Photo, AFP, THE HINDU

மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது  இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல் எசமான்கள் ஆட்சியில் இருப்பார்கள் என்று பேசினார்கள். தங்களில் யார் யார் அடுத்தடுத்து ஜனாதிபதியாக வருவது என்று ராஜபக்‌ஷர்கள் ஒரு பட்டியல் போட்டு செயற்பட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பொறுத்தவரை மூத்த மகன் நாமல் ராஜபக்‌ஷவை அரியாசனம் ஏற்றுவதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது என்றபோதிலும், மகன் நாட்டின் உயர் பதவியை வகிப்பதற்கு உரிய அனுபவத்தைப் பெற்று தயாராகும் வரை  தனது சகோதரர்களில் எவராவது ஒருவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பதே அவர் தீட்டிய குடும்ப அரசியல் நிகழ்ச்சித் திட்டம். கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு அடுத்து ஜனாதிபதியாக வருவதற்கு நம்பிக்கையைக் கொண்டிருந்தவர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ.

ஆனால், ராஜபக்‌ஷர்கள் குறுகிய காலத்திற்குள் தங்களது அரசியல் ஆதிக்கத்துக்கு ஆபத்து வரும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாரகள். தங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் தங்களது குடும்பத்துக்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை வளர்த்துக்கொண்ட ராஜபக்‌ஷர்கள் ஆட்சியதிகாரம் மீது தங்களுக்கு ஒரு உரித்து இருப்பது போன்று நடந்துகொண்டார்கள்.

போர் வெற்றியைப் பயன்படுத்தி இடையறாது முன்னெடுத்து வந்த சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் என்றென்றைக்கும் தங்களுக்கு கைகொடுக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாக தோன்றிய – இலங்கை வரலாறு காணாத படுமோசமான  பொருளாதார நெருக்கடியே காரணம் என்பதை இன்னமும் கூட ராஜபக்‌ஷர்கள் ஒத்துக்கொண்டதாக இல்லை.

மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்ததாக முன்னரும் அவர்கள் கூறியபோதிலும், அண்மைக்காலமாக அது குறித்து பேசுவதை கடுமையாக தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, எந்தத் தேர்தலையும் எந்த நேரத்தில் நடத்தினாலும் பொதுஜன பெரமுன  வெற்றிபெறும். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் ராஜபக்‌ஷர்களும் அவர்களின் பரிவாரங்களும் இடையறாது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களது கட்சியின் வேட்பாளராக பசில் ராஜபக்‌ஷவை நிறுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் அவரின் அதிவிசுவாசிகளான கட்சியின்  பொதுச்செயலாளர் சாகர காரியவசம் போன்றவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.

பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்திற்குள் ஆட்சியைப் பிடிக்கக்கூடியதாக அதை கட்டியெழுப்பியவர் பசில் ராஜபக்‌ஷ என்றபோதிலும், இன்று ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களில் மக்களால் மிகவும் வெறுக்கப்படுபவராக அவரே விளங்குகிறார் எனலாம்.

இதுவரையில் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்துவரும் பசில் ராஜபக்‌ஷ தலைவராக  வருவதை அல்லது ஜனாதிபதி வேட்பாளராக அவரை நிறுத்தும் யோசனையை கட்சிக்குள் கணிசமான பிரிவினர் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவரின் தலைமையில் கட்சி தேர்தல்களில் படுதோல்வி அடையும் என்று அஞ்சும் அவர்கள் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்கள் குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் தலைவராக இருந்தால் பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மீளக்கட்டியெழுப்பமுடியும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பும் கூட நாட்டு மக்களின் உண்மையான மனநிலையை விளங்கிக்கொண்ட ஒன்றாகத் தெரியவில்லை.

அதேவேளை, இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்‌ஷ தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவது குறித்தோ அல்லது ஜனாதிபதி வேட்பாளராக வருவது குறித்தோ இதுவரையில் பகிரங்கமாக எதையும் கூறவில்லை. அவர் தொடர்பில் கட்சிக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவும் எதுவும் பேசுவதில்லை.

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு மாற்றமும் கட்சியில் மேலும் பிளவுக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. பசில் ராஜபக்‌ஷவின் தலையீடுகள் காரணமாகவே ஏற்கெனவே பல முக்கிய அரசியல்வாதிகள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். எது எவ்வாறிருந்தாலும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் தங்களுக்குள் அரசியல் ரீதியில் பிளவுபட்டுச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அதேவேளை, ஒரு ராஜபக்‌ஷவை தவிர வேறு எவரும் அந்தக் கட்சியின் தலைவராக வருவதும் கூட சாத்தியமில்லை.

மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு அதிகாரப் பதவிகளில் இருந்து இறங்கிய ராஜபக்‌ஷர்கள் தங்கள் கட்சியின் செல்வாக்கை  மீளக்கட்டியெழுப்புவதற்கு அண்மைய மாதங்களில் முன்னெடுத்த முயற்சிகள் பயனைத்தரவில்லை. இறுதியாக கொழும்பு கெம்பல் பூங்காவில் பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டத்தில் காலியாகக்கிடந்த கதிரை வரிசைகள் தங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஆதரவின் இலட்சணத்தை ராஜபக்‌ஷர்களுக்கு தெளிவாக உணர்த்தியிருக்கவேண்டும்.

