Photo, Selvaraja Rajasegar
காலி முகத்திடலில் ஒரு மாத காலமாக இடம்பெற்றுவரும் ‘கோடாகோகம’ தன்னெழுச்சி போராட்டம் இலங்கையின் சமூக – அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகக் காணப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் இத்தகையதொரு மக்கள் எழுச்சி இடம்பெற்றதாக ஆதாரங்கள் இல்லை. இந்தப் போராட்டங்கள் இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் அடிப்படையான மாற்றங்களை கோரி நிற்கின்றன. தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளுகை கட்டமைப்பில் (governance structures) தொடர்ச்சியாக நிலவி வந்த குறைப்பாடுகள் மற்றும் பலவீனமான ஆளுமை மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதனை போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக முழக்கமிட்டு வருகின்றனர். ஜனநாயகம் என்பது உயர்குழாம் அரசியலை அல்லது அரசியல் கட்சிகளை அடியொட்டியே இதுவரைக்காலமும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தின் விருப்பங்களையே வெளிப்படுத்தியுள்ளது என்ற விமர்சனம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இதற்கு இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகமும் முக்கிய காரணமாகும். ஆனால், இன்றையப் போராட்டங்கள் ஊடாக ஜனநாயகம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருப்பதனையும், தன்னார்வ மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் இன்று ஜனநாயகத்திற்குப் புதிய வடிவத்தை வழங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இது நாம் இதுவரைக் காலமும் கோட்பாட்டு ரீதியாக நோக்கிய ஜனநாயகத்தில் இருந்து முற்றாக வேறுபட்டுள்ளது.
ஆகவே இப்புதிய கோலங்களை எதிர்காலத்தில் ஆய்வுக்குட்படுத்துவது ஜனநாயகம் தொடர்பான அறிவுத்தொகுதிக்கு பங்களிப்பு செய்வதாக அமையும். காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டங்களின் நடைமுறைகள், ஒழுங்குகள், அதில் காணப்படும் ஒழுக்கம் அல்லது கட்டுப்பாடு அல்லது பரஸ்பர மரியாதை, பன்மைத்துவத்துக்கு மதிப்பளித்தல், பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற காரணிகள் ஜனநாயக சித்தாந்தத்தினை மீள்கற்பனை செய்வதற்கும், புதிய சட்டகத்துக்குள் இருந்து ஜனநாயகத்தினை நோக்குவதற்குமான ஒரு பரந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தின் மீது பெரும் தாக்குதல் இடம்பெற்று விட்டது போன்ற பெரும் அச்சத்தினை அரசியல் அவதானிகளும், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் முன்வைத்தனர். ஆயினும் அவை இன்று தலைகீழாக மாறியுள்ளதுடன், உண்மையான ஜனநாயகத்தினை, ஜனநாயக எழுச்சியினை, குறிப்பாக அடிமட்டத்தில் ஜனநாயகம் எழுச்சி பெற்று வருவதனை இந்த ஆட்சியின் கீழேயே நாம் காணுகின்றோம். இந்நிலை முன்னர் ஒருபோதும் இடம் பெற்றதற்கு ஆதாரங்கள் இல்லை. அந்தவகையில் இக்கட்டுரையானது காலிமுகத்திடல் உட்பட நாட்டின் ஏனைப் பாகங்களில் இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்கள் மூலம் இலங்கைப் பிரஜைகள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன, இலங்கை தேசத்தினை மற்றும் அரசினைக் கட்டியெழுப்புவதில் கடந்தகாலங்களில் விடப்பட்ட தவறுகளை எவ்வாறு சரி செய்வது மற்றும் இப்படிப்பினைகளை புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் ஆகிய விடயங்களை ஆராய முற்படுகின்றது. முக்கியமாக, இக்கட்டுரையானது ஒரு பக்கம், நாட்டில் அரசாங்கமில்லாத, மிகவும் பலவீனமான, ஆளுகை செய்வதற்கான இயலுமையினை முற்றாக இழந்துள்ள, தோல்வியடைந்த அரசொன்று உருவாகியுள்ள சூழ்நிலையிலும், மறபுறமாக, இலங்கை சமூகம் மிகத் தீவிர பாதுகாப்புமயமாக்கம் மற்றும் இராணுவமயமாக்கத்திற்கு உள்ளாகி வரும் பின்புலத்திலேயே எழுதப்படுகின்றது.
போராட்டங்களின் பின்புலம்
இலங்கையர்கள் சுமார் 90 ஆண்டுகாலம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை அனுபவித்து வந்தாலும், மக்கள் இன்னும் ஜனநாயகத்தின் பெறுமதியினை உள்ளார உணரவில்லை என்ற விமர்சனம் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்று வந்துள்ள ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவங்கள் முக்கிய பங்களிப்பினை செழுத்துகின்றன. முக்கியமாக, இலங்கையர்கள் போராட்டம் செய்து சுதந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளவில்லை, அதனால் ஜனநாயக விழுமியங்களின் பெறுமதிகளை அலட்சியம் செய்து சர்வாதிகார ஆட்சியாளர்களை, குடும்ப ஆட்சியினை ஊக்குவிக்கிறார்கள் என்ற விமர்சனம் ஜனநாயகத்தை நேசிக்கும் தரப்பினர்களால் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டது. இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வினைத்திறனற்ற கடன் முகாமைத்தவம், தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதி கொள்கைகள், ஊழல் மோசடிகள் மற்றும் பலவீனமாக ஆளுமை (weak governance) என்பவற்றிற்கு அப்பால், பெரும்பான்மை மக்கள் தொடர்ச்சியாக சர்வாதிகார மற்றும் குடும்ப ஆட்சியினை விரும்பி ஏற்றுக்கொண்டமை மற்றும் அவர்கள் பின்பற்றிய தீவிர தமிழ் – முஸ்லிம் எதிரப்புக் கொள்கையினை நிபந்தனையற்று ஏற்றுக்கொண்டமை என்பன மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என சுவிடன் நாட்டில் அமைந்துள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் (Uppsala Universi) சமாதானம் மற்றும் மோதல் கற்கைகள் துறையின் பேராசிரியர் அசோக் ஸ்வைன் ((Ashok Swai) தமது டுவிட்டர் பதிவில் அண்மையில் குறிப்பட்டிருந்தார்.
