வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத் தேடி உட்கார்ந்தவாறு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டநேரத்தின் பின்னர் வயதான ஒரு ஐயாவும் இளைஞனொருவனும் வருவதைக் கண்டேன். நான் தேடி வந்தவர் இவர்தான் என்பதை கண்டுணர்ந்து அவரோடு பேச்சுகொடுக்க ஆரம்பித்தேன்.
மூச்சிரைத்தபடி எனது அருகில் உட்கார்ந்தார். “இப்போதெல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியாது தம்பி. கொஞ்சம் நடந்தாலே மூச்சிரைக்குது. நீண்டநேரம் நிற்கவும் முடியாது.” இரண்டு கைகளையும் பின்பக்கமாக தரையில் ஊன்றியவாறு கால்களிரண்டையும் நீட்டி உட்கார்ந்தார்.
ஏற்கனவே, தொலைபேசி வழியாக செல்வரத்தினம் ஐயாவுடன் பேசியதால் நேரடியாக விசயத்துக்கே வந்தேன். எப்போ ஐயா உங்கள கைதுசெய்தாங்க? எப்ப விட்டாங்க?
“தம்பி, என்னை ரெண்டு தரம் பிடிச்சவங்க. முள்ளிவாய்க்கால் வழியா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போய் முகாமல்ல இருந்தப்போ ரி.ஜ.டி. ஆக்கள் என்னை பிடிச்சவங்க. இரண்டு நாள் விசாரணை முடிஞ்ச பிறகு விட்டவங்க. நான் இயக்கத்துல எந்த பிரிவிலயும் எந்த வேலையும் செய்ததில்ல. அவங்க (விடுதலைப் புலிகள்) பங்கர் வெட்ட கூப்புடுவினம். அதுக்குப் போய் உதவி செய்திருக்கன். அவ்வளவுதான். முகாம்ல இருந்து இங்க வீட்டுக்கு வந்த பிறகு வெள்ளை வான் ஒன்டுல ரி.ஐ.டி. ஆக்கள் வந்தவங்க. திரும்பவும் விசாரிக்கனும் என்று கூட்டிட்டுப் போனவங்க 12 வருஷம் கழிச்சுத்தான் விட்டவங்க. 58 வயசுல போய் 70 வயசுல வெளியில வந்திருக்கன் தம்பி. எந்தக் குற்றச்சாட்டும் என் மீது சுமத்தல.”
காய்ந்த நிலத்தையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவர் மகனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.
“கடைசி காலம் வரைக்கும் இவங்களின்ட தயவுலதான் வாழனும். செத்தாலும் இவங்கதான் தூக்கி அடக்கம் செய்யனும். என்னால தனியா ஒன்டுமே செய்ய முடியுதில்ல. இப்படியே பாரமா இருந்திட்டு செத்திட வேண்டியதுதான்.”
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி வாழ்க்கையைத் தொலைத்த பலருள் செல்வரத்தினமும் ஒருவர். முதுமையான வயதில் குடும்பத்தினரோடு வாழவேண்டிய செல்வரத்தினம் போன்ற பலர் இந்தக் கொடூரச் சட்டத்தால் தங்களுடைய எஞ்சிய காலத்தை சிறையிலோ அல்லது விடுதலையின் பின்னர் இறுதி கொஞ்ச காலத்தை உபாதைகளுடனோ கழிக்கவேண்டியிருக்கிறது. குடலில் ஏற்பட்டிருக்கும் தீவிர புண் காரணமாக தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு நகரத்தை நோக்கி செல்வரத்தினத்தால் போகவேண்டியிருக்கிறது. “இன்னும் எத்தனை நாள்தான் வாழப்போறன் தம்பி, அதுவரைக்குமாவது இவங்க யாருக்கும் தொந்தரவில்லாம வாழ்ந்திட்டுப் போயிரனும்.”
* பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செல்வரத்தினத்துடனான முழுமையான நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.