Photo, Ishara S. Kodikara/ AFP – Getty Images, NBCNEWS

‘கோட்டப கோ கம’ என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் ராஜபக்‌ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோசடிகள் அற்ற புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியலில் கட்டிஎழுப்பப்பட்டதாகும்.

இது இலங்கைக்கான பொதுவான கருத்தியலாக பொதுவில் பேசப்பட்டபோதும் உண்மையில் ‘கோட்டா கோ கம’ வில் குடியேறி இருக்கின்ற இளைஞர் யுவதிகள் மற்றும் இவர்களைத் தத்தெடுத்துக் கொண்டுள்ள  தென்னிலங்கை மக்களுமே இந்தக் கருத்தியலுக்கான சொந்தக்காரர்களாகும்.

ஏனெனில், வழமையாக தென்னிலங்கையில் முன்வைக்கப்படும் அரசியல் கருத்தியல்கள் நடைமுறையில்தென்னிலங்கையைநோக்கியதாவே அமைவது வழமை.

 • 2010 ஆம் ஆண்டு அதாவது போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து நலலாட்சி குறித்த அரசியல் கருத்தியல் முன்வைக்கப்பட்டது.
 • அவ்வேளையில் கொழும்பில் ஒரு பிரபல ஜந்து நட்சத்திர ஹோட்டலில் அபபோதைய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனான ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு தமிழ் ஊடகவியலாளர் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

இதனைக் கவனித்த ஒரு பெரும்பான்மை இன சிரேஷ்ட ஊடகவியலாளர் என்னிடம் தமிழ் ஊடகவியலாளர் என்ன கூறுகின்றார் எனக் கேட்டார். நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அதனைக் கேட்ட அந்த ஊடகவியலாளர் ‘எங்களுக்கு நல்லாட்சி வேண்டும். அதற்காக நாம் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம். தமிழர்களுக்கு சரத் பொன்சேகாவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒன்றுதானே. இருவருமே தமிழர்களுக்கு எதிராக போரிட்டவர்கள்தானே’ என்று குறிப்பிட்டார்.

அதாவது நல்லாட்சி என்பது கூட அந்த ஊடகவியலாளரின் பார்வையில் ‘அது அவர்களுக்கானதாக – தென்னிலங்கைக்கு உரியதாகவே’ பார்க்கப்பட்டது.

இதே நிலைமைதான் இன்றும். ‘கோட்டா கோ கம’ அரசியல் கருத்தியல் நடைமுறைக்கு வருமாயின் அது தென்னிலங்கைக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது. அதே வேளையில் ‘கோட்டா கோ கம’ அரசியல் கருத்தியலுக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி ‘ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன கட்சியின் நிழல் அரசாங்கத்தை’ அமைத்துக் கொள்வதில் ராஜபக்‌ஷ குடும்பமும் ஆளும் வர்க்கமும்  வெற்றியும் பெற்றுள்ளனர்.

அதாவது ‘புதிய போத்தலில் பழைய வைன்’ என்பதற்குப் பதிலாக ‘பழைய போத்தலில் பழைய வைன்’ கதையாகவே உள்ளது. அதற்கும் அப்பால் ஒருபடி மேல் போய் ‘கோட்டா கோ கம’ அரசியல் கருத்தியலுக்குச் சொந்தக்காரர்கள் கட்சியை உருவாக்கி ‘ஜனநாயக மரபுக்குள் தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள முன்வரவேண்டுமென்றும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

அதாவது ராஜபக்‌ஷர்களினதும் அவர்கள் சார்ந்த அரசியல் அணியினரும் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் வியூகங்களை வகுப்பதையே தென்னிலங்கை அரசியலில் காணக் கூடியதாக இருக்கின்றது.

 • எனது முந்தைய கட்டுரையில் ‘கோட்டப கோ கம’ போராட்டம் என்பது ‘தேநீர் கோப்பை சூறாவளி’ அல்ல என்பதை ராஜபக்‌ஷர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். இந்த உண்மையை உணராது ‘கோட்டா கோ கமவில்’ கைவைக்கப்போய் கையைச் சுட்டுக் கொண்டுள்ளனர்.
 • ‘கோதா கோ கம’ 50 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் போராட்டத்தின் வீரியம் குறைந்ததாக இல்லை.

இந்த இளைஞர் யுவதிகள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பாக பல அங்கத்துவ அமைப்புக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் சுமார் 60 சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். அதற்கும் அப்பால் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கோரிக்கைகளை வடிவமைத்துள்ளனர்.

