Photo, SELVARAJA RAJASEGAR

“முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் இல்லை.

“அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள். அப்போதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை.

“பிறகு அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள். அப்போதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு யூதன் இல்லை.

“பிறகு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள். எனக்காக பேச எவரும் இருக்கவில்லை.”

– கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நாஜி சிந்தனைகளையும் தீவிர வலதுசாரி இயக்கங்களையும் ஆதரித்தவரும் பிறகு ஹிட்லரின் ஆட்சி புரட்டஸ்தாந்து திருச்சபையில் செய்த தலையீடுகளை வெளிப்படையாகக் கடுமையாக எதிர்த்தமைக்காக சிறையிலும் சித்திரவதை முகாமிலும் அடைக்கப்பட்டவருமான ஜேர்மனிய போதகர் மார்ட்டின் நிமொல்லர் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு கூறிய வார்த்தைகள் இவை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலமாக தமிழர்களுக்கு எதிராக கொடூரமான முறையில் பிரயோகிக்கப்பட்டபோது விரல் விட்டு எண்ணக்கூடிய சில மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காட்டிய எதிர்ப்பைத் தவிர, தென்னிலங்கையில் பொதுவில் காணப்பட்ட மௌனத்தையும் பிறகு கடந்த வருடம் ‘அறகலய’  மக்கள் போராட்ட இயக்கத் தலைவர்களுக்கு எதிராக அதே சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியபோது எழுந்த எதிர்ப்பு ஆரவாரக் குரல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அந்த வார்த்தைகளே நினைவுக்கு வந்தன.

ஆனால், அண்மைய அனுபவங்களுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம்  துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக தென்னிலங்கையில் கிளம்பியிருக்கும் மிகுந்த முனைப்புடன் கூடிய எதிர்ப்பு பெரிதும் வரவேற்கத்தக்க – ஆரோக்கியமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகிவந்திருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act.)  44 வருங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தீவிரமடையத் தொடங்கிய தமிழ் ஆயுதப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் தற்காலிகமானதாக 1979ஆம் ஆண்டில்  கொண்டுவரப்பட்டு பிறகு 1982ஆம் ஆண்டு நிரந்தரமானதாக்கப்பட்ட அந்தக் கொடிய சட்டத்துக்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்வைத்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு (Anti – Terrorism Bill) இப்போது மனித உரிமைகள் அமைப்புக்கள், சிவில் சமூகம், சட்டத்துறை சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புக்களிடம் இருந்து கிளம்பியிருப்பதைப் போன்ற எதிர்ப்புக்கு வேறு எந்தவொரு சட்டமூலமும் அண்மைய தசாப்தங்களில் முகங்கொடுத்திருக்கும்  என்று கூறமுடியாது.

எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களின் வேண்டுகோள்களைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதிப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கடந்தவாரம் அறிவித்தார். புதிய சட்ட மூலம் மார்ச் 23 அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதற்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் போதுமான கலந்தாலோசனை இல்லாமல் சட்டமூலம் வெளியிடப்பட்டிருப்பது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.