ஆகவே, ராஜபக்ஷ குடும்பத்தினர் மகா சங்கத்தினருடன் இணைந்து கையாண்டு வந்த தீவிர ‘சிங்கள பௌத்த தேசியவாதமும்’ நாட்டின் இன்றைய வங்குரோத்து நிலைக்குக் காரணமென வாதிட முடியும். ஆனால், இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் இளைஞர்களை மையப்படுத்தியதாக, குறிப்பாக கோட்டபாயவுக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பதும், அதன் பெறுமதியைப் புரிந்துகொண்டு செயற்படுவதும் புதிய இலங்கை தேசத்தினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக தென்படுகின்றது. இந்தப் போராட்டங்களில் பல வகுப்பினரை நாம் அவதானிக்க முடியும். படித்த மத்திய தர வர்க்கம், நகர்புற இளைஞர் யுவதிகள், கிராமிய இளைஞர் யுவதிகள் விவசாயிகள், தொழில் வல்லுனர்கள், ஆசிரியர் சமூகம், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கெடுத்து வருகின்றனர். யாவரையும் உள்வாங்கும் வகையிலான இத்தகைய போராட்டங்கள் இலங்கை வரலாற்றில் இதுவரை இடம்பெறவில்லை எனக் குறிப்பிடமுடியும்.
ஆயினும், கடந்த கால போராட்டங்களான 1970, 1987 மற்றும் 1989 களில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பவற்றில் இளைஞர்களே தலைமைத்துவத்தை வழங்கினார்கள். ஆயினும், அவை ஒரு குறிப்பிட்ட இனத்தினை மற்றும் வகுப்பினரை மையப்படுத்தியதாகவே காணப்பட்டன. அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இந்தப் போராட்டம் காணப்படுகின்றமை இலங்கை வரலாற்றில் ஒரு சிறப்பம்சமாகும்.
இன்றைய போராட்டங்களுக்கு சுதந்திரத்துக்குப் பின்னர் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை, அபிலாசைகளை அலட்சியம் செய்தமை, மக்கள் ஆணையினை துஷ்பிரயோகம் செய்தமை போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. மாட்டின் லூதர் கிங் குறிப்பிட்டது போன்று “போராட்டங்கள் அல்லது கிளர்ச்சிகள் மக்களின் குரல் மழுங்கடிக்கப்படுகின்ற பொழுது அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற பொழுது எழுச்சி பெறுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய போராட்டங்கள் இடம்பெறுவதற்கு பிறிதொரு காரணமும் உள்ளது. மக்கள் பொது ஒப்பந்தத்தின் ஊடாகவே ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்கள். இக்கருத்தினை புகழ்பெற்ற அரசியல் சிந்தனையாளர்களான ஜோன் லொக், தோமஸ் ஹாப்ஸ் மற்றும் ரூசொ என்பவர்கள் 16, 17 மற்றும் 19ஆம் நுற்றாண்டுகளில் முன்வைத்தார்கள். இக்கருத்து இன்றும் வலிதாகும் என்பதில் ஐயமில்லை. இங்கு சமூக ஒப்பந்தம் என்பது தேர்தலை குறித்து நிற்கின்றது. மக்கள் தமது ஆணையை ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு அல்லது தரப்பினருக்கு தம்மை ஆள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வழங்குகிறார்கள்.
பொது நம்பிக்கை (public trust) என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இவ்வொப்பந்தம் செய்யப்படுகின்றது. இவ் ஒப்பந்தத்தினை ஆட்சியாளர்கள் மீறும்போது, மக்கள் வழங்கிய ஆணையினை மீறும் பொழுது, பொதுமக்கள் எதிர்ப்பினை தெரிவிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது பொதுவான நடைமுறையாகும். இதனை உலகில் பல பாகங்களில் காணமுடியும் -இத்தகையப் போராட்டங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. இன்று மியன்மார், மத்திய கிழக்கு மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் இடம் பெறுவதும் இத்தகைய போராட்டங்களே ஆகும். இலங்கையில் இடம்பெறும் போராட்டங்களும் வெளிப்படுத்துவது யாதெனில் அரசாங்கம் தாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை மீறியுள்ளது என்பதனையாகும். கோட்டபாய அரசாங்கம் “தேசிய பாதுகாப்பு’ ‘தேசிய பொருளாதாரம்”, “ஊழலற்ற ஆட்சி, வல்லுனர்களின் ஆட்சி” மற்றும் “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆகியவற்றைத் தமது பிரதானக் கொள்கைகளாக முன்வைத்தது. அதற்கான மக்களின் ஒப்புதலைக் கோரினார்கள். அதற்கு சம்மதமும் கிடைத்தது. ஆயினும், இவை அனைத்தும் மிக குறுகிய காலத்திலேயே மீறப்பட்டன. இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் தொடர்ச்சியாக மீறப்படும்போது போராட்டங்கள் வெடிக்கும் என்பதாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்நிலை தொடர்வதனை நாம் காண முடியும்.
இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், ஜனநாயக நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல் தலைவர்கள் காலஓட்டத்தில் ஜனநாயகத்தின் அடிப்படை பெருமானங்களைச் சீர்குழைக்கும் வகையில் அல்லது அழிக்கும் வகையில் செயற்படுவது இலங்கையில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் அந்நிலை காணப்படுகின்றது என்பதில் வியப்பில்லை. இதற்கு அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் ஆட்சி, ஹங்கேரியில் விக்டர் ஓபனின் ஆட்சி, பிரேசிலில் பொல்சொனாரோவின் ஆட்சி, இந்தியாவில் மோடியின் ஆட்சி, பிலிபைன்ஸில் ரொட்ரிகோ துதெர்த்தே, ரஷ்யாவில் புட்டினின் ஆட்சி என இந்தப்பட்டியல் நீண்டு செல்கின்றது. இவர்கள் அனைவரும் ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க, ஜனநாயக ஆட்சியின் அடிப்படை விழுமியங்களை மிக மோசமான விழ்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள். ஆட்சி அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிச்சல் கொண்ட தலைவர்கள் இவர்கள். இப்போக்கினை 2018ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டு முக்கியமான நூல்கள் எடுத்துக்காட்டின. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர்களான ஸ்டிவன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் ஸிப்லெட் ஆகியோர் எழுதிய ‘ஜனநாயம் எவ்வாறு மரனிக்கின்றது’ என்ற நூலும், கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அரசியல் விஞ்ஞான பேராசிரியரான டேவிட் ரன்சிமன் எழுதிய ‘ஜனநாயகம் எவ்வாறு முற்றுப்பெறுகின்றது’ என்ற நூலும் மேற்கூறிய விடயங்களை விவாதிக்கின்றன.
போராட்டங்கள் வெளிப்படுத்தும் முக்கியப் பண்புகள்
இன்றையப் போராட்டங்கள் பல முக்கியமான விடயங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில், மரபு ரீதியான அரசியல் தலைமைத்துவம் மீதான அவநம்பிக்கை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதான அதிருப்தி, ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம் மீதான விரக்தி போன்ற பல விடயங்களை அவதானிக்க முடியும். இன்று அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் முற்றாகவே நம்பிக்கையை இழந்துள்ளன. ஆகவேதான் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீடு செல்ல வேண்டும் என்ற கோசம் எழுச்சி பெற்றுள்ளது. அரசாட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை என்பது அடிப்படையானதாகும். அந்த நம்பிக்கையே ஆட்சியாளர்கள் தமது கொள்கைகளை, சட்டங்களை மற்றும் ஏனைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட தன்மையினை (legitimacy) வழங்குகின்றது என்பதனை மனம் கொள்ள வேண்டும். சுமார் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற விடயத்தினை அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிட்டிருந்தனர். இது மரபு ரீதியான அரசியல் தலைமைகள் மீதான இன்றைய தலைமுறையினரின் உச்சகட்ட அவநம்பிக்கையினையும், புதிய அரசியல் கலாசாரம் ஒன்றிற்கான தேவையினையும் குறித்து நிற்கின்றது.
இதன் காரணமாகவே இந்தப் போராட்டங்கள் எந்த ஒரு அரசியல் தலைமைத்துவமும், பின்னணியும் இல்லாமல் இடம்பெறுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ‘நாம் யாவரும் தலைவர்கள்’ என்ற செய்தியினை வழங்குகின்றார்கள். போராட்டத்தை நடத்துவதற்கு மரபுரீதியாக நாம் பார்க்கும் தலைமைத்துவம் அவசியம் இல்லை என்பதனை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. முறையான தலைமைத்துவம் அல்லது அரசியல் பின்புலம் இல்லாமல் இப்போராட்டங்கள் இடம்பெறுவதால் இதனைப் பலரும் கேலி செய்தார்கள். இளைஞர்களின் பொழுதுபோக்குக்கான களமாக காலிமுகத்திடலை விமர்சித்தார்கள். உணவு, குடிநீர் மற்றும் ஏனைய வசதிகள் இல்லாமல் போகும் போது சுயமாகவே கலைந்து செல்வார்கள் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் அவ்வப்போது இடம்பெற்ற போராட்டங்களில் ஒன்றாக இதனைப் பார்த்தார்கள். போராட்டத்தினை குழப்புவதற்கு அரச தரப்பினரால் பல முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன – அவை தொடர்கின்றன. ஆயினும், அவை யாவற்றையும் போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து போராடி வருகின்றார்கள். இதன் காரணமாக இந்தப் போராட்டங்கள் மீதும், அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீதும் பெரும் நம்பிக்கை, மரியாதை மற்றும் ஏற்புடைமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பின்புலங்களைக் கொண்டவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதனை காணமுடிகின்றது. அதில் உணவு அடிப்படை வசதிகள் என்பனவும் அடங்கும். இவை இந்தப் போராட்டத்தினை மேலும் சக்திபடுத்தியுள்ளது. அரசியல் கலப்பற்ற போராட்டமாக இது தொடர்வதற்கு பிறிதொரு காரணமுண்டு. அதுவே அரசியல்வாதிகள் தலையிட்டால் ஒட்டுமொத்த போராட்டத்தினையும் தமது நலன்களுக்காக திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் நிலவுகின்றது. எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாது ஒரு மாதகாலத்திற்கு மேலாக பல தடைகளைத் தாண்டி இடம்பெறும் போராட்டம் இது என குறிப்பிடலாம். இது மக்கள் போராட்டத்திற்கான புதிய கலாசாரத்தை வழங்கியுள்ளது. மக்களே தலைவர்கள் என்ற செய்தியினை மீள நினைவூட்டுகின்றது.