இதனிடையே மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராக பதவியேற்பது குறித்த கதைகள் அடிக்கடி பேசப்படுகின்றன. கடந்த வாரமும் கூட அவ்வாறு ஒரு கதையை கேள்விப்படக்கூடியதாக இருந்தது. வழமை போன்றே சாகர காரியவாசம் அவ்வாறு பிரதமராக அவர் பதவியேற்கப்போவதில்லை என்று மறுப்பை வெளியிட்டார்.

தற்போதைக்கு பிரதமராகப் பதவியேற்கிறாரோ இல்லையோ அரசியலில் தொடர்ந்து இருக்கப்போவதாகவும் பொருத்தமான தருணம் வரும்போதே ஓய்வுபெறப் போவதாகவும் மகிந்த ராஜபக்ச  எப்போதோ கூறிவிட்டார். ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்று கடந்த வருடம் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மூத்தவர் சமல் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் ஒரு தடவை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரை அதிகாரத்தைக் கைவிட்டு இருப்பதென்பது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாத விடயம். அதிகாரத்தைச் செலுத்திக்கொண்டிருப்பதற்கு அவர்களுக்கு ஒரு அரசாங்கம் தேவைப்படலாம். ஆனால், மீண்டும் ஒரு ராஜபக்‌ஷ ஆட்சி நாட்டு மக்களுக்குத் தேவையா? மீண்டும் அவர்களின் ஆட்சி என்ற யோசனை  ஒரு கெடுதியான வேடிக்கை மாத்திரமல்ல கொடுமையான வேடிக்கையும் கூட என்று கடந்த வாரம் ஒரு அரசியல் அவதானி எழுதியிருந்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு நான்கு வருடங்களில் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு ராஜபக்‌ஷர்கள் வரக்கூடியதாக இருந்த நிலைவரத்துக்கும் மக்கள் கிளர்ச்சி அவர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்த பின்னரான தற்போதைய நிலைவரத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது.

கடந்த காலத்திலும் இலங்கை அரசியல் சில உயர் வர்க்கக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதைப் போன்று அந்தக் குடும்பங்கள் நடந்துகொண்டதாகக் கூறமுடியாது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததைப் போன்று அந்தக் குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒருபோதும் செய்ததில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரப் போக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் ஜனாதிபதியாக வந்த பிறகுதான் அந்த எதேச்சாதிகாரம் உச்ச அளவுக்குப் போனது. தங்களிடம் அதிகாரங்களைக் குவித்துவைத்திருப்பது ஏதோ தங்கள் பிறப்புரிமை என்ற சிந்தனையில் அவர்கள் நடந்துகொண்டார்கள். ஆட்சிமுறை தொடர்பிலான முக்கிய  தீர்மானங்களை சகோதரர்கள் மாத்திரமே ஒன்று கூடி எடுத்தார்கள். அதன் விளைவே நாட்டின் இன்றைய அவல நிலை.

ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் என்று ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக ராஜபக்‌ஷர்கள் விளங்கினார்கள். இந்த நூற்றாண்டின் இதுவரையான இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் கூடுதல் வருடங்கள் அவர்களே அதிகாரத்தில் இருந்தார்கள்.

2005 தொடக்கம் இதுவரையான 18 வருடங்களில் இடையில் ஒரு நான்கு வருடங்களைத் தவிர மிகுதி காலப்பகுதியில் நாடு அவர்களின் ஆட்சியிலேயே இருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ 11 வருடங்கள் நிதியமைச்சராகவும் பதவி வகித்த அதேவேளை பசில் ராஜபக்‌ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தது மாத்திரமல்ல, கோட்டபாய ஆட்சியில் இறுதியாக நிதியமைச்சராகவும் இருந்தார். அதனால் வங்குரோத்து நிலைக்கு நாட்டை இட்டுச்சென்ற   தவறான பொருளாதார முகாமைத்துவத்தை பொறுத்தவரை  ராஜபக்‌ஷர்களுக்கே முக்கிய பொறுப்பு இருக்கிறது.

இவ்வாறாக சகல முனைகளிலும் நாட்டை படுமோசமான நிலைக்குக் கொண்டுவந்து விட்டு தங்களுக்கு இருக்கும் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை அலட்சியம் செய்துகொண்டு மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து கனவு காணும் அவர்கள் இனிமேல் தங்களால் எதைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை.

ராஜபக்‌ஷர்களைப் பொறுத்தவரை, மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற பேராசை ஒரு புறமிருக்க, கடந்த கால தவறுகளுக்காக தங்களைப் பொறுப்புக் கூறவைக்கக்கூடிய ஒரு அரசாங்கம் பதவிக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்வதும் கூட முக்கியமானது. நாட்டு  மக்களின் மனநிலையையும் பொருட்படுத்தாமல் அந்தக் குடும்பத்தின்  எதிர்கால வியூகங்கள் அந்த நோக்கிலேயே அமையும் என்பதே விசித்திரமான உண்மை.

வீரகத்தி தனபாலசிங்கம்