Photo, BLOOMBERG

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவை அரசாங்கம் தற்காலிகமாக மாத்திரமே திரும்பப் பெற்றிருக்கிறது. அந்த வரைவுக்கு திருத்தங்களைச் செய்வதற்கு யோசனைகளை முன்வைப்பதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக நீதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் உயர் மதத்தலைவர்கள் உட்பட சமூகத்தின் பரந்துபட்ட பிரிவினரிடமிருந்து வரைவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெருவாரியான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஜனநாயக ரீதியானவை என்றும் நியாயபூர்வமானவை என்றும் உலகம் பூராவும் அங்கீகரிக்கப்படுகின்ற மக்கள் போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்குவதற்கு வகைசெய்யக்கூடியதாக விசாலமான அம்சங்களை வரைவு கொண்டிருப்பதே இந்தக் கடும் எதிர்ப்புக்கான காரணமாகும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கள் நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தவருக்கு இடர்பாடுகளைக் கொடுக்கும்போது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்கவே செய்யும். மக்கள் போராட்டங்களினால் தோன்றக்கூடிய நெருக்கடி நிலைவரத்தை கையாள அரசாங்கம் அதன் படைக்கல களஞ்சியத்தை தயார் செய்கிறது போன்று தெரிகிறது. அதில் பிரதானமான ஆயுதங்களில் ஒன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாகும்.

அரசாங்கங்கள் அவற்றின் அதிகாரத்தையும் நிலைகளையும் பாதுகாப்பதற்குச் சட்டத்தை பயன்படுத்துவதில் அல்லது சட்டத்தை மீறுவதில் நாட்டம் காட்டுவது என்பது இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியேகமானது அல்ல. இஸ்ரேல், பாகிஸ்தான் போன்று இலங்கையில் இருந்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபட்டவையாக இருக்கும் ஏனைய நடுகளிலும் இதை காணக்கூடியதாக இருக்கிறது. அவை அந்தப் போக்கின் வளர்ச்சியில் வேறுபட்ட கட்டங்களில் இருக்கின்றன. இஸ்ரேல் அதில் உயர்ந்த மட்டத்தில் இருக்கிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை, மக்கள் பெருமளவுக்கு நேரடியான பாத்திரத்தை வகிக்க வேண்டியிருக்கிறது போல தோன்றுகிறது. தங்களது நல்வாழ்வு மீது அக்கறை காட்டப்படாமல் இருப்பதாக அல்லது நல்வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் உணருகின்ற கொந்தளிப்பான சூழ்நிலைகளில் தாங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு, கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் அமைதிவழியில் வீதியில் இறங்குகிறார்கள்.

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பணவீக்கம் 45 சதவீதத்தையும் தாண்டிவிட்டது. வருடாந்தம் பத்து இலட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

“ஆழமான அரசியல் துருவமய வேறுபாடுகள் மற்றும் நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான இழுபறி காரணமாக உள்நாட்டு யுத்தம் ஒன்று மூளக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது பெரும் கவலை தருகிறது. பஞ்சாப்பில் மே 14 மாகாண சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தவறினால் வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுத்திருந்த எச்சரிக்கை நாட்டில் நிலைவரங்கள் நன்றாக இல்லை என்பதை காட்டுகிறது” என்று போராசிரியர் மூனிஸ் அஹ்மர் எழுதியிருக்கிறார். இலங்கையைப் போன்றே பாகிஸ்தானிலும் தேர்தல்களை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.

“பாகிஸ்தானின் வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மட்டத்தில் நெறிமுறையும் பண்புகளும் பாரதூரமான அளவுக்கு சீரழிவுக்கு உள்ளாகியிருக்கின்றன. அரச நிறுவனங்களின் சீர்குலைவில் இது பிரதிபலிக்கிறது. பிரதம நீதியரசரினதும் ஏனைய நீதிபதிகளினதும் உத்தரவுகளை மதித்துநடக்க பிரதமர் தவறுகிறார் என்றால், தேர்தல் ஆணைக்குழு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க செயற்படாமல் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுகிறது என்றால் தடுத்து நிறுத்தமுடியாத அளவுக்கு நிலைவரம் சென்றுவிட்டது என்பதே அர்த்தமாகும்.

“நாடாளுமன்றம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு மதிப்பளிக்காதபோது, பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு முரணான தங்களது நிலைப்பாடுகள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாதபோது நாட்டின் உயர்வாழ்வு நிச்சயம் ஆபத்துக்குள்ளாகிறது” என்றும் பேராசிரியர் அஹ்மர் கூறுகிறார்.