இப்போராட்டங்களில் காணக்கூடிய பிறிதொரு விடயம் யாதெனில், தகவல் தொழிநுட்பத்தினையும் டிஜிட்டல் ஊடகங்களையும் வினைத்திறன் மிக்க வகையில் கையாள்வதாகும். பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் ஏனைய தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக முறியடித்து வருவதற்கு இவை பெரியளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றன என்பதில் ஐயமில்லை. இவை இளைஞர்கள் ஆக்கத்திறனுடன் சிந்திப்பதற்கும் புத்தாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மற்றும் கவர்ச்சிகரமாக, யாவரையும் ஈர்க்கும் வகையில் போராட்டத்தினை கொண்டு நடாத்துவதற்கும் இந்த விஞ்ஞான தொழிநுட்பத்துடன் அவர்களுக்கு இருக்கும் பரிட்சயம் முக்கிய காரணமெனலாம். கடந்த காலங்களில் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் இருந்து பாடங்களை கற்று அதனை இங்கு நடைமுறைப்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருப்பதுடன், போராட்டத்தினை முறியடிப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் பலவீனப்படுத்தியுள்ளன.
இவை நாம் மரபு ரீதியாக பாடப்புத்தகங்களில் படிக்கின்ற ஜனநாயகப் போராட்டம் அல்லது சமூக இயக்கம், மக்கள் போராட்டத்தில் இருந்து முற்றாக வேறுபட்டுள்ளது. ஆகவே, இலங்கையில் ஜனநாயகம் தொடர்பாக ஆய்வு செய்வோர் எதிர்காலத்தில் இந்தப் புதிய கோலத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று இலங்கையில் ஜனநாயகம் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுவது பொருத்தமாகும். மக்கள் போராட்டம் தொடர்பாக எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் காலிமுகத்திடலில் அணிதிரண்டு இருப்பது பிறிதொரு முக்கிய விடயமாகும். இவர்கள் ஜனநாயகத்தின் விழுமியங்களை, ஜனநாயகப் போராட்டம், அகிம்சா வழிப் போராட்டம் தொடர்பாக பிரயோக ரீதியான அனுபவத்தினை, அறிவினைப் பெற்று வருகின்றனர். இதனை இந்தப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தினை நோக்கும்போது தெளிவாகின்றது. சிறப்பான நூலகம் ஒன்று தாபிக்கப்பட்டிருப்பது இதனை மேலும் உறுதி செய்கின்றது. கடந்தகால போராட்டங்கள் இத்தகைய ஒழுங்கமைப்புகளை கொண்டிருக்கவில்லை.
போராட்டங்களில் வெளிப்படும் பிரதான முழக்கங்கள்
இந்தப் போராட்டங்களின் ஊடாக எழுப்பப்படும் மிக முக்கிய கோசங்களாக காணப்படுவது பின்வரும் விடயங்களாகும்.(1) இருக்கின்ற ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். (2) ஊழல், மோசடி இல்லாத இலங்கையினை உருவாக்குதல் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். (3) ராஜபக்ஷ குடும்பத்தினர் உட்பட ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பொதுமக்களின் பணம் மீளப்பெறப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பொதுவுடைமை ஆக்கப்படுதல். (4) பொது நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக காணப்படுவதால் அவை மறுசீரமைக்கப்பட வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பிரிதொரு கோரிக்கை – இங்கு சட்டமா அதிபர் காரியாலயம், கணக்காய்வாளர் நாயகம் காரியாலயம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை வலியுறுத்தி வருகின்றனர். (5) அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களை மீளப்பெறுவதற்கான சட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் சொத்துக்களை பகிரங்கப்படுத்துதல் தொடர்பான சட்டங்களை பலப்படுத்துதல். (6) குற்றவியல் நீதி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் – இதன் மூலம் சட்டத்தினை யாவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்களை அரசியல் கலப்பற்ற சுயாதீனமான நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.
மக்களின் அதிகாரம் ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரத்தினை விட உயர்வானது என்ற கோசம் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றது. இது மக்கள் இறைமையின் முக்கியத்துவத்தினை, மக்களே ஆட்சி அதிகாரத்தின் மூலாதாரம் என்பதனை மீண்டும் ஒரு முறை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இச்செய்தி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளதுடன் வெறுமனே இவ்வளவு காலமும் வாக்காளராக இருந்த மக்கள் பிரஜைகளாக மாறுவதற்கு வழி செய்துள்ளது. இது ஒரு முக்கியமான மாற்றமாகும். ஜனநாயகத்தினை மற்றும் நல்லாட்சியினை பேணுவதற்கு செயலூக்கமுள்ள பிரஜைகள் மற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்கும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும், விமர்சிக்கும் ஆட்சிமுறை செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுகின்ற பிரஜைகள் பெரிதும் அவசியம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உலகறிந்த அரசியல் விஞ்ஞான பேராசிரியையான பிப்பா நொறிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் குறுகிய இலாபங்களுக்காகவும், பொருள் சார்ந்த நன்மைகளுக்காக வெறும் வாக்காளர்களாக இருந்த இலங்கை மக்கள் இன்று பிரஜைகளாக மாறி வீதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர மாற்றத்தை கோரி நிற்பது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது எனலாம். வெறும் உணர்ச்சிகளுக்கும், இன, மத தேசியவாத சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த தென்னிலங்கை மக்கள் மாத்திரமின்றி ஏனைய சமூகத்தவர்களும் இவ்வாறான மாற்றத்தினை தழுவியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். (7) இவை எல்லாவற்றையும் விட பிறிதொரு முக்கிய செய்தி இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது சிறுபான்மை மக்களை பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாகும். அது “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற செய்தி ஆகும். சகல சமூகத்தவரும் ஒன்றாக போராடுவது, உறங்குவது, உணவுண்பது, ஒன்றாக கைகோர்த்துக் கோசம் இடுவது, பிரச்சாரம் செய்வது போன்ற செயற்பாடுகள் யாவும் நாம் ‘இலங்கையர்’ இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை என்ற செய்தியினை வெளிப்படுத்தி உள்ளது. இன மற்றும் மதவாதமற்ற இலங்கை வேண்டும் என்பது சிறுபான்மை இனத்தவரது நீண்டகால கனவாகும். அதற்கான ஆரம்பமாக இதனை நாம் நோக்க முடியும்.