‘கோட்டா கோ கம’ போராட்டக் கள இளைஞர் யுவதிகளின் கோரிக்கை இதோ

 1. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தலைமையிலான ராஜபக்‌ஷ ஆட்சி உடனடியாக அதிகாரத்தை கைவிட வேண்டும்.
 2. இராஜினாமா செய்த பின்னர் ஆட்சியில் உள்ளவர்கள் இலங்கையின் ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியில் எந்தவொரு தேவையற்ற செல்வாக்கையும் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 3. தேசத்தை மீட்சியின் பாதையில் கொண்டு செல்ல ஒரு இடைக்கால அரசாங்கம் தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு (18 மாதங்களுக்கு ) நிறுவப்பட வேண்டும்.
 4. அரசியலமைப்புச் சட்டத்தில் 20ஆவது திருத்த ஒழிப்பு போன்ற அத்தியாவசியத் திருத்தங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
 5. தற்போதைய நெருக்கடியை நிர்வகிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றும் அனைத்து செயல்முறைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
 6. நிலவும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது. எனவே, தற்போது நிலவும் நெருக்கடிகளைத் தீர்க்க குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகால தீர்வுகள் தேவை.
 7. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வ வழிகளில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை மீட்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 8. நாட்டின் அனைத்து குடிமக்கள் மற்றும் பார்வையாளர்களின் உரிமைகளை மதிக்க சட்டத்தின் ஆட்சி உடனடியாக மீண்டும் நிறுவப்பட வேண்டும்
 9. இலங்கையின் அரசியலமைப்பில் அனைத்து பிரஜைகளுக்கும் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உள்ளடக்கவும் (இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அது வாழ்வதற்கான உரிமை பற்றிய விதிகளைப் பின்பற்றவும்).
 10. இடைக்கால அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்னர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

அடுத்து என்ன?

இலங்கையின் இளைஞர் யுவதிகள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிதர்சனமாக்க இலங்கைக்கு சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்ற ஒரு தலைவரே தேவை. அவ்வாறான ஒரு தலைவரை காணமுடியாதிருப்பது இலங்கைக்கே உரித்தான அரசியல் சாபக் கேடாகும்.

இலங்கையின் தேசபிதா என போற்றப்படும் சேனாநாயக்கவில் இருந்து எஸ்.டபிள்யூ.ஆர் .பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்‌ஷ கோத்தாபய ராஜபக்‌ஷ வரை அனைத்து தலைவர்களும் இனவாத சேற்றுக்குள் முளைத்தவர்களே.

எனவேதான் சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில், ‘ இலங்கை ஒருபோதும் மீண்டும் ஒன்றிணைக்கப்படாது’ எனக் குறிப்பிட்டார். ‘சுதந்திர இலங்கை’ இனத்துவ அரசியல் மொழி மத ரீதியாக துருவமயப்படுத்தப்பட்டுள்ளதினாலேயே ஒன்றுபட்ட இலங்கை ஒரு போதும் சாத்தியமாகாது என சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ குறிப்பிட்டார்.

ஜ.தே.க. தலைவர் ரணில்விக்ரமசிங்கவைப் பொறுத்து தனதும் ஜதே.கவினதும் எதிர்கால அரசியல் தலைவிதியை தீர்மானித்தாக வேண்டிய தீர்மானமிக்க கட்டத்திற்குள் நிற்கின்றார். இதற்காக அரசியல் காய்களை நிறையவே நகர்த்தியாக வேண்டும்.

தனது எதிரிகளை குறிப்பாக சஜித் அணியினரைப் பலவீனப்படுத்தியாக வேண்டும். இந்த வேலைப் பளுக்களுக்கு மத்தியில் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றியாக வேண்டும். நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டாக வேண்டும்.

இவைகளுக்கு மத்தியில் ‘கோட்டா கோ கம’ இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் கொண்டுள்ள ‘அரசியல் கருத்தியலுக்கு ஏற்ப புதிய இலங்கையை ‘ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சிருஷ்டிக்க முடியுமா?

ஊழல் மோசடிகள் அற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியுமா?

‘கோட்டா கோ கம’ இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் அரசியல்வாதிகளினால் கொள்ளையிடப்பட்டதாகக் கூறும் பணத்தை நாட்டின் கஜானாவுக்கு மீள கொண்டு வர முடியுமா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இவைகள் அனைத்துமே பெரும் சவாலாக முன் நிற்கின்றன.

​தனது கட்சியை தூக்கி நிறுத்த வேண்டிய பெரும் சவாலான சுமையை ரணில் விக்ரமசிங்க தனது முதுகில் சுமந்து கொண்டிருக்கின்றார்.

அவருடைய இரு கால்களிலும் ராஜபக்‌ஷ குடும்பமும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற எண்ணிக்கை பலமும் விலங்கிட்டு நிற்கின்றது.

இந்த ஒரு பின்னணியில் சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்றதொரு தலைவராக பிரதமர் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவால் உருவாக முடியாது.

மொத்தத்தில் தென்னிலங்கை இன்றைய நிலையிலாவது சிங்கப்பூரின் சிற்பியான லீ குவான் யூ போன்றதொரு தலைவரைத் தேடவில்லையாயின்  21ஆவது திருத்தம் உட்பட ஒருசில சட்டவாக்க சீர்திருத்தத்துடன்  ‘கோட்டா கோ கம’ இளைஞர்களும் யுவதிகளும் தென்னிலங்கை மக்களும் கனவு கண்டு கொண்டிருக்கின்ற ‘புதிய அரசியல் கருத்தியல்’ கல்லறைக்குள் முடக்கப்பட்டுவிடும் என்பது உண்மையாகும்.

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் வீசுகின்ற ‘புதிய அரசியல் மாற்றத்திற்கான கருத்தியல் ‘தமிழ், முஸ்லிம், மலையக மக்களையும் அனைத்து இணைத்துக் கொண்டு முழு இலங்கையையும் ஒன்றிணைப்பதற்கான கருத்தியலாக மாற்றம் பெற வேண்டும். இதுவே ‘புதிய இலங்கையின் உதயத்திற்கு’ வித்திடுவதாக அமையும்.

‘கோட்டா கோ கம’ இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் வடக்கு – கிழக்கு, மலையக தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் வேண்டுகோள் இதுதான்.

வி.தேவராஜ்