இது இலங்கையினதும் பாகிஸ்தானினதும் நிலைவரங்களில் உள்ள சமாந்தரங்களை மேலும் உணர்த்தி நிற்கிறது.

இஸ்ரேல் போராட்டங்கள்

இஸ்ரேலில் இடம்பெறுகின்ற மக்கள் போராட்டங்கள் எனக்கு ‘அறகலயவை ‘ நினைவுபடுத்துகின்றன. அமெரிக்க யூத கமிட்டியின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் அந்த நாட்டுக்கு நான் விஜயம் செய்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இளம் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களதும் பேராசிரியர்களும் அன்றையதினம் நடக்கவிருந்த போராட்டத்தில் பங்குபற்றுமாறு கோரும் துண்டுப்பிரசுரங்களை வீதியில் போவோர் வருவோரிடம் விநியோகித்துக்கொண்டிருந்தனர்.

இஸ்ரேல் அரசாங்கம் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அதற்கு அனுகூலமான முறையில் சட்டங்களை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு வசீகரமும் அனுபவமும் உடைய ஒரு தலைவர். ஆனால், அவர் இப்போது நாட்டு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கும் ஒருவராக மாறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அதனால் அவர் நீதிமன்றங்கள் தன்னை குற்றவாளியாகக் காணக்கூடியதாக அமைந்திருக்கும் சட்டங்களை மாற்றியமைப்பதற்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தியிருக்கிறார். நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போது கடைப்பிடிக்கப்படும் சுயாதீனமான செயன்முறைக்கு பதிலாக அந்த நியமனங்களை செய்யும் அதிகாரங்களை அரசாங்கத்துக்கு வழங்கக்கூடியதாக சட்டத்தை மாற்றுவதற்கும் அவர் முயற்சிக்கிறார்.

நீதித்துறை சீர்திருத்த திட்டம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் நெதான்யாகுவுக்கும் இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கடும்போக்கான கூட்டணியாக அமைந்திருக்கும் அவரின் அரசாங்கத்தின் பங்காளிகளுக்கும் நீதிபதிகளை நியமிப்பதில் இறுதி அதிகாரத்தைக் கொடுக்கும்.

அந்தத் திட்டம் நெதான்யாகுவின் நேசக்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்துக்கு நீதிமன்றங்களின் தீர்மானங்களை மாற்றியமைப்பதற்கும் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கு இருக்கும் ஆற்றலை மட்டுப்படுத்துவதற்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். இது இலங்கையின் கடந்த வருடத்தைய நிகழ்வுப்போக்குகளை நினைவுபடுத்துவதாக அமைகிறது. உத்தேச மாற்றங்களை வர்த்தக தலைவர்கள் உட்பட இஸ்ரேலிய சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிார்கள்.

இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்படுமானால் கடமைக்கு சமுகமளிக்கப்போவதில்லை என்று இஸ்ரேலிய றிசேர்வ் படைகள் அச்சுறுத்தியிருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களின் அதிகாரங்களை ஒழுங்கமைக்கும் ‘தடுப்புக்கள் மற்றும் சமப்படுத்தல்கள்’ ஏற்பாடுகள் போன்ற ஜனநாயகக் கோட்பாடுகளைப் பற்றி அக்கறைப்படாத ஒரு அரசாங்கத்துக்காக தாங்கள் சண்டையிடுவதற்கு விரும்பவில்லை என்று அந்தப் படைகள் கூறியிருக்கின்றன.

அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்பாலும் மதசார்பற்ற, மத்தியதர வர்க்க இஸ்ரேலியர்கள் கிரமமாக ஆர்ப்பாட்டங்களில் இணைந்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்த அரசாங்கத்துக்கு எதிராக  இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கி செய்த கிளர்ச்சியைப் போன்று கடந்த பதினெட்டு வாரங்களாக இஸ்ரேலில் போராட்டங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது தங்களது அரசாங்கத்துக்கு எதிராக போராடுவதற்கு வீதிகளில் இறங்கமுடியும் என்று  மக்கள் உணரும்  ஜனநாயகத்தின் ஒரு அறிகுறியாகும். இலங்கையில் நடந்ததைப் போன்று இஸ்ரேலிய நகரங்களால் மக்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டங்களை நடத்துகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் நெதன்யாகு அரசாங்கத்துக்கு தங்களது ஜனநாயகத்தை மலினப்படுத்தக்கூடியது என்று போராட்டக்காரர்கள் நம்பும் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிகாரம் இருக்கிறது. பெரும்பான்மையின் தீர்மானங்களுக்கு எதிராகவும் கூட எதிர்ப்பை வெளிக்காட்டிப் போராடுவதற்கான உரிமை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தினால் பாதுகாக்கப்படும் ஒரு அடிப்படை மனித உரிமையாகும். இந்தப் பிரகடனத்தில் பாகிஸ்தான், இஸ்ரேல், இலங்கை கைச்சாத்திட்டிருக்கின்றன. இதுவரையில் இஸ்ரேலிய அரசாங்கம் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்ககான மக்களின் உரிமையை மீறவில்லை.