இந்தப் போராட்டம் முழுவதும் இனவாதத்திற்கு எதிராக கோசம் எழுப்பப்படுவது, பன்மைத்துவம் மதிக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்படுவது, சமத்துவம், சமவாய்ப்பு ஆகிய சித்தாந்தங்கள் பேணப்படுவது தொடர்ச்சியாக காணக் கூடியதாக உள்ளது. மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டமை இனவாதத்திற்கு எதிரான முக்கிய செய்தியை பறைசாற்றுகிறது. 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டுமே’ சட்டம் இந்த நாட்டினை சீர்குலைந்துள்ளது என்பதனையும், இனவாதம் இலங்கை தேசத்தினை சுதந்திரத்திற்குப் பின் 74 ஆண்டுகளாக மிக மோசமான அழிவுக்கு இட்டுசென்றுள்ளது என்பதனையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள இளைஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் புலப்படுகின்றது. ஆயினும், இத்தகைய போக்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது சிறுபான்மை சமூகம் முன்வைக்கும் பிரதான கேள்வியாகும். இதற்கு அவர்களின் கடந்தகால அனுபவங்கள் காரணமாக அமையலாம்.
பேராசியர் ஜயதேவ உயன்கொட நாடுதழுவிய ரீதியில் இடம்பெறும் போராட்டங்களின் ஊடாக கோரப்படும் System change என்பது பின்வரும் விடயங்களை வலியுறுத்துவதாக வாதிக்கின்றார். 1. ஆதிக்கமிக்க அரசியல் கலாசாரத்தினை மாற்றுதல் 2. பொதுக்கொள்கை உருவாக்க செயன்முறை மற்றும் நடைமுறையினை மாற்றுதல். 3. ஆளும் வர்க்கம் அரசு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் நடைமுறையினை மாற்றுதல் 4. இலங்கையினுடைய பிரதிநிதித்துவ அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்லுதல் 5. அசமத்துவம் மற்றும் அநீதிகளுக்கு காரணமாக அமைந்துள்ள சமூக, பொருளாதார முறையில் மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புகின்றார்கள்.
போராட்டக்காரர்கள் முன்னுள்ள சவால்கள்
எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் மாறாக பிறிதொரு முக்கிய கேள்வியினையும் எழுப்புகிறது. இலங்கையினுடைய கடந்தகால நிகழ்வுகள், ஆழமாக வேறுன்றியுள்ள இன,மத, தேசியவாதம் என்பவற்றினை வைத்து நோக்கும் போது ஒரு தீவிர ஐனநாயக மறுசீரமைப்பு இந்தப் போராட்டங்கள் மூலம் ஏற்படுமா என்ற வினாவிற்கு இன்னும் விடைகாண முடியாமல் உள்ளது. இப் போராட்டம் வெறுமனே ராஜபக்ஷ குடும்பத்தினரை விரட்டியடிப்பதுடன் மட்டுப்படுத்தப்படுமா? நிறுத்தப்படுமா? அல்லது அதற்கு அப்பால் சென்று இந்த நாட்டின் ஆட்சிமுறையில் மற்றும் ஜனநாயக கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி இப் போராட்டங்கள் நீடிக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவை சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை முக்கியமான கேள்விளாகும். காரணம் ராஜபக்ஷர்களை விரட்டியடிப்பதன் முலம் மாத்திரம் இந்த நாட்டில் சகல சமூகத்தவர்களும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப முடியாது. பன்மைத்துவம், சுதந்திரம், சமவாய்ப்பு, யாவரையும் உள்வாங்கும் ஆட்சி, சிறுபான்மையினருக்கான நீதி, அரசியல் தீர்வு என்பன கிடைக்கப்போவதில்லை. அவர்களை விரட்டியடிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை காணமுடியாது.
ஆகவே, தற்போதையப் போராட்டங்களில் இந்த விடயங்களும் பிரதிபலிக்கப்பட வேண்டும். இது குறித்து புரிதலை சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடன் வாழக்கூடிய புதிய இலங்கையினை கட்டியெழுப்புவதற்கான நல்லதொரு வாய்ப்பாகத் தென்படுகின்றது. இந்தப் போராட்ட கலாசாரம் அதனை பறைசாற்றுகின்றது. இந்தப் புரிதலை ஏற்படுத்துவதில் சிறுபான்மை மக்களை பிரிதிநித்துவம் செய்யும் சிவில் அமைப்புகள், ஜனநாயகம், சிறுபான்மை மக்களின் உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பாக செயற்படும் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினைச் சார்ந்த இளைஞர்களுக்கும் உண்டு. காரணம் தற்போதைய நிலையில் சகல இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் மனோநிலை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள், ஆவேசம் என்பன பெரியளவில் வேறுபடுவதாக தெரியவில்லை. புரிதலுக்கான இடைவெளியொன்று காணப்படுகின்றது. அதனை எந்தளவுக்கு சரியாக பயன்படுத்தப் போகின்றோம் என்பது முக்கியமாகும். காலத்தினை புரிந்து கொண்டு இக்காரியத்தினை உடனடியாகவே முன்னெடுக்க வேண்டும். எவ்வாறாயினும் இது இலகுவான காரியமல்ல. இந்தப் புரிதல் இளைஞர்கள் மத்தியில் இலகுவில் ஏற்படலாம். ஆனால், பெரும்பான்மை சமூகத்தின் கட்டமைப்பில் மதத்தலைவர்களின் செல்வாக்கு அதிகமாகும். இந்நிலை கிராமப்புறங்களில் அதிகளவில் காணப்படுகின்றது. அதற்கப்பால் சிங்கள சமூகத்தில் பல சமூக வகுப்புகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தப் புரிதல் அவர்கள் மத்தியில் ஏற்படுமா என்பது பிறிதொரு விடைக்காண வேண்டிய வினாவாகும்.
