Photo, IMDb

கடந்த இரண்டு வாரங்களாக ஒட்டுமொத்த சிங்கள சமூக ஊடகங்களும் கொண்டாடிவரும் அசோக ஹந்தகமவின் ‘ராணி’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘Biopic’ வகையைச் சேர்ந்த ஒரு படைப்பு. சொல்லப் போனால் ஹந்தகம இயக்கியிருக்கும் இரண்டாவது ‘Biopic’ படம். நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்க கவிஞர் பாப்லோ நெரூடாவின் இளமைக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னர் அவர் ‘அல்பொரோதோ’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நெரூடா 1929 இல் கொழும்பு சிலி தூதரகத்தில் பணியாற்றினார். அப்பொழுது தனது வீட்டுக்கு மலக் கழிவுகளை அகற்றுவதற்காக வரும் (சிங்களத்தில் ‘சக்கிலிய குடியினர்’ என அழைக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த) தமிழ் பெண் ஒருவருடன் (அவருடைய விருப்பத்தை கேட்காமல்) உறவு கொண்டதை தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே ‘அல்பொரோதோ’ படத்தின் கரு.

சந்தியாகோ சர்வதேச விமான நிலையத்துக்கு ‘பாப்லோ நெரூடா சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர் சூட்ட வேண்டுமென சிலி நாட்டின் நாடாளுமன்றம் 2018 இல் ஒரு பிரேரணையை நிறைவேற்றியிருந்தது. ஆனால், அந்நாட்டின் பெண்ணியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் நெரூடா கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஓர் ஏழை தமிழ் பெண் மீது நிகழ்த்திய பாலியல் வன்முறையை சுட்டிக்காட்டி, அப்பிரேரணைக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்து, தலைநகர் சந்தியாகோவில் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனையடுத்து அந்த யோசனை கைவிடப்பட்டது.

சிங்கள சினிமாவின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு ‘Biopic’ படம் 1983 இல் திரையிடப்பட்ட ‘தடயம.’ அது 1959 இல் இடம்பெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. தனது காதலனால் கர்ப்பமாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட அட்லின் வித்தாரண என்ற இளம் பெண்ணின் கதை. தன்னைக் கொலை செய்ய முயலும் காதலனுடன் இறுதி வரை மூர்க்கத்துடன் போராடி, உயிரிழக்கும் காதலி பாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்றவர் இப்படத்தில் ராணி பாத்திரத்தை ஏற்றிருக்கும் சுவர்ணா மல்லவாரச்சி.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் திரையிடப்பட்ட விசேட அதிதிகளுக்கான காட்சியில் ‘ராணி’ படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த பலரும் அது குறித்து தமது கருத்துக்களைச் சொல்லியிருந்தார்கள். அநேகமாக அவர்கள் எல்லோருமே பிரமிப்புடன் சிலாகித்துப் பேசிய விடயம் படத்தின் கதாநாயகியான (76 வயது) சுவர்ணா மல்லவாரச்சி வெளிப்படுத்திக் காட்டியிருக்கும் அபாரமான நடிப்புத் திறன்; மனோராணி சரவணமுத்து என்ற பாத்திரத்தை திரையில் அவர் உயிர்ப்பித்துக் காட்டியிருக்கும் விந்தை.

முழுக் கவனமும் சுவர்ணாவின் நடிப்பு மீது குவிமையப்படுத்திருப்பதனால் ‘ராணி’ முன்வைக்கும் 1990 களின் இலங்கை குறித்த பார்வை மற்றும் அது பேசும் அரசியல் என்பன குறித்து (டில்வின் சில்வா மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை தவிர) வேறு எவரும் கருத்துக்களை தெரிவித்திருக்கவில்லை. இப்படம் குறித்து சிங்கள சமூக ஊடகங்களில் எழுதப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ரசனைக் குறிப்புக்களிலும் சுவர்ணா மல்லவாரச்சியே விசுவரூபமெடுத்திருக்கிறார்.

