருந்துக் கலாசாரமும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. ஊகமாக இருந்து வரும் பயங்கரவாதப் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என்பதுடன் இது இஸ்ரேலியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதா அல்லது அவர்களைத் தங்க அனுமதிக்காதிருப்பதா என்பதைக் குறிக்கின்றது” என இன்னொரு உள்ளூர்வாசி குறிப்பிட்டார். இந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்ல மற்றும் தெற்கிலுள்ள ஏனைய பிரசித்தமான சுற்றுலாத் தளங்களில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். ஹோட்டல் உரிமையாளர் இன்னொருவர் குறிப்பிடுகையில், அவருடைய வாடிக்கையாளர்கள் ஐந்து நாட்கள் தங்குவதற்குப் பதிவுசெய்திருந்ததாகவும் ஆனால் நடப்பு நிலவரத்தினையும் ஆயுதப் படையின் பிரசன்னத்தினையும் பார்த்த பின்னர் பதிவினை இரத்துச் செய்துவிட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

சமுதாய அடிப்படையிலான சுற்றுலாத் துறை நடைமுறைகளுக்கு பதிலாக வெகுசனச் சுற்றுலாத்துறைக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் மக்கள் கரிசணை கொண்டுள்ளனர். மேலும், கடந்த வருடத்தில் காணப்பட்ட நிச்சயமின்மையும் பாதுகாப்புப் பிரச்சினைகளும் தொடர வேண்டும் என அதிகாரிகள் விரும்புவது போல் தெரிகின்றது. இது அருகம்பேயில் இருந்து சுற்றுலாச் செயற்பாடுளைத் திசை திருப்புவதற்கும் இம்மக்களின் வியாபாரங்களைக் குறைப்பதற்கும் இறுதியில் இப்பிரதேசத்தினதும் இவர்களின் வாழ்வாதாரத்தினதும் கட்டுப்பாட்டினை தங்கள் கையிலெடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையே எனப் பலரும் நம்புகின்றனர்.

ஷ்ரீன் அப்துல் சரூர்