நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை கொண்டு சேர்த்தவர்கள். நான் எழுத்துத் துறையில் அதிக கவனம் செலுத்தியதற்கும், சமூகத்தின் மீது அக்கறை கொள்வதற்கும் இவர்கள்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்கிறார் எம். வாமதேவன்.

பொருளாதார கஷ்டம் காரணமாக நான் பல்கலைக்கழகம் செல்வதை அப்பா விரும்பவில்லை. வீட்டில் சரியான கஷ்டம்தானே என்று கூறினார். ஆனால், அம்மாதான் நீ படிக்கவேணும் என்று கூறி எனக்கு ஆதரவாக இருந்தார். அதேநேரம் ஆசிரியர் சிவலிங்கமும், “என்ன நடந்தாலும் பரவாயில்ல, நீ போய் படி” என்றார். நான் பல்கலைக்கழகம் போகாமல் இருப்பதை அவர் விரும்பவில்லை. பல்கலைக்கழகம் போகவேண்டும் என மன உறுதியையும் வலிமையையும் இவர்கள்தான் எனக்குத் தந்தார்கள்.

எம். வாமதேவன் இலங்கை அரச சேவையில் 1970 களிலேயே பிரவேசித்திருக்கிறார். 1965இல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர், 1970இல் திட்டமிடல் அமைச்சின் உத்தியோகத்தராக இணைகிறார். பின்னர் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று 2004இல் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் பெறும் வாமதேவன் 2005ஆண்டு ஓய்வுபெற்றதன் பின்னர் அமைச்சர்களின் ஆலோசகராகவும் தற்போது நிதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார். மலையக மக்களின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பல கட்டுரைகளையும், தமிழ் – ஆங்கிலத்தில் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

தனது ஆரம்ப வாழ்க்கை, மலையகத்துக்கும் தனக்குமான உறவு, சமூக அக்கறையை ஊட்டிய ஆசிரியர்கள், சிறு வயதிலேயே குடும்ப உறுப்பினர்களின் இழப்பு, கஷ்டத்துக்கு மத்தியில் பல்கலைக்கழகம் வரையான கல்வி, அரச சேவையில் தன்னுடைய பங்களிப்பு என தன்னுடைய அனுபவங்களை எம். வாமதேவன்  எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் அவர் எம்மோடு பகிர்ந்துகொண்ட முழுமையான கருத்துக்களைப் பார்க்கலாம்.

***