‘உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு’ என்ற வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது படம். முதலில் அந்த உண்மைச் சம்பவங்கள் குறித்த ஒரு சிறு விளக்கம்:

லூசியன் டி சொய்ஸா என்ற சிங்கள தந்தைக்கும், (டாக்டர்) மனோராணி சரவணமுத்து என்ற தமிழ் தாய்க்கும் மகனாக பிறந்தவர் ரிச்சர்ட் டி சொய்ஸா (1958 – 1990). பள்ளிப் படிப்பு கல்கிசை சென்ட் தோமஸ் கல்லூரி. தனது குறுகிய வாழ்வில் ஆங்கில நாடக நடிகர், ரூபவாஹினி ஆங்கில செய்தி வாசிப்பாளர், ஊடகவியலாளர் சிங்கள தொலைக்காட்சித் தொடர் நடிகர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர் எனப் பன்முகப் பாத்திரங்களை வகித்தவர்.

Inter Press Service என்ற சர்வதேச செய்திச் சேவையின் கொழும்பு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்து வந்த அவர் 1987 -1989 காலப் பிரிவில் இலங்கையில் இடம்பெற்ற அரச பயங்கரவாத செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன குறித்து தொடர்ச்சியாக வெளியுலகுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதிலும் பார்க்க மோசமாக அவர் நிகழ்த்திய ஒரு ‘குற்றம்’ ஜனாதிபதி பிரேமதாசவை கிண்டலடிக்கும் விதத்தில் அவர் எழுதி, இயக்கவிருந்த ‘மே கவுத, மொனவத கரன்னே’ என்ற அங்கத நாடகம். ரிச்சர்ட் டி சொய்ஸாவின் கொலைக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் (யு.என்.பி. ஆதரவாளரான) அந்நாடகத்தின் தயாரிப்பாளர் கடத்தப்பட்டிருந்தார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இது வரையில் எந்தத் தகவலுமில்லை.

1990 பெப்ரவரி 18ஆம் திகதி இரவு ரிச்சர்ட் டி சொய்ஸா அவருடைய ராஜகிரிய வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். 19ஆம் திகதி மாலை மொரட்டுவ கொரலவல்ல கடற்கரையில் அவருடைய சடலம் கரை ஒதுங்கியது. அவர் கொலை செய்யப்பட்டு, தாழப் பறந்த இலங்கை விமானப் படை ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து அவருடைய உடல் கல்கிசை கடலுக்குள் போடப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்தது.

ஆனால், இப்படம் ரிச்சர்ட் பற்றியதல்ல; அவருடைய தாயார் மனோராணி சரவணமுத்து தனது ஒரே மகனின் இழப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்தும், துயரிலிருந்தும் படிப்படியாக மீண்டு வந்து, தனது மகனுக்கு நீதி கேட்டு முன்னெடுத்த நீண்ட போராட்டமே அதன் மையக் கரு. இலங்கையில் பல தசாப்த காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்த அனர்த்தங்களின் போது தமது பிள்ளைகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களின் ஒரு குறியீடாகவே ஹந்தகம இப்பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஆனால், படத்தின் முக்கியமான குறைபாடு ரிச்சர்ட் டி சொய்ஸா கொலை நிகழ்ந்த கால கட்டத்தின் வரலாற்றுப் பின்புலம் குறித்த எவ்வித தகவல்களையும் வழங்காமல் படத்தை ஆரம்பித்திருப்பது. 1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை ஆசியாவின் மிகப் பெரிய கொலைக் களமாக மாறியிருந்தது என்ற வரலாற்று யதார்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் ‘ராணி’ திரைப்படத்தை பார்ப்பவர்கள் இக்கொலைச் சம்பவத்தை ‘மிகக் கொடூரமான ஜனாதிபதி ஒருவரின் கட்டளையின் பேரில் நிகழ்த்தப்பட்ட” தனியொரு சம்பவமாக (Isolated Incident) மட்டுமே நோக்க முடியும்.

1980 களின் தசாப்தத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளான (இலங்கையில் அரச பயங்காரவாதத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்து வந்த) 1981 யாழ் நூலக எரிப்பு, 1983 கறுப்பு ஜூலை சம்பவங்கள் மற்றும் இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சி மிகவும் கொடூரமான விதத்தில் நசுக்கப்பட்ட விதம் என்பவற்றை காட்சிப்படுத்தியவாறு ஒலிக்கும் ஒரு பின்னணிக் குரலுடன் (Background Narration) படத்தை ஆரம்பித்திருக்க முடியும்.

