Photo, AFP
எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் சகல சமூகங்களையும் சேர்ந்த குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் அதில் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிய பிறகு லண்டனில் இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் நெவில் டி சில்வா அவருடன் கலந்துரையாடியபோது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ன் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்னரையும் விட கடுமையான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பிரஸ்தாபித்தாராம்.
முன்னைய இலங்கை அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமிப்பது குறித்து அவர் கேட்டபோது அதற்கு பதிலளித்த விக்கிரமசிங்க, “காலஞ்சென்ற சேர் டெஸ்மண்ட் டி சில்வா அத்தகைய ஆணைக்குழு தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்தார். நான் பிரதமராக இருந்தபோது சட்டமூலம் ஒன்றை தயாரித்து 2018 செப்டெம்பரில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தேன். ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதற்கு அப்பால் என்னால் போக முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
தன்னை பதவி நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு சதிமுயற்சியொன்றை முன்னெடுத்த காரணத்தினாலேயே தன்னால் ஆணைக்குழுவை அமைக்கும் செயன்முறைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததாக டி சில்வா சண்டே ரைம்ஸ் (25/9) பத்திரிகையில் தனது பத்தியில் எழுதியிருக்கிறார்.
கண்டியில் பிறந்தவரான சேர் டெஸ்மண்ட் டி சில்வா பிரிட்டிஷ் குற்றவியல் சட்ட நிபுணர். சியராலியோன் நாட்டில் ஐக்கிய நாடுகளின் பிரதான போர்க்குற்ற வழக்குத்தொடுநராக பணியாற்றியவர். ஆட்கள் கடத்தல் மற்றும் காணாமல்போகச் செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2013 ஆகஸ்டில் நியமிக்கப்பட்ட நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு ஆலோசகர் என்ற வகையில் சேர் டெஸ்மண்டின் சேவைகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டு 2016 அக்டோபரில் பிரதமர் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பற்றிய விவகாரம் கையாளப்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட பரணகம ஆணைக்குழு வழக்கு தொடுக்கும் ஆணை இல்லாத தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவா அல்லது வழக்கு தொடுக்கும் ஆணையுடன் கூடிய சியராலியோன் பாணியிலான ஆணைக்குழுவா இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என்பதை தீர்மானிப்பது அரசியல் அதிகாரத்தின் பொறுப்பாகும் என்று அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆணைக்குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஜனாதிபதி சிறிசேன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக உறுதியளித்தார். ஆனால், 2018 அக்டோபர் அரசியலமைப்பு சதிமுயற்சி காரணமாக தன்னால் அது தொடர்பான செயன்முறைகளை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
இத்தகைய பின்புலத்தில், உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று கூறப்படுபவை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நீண்டகால பிரச்சினைகளை கையாள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முன்னைய யோசனையை அரசாங்கம் புதுப்பிக்கவிருப்பதாக கடந்த மாத ஆரம்பத்தில் வெளியான செய்திகள் நினைவுக்கு வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருந்த நிலையில் இத்தகைய செய்திகள் வெளிவரச்செய்யப்படுகின்றன என்ற சந்தேகமும் அந்தவேளையில் கிளப்பப்பட்டது.
இலங்கையில் நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களுக்கும் அவற்றின் அறிக்கைகளுக்கும் நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கென்று ஒரு வரலாறே இருக்கிறது. பரணகம ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு, மகாநாம திலகரத்ன ஆணைக்குழு என்று பட்டியல் நீண்டுகொண்டுபோகும். ஆணைக்குழுக்களை நியமித்த ஜனாதிபதிகளே அவற்றின் அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கக்கூடிய யோசனைகளை நிராகரிப்பதில் முதல் ஆளாக இருப்பார்கள். ஆணைக்குழுக்களின் யோசனைகளுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர்கள் வாதிடவும் செய்வார்கள்.
