“நாங்கள் இந்த நாட்டில் பதிவுப் பிரஜைகளாக இருந்தோம். கடதாசிப் பிரஜைகள் என்றே கூறலாம். என்னுடைய பெயர், தந்தையின் பெயர், குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு இலக்கங்களும் கொடுக்கப்பட்டன. இந்த நாட்டில் மாடுகள், கைதிகளுக்குத்தான் இலக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இலக்கங்கள் கொடுக்கப்பட்ட பிரஜைகளாகக் கருதப்பட்டோம்” என்கிறார் விருதுபெற்ற மலையகத்தில் மூத்த இலக்கியவாதி மு. சிவலிங்கம்.
தன்னுடைய படைப்புகளுக்காக மூன்று முறை அரச சாகித்திய விருது, சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது, தமிழியல் விருது, கனகசெந்திநாதன் விருது, கலாபூஷணம் விருதைப் பெற்றுள்ள மு. சிவலிங்கம் மலையக இலக்கிய பரப்பினுள் முக்கிய இடம் வகிப்பவர். ஊடகவியலாளர், ஆசிரியர், ஆய்வாளர், செயற்பாட்டாளர், அரசியல்வாதி என பல்முகம்கொண்டவருமாவார்.
தனது ஆரம்ப வாழ்க்கை, மலையகம், மலையகத்துக்கும் தனக்குமான உறவு, இலக்கிய பிரவேசம், மலையக இலக்கியம் குறித்து மு. சிவலிங்கம் எம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
“அரசாங்க காரியாலயத்தில் லிகிதர் வெற்றிடத்துக்கு தேர்வுசெய்வதற்காக ஒரு நேர்முக பரீட்சைக்கு வரச்சொன்னார்கள். அப்போது என்னுடைய பிரஜாவுரிமை சான்றிதழை கேட்டார்கள். வீட்டிற்கு வந்து அப்பாவிடம் சொல்ல, அவர் அங்கிருந்த தகரப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார். தகரப்பெட்டி ஒழுங்காக மூடப்பட்டிருக்கவில்லை. பெட்டியினுள் புகுந்திருந்த எலி எனது பிரஜாவுரிமை சான்றிதழை கடித்து தின்றிருக்கிறது. மிகுதியை சேகரித்து ஒரு காகிதப் பையில் எடுத்துச் சென்றேன். பரீட்சையில் சித்தியடைந்துவிட்டேன். பின்னர் இந்த நாட்டின் பிரஜை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பிரஜாவுரிமை சான்றிதழைக் கேட்டார்கள். அப்போது காகிதப் பையில் துண்டு துண்டாகியிருந்த பிரஜாவுரிமை சான்றிதழை வெளியில் எடுக்க மின்விசிறி காற்றில் அந்த அறையெங்கும் பறக்கிறது. துயரமான சூழ்நிலையில் நான் இருப்பதைப் பார்த்த அரசாங்க அதிகாரி, எனது நிலையை நினைத்து வருத்தப்படுகிறார். அதன் பின்னர் லிகிதர் வெற்றிடத்துக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை. இந்த நாட்டின் பிரஜை என்பதை நிரூபிப்பதற்கான ஆவணம் இல்லாததால் பணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று என்னை நிராகரித்துவிட்டார்கள்.”
கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் அவர் எம்மோடு பகிர்ந்துகொண்ட முழுமையான கருத்துக்களைப் பார்க்கலாம்.
***