1987-1989 ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது 30,000 தொடக்கம் 60,000 வரையில் ஆட்கள் கொல்லப்பட்டதாக வெவ்வேறு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில் கணிசமான எண்ணிக்கையிலான கொலைகள் அரச தரப்பினால் நிகழ்த்தப்பட்டவை. 1989 நவம்பர்/ டிசம்பர் காலப் பிரிவில் ஜே.வி.பியின் ஒட்டுமொத்த தலைமையும் அழிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.

ஜே.வி.பியின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட கொலைகளுக்கும் குறைவில்லை. விஜய குமாரதுங்க (1988), ITN தொலைக்காட்சி செய்திப் பிரிவின் தலைவர் தேவிஸ் குருகே (1989), பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர, வானொலிக் கலைஞர் பிரேமகீர்த்தி டி அல்விஸ், மூத்த இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் எல்.டபிள்யு. பண்டித்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுர டனியல், ஜினதாச வீரசிங்க, மாகாண சபை உறுப்பினர் தேவ பண்டார சேனாரத்ன எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மறுபுறத்தில், யு.என்.பி. அரசாங்கத்தில் இடம்பெற்று வந்த ஜே.ஆர் – பிரேமதாச பனிப்போரின் விளைவாக அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள். அமைச்சர் லயனல் ஜயதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.எஸ். டி சில்வா, மெரில் காரியவசம், யு.என்.பி. தலைவர் ஹர்ஷ அபயவர்தன மற்றும் பொதுச் செயலாளர் லால் பெர்னான்டோ என மற்றொரு பட்டியல்.

திரைப்படம் 1990 – 1994 காலகட்டத்தை சித்தரிப்பதாக காட்டப்பட்டாலும் கூட, அக்காலப் பிரிவில் இடம்பெற்ற (ஆனால், தென்னிலங்கை ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்காத) பல அரச பயங்கரவாத செயல்கள் விடுபட்டிருக்கின்றன. உதாரணம்: 1990 செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சத்துருகொண்டான் படுகொலைகள் (184 பேர்), மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்திருந்த தமிழ் சிவிலியன்களின் படுகொலைகள் (158), 1991 ஜூன் கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (152 பேர்).

அது தவிர, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அறிக்கைகளில் ‘Non States Actors’ என அழைக்கப்படும் தமிழ் ஆயுதக் குழுக்களினால் 1990 இன் பின்னரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. கிழக்கு மாகாணத்தில் நிராயுதபாணிகளான 600 பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை (ஜூன் 1990) மற்றும் 140 உயிர்களைக் காவு கொண்ட காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் (ஆகஸ்ட் 1990).

மேலும், 1990 அக்டோபர் மாதத்தில் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

‘ராணி’ பேச முயலும் அரசியலின் மற்றொரு சிக்கல் பிரேமதாச மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோர் குறித்த அதன் பார்வை. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இருவரும் படத்தில் வில்லன் – ஹீரோ என எதிரெதிர் துருவங்களில் வைக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக பார்க்கும் பொழுது அவதானிக்க முடிகிறது.

1977 – 1988 கால ஜே.ஆரின் ஜனநாயக விரோத, எதேச்சாதிகார ஆட்சியில் லலித் ஒரு முக்கிய பாத்திரத்தை (Key Player) வகித்து வந்திருக்கிறார் என்ற விடயமும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல் செய்த விதம் குறித்து அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்ற விடயமும் முற்றிலும் மறக்கப்பட்டு, 1990 களின் தொடக்கத்தில் பிரேமதாசவுடன் கடுமையாக முரண்படத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு ஹீரோவாக பார்க்கப்பட்டமை இலங்கை அரசியலின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நகைமுரண்களில் ஒன்று. மேலும், இவ்விருவருக்கும் இடையில் நிலவிய முரண்பாடும், பகைமையும் கொள்கை அடிப்படையில் தோன்றியவை அல்ல; வெறுமனே அவ்விருவரதும் தனித்துவமான ஆளுமைப் பண்புகளுக்கிடையில் நிலவிய வேறுபாடுகள் காரணமாக தோன்றியவை.

ஆனால், 1990 களில் சிங்கள சமூகம் பிரேமதாச மற்றும் லலித் ஆகியோர் தொடர்பாக கொண்டிருந்த பொதுப் புத்தி சார்ந்த மேற்படி பார்வையை அதே விதத்தில் பிரதிபலிப்பது படத்தின் மற்றொரு குறைபாடு.