லண்டனில் நெவில் டி சில்வாவிடம் பேசிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசியலமைப்பு சதிமுயற்சியின் காரணமாக தன்னால் தொடர்ந்து முன்னெடுக்கமுடியாமல் போன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கும் செயன்முறைகளை மீண்டும் இப்போது புதுப்பிப்பதற்கு எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறவில்லை.
மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் 2015 செப்டெம்பர் 14 அத்தகைய ஆணைக்குழு அமைக்கும் யோசனை முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் வழங்கிய பெயர் ‘உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான ஆணைக்குழு’ என்பதாகும். அதை அமைப்பதற்கு தென்னாபிரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கும் என்று அன்றைய வெளியுறவு அமைச்சர் காலஞ்சென்ற மங்கள சமரவீர கூறினார்.
இது தொடர்பிலான ஒரு கருத்துரு ஆவணம் 2018 செப்டெம்பர் 16 அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவதற்கு அமைச்சரவை தீர்மானித்தது. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் அந்த யோசனை தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 2020 மார்ச்சில் கூறியிருந்தது. 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ராஜபக்ஷர்கள் அதைப் பற்றி சிந்தித்திருப்பார்கள் என்று எவரும் நினைத்துப்பார்க்க முடியுமா?
ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, அவர் தனதுடைய முன்னைய நிலைப்பாடுகளின் பிரகாரம் செயற்படுகின்றவராக தற்போது இல்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதையும் அறகலய போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதையும் தவிர, மற்றும்படி அரசியல் விவகாரங்களில் அவரால் எதையும் பெரிதாக செய்யமுடியாது. ராஜபக்ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பலத்திலேயே விக்கிரமசிங்கவின் ஆட்சி தங்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் அணுகுமுறை விக்கிரமசிங்கவின் வழமையான போக்கிற்கு முரணானதாகவே இருக்கிறது. ஒரு ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தால் எவ்வாறு ஜெனீவாவை கையாளுவாரோ அதே போன்றே விக்கிரமசிங்கவின் நிருவாகமும் நடந்துகொள்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் ஒரு நேரத்தில் ஜெனீவாவில் ஒரு மிதவாத போக்கை கடைப்பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பதோ வேறு.
அதனால் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கிய எந்த செயன்முறையையும் முன்னெடுக்கக்கூடிய நிலைமை இல்லை. அதனால்தான் லண்டனில் அவர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கும் யோசனையை ஒரு முடிந்துபோன கதை என்ற தோரணையில் குறிப்பிட்டார் போலும்.
தென்னாபிரிக்க அனுபவம்
சுமார் கால் நூற்றாண்டு காலமாக கொழும்பில் இருந்து செயற்படும் மூத்த இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே.பாலச்சந்திரன் சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனை பற்றி எழுதிய கட்டுரையொன்றில் தென்னாபிரிக்க அனுபவத்தை விளக்கிக் கூறியிருந்தார். அந்தப் பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது பயனுடையதாக இருக்கும்.
“இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமானால் அது எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தென்னாபிரிக்காவின் அனுபவம் அறிகுறி காட்டுகிறது.
“வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு 1995ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் அந்தப் பாதிப்பைச் செய்தவர்களிடம் இருந்தும் சான்றுகளைச் சேகரிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தது. தனிப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுப்பதில் அது கவனம் செலுத்தவில்லை.
“வலதுசாரி இனவெறியர்களும் பாதுகாப்புப் படைகளும் தங்களுக்கு முற்றுமுழுதான மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதேவேளை, விடுதலை படைகளும் பாதிக்கப்பட்ட ஆபிரிக்கர்களும் நுரம்பேர்க் பாணி விசாரணையொன்று முன்னெடுக்கப்படவேண்டும் என்று கோரினர். இரண்டாவது உலகப்போருக்கு பிறகு நாஜிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நுரம்பேர்க் விசாரணை குற்றங்களைச் செய்தவர்களுக்கு தண்டனைகளை வழங்கியதில் முடிந்தது.
“புதிதாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மன்னிப்பு வழங்குதல் தொடர்பில் சனத்தொகையின் முழுமையையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முறையில் சகல பிரிவினரிடமும் சர்வதேச சமூகத்திடமும் அபிப்பிராயத்தை கேட்டறிந்த பின்னர் தென்னாபிரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஒரு வருடகாலம் நீடித்த கலந்தாலோசனை செயன்முறைகளுக்கு பிறகு (1995ஆம் ஆண்டின் 34ஆம் இல.) தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின் பிரகாரமே ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 1960 – 1994 காலகட்டத்தில் இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்களை ஆணைக்குழு விசாரித்தது.
“மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் குழு, இழப்பீடு மற்றும் புனர்வாழ்வு குழு, மன்னிப்புக் குழு என்று மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன. நாடுபூராவும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். சகல அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய சுயாதீனமான குழுவொன்றே நேர்முக பரீட்சைகளை நடத்தி ஆணையாளர்களை தெரிந்தெடுத்தது. தென்னாபிரிக்காவின் அன்றைய ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஆணைக்குழுவின் தலைவராக அதிமேற்றிராணியார் டெஸ்மண்ட் டுட்டுவை நியமித்தார்.
“ஆணைக்குழு பகிரங்க விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 22,000 க்கும் அதிகமான வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டது. அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் விடுதலை இயக்கத்தின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை சுதந்திரமாக எடுத்தியம்பி சாட்சியமளித்தனர்.
“7000 பேர் மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் 1500 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. பலரும் அறிய நடத்தப்பட்ட அந்த விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு பெருமளவுக்கு உதவியது. போதனை வழங்குவதாகவும் சீர்திருத்த செயற்பாடாகவும் அமைந்த அந்த ஆணைக்குழு விசாரணை இறுதியில் பெருமளவுக்கு நல்லிணக்கத்தைக் கொண்ட ஆரோக்கியமான தென்னாபிரிக்க சமுதாயம் ஒன்று உருவாவதற்கு வழிவகுத்தது.
“ஆனால், பாதுகாப்பு படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை. படைகளின் கீழ் மட்ட உறுப்பினர்கள் ஒத்துழைத்தனர். அவர்களில் அத்துமீறல்களைச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தனர். விடுதலை படைகளின் உறுப்பினர்கள் நியாயமான போர் ஒன்றையே முன்னெடுத்ததாகக் கூறி தாங்கள் தவறெதையும் செய்யவில்லை என்று வாதிட்டனர். என்றாலும் இறுதியில் அவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வைக்கப்பட்டனர்.
“மண்டேலாவுக்குப் பிறகு பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இழப்பீடு வழங்குதல் உட்பட ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டின. இது துரதிர்ஷ்டவசமானது. 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் முடிவில் ஒரு சில விதப்புரைகளே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. முக்கியமான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவில்லை. என்றாலும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் உணர்ச்சிக்கொந்தளிப்புகளில் இருந்து மக்கள் விடுபடவும் உள்நோக்கி பார்த்து சுய பரிசோதனையைச் செய்யவும் வாய்ப்புக்ளை வழங்கியதால் புதிய தென்னாபிரிக்கா ஒன்றுக்கான ஆக்கபூர்வ திருப்புமுனையாக அமைந்தன.
“இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொனறு நியமிக்கப்படுமேயானால், அது ஓரளவுக்குத்தான் பயனுடையதாக இருக்கும். தென்னாபிரிக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிடும்போது அதுவும் குறிப்பாக மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்ட்ட கடந்த கால ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இலங்கையில் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இலங்கையின் அரசியல் சமுதாயம் பொதுவில் பகைமையுணர்வுடனான அணுகுமுறையைக் கொண்டதாகவே இருக்கிறது.”
வீரகத்தி தனபாலசிங்கம்