மணல்வெளியில் கடற்கரையில் கதறிய குரல்கள் இன்னும் அடங்கவில்லை.
அந்த உப்பு காற்றில் கரைந்து, தொலைத்த எதையோ தேடி இன்னமும்
அங்கேதான் அலைந்து கொண்டிருக்கின்றன.

அது…
கண் முன்னே தொலைத்த பெற்றோராய் இருக்கலாம்.
காணாமல்போன பிள்ளைகளாய் இருக்கலாம்..
இன்னும் கிடைக்காத உரிமைகளாக இருக்கலாம்…
எல்லாமே அன்று அங்கேதானே தொலைந்து போயின…

போன உயிருக்காக கலங்கி நிற்பதா
மீதி உயிர் காக்க ஓடி ஒளிவதா
மூன்றடிக்கும் குறைவாய்….
பலநேரங்களில் அதுவும் இல்லாமல்
மூடியும் மூடாமல் ஓடிய நாட்கள் மறக்குமா?

உணவா…..
அது இரு வேளையா இல்லை ஒரு வேளையா…..
அவியாத அரிசியும் நிறைவுறா
சமையலும்
அதுதானே உயிர் காத்தது
அது மறக்குமா

அங்கிருக்கும் பனை மரங்கள் தலைசீவி இருக்கின்றனவே
அன்று தலை சிதறி போன பிஞ்சுகள் என்ன பாவம் அறிந்தன
யார் அதற்கு பதில் சொல்வார்…

இன்று புகைப்படங்கள் பார்க்கையில் வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை…
அன்று புகை மண்டலமாய் இருந்ததே அதற்குள்
எத்தனை உயிர்கள் கொத்துக் கொத்தாய் மடிந்தன
எண்ணியவர் யாருண்டு…

கூடவே விளையாடிக் கொண்டிருந்த நண்பன் சுருண்டு விழுந்தான்…
விறகு எடுத்து வர சென்ற தந்தை திரும்பி வராமல் ஆனார்…
எம்மை பதுங்குகுழிக்குள் தள்ளிவிட்டு வெளியே நின்ற எம் அன்னை…
வேண்டாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பலவற்றை கடந்திருக்கின்றோம்…
மறக்க மாட்டோம்…

தம்முயிர் காக்க ஓடியவர்களுள்…
அவரும் நினைத்திருந்தால் இலகுவாக அபாயவலயம்  கடந்திருக்கலாம்…
ஆனால் இருந்தார்…
தான் மக்களோடு தன் மக்களுக்காய்
இறுதி நொடி வரை தனைத்தேடி வந்த மக்களுக்கு
தன்னாலானவற்றை செய்து கொண்டு…

மக்கள் பணி செய்ய அழைக்கப்பட்டவன் நான் என்று வெறும் வார்த்தைகளாய் கூறவில்லை
அவர் வாழ்க்கையாக வாழ்ந்துவிட்டார்…
என்றும் நம் நெஞ்சங்களில்

ச.டர்சன்

இறுதிப் போரின்போது மக்களோடு மக்களாக இருந்து, அவர்களை விட்டு பிரியாமல், அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த அருட்தந்தை சரத்ஜீவன் 2009 மே மாதம் 18ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் மறைந்து 15 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு எழுதப்பட்ட கவிதை.