ஜே.ஆர். – பிரேமதாச யுகத்தின் அரச பயங்கரவாதத்தை நினைவூட்டி, சூரியகந்த போன்ற பாரிய மனிதப் புதை குழிகளைக் காட்டி, அக்கால கட்டத்தில் அரசியல் ஆதாயம் தேடியவர்கள் சந்திரிகா – மஹிந்த – மங்கள கூட்டணியினர். தனது மகனை இழந்து துயரில் ஆழ்ந்திருந்த மனோராணியை தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக உச்ச மட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷவும், மங்கள சமரவீரவும் பல தடவைகள் அவருடைய வீட்டுக்குப் போய் மனோராணியை சந்திக்கிறார்கள்.

தமது பிள்ளைகளை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலை ஒலிப்பதற்கென ‘அன்னையர் முன்னணி’ என ஓர் அமைப்பை தாம் உருவாக்கப் போவதாகவும், அதற்கு அவர் தலைமை ஏற்க வேண்டுமென்றும் அவரிடம் வலிந்து கேட்டுக் கொள்கிறார்கள்.

“நமது கலாசாரத்தில் தாய்க்கு ஒரு முதன்மை ஸ்தானம் இருக்கிறது. தாயை நாங்கள் தெய்வமாக வழிபடுகிறோம்… அந்த அடிப்டையிலேயே அன்னையர் முன்னணியை உருவாக்கியிருக்கிறோம். இது இலங்கை அரசியலை பொருத்தவரையில் இதுவரையில் எவரும் பயன்படுத்தியிருக்காத ஒரு புதிய பிரச்சார உத்தி” என்கிறார் மஹிந்த.

மனோராணியின் மற்றொரு நெருங்கிய நண்பரான லலித் அத்துலத்முதலி “You are going to be used” என அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ஆனால், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இறுதியில் மனோராணி அந்த யோசனைக்கு உடன்படுகிறார் (மஹிந்த மற்றும் மங்கள ஆகியோரின் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தன்மை காணப்பட்டாலும் கூட, அவர்கள் பேசும் வசனங்கள் அரசியல் தந்திரோபாயங்களை உருவாக்குவதில் அவர்கள் கொண்டிருக்கும் நிபுணத்துவத்தைக் காட்டுகின்றன).

1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா அமோக வெற்றியீட்டுகிறார். அவர் பதவிப் பிரமாணம் செய்யும் பொழுது ‘இலங்கையை பீடித்திருந்த 17 வருட கால சாபத்துக்கு அவர் முடிவு கட்டுவார்’ என்ற விதத்தில் பரவலான ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது. அதனைப் பிரதிபலிக்கும் விதத்திலேயே CBK பதவி ஏற்பு நிகழ்வின் நேரடி ஒளிபரப்பின் போது ‘இந்த அவலத்திலிருந்து நம்மை மீட்டெடுப்பதற்கென பண்டாரநாயக்க குடும்பத்தின் துணிச்சலும், தூரநோக்கும் கொண்ட புத்திரி இதோ வந்திருக்கிறார்’ என மெய்சிலிர்க்க வைக்கும் சிங்கள சொற்பிரயோகங்களுடன் கூடிய ஒரு பின்னணிக் குரல் ஒலிக்கிறது.

ஆனால், நுட்பமான ஒரு கலைஞரான ஹந்தகம ஓர் உச்சமட்ட அங்கதமாகவே படத்தில் அக்காட்சியை சேர்த்திருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது.

1994 தொடக்கம் 2015 வரையில் சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழ் இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 20 வருட கால ஆட்சி, 1977 – 1993 ஜே.ஆர். – பிரேமதாச ஆட்சிகளுடன் ஒப்பிடும் பொழுது குறிப்பிட்டுச் சொல்ல கூடிய மாற்றங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. 1990 இல் ரிச்சர்ட் டி சொய்ஸாவை பலி கொண்ட அரச பயங்கரவாதம் முடிவுக்கு வரவுமில்லை. சூரியகந்த பாரிய மனிதப் புதை குழிகளுக்குப் பதிலாக வடக்கில் செம்மணி புதை குழிகள் (1998) குறித்த செய்திகள் வந்தன.