சர்வதேச நெருக்குதல்

எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கூட  குற்றச்செயலாக்கி பயங்கரவாதத்துக்கு விசாலமான வியாக்கியானத்தைக் கொடுப்பதே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்  தொடர்பில் உள்ள பிரதான பிரச்சினையாகும். தொழிற்சங்க நடவடிக்கை உள்ளடங்கலாக மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்தினதும் பொருளாதாரத்தினதும் உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைவதாகக் கூறி அவற்றை பயங்கவாதத்துக்கு சமமானவையாக்கி ஒடுக்குவதற்கான மேலதிக அதிகாரங்களை சட்டமூல வரைவு அரசாங்கத்துக்கு வழங்குகிறது. கடந்த வருடம் அறகலயவை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு இதுவே.

‘முறைமை மாற்றம்’ ஒன்றையும் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுவந்ததற்கு பொறுப்பான சகல தவைர்களும் பதவிவிலகவேண்டும் என்றும் கோரிநின்ற போராட்டக்காரர்களைக் கைதுசெய்வதற்கு (பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பதிலீடு செய்ய உத்தேசிக்கின்ற) பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த வருடமும் நெருக்கடி தொடரும் என்றும் அது அடுத்த வருடமும் தொடர்ந்து அதற்கு அப்பாலும் செல்லும் என்றும் உலக வங்கி மிகவும் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி வறுமையை 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக்கி இரட்டிப்பாக்கியிருக்கிறது. குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு  இடர்பாடுகளின் விளைவாக அடுத்த சில வருடங்களுக்கு வறுமை 25 சதவீதத்துக்கு மேலாக நீடிக்கும் என்று உலக வங்கி கூறுகிறது. வறுமைக் குறைப்பிலும் மனித மூலதன அபிவிருத்தியிலும் பல வருடங்களாக அடையப்பெற்ற பயன்களை பொருளாதார நெருக்கடி மறுதலையாக்கியிருக்கிறது. நெருக்கடி மேலும் சுமார் 25 இலட்சம் மக்களை வறியவர்களின் அணியில் சேர்த்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் எதிவரும் மாதங்களில் மக்கள் போராட்டங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளும் இடம்பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இதை எதிர்கொள்வதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசாங்கம் தயார்செய்கிறது. சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள்,தொழிற்சங்கங்கள் மற்றும் மதத்தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பாதுகாப்புப் படைகளையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தி அறகலயவை ஒரு சில நாட்களுக்குள் நிர்மூலம் செய்த அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவை மறுசீரமைப்பதற்கு முன்வைக்கப் பட்டிருக்கும் யோசனைகளை கருத்தில் எடுப்பது சாத்தியமில்லை.

அக்கறை கொண்ட தரப்பினர் சட்டமூலத்துக்கு திருத்த யோசனைகளை மே 31 வரை சமர்ப்பிக்கலாம் என்று நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச அழைத்திருக்கின்ற போதிலும் சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மதத் தலைவர்கள் போன்ற உள்நாட்டு தரப்புகளின் யோசனைகளை அரசாங்கம் அக்கறைகாட்டி செயற்படும் என்பது சாத்தியமில்லை.

மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்தை பெரும் நெருக்கடிக்கு  உள்ளாக்கியிருக்கும் இஸ்ரேலின் ஜனநாயக சமுதாயத்தைப் போலன்றி இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் பொருளாதார சலுகையை இழக்கக்கூடிய ஆபத்து போன்ற சர்வதேச நெருக்குதல்களே அரசாங்கத்தை வழிக்குக்கொண்டுவர உதவமுடியும்.

கலாநிதி ஜெகான் பெரேரா