நாடாளுமன்றத்தில் சட்ட மூலத்தின் முதலாவது வாசிப்பு ஏப்ரில் நான்காம் திகதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சட்ட  மூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் ஏப்ரில் 6ஆம் திகதி தொடங்கிய மூன்று வாரகால நீதிமன்ற விடுமுறை காரணமாக பிரச்சினைகளை எதிர்நோக்குவதைத் தவிர்க்கும் நோக்குடன் நாடாளுமன்றத்தில் அதை சமர்ப்பிப்பதை அரசாங்கம் தாமதிப்பதாக விஜேதாச கூறினார். ஏப்ரில் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் சட்ட மூலம்  சபையில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக பொது விவாதத்துக்கும் கலந்துரையாடலுக்கும் வசதியாக அதன் வரைவு பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று கடந்த மாதமே சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதங்களை எழுதியது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக சட்ட வரைவை பொது விவாதத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை. அதற்கான காரணத்தை சட்டமூலத்தின் ஏற்பாடுகளை வாசிக்கும்போது தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பல அம்சங்கள் அபாயகரமானவை. பயங்கரவாதத் தடைச்சட்டமாக இருந்தாலென்ன வேறு  கிறிமினல் சட்டங்களாக இருந்தாலென்ன அவை பரந்தளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த இலங்கையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சட்ட மூலத்தின் பல ஏற்பாடுகள் குறித்து கடுமையான ஐயம் எழுகிறது. அதில் உள்ள பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம் மிகவும் விசாலமானதாக இருக்கிறது என்று கடந்த இரு வருடங்களாக இலங்கை சடடத்தரணிகள் சங்கத்தின் தலைவராக இருந்த சாலிய பீரிஸ் கடந்த வாரம் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். கடந்த வருடத்தைய  மக்கள் கிளர்ச்சியின்போது போராட்டக்கார்களின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த அவர் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக பரந்தளவிலான இயக்கம் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் சட்டமூலத்தின் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டமூலம் ஜனநாயக ரீதியான எதிர்ப்பையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் நசுக்கி (பொருளாதார மீட்சியை சாதிப்பதற்கு அவசியமானது என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுதலாக நம்பும்) எதேச்சாதிகார ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் வரையப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதை அரசாங்கம் தாமதித்திருக்கின்ற போதிலும் பரந்தளவிலான ஒரு கலந்துரையாடலுக்கு அதை அனுமதிப்பதில் அரசாங்கம் எந்தளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பது சந்தேகத்துக்குரியதே. கடுமையான  விமர்சனங்கள் கிளம்பியிருப்பதற்கு மத்தியிலும் கூட சட்டமூலத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமைச்சர் விஜேதாச கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினை. பயங்கரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட உலகளாவிய கருத்தொருமிப்பை இதுவரையில் எட்ட முடியவில்லை.

இத்தகைய பின்னணியில் சட்டமூலம் குறித்து நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch ) வெளியிட்ட நீண்டதொரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் கவனத்தை பெரிதும் தூண்டுபவையாக அமைந்திருக்கின்றன.

“உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை திட்டமிட்டமுறையில் மீறுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும். சட்ட மூலத்தை அரசாங்கம் திரும்பப்பெற்று, பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் தராதரங்களை மதித்துப் போற்றுவதாக அமைவதை கலந்தாலோசனைகள் ஊடாக உறுதிசெய்யவேண்டும்.

“தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்று வந்த துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிளம்பிய கண்டனங்களையடுத்து மேம்பட்ட சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் கையாளுவதற்குப் பதிலாக புதிய சட்ட மூலம் சொத்துச் சேதம், களவு, கொள்ளை போன்ற குற்றச் செயல்களையும் ஒன்றுகூடுவதற்கான  சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கியதாக பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை விசாலப்படுத்துகிறது.

“அமைதியான முறையில் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை இலக்கு வைப்பதற்கும் கொடூரமான செயன்முறைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தை சட்டமூலம் அனுமதிக்கும். எதிர்ப்பியக்கத்தை ஒடுக்குவதற்கு அண்மைக்காலமாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும்  ஆர்ப்பாட்டக்காரர்களை நியாயமற்ற முறையில் தடுத்துவைப்பதற்கு  தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம்  துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற போக்கையும் நோக்கும்போது புதிய சட்டமும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய வெளிப்படையான பேராபத்தை உணரக்கூடியதாக இருக்கிறது.