ஊடகவியலாளர்கள் ரோஹன குமார (1999) மற்றும் தராகி சிவராம் (2005), குமார் பொன்னம்பலம் (2005), ‘சன்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க (2009) எனத் தொடர் கொலைகள்; எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் (2010); கீத் நொயார் மற்றும் போத்தல ஜயந்த போன்ற ஊடகவியலாளர்கள் கடத்தி, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் எனப் பட்டியல் நீண்டு சென்றது.

அதேவேளையில், 2001 இல் ஒரு முதியோர் இல்லத்தில் மரணமடையும் வரையில் மனோராணி சரவணமுத்துவுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட ரிச்சர்ட் சொய்ஸா கொலை வழக்கு (போதிய சாட்சியங்கள் இல்லாமை மற்றும் சாட்சிகளின் நம்பகத் தன்மையில் காணப்படும் குறைபாடுகள் என்பவற்றை காரணம் காட்டி) 2005 இல் தள்ளுபடி செய்யப்பட்டு, சந்தேக நபர்களான பொலிஸ் உத்தியோகத்ரைகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

படத்தில் இறுதியாக சேர்க்கப்பட்டிருக்கும் காட்சி பிரேமதாசவை இக்குற்றத்திலிருந்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாக மேலோட்டமான ஒரு பார்வைக்கு தோன்றினாலும் கூட, ‘ரிச்சர்ட் சொய்ஸா கொலைக்கு பிரேமதாச நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்’ என்ற மறைமுகமான செய்தியையே அது வழங்குகிறது.

இரவில் ஜனாதிபதி இல்லத்திலிருந்து வெளியில் வரும் சிவில் உடையில் இருக்கும் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு ஜீப் வண்டியில் ஏறுகிறார்கள். குடிபோதையில் இருக்கும் அவர்களுக்கு மத்தியில் நிகழும் உரையாடல்களுக்கூடாக ரிச்சர்ட் டி சொய்ஸா கடத்தல் மற்றும் கொலை என்பன துல்லியமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, நிறைவேற்றபட்ட ஒரு செயலாக இருந்து வரவில்லை என்ற பூடகமான செய்தியை வழங்குகிறார் ஹந்தகம.

ஆனால், பொலிஸ் துறைக்குள் இயங்கும் ஒரு ரகசிய ‘Death Squad’ உத்தியோகத்தர்களை அழைத்து, ரிச்சர்ட் சொய்ஸாவின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதி கடும் ஆத்திரத்தில் பேசியிருப்பதே அக்கொலைக்காக வழங்கப்பட்ட மறைமுக உத்தரவு எனக் கருத முடியும்.

”பெரியவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்” (ලොක්කට මල පැනලා) என்கிறார் ஒரு பொலீஸ்காரர்.

“வேண்டுமென்றால் போய் அந்த ஆளைப் பார்ப்போம், TV இல் செய்தி வாசிப்பவராம்” என்கிறார் மற்றொருவர்.

நந்தா மாலினியின் ஒரு பாடலை பாடியவாறு குடிபோதையில் அவர்கள் குதூகலத்துடன் ஜீப்பில் செல்லும் காட்சி படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அற்புதமான ஒரு Visual. பொலிஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் கிங் ரத்னம் (என்ற தமிழ்) நடிகரின் உடல்மொழியும், உதட்டில் அலட்சியமாக சிகரட்டை வைத்துக் கொண்டு அவர் வெளிப்படுத்திக் காட்டும் கொண்டாட்ட மனநிலையும் அத்தகைய கொலைகளை நிகழ்த்துவதற்கு செல்லும் இரகசிய குழுக்களிடையே பொதுவாக நிலவும் மன இறுக்கத்துக்கு நேர்மாறானவை.

‘எத்தனை பேரை தீர்த்துக் கட்டினாலும் பிரச்சினை இல்லை. பெரியவர் எங்களை காப்பாற்றுவார்” என்ற அதீத நம்பிக்கையைக் காட்டும் உடல்மொழி அது.

“ரூபவாஹினிக்கு அழைப்பெடுத்து ரிச்சர்ட் சொய்ஸாவின் வீட்டு முகவரிய கேட்கவா” என்ற ஒரு பொலிஸ்காரரின் கேள்விக்கு உதட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சிகரட்டை நகர்த்தியவாறு ‘சரி’ என்ற விதத்திலான முக பாவனையைக் காட்டுவது கிங் ரத்னத்தின் நடிப்பாற்றலின் மற்றொரு உச்சம்.