20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அரசியல் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட் (Hannah Ardent) என்பாரின் கருத்தினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர் இத்தகைய போராட்டங்களை அரசியல் தளங்கள் (political spaces) எனக் குறிப்பிடுகின்றார். இங்கு பிரஜைகள் சுதந்திரமாக உள்நுழைவது, சக பிரஜைகளை சுதந்திரமாக சந்திப்பது, சுதந்திரமாக விவாதிப்பது, பொது விடயங்கள் தொடர்பான தமது கருத்துக்களை சுதந்திரமாகப் பகிர்ந்துக்கொள்வது, அது குறித்து வாதிடல், மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தல் மற்றும் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயற்படுவதனை அவதானிக்க முடியும் என வாதிடுகின்றார். இக்கருத்து காலிமுகத்திடல் உட்பட நாட்டில் ஏனைய பாகங்களில் தாபிக்கப்பட்டுள்ள ‘கோடாகோகம’ போராட்ட தளங்களில் அவதானிக்க முடியும். இங்கு இன, மத, மொழி, பிரதேச, சாதி, வர்க்க, அரசியல் மற்றும் பால்நிலை வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை – போராட்டத்திற்கான பொது நோக்கமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது என்பதனை இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது. ஆகவே, இந்த அரசியல் தளங்களை தீவிர ஜனநாயக மற்றும் ஆட்சி முறை மாற்றத்திற்கான களமாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு சகல சமூகத்தவர்களும், சம உரிமைகளுடன் வாழக்கூடிய இலங்கையினைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரினதும் பொறுப்பாகும்.
இத்தகைய வாதத்தினை முன்வைப்பதற்கான காரணம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசு ஓர் இனத்துவ அரசு என்ற நிலையினை தொடர்ச்சியாகவே பேணி வந்துள்ளது. இது சிங்கள-பௌத்த பேரினவாத சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், அரசியல் தலைவர்களும் இக்கருத்தினை ஆழமாக வேரூண்ட செய்துள்ளனர். இந்த சிந்தனை (Ethnocratic state) என்பது இன்று நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இதனை முற்றாக மாற்றுவது அல்லது மறுசீரமைப்பது அவ்வளவு இலகுவாக காரியமாக இருக்காது. பெரும் சவால் மிக்க காரியமாக அமையும். ஒரு புரட்சிகரமான மாற்றம் அல்லது தீவிர ஜனநாயக மறுசீரமைப்பு நடந்தால் அன்றி, அது உடனடியாக சாத்தியமடைய வாய்ப்பில்லை. நோர்வே நாட்டின் உயிர் அறிவியல்கள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த நடராஜா சன்முகரத்தினம் அவர்கள் கட்டுரையாசிரியருக்கு அண்மையில் அனுப்பிய மின்னஞ்சலிலும் இக்கேள்வியினை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் அதிருப்தியும்
இந்தப் போராட்டங்கள் இன்னொரு பக்கம் 74 ஆண்டு வரலாற்றினைக் கொண்ட பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை, அதன் தரத்தினை கேள்விக்குட்படுத்தியுள்ளது. காரணம், பிரதிநிதித்துவ ஜனநாயகம் இலங்கையர்களை வெறும் வாக்காளர்கள் என்ற விட்டத்துக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தியுள்ளது. அதனைத்தாண்டி ஆட்சி முறை செயற்பாடுகளில் சாதாரண மக்களுக்கு பெரியளவிலான வகிபங்கு வழங்கப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்தவகையில் இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது உயர்குழாம் வர்க்கத்தின் அபிலாசைகள் மற்றும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. பெரும் வர்த்தகர்களின் மற்றும் உயர் அரசியல் வரக்கத்தின் நன்மைகளுக்காவே பொதுக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. இது தென்னாசிய நாடுகளில் காணப்படும் பொதுவான பண்பாகும். இப்பின்புலத்திலேயே மக்கள் போராட்டங்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அதில் காணப்படும் அடிப்படை குறைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரும் செல்வந்தர்களையும், அரசாங்கத்திற்கு வருமான வரியினை முறையாக செலுத்தாமல் சட்டத்தினை மீறி செயற்படும் வர்த்தகர்களையும் இலங்கையினுடைய தேர்தல் ஜனநாயகம் பாதுகாக்கின்றது. இது பெரிதும் வருந்ததக்க விடயமாகும். எமது நாட்டில் செல்வந்த வரி ((wealth tax) அறிவிடல் தொடர்பான கொள்கைகள் இன்மையும் இவ்வாறான மோசடி செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. செல்வந்த வரி என்பது பெரும் வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களிடம் அதிக வரியினை அறவிட்டு, அந்த வருமானத்தினை கொண்டு சமூகத்தில் காணப்படும் ஏழை – பணக்காரன் என்ற இடைவெளியினை சரிசெய்து சமூகத்தில் சமத்துவத்தினை நிலைநாட்டுவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் வரி அறவீட்டு முறையாகும். அத்தகையதொரு வரி அறவீட்டு முறை இலங்கையில் காணப்படுமாயின், தற்போதைய நெருக்கடியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற அடிதட்டு மக்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்தலாம்.
போராட்டக்காரர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை எதிர்ப்பதற்கு பிரிதொரு காரணம் அது ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படுவதாகும். பேராசிரியர் ஜயதேவ உயன்கொட அண்மையில் எழுதிய ஆங்கில கட்டுரையொன்றில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், எதிர்காலத்தில் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் இடம்பெறும் போது அதில் “மீளழைக்கும் முறை” (recall) அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என வாதிடுகின்றனர். அதாவது, மக்கள் ஆணையினை மறுதளித்து செயற்படும் ஊழலில் ஈடுப்படும் அரசியல்வாதிகளை மீள அழைப்பதற்கான (பதவியில் இருந்து) உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
காரணம் தற்போது காணப்படும் பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஊழல் அற்ற, நேர்மைதிறன் கொண்ட, தகைமையுள்ள, சரியான கொள்கைகளுடன் செயற்படக்கூடிய அரசியல்வாதிகளையோ அல்லது தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்க முடியாது. ஆகவே, இந்த போராட்டங்கள் ஜனநாயக மறுசீரமைப்பினை வலியுறுத்துகின்றன என்பது வெளிப்படுகின்றது. அத்தகைய மறுசீரமைப்புகளை உடனடியாக செய்ய வேண்டும். காரணம் அதற்கான தருணம் இன்று மலர்ந்துள்ளது. அது வெறுமனே 20ஆவது திருத்தத்தினை இல்லாது செய்து 21ஆவது திருத்தத்தினை கொண்டு வருவது மாத்திரம் அல்ல. ஜனநாயக மறுசீரமைப்புக்கள் அதனைத்தாண்டி செல்ல வேண்டும். உள்நாட்டில் மாத்திரம் அல்ல வெளிநாடுகளில் இலங்கையர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களும் ஜனநாயக மற்றும் ஆட்சிமுறையில் மறுசீரமைப்புக்கள் அவசியம் என்பதனை வெளிக்காட்டுகின்றன. வெளிநாடுகளில் இடம்பெறும் போராட்டங்கள் ஜனநாயக மறுசீரமைப்புக்கான வெளி ஆதரவினை திரட்டுவதாக, குறிப்பாக சர்வதேசத்தின் ஆதரவினை திரட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப்போராட்டங்களிலும் இன ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தினை காண முடிகின்றது – இது முன்னொருபோதும் நிகழாத விடயமாகும். புலம்பெயர் தமிழர்களும் சிங்களவர்களும் வேறுப்பட்ட அடையாளங்களைப் பேணி வந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நெருக்கடி அவர்கள் மத்தியிலும் ஒரு வகையான புரிதலையும், பொது புள்ளியில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பினையும் வழங்கியுள்ளது.
அரசியல் மறுசீரமைப்பு மற்றும் சவால்கள்
ஜனநாயக மறுசீரமைப்புகளில் முக்கியமான அம்சமாக வலியுறுத்தப்படுவது சர்வாதிகார ஆட்சியினை ஒழிப்பதாகும். குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதாகும். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்ற பொறுப்புகூறலில் இருந்து விடுபட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஒரு பிரதான காரணம் என்பது பலதரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. இலங்கையில் பின்பற்றப்படும் ஜனாதிபதி முறையில் காணப்படும் பிரதான குறைப்பாடு யாதெனில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமன்பாடுகள் (checks and balances) இல்லாமையாகும். உலகில் பலம் வாய்ந்த நாடாகக் காணப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்க அரசியல் அமைப்பிலே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்படுவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது சிறுபான்மை அரசியல் கட்சிகள் அதனை எதிர்த்தன. அதற்கொரு காரணத்தினையும் முன்வைத்தார்கள். ஜனாதிபதி சகல சமூகத்தவர்களாலும் தெரிவுசெய்யப்படுவதனால் சிறுபான்மை மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்பதே அந்த வாதமாகும். ஆனால், அந்த வாதம் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் செல்லுப்படியற்றதாகி விட்டது – அதனை இனியும் முன்வைக்க முடியாது. ஆகவே, இம்முறையினை ஒழிப்பது தொடர்பாக சிறுபான்மை கட்சிகள் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உறுதியான நாடாளுமன்ற அரசாங்க முறையொன்றின் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க முடியும். அதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக கொள்ளலாம் (கனடா, நியுசிலாந்து, பிரித்தானியா). மே மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையும் காரணமென்பதனை இன்று அவர் புரிந்துக்கொண்டுள்ளார். ஆயினும் அது காலம் கடந்த ஞானமாகும்.
தற்போதைய போராட்டங்களினூடாக வலியுறுத்தப்பட வேண்டிய பிறிதொரு முக்கியமான விடயம் மத சார்பற்ற இலங்கையினை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தாடலாகும். இன்றைய போராட்டங்களுடைய நிலையான பெறுபேறு இலங்கையினை மதசார்பற்ற நாடாக நிலைமாற்றம் செய்வதன் மூலம் ஏற்படலாம். புதிய இலங்கை தேசம் என்பது மதசார்பற்றதாக அமைய வேண்டும். அவ்வாறன்றில் கடந்த 74 ஆண்டுகளாக உரமூட்டி வளர்க்கப்பட்டுள்ள இன, மத மற்றும் மொழி பிரதேச தேசியவாதம் தொடர்ந்தும் இலங்கை தேசத்தினை அழித்துக் கொண்டே இருக்கும். அந்த அழிவு காலத்திற்கு காலம் புதிய புதிய வடிவங்களில் வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அடிப்படையில் இந்த நச்சு வட்டம் சுழன்று கொண்டு இருக்கும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தரப்பினர் இலக்கு வைக்கப்படுவர் என்பது எமது கடந்தகால இலங்கை அனுபவமாகும். மதசார்பற்ற தேசம் ஒன்று உருவாக்கப்பட்டால் அது மதத் தலைவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வாய்ப்பினை வழங்கும். இலங்கை தேசத்தின் தற்போதைய நெருக்கடிக்கு அரசியலில் இருந்து மதத்தினை பிரித்து வைக்காமை பிரதான காரணமாகும். ஆகவே, தற்போதைய நெருக்கடிக்கு பௌத்த பிக்குகளும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோசமும் இன்று எழுச்சி பெற்று வருவதனை காணமுடிகின்றது. இது ஒரு முற்போக்கான அபிவிருத்தியாகும். இக்கருத்தாடலை தொடர்ச்சியாக பேணவேண்டும், சமூகமயப்படுத்த வேண்டும்.
புதிய ஜனநாயக கலாசாரத்தின் எழுச்சி
இந்தப் போராட்டங்களின் ஊடாக பலமான ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக சுதந்திரமான அச்சமின்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு சாதகமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. அவர்களின் ஆதிக்கத்தினை அச்சமின்றி விமர்சிப்பதற்கு குறிப்பாக, அரசியலில், நிர்வாகத்தில், சட்டத்தினை அமுல்படுத்துவதில், தேசிய பாதுகாப்பில், ஊடகத்தில், நீதியினை நிர்வகிப்பதில் மற்றும் தனியார் துறையில், நிலைமை ஏற்பட்டிருப்பதாக பேராசியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிடுகின்றார். இது ஒரு முக்கியமான மாற்றமாகும். ஒரு பலமான, சர்வாதிகார ஆட்சியாளரை எதிர்ப்பது சாதாரண விடயமல்ல. மிகவும் இருக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலே இத்தகைய எதிர்ப்புகள் இடம்பெற்று வருகின்றன. மே மாதம் 9ஆம் திகதி ஆர்பாட்டகாரர்கள் மீது குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் இப்போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டு வந்து விடும் என பலரும் அச்சம் கொண்டார்கள். ஆனால், ஒரு சில மணித்தியாலத்திற்குள் மீண்டும் இளைஞர்கள், ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் அணித்திரண்டு தமது போராட்டத்தினை தொடர்ந்தது மாத்திரமல்லாமல், தாக்குதல் மேற்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடம் கற்பித்து, அந்த தாக்குதலின் பின்னால் இருந்த சூத்திரதாரர்களையும் அம்பலப்படுத்தினார்கள். இது இந்தப் போராட்டத்திற்கு புதிய பரிணாமத்தினை வழங்கியதுடன், இதுவரைக்காலம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ள வழி செய்தது. இது இப்போராட்டத்தின் பொது நோக்கத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனலாம்.
இதன் மூலம் வெளிப்பட்ட பிரிதொரு விடயம் யாதெனில், இந்தப் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை, தலைமையினை, படிநிலையமைப்பினை, தனிப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட மரபு ரீதியான ஊழல் நிறைந்த மற்றும் நாடாளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்டம் என்பதனையாகும். இதுவும் ஒரு வகையான நேரடி ஜனநாயக முறையாகும். இதன் காரணமாக போராட்டக்களம் திறந்ததாகக் காணப்படுகின்றது. எந்த ஒரு சமூக வகுப்பினையும் இன, மத, பால்நிலை மற்றும் வேறுப்பட்ட அடையாளத்தினை கொண்டவர்களும் எந்நேரமும் வந்துப்போகக் கூடிய இடமாக காணப்படுகின்றது. போராட்டங்கள் ஒரு பக்கம் வெற்றிகரமாக இடம்பெற்று வரும் அதேவேளை, இதன் பிரதிபலிப்புகளை சட்டத்தினையும் நீதியினையும் நிர்வகிக்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளில் அவதானிக்க முடிகின்றது. நீதிமன்றங்களின் அண்மைக்கால தீர்ப்புகள், மனித உரிமை ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள், குறிப்பாக அரச அடக்குமுறையினை கண்டித்து அறிக்கை வெளியிடுவது, பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை, ராஜபக்ஷர்களுக்கு எதிரான ஊழல் வழக்குககளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீள ஆரம்பித்துள்ளமை மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பன அண்மைய உதாரணங்களாகும். இவை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற கேள்வியினையும் இங்கு முன்வைக்க வேண்டும். தீவிர நிறுவன மறுசீரமைப்புகளின் மூலம் இது சாத்தியமாகலாம்.
அந்தவகையில் காலிமுகத்திடல் போராட்டக்களம் ஆக்கத்திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இத்தகைய போராட்டக் கலாசாரத்தினை நாம் இதற்கு முன்னர் பார்க்கவில்லை. ஆகவே, போராட்ட அனுபவங்களை பெற்றுக்கொள்ள, அதில் பங்களிப்புச் செய்ய ஆயிரக்கணக்கான இலங்கை பிரஜைகள் சகல பேதங்களையும் மறந்து செல்கின்றார்கள். பெரும்பாலானோர் தமக்கென ஒரு அரசியல் அடையாளத்தினை கொண்டவர்கள். ஆனால், போராட்டக் களத்திற்கு சென்ற பின்னர் அவற்றை மறந்து பொது நோக்கத்திற்காக போராடுவது ஒரு சிறப்பம்சமாகும். இவையனைத்தும் ஒரு பக்கம் இலங்கையின் உயர் குழாம் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அரசியலை மறுசீரமைக்க முயற்சிப்பதுடன், மறுப்புறமாக பிரஜைகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன என்பதனையும் உணர்த்தியுள்ளது. வாக்களித்துட்டு 5 வருடங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விட்டு அடுத்த தேர்தல் இடம்பெறும் போது நித்திரையில் