Photo, SELVARAJA RAJASEGAR

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி இச்சம்பளத்தை வழங்கும்படி இரண்டாவது வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டக் கம்பனிகளின் நிதி நிலைமையை ஆராய்ந்து 1700 சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாத கம்பனிகளை அடையாளம் காணுமாறு அமைச்சரவை குழுவொன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது. இந்நிலையில், தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடியும் வரை 1700 சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கும்படி மேன்முறையீடு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. அதனை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எனவே, தோட்டக்கம்பனிகள் அதிகரித்த சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. முதன் முறையாக இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை விடுவதன் மூலம் அரசாங்கம் தோட்டக் கம்பனிகளுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. சிலவேளை கம்பனிகள் சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யலாம்.

தற்போது விதந்துரைக்கப்பட்ட 1700 ரூபா சம்பள அதிகரிப்பில் ஊழியர் சேமலாப நிதியுடன் கூடிய சம்பள அதிகரிப்பு 1350 ரூபாவாகும். மிகுதி 350 ரூபா ஊக்குவிப்பு அலவன்சாகும். இதன்படி பார்த்தால் சம்பள அதிகரிப்பு 1700 ரூபாவாக இருந்தாலும் உண்மையாக சம்பள அதிகரிப்பு 450 ரூபாவாகும். ஏனெனில், தற்போது தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வரும் ரூபா 1000 சம்பளத்தில் 900 ரூபாவிற்கே ஊழியர் சேமலாப நிதி அறவிடப்படுகின்றது. மிகுதி 100 ரூபா அலவன்சாக வழங்கப்படுகின்றது. தற்போது விதந்துரைக்கப்பட்ட சம்பளத்தில் ஊக்குவிப்பு தொகையான 350 ரூபாவை கட்டாயம் கொடுக்கப்படவேண்டும் என அமைச்சர் சியாம்பலபிடிய கூறியுள்ள போதிலும் ஊக்குவிப்பு சம்பளமான 350 ரூபாவை கம்பனிகள் வழங்கமாலிருக்க பல உபாயங்களைக் கடைப்பிடிக்கலாம்.

இப்பின்புலத்தில் அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பணிந்து தோட்டக்கம்பனிகள் மேற்கூறிப்பிட்ட சம்பள உயர்வினைச் வழங்க முன்வந்தாலும் இன்றைய விலைவாசியுடன் ஓப்பிடுகையில் இது போதுமான சம்பளமாக அமையுமா? மறுபுறம் இவ்வாறு ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் உயர்வு கோரிக்கையை தொடர்ந்து முன்வைப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் தமது  அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அதிகரிக்கப்படும் சம்பளம் போதுமானதாக இருக்குமா அல்லது தோட்டத் தொழிலாளர்களின் வறுமை நிரந்தரமானதாகவே காணப்படுமா? போன்ற  கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.

தோட்டத் தொழில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்டின் ஏனைய தொழிலாளர்களைவிட குறைவான சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைவான சம்பளத்தை வழங்கிய போதிலும் அவர்களுக்கு மானிய முறையிலும், சில வேளைகளில் இலவசமாகவும் வீடு, நீர், உணவு பொருட்கள், மருத்துவம், ஆரம்பக் கல்வி, சிறுவர் பராமரிப்பு என்பனவற்றினை வழங்கின. அதனால் குறைவான சம்பளம் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. மேலும் அவர்களது தேவைகளும் அக்காலக்கட்டத்தில் குறைவாக இருந்தது. பன்னிரண்டு வயதாகியதும் பிள்ளை உழைக்க ஆரம்பித்தனர். சம்பளத்திற்கு மேலதிகமாக கொந்தரப்பு (புல்வெட்டல்) வேலை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது வாழ்க்கை சுற்றுச் சூழலும் வாழும் தோட்டத்துக்குள்ளேயே உள்ளடங்கியிருந்தது. உறவினரைப் பார்க்க பிறிதொரு தோட்டத்திற்கும், பிரதான வைத்தியசாலைக்கு மட்டுமே பெரும்பாலும் அவர்களது பயணம் இருந்தது. தாம் வாழும் தோட்டத்தை விட்டுச் செல்ல தேவை பெரிதாக இருக்கவில்லை. இதனால் குறைந்த சம்பளம் போதியதாக கருதப்பட்டது.

1972-75 தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டதுடன் மானியக் கொடுப்பனவுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டதுடன் தோட்ட மக்களின் தேவைகளும் அதிகரிக்கலாயிற்று. தோட்ட மக்கள் தமது பிள்ளைகளின் கல்வியின்பால் அக்கறை செலுத்தியதுடன் பிள்ளைகளின் கல்வி செலவு, பிள்ளைகளின் போக்குவரத்துச் செலவு, மின்சாரக் கட்டணம், உணவு பொருட்களுக்கான செலவு, உடைகளுக்கான செலவு, மருத்துவச் செலவு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளான அலைபேசி, தொலைக் காட்சி, போன்றவற்றிற்காகவும் வருமானம் தேவைப்பட்டது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை பிரித்தானியர் முன்வைத்திருந்த சம்பள முறைமையைப் பின்பற்றி சம்பள உயர்வு வழங்க முன்வந்தால் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஏனையத் தொழிலாளர்களின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் குறைவான சம்பளத்தினை பெறுவதுடன் தொடர்ந்து  வறுமைக் கோட்டுக்குள்ளேயே இருப்பர்.

இப்பின்புலத்தில் 2018 ஆண்டு முதல் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கான (Living Wage) சம்பளமாக எவ்வளவு சம்பளத்தை பெறவேண்டும் என்பதனை ஆய்வு செய்துவரும் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இம்முறையும் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் பொருளியில் பேராசிரியர் எஸ். விஜேசந்திரனைக் கொண்டு ஆய்வொன்றினை மேற்கொண்டது. அவ்வாய்வில் நான்கு பேரைக் கொண்ட ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்று தம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டுமாயின் அவரது ஆய்வின்படி 4 பேர்களைக் கொண்ட தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்று ஒரு நாளைக்கு ரூபா 2321.04 வை சம்பளமாகப் பெறவேண்டும். இதற்கு தோட்டங்கள்  25 நாட்கள் வேலை வழங்கினால் மட்டுமே ரூபா 2321. 04 போதுமானதாக இருக்கும். அதேவேளை, தோட்டங்கள் 21 நாட்கள் வேலை வழங்கினால் ஒரு நாட் சம்பளம் ரூபா 2630.31 சதமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பார்க்கும்போது தற்போது விதைந்துரைக்கப்பட்ட 1700 சம்பளம் அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளக் கூடியதாக இருக்காது. அவ்வகையில் தோட்டத் தொழிலாளர் நாட்டின் ஏனையத் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான சம்பளத்தையே பெறவுள்ளனர். அதாவது தொடர்ந்து குறைந்த சம்பளத்தை பெறுபவர்களாகவே இருப்பர். மறுவகையில் கூறுவதாயின் நாட்டின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் நிரந்தரமாக வறுமைக் கோட்டுக்குள்ளேயே வாழ நேரிடும். 1700 ரூபா சம்பளத்தைக் கூட வழங்க முன்வராத தோட்டக்கம்பனிகள் எவ்வாறு 2321 ரூபா சம்பளத்தை வழங்க முன்வரும். மறுபுறம் 1700 ரூபா சம்பள உயர்வினைப் பெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களில் சம்பள கோரிக்கையை முன்வைக்க நேரிடும், அப்போதும் தோட்டக் கம்பனிகன் வாழ்வதற்கான சம்பளத்தை வழங்க முன்வராது.

தனியார் கம்பனிகளைப் பொருத்தவரை அவர்களது பிரதான உபாயமாக இருப்பது லாபம் ஈட்டுவதாகும். சம்பள உயர்வு விடயத்தில் நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கேற்ப சம்பளத்தை அதிக கூடியதாக 10 வீதத்தையே அதிகரிக்க கம்பனிகள் முன்வரும். இதுவே முதலாளித்துவ அணுகுமுறை. ஏதேனும் சந்தர்ப்பத்தில் அதாவது நாட்டில் அதிகூடிய பணவீக்கம் ஏற்படுமாயின் 10 வீதத்ததை விட 15 வீதத்தை  அதிகரிக்க முன்வரும். இதனை விட அதிகரிக்க முன்வராது. இந்த நடைமுறையைச் சுட்டிக் காட்டியே தற்போதைய 70 வீத சம்பள அதிகரிப்பினைக் கோருவது நியாமற்றது என கம்பனிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன. இன்றைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்தது 100 சதவீத சம்பள அதிகரிப்பினை வழங்கவேண்டும். ஆனால், இது ஒருபோதும் அடையக் கூடியதல்ல.

இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் எவ்வாறான சம்பள அதிகரிப்பை கோரலாம், அதற்கு கம்பனிகள் எவ்விதமாக எதிர்வினையாற்றும் என்பது வெள்ளிடைமலை. ஆகையால், தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் தொடர்பில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. 100 வருடம் பழைமை வாய்ந்த தொழில் முறைமையிலிருந்து விடபடவேண்டியுள்ளது. அல்லது தற்போதைய  முறைமையைத் தொடர்வதாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 100 சதவீதமாக அதிகரித்து அதிலிருந்து வருடம் தோறும் 05 சதவீத அதிகரிப்பினை வழங்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமாகுமா?

எனவே, இவ்நெருக்கடியில் மீள்வதற்கு புதிய வழிமுறைகளை கையாள முயற்சிக்கலாம்.

இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 77% பச்சைக் கொழுந்தினை சிறுதோட்ட உற்பத்தியாளர்களே வழங்குகின்றனர். நாட்டில் 5 லட்சம் சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்கள் இவ்வுற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு திறன்தேர்ச்சி வழங்குவதற்காக தேயிலை சிறுதோட்ட உற்பத்தி அதிகார சபை (Tea Small Holder Development Authority) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  அதேபோல் இவர்களுக்கான தேயிலை சிறுதோட்ட உற்பத்தியாளர் சங்கம் (Tea Small Grower Association) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கையில் இலங்கையின் தேயிலை உற்பத்தியில் தேயிலை சிறு உடைமையாளர் முறைமையே தேயிலை தொழிற்றுறைக்கான சிறந்த முறைமையாக கருத முடிகின்றது. இலங்கை தேயிலை சபையின் புள்ளி விபரத்திற்கு அமைய ஒரு சிறு தோட்ட தேயிலை உரிமையாளர் ஒரு ஹெக்டயார் தேயிலை நிலத்தைக் கொண்டிருப்பாராயின் அவரது வருடாந்த வருமானம் இருபது லட்சமாகும். ஒரு ஹெக்டயார் 2.471 ஏக்கராகும். அவ்வாறாயின் தோட்டக் குடும்பங்களுக்கு கணிமான தேயிலைக் காணிகளை வழங்கினால் அவர்களது வருமானம் வாழ்வதற்கு போதியதாக இருக்கும்

எனவே, தற்போது நடைபெறும் சம்பளப் பிரச்சினையுடன் மலையகப் பிரதிநிதிகள் ஆட்சியாளர்களுடன் தோட்டத் தொழிற்துறை முறைமை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். அப்பேச்சுவார்த்தையின் போது தேயிலைத் தோட்டக் காணிகளை தொழிலாளர்களுக்கிடையில் (நாட்டில் காணப்படும் இனவாதம், காணிகளை சொந்தமாக வழங்க இடமளிக்காது) நீண்டகால குத்தகைக்கு அளிக்கும் படி கோருவதுடன் தற்போது செயற்படும் அவர்களை சிறு உடைமையாளர் அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவரச் செய்ய வேண்டும். அத்திட்டம் வெற்றிகரமான திட்டமாக இருப்பதனால் அதனையே அமுல்படுத்தும் படி கோர வேண்டும். அவ்வாறு கோரின் சிங்களத் தலைவர்களினால் மறுக்க முடியாது. சொந்தமாக வழங்குங்கள் அல்லது புதிய திட்டமொன்றினைக் கோரினால் இனவாத சிங்களத் தலைமை எதிர்க்க நேரிடும். எனவே, மலையகத் தலைமைகள் உபாய ரீதியாக இப்பிரச்சினையை அணுக வேண்டும்.

பெ.முத்துலிங்கம்