ரிச்சர்ட் சொய்ஸாவின் கொலை எவ்வித திட்டமிடலும், முன்னாயத்தங்களும் இல்லாமல் எதேச்சையாக நடந்த ஒரு செயல் என்பதைக் காட்டும் விதத்தில் அவர்கள் அலட்சியமாக பல தடயங்களை விட்டுச் செல்கிறார்கள். ரூபவாஹனியின் மற்றொரு ஆங்கில செய்தி வாசிப்பாளரான நொயலின் ஹொன்டரின் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது கணவரையும் மிரட்டி, ரிச்சர்ட் இன் வீட்டு முகவரியைப் பெற்றுக் கொண்டமை மற்றும் கடத்தலை மேற்கொள்வதற்கு அசல் இலக்கத் தகட்டுடன் கூடிய பொலிஸ் ஜீப்பை பயன்படுத்தியமை என்பவற்றை உதாரணங்களாகக் காட்டலாம்.

ஆனால், கொலை நடந்த இரண்டு மாதங்களின் பின்னர் மனோராணிக்கும், அவருடைய சட்டத்தரணியான பெட்டி வீரக்கோனுக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல், அக்கொலைக் கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கும் விடயத்துக்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் உயர் முன்னுரிமை வழங்கியிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஏனைய அற்புதமான Visualகள் – ஜனாதிபதி பிரேமதாச ரிச்சர்ட் சொய்ஸாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் மனோராணி அவரை எதிர்கொள்ளும் விதம்; மாறி மாறி அவர் காட்டும் முக பாவனைகள்; 1993 மே முதலாம் திகதி கொழும்பு ஆர்மர் வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் படமாக்கப்பட்டிருக்கும் விதம்; பாபு சைக்கிளை தள்ளியவாறு ஜனாதிபதியை நெருங்கி வரும் இறுதி வினாடிகள்; ரிச்சர்ட் சொய்ஸா இரவில் கடத்தப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட காட்சிகள்; மனோராணி அக்கொலைக் கும்பலை எதிர்த்து துணிச்சலுடன் போராடும் காட்சிகள்; அவர்களுக்கிடையில் பரிமாற்றப்படும் வார்த்தைப் பிரயோகங்கள்.

இந்தப் படத்தில் தாய் தொடர்பாக நமது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் சித்திரத்தை குலைத்துப் போடுகிறார் ஹந்தகம. படம் நெடுகிலும் மனோராணி வைன் அருந்தும், சிகரட் புகைக்கும் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ரிச்சர்டுடனும் அவருடைய நண்பருடனும் சேர்ந்து மது அருந்திவிட்டு மூவரும் ஆங்கில, சிங்கள பாடல்களை பாடியவாறு ஆடுகிறார்கள். மகனின் ஓரினச் சேர்க்கை (Gay) பழக்கத்தை ஓரிடத்தில் நக்கலடிக்கிறார் மனோராணி. அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் தனக்கிருக்கும் சாதாரண நட்பையும் மீறிய நெருக்கத்தை ஒரு கட்டத்தில் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்கிறார் அவர்.

ஆங்கிலம் பேசும் கொழும்பு மேட்டுக் குடி சமூகப் பிரிவைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ பெண்மணி ஒருவரை கதாநாயகியாக வைத்து ஒரு சிங்களப் படத்தை எடுப்பதே சவால்கள் மிகுந்த ஒரு காரியம். இப்படத்தை தயாரித்திருக்கும் லைக்கா புரொடக்ஸன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரனின் கம்பெனி ‘சுவர்ணவாஹினி’ தொலைக்காட்சியை வாங்கிய பொழுது வீரவன்ச போன்றவர்கள் ‘டயஸ்போராக்களுக்கு ஊடாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தோன்ற முடியும்’ என்ற விதத்தில் மேற்கொண்ட பரப்புரைகளையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.

ஆனால், எதிர்மறை விமர்சனங்கள் எவையுமில்லாமல் ‘ராணி’ சிங்கள ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பொது வெளியில் சிங்கள பௌத்த இனவாதிகளின் குரல்கள் பெருமளவுக்கு பலவீனமடைந்திருக்கும் இன்றைய சூழலும் அநேகமாக அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எம்.எல்.எம். மன்சூர்