Photo, ASSOCIATED PRESS

மதிப்புக்குரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே,

இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவருகின்ற ஒரு ஊடகவியலாளன் என்கிற வகையில் இலங்கையில் ஊடகத்துறையின் சகல உறுப்பினர்களினதும் ஆழமான அக்கறைக்குரிய ஒரு பிரச்சினை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன்.

நாடாளுமன்றத்தில் 2023 ஏப்ரில் 25 உங்கள் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீது அதன் பல ஏற்பாடுகள் தொடர்பில் பரவலான கண்டன  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு தொடக்கம் பொது மகஜர் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கும் 450 இற்கும் அதிகமான இலங்கையின் முன்னணி குடிமக்கள், அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வரை பெருவாரியான தரப்புகளிடம் இருந்து இந்த விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் எதிர்மறையான பெருமளவு அம்சங்களை சுட்டிக்காட்டி  இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெயர்பெற்ற பல அமைப்புக்கள், நிறுவனங்களிடம் இருந்தும் ஊடக அறிக்கைகள் வந்திருக்கின்றன. மேலும் பல பத்திரிகைகள் சட்டமூலத்தை கண்டனம் செய்யும் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதுடன் ஆசிரிய தலையங்கங்களையும் தீட்டியுள்ளன.

சட்டமூலத்துக்கு எதிரான சகல விமர்சனங்களையும் இங்கு நான் விளக்கிக்கூற முன்வரவில்லை. ஊடகங்களில் அவை பரவலாக வெளியாகியிருக்கின்றன. ஆனால், இலங்கைச் சமுதாயத்தின் பொறுப்புவாய்ந்த பிரிவுகளினால் சட்டமூலத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்   நியாயபூர்வமான விமர்சனங்களுடன் நான் உடன்படுகிறேன்.

குறிப்பாக ஊடகங்களுடன் தொடர்புடைய ஏற்பாடுகளே எனது அக்கறைக்குரியவை. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அதன் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படுமாக இருந்தால், பொதுவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் அன்றாட கடமைகளையும் கடுமையாக பாதித்து கட்டுப்படுத்தும். இந்த சட்டமூலம் ஊடகவியலாளர்களின் தலைக்கு மேலாக தொங்கிக்கொண்டிருக்கும் வாளைப் போன்றதாகும்.

எனது செய்தி அறிக்கைகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் அரசினால் பழிவாங்கப்பட்டதன் விளைவாக பிறந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில், இந்தப் பிரச்சினையின் விளைவுகள் பற்றி நான் முழுமையாக அறிவேன். பதவியில் இருக்கக்கூடிய அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களின் எழுத்துக்களைப் பாதகமான முறையில் தவறாக வியாக்கியானம் செய்வதில் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் மிகுந்த திறமையுடையவர்கள் என்பதை எனது அனுபவத்தின் மூலமாக நான் அறிவேன். அதனால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமானால் அது நாட்டில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான ஊடகத்துறைக்கு சாவு மணி அடிக்கக்கூடும்.

ஜனாதிபதி அவர்களே, இலங்கையை அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றி பொருளாதார மீட்சிக்கான பாதையில் வழிநடத்துவதில் நீங்கள் வழங்கும் பாராட்டத்தகு தலைமைத்துவத்துக்காக அண்மைக்காலத்தில் பலரின் மதிப்பை நீங்கள் சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கொடுமையான சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் அந்த மதிப்பை தயவுசெய்து கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

மேலும், பெருமளவு அனுபவத்தைக் கொண்ட ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில், உங்களுக்கும் உங்களது அரசாங்கத்துக்கும் எதிராக பல்வேறு சக்திகளை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல சர்ச்சை ஐக்கியப்படுத்துகின்றது என்பதை நீங்கள் அவதானிக்காமல் இருக்கமுடியாது.

இந்த எதிர்மறையான அபிப்பிராயங்களுக்குள் உங்களது நேர்மறையான சாதனைகள் மூழ்கடிக்கப்படுகின்றன. இலங்கை இன்று வீழ்ந்துகிடக்கும் பொருளாதார சகதியில் இருந்து அதை மீட்டெடுப்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் ஆற்றில் பாரதூரமாக மலினப்படுத்தப்படக்கூடும் என்பது கவலை தருகிறது. அது உண்மையில் பெரும் துன்பியலாக இருக்கும்.

அதனால் விவகாரங்களை அவசரமாக மீளாய்வு செய்து நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சயர்ப்பிக்கும் யோசனையைக் கைவிடுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுத்து இந்தக் கடிதத்தை நிறைவுசெய்கிறேன்.

தயவுசெய்து சகல வகையான நியாயபூர்வமான அபிப்பிராயங்களையும் கவனத்தில் எடுத்து கலந்தாலோசித்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதும் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்படக்கூடியதுமான ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரையுங்கள்.

இலங்கையை கடவுள் ஆசீர்வதிப்பாராக.

உண்மையுள்ள

டி.பி.எஸ். ஜெயராஜ்