“சட்டமூலம் சில முன்னேற்றகரமான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருக்கின்ற போதிலும் துஷ்பிரயோகத்துக்கு உதவக்கூடிய ஏற்பாடுகளும் இருக்கின்றன. சான்று இல்லாமல் மக்களை தடுத்து வைப்பதற்கும் தெளிவாக வரையறுக்க முடியாத உரைகளை குற்றச் செயலாக்குவதற்கும் மக்கள் ஒன்றுகூடுவதையும் அமைப்புக்களையும் நீதித்துறையின்  மேற்பார்வை இல்லாமல் நியாயமற்ற முறையில் தடைசெய்வதற்கும் சட்டமூலம் ஜனாதிபதியையும் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அனுமதிக்கும்.

“இந்தச் சட்டமூலம் பெருமளவுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது 2018ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மீதான அக்கறைகளின் நிமித்தம் முன்வைக்கப்பட்ட  விமர்சனங்களை அடுத்து 2018 சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை. புதிய வரைவில் திருப்தி வெளியிட்டிருக்கும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தற்போதைய வடிவத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அண்மையில் கூறியிருந்தார்.

“தங்களைப் பொறுத்தவரை நியாயமான காரணங்கள் இருப்பதாக பொலிஸாரும் இராணுவத்தினரும் நம்பினால் எவரையும் தடுத்துநிறுத்தி விசாரிக்கவும் தேடுதல் நடத்தி கைது செய்யவும் எந்தவொரு ஆவணத்தையோ பொருளையோ பிடியாணையின்றி கைப்பற்றவும் அவர்களுக்கு சட்டமூலம் பரந்தளவு அதிகாரங்களை வழங்குகிறது. இராணுவத்தினரால்  கைது செய்யப்படும் எவரையும் பொலிஸாரிடம் கையளிப்பதற்கு அவர்களுக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பயிற்சி இல்லாத இராணுவத்துக்கு அத்தகைய அவகாசத்தைக் கொடுப்பது கைதிகள்  துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்தை உண்டாக்கும்.

“பொலிஸ் அல்லது இராணுவத்தின் ஆலோசனையின் பேரில் எந்தவொரு இடத்தையும் ‘தடைசெய்யப்பட்ட பகுதியாக’ ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்த முடியும். இந்த ஏற்பாடு 2022 கொழும்பில் இடம்பெற்றதைப் போன்ற பாரிய அமைதிவழிப் போராட்டங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாக தோன்றுகிறது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு அல்லது அதற்கு தயாராகுமாறு தூண்டுவதாக விளங்கிக்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு பேச்சையும் குற்றச்செயலாக்கக்கூடியதாக பரந்தளவு அதிகாரங்களை அரசாங்கத்துக்கு சட்டமூலம் வழங்குகிறது.

“தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரினால் கைச்சாத்திடப்படும் உத்தரவுகளின் பேரில் ஒரு வருட காலத்துக்கு தடுத்துவைக்கமுடியும். ஆனால், புதிய சட்டமூலம் தடுப்புக்காவல் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்குகிறது. இது பாரதூரமான துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. சந்தேகநபரை விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவலில் இருந்து தங்களின் காவலுக்கு பொலிஸாரினால் திரும்ப எடுத்துக்கொள்ளமுடியும். சந்தேகநபரை ‘எந்தவொரு அதிகாரியின்’ காவலுக்கும் பாதுகாப்பு செயலாளரினால் மாற்றமுடியும். இது சந்தேகநபர் சித்திரவதைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கும்.

“சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை தாமதிப்பதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு சட்டமா அதிபர் தீர்மானிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ‘புனர்வாழ்வு’ அளிப்பதற்கான திட்டங்களுக்கு ஒழுங்குவிதிகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு புதிய சட்டமூலம் வழங்குகிறது. பிறகு சட்டமா அதிபர் எந்தவொரு குற்றச்செயல் தொடர்பிலும் குற்றவாளியாகக் காணப்படாத நபர் மீதும் புனர்வாழ்வை திணிக்கமுடியும். இதேபோன்ற ஒழுங்குவிதிகளை 2021ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது

“மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யக்கூடியதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் வரையப்படும் வரை தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் முழு அளவிலான முடக்கத்தை (Moratorium) செய்யவேண்டும்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த இலங்கையின் வரலாற்றினதும் அமைதிவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளினதும் வெளிச்சத்திலேயே புதிய சட்ட மூலத்தை நோக்கவேண்டியது அவசியமாகும். இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு வாணிப முன்னுரிமைகள் மற்றும் ஆதரவு மூலம் ‘வெகுமதி’ வழங்கப்படமாட்டாது என்பதை இலங்கைக்கு அதன் சர்வதேச பங்காளிகள்  தெட்டத்தெளிவாக உணர்த்தவேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை,  சட்டமூலம் வரவேற்கத்தக்க சில புதிய பாதுகாப்பு செயன்முறைகளை உள்ளடக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பொலிஸாருக்கு அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சான்றாக முன்வைக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படப்போவதில்லை. பெண் சந்தேகநபர்களை பெண் அதிகாரிகளே சோதனை செய்யவேண்டும். கைதுக்கான காரணத்தை கூறுவதை வலியுறுத்தும் புதிய நடைமுறையும் உள்ளது. தங்களால் விளங்கிக்கொள்ள முடியாத மொழியில் இருக்கக்கூடிய ஆவணத்தின் மொழிபெயர்ப்பை சந்தேகநபர்களினால் பெற்றுக்கொள்ளமுடியும். தடுப்புக்காவலில் உள்ள நபர்களை 14 நாட்களுக்கு ஒரு தடவை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவேண்டும். கைதி சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக தோன்றினால் மாஜிஸ்திரேட் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் சட்டமூலம் விளக்கியிருக்கிறது.

எது எவ்வாறிருந்தாலும், தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானதாக புதிய சட்டமூலம் அமைந்திருக்கிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு எதிரான எந்த வகையான போராட்டத்தையும் பயங்கரவாதச் செயல் என்று வியாக்கியானப்படுத்துவதற்கு  வகைசெய்வதாக  அது அமைந்திருக்கிறது.

அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக கேள்வியெழுப்புவதையோ அல்லது விமர்சிப்பதையோ பயங்கரவாத செயல் என்று வியாக்கியானப்படுத்த முடியும். அமைதிவழிப் போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உட்பட அரசாங்கம் ஒன்றை பதவி விலகுமாறு அல்லது தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான  ஜனாதிபதியொருவரை வீட்டுக்கு செல்லுமாறு கோருவது முற்றிலும் நியாயபூர்வமானதே. ஆனால், புதிய சட்டமூலத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி அவற்றை பயங்கரவாத செயல்களாக வர்ணிக்க முடியும்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்தபோது அது தமிழ் தீவிரவாத இயக்கங்களின் பிரிவினைவாத ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதையே முற்றிலும் நோக்கமாகக் கொண்டது என்று கூறி அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தென்னிலங்கையில் எதிர்ப்புக் கிளம்பாதிருப்பதை உறுதிசெய்துகொண்டது. அந்தச் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட பல ஒழுங்குவிதிகள் குடியியல் உரிமைகளையும்  சுதந்திரங்களையும் மீறுபவையாக இருந்தபோதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் பேரில் தென்னிலங்கை அமைதியாக இருந்தது.

அதேபோன்றே இப்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்படுகின்ற வேளையில் பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாத அரசியல் உறுதிப்பாட்டுக்குப் பாதகமாக அமையக்கூடியவை என்று மக்களின் நியாயபூர்வமான அமைதிவழிப் போராட்டங்களை வர்ணித்து அரசாங்கம் தென்னிலங்கையை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கிறது.

ராஜபக்‌ஷ ஆட்சியில் படுமோசமான ஊழல் முறைகேடுகளுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பானவர்களாக  இருந்த அரசியல்வாதிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு பிறகு விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும்  மீண்டும் அதிகாரத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் புதிய சட்டமூலத்தின் தீவிர ஆதரவாளர்களாக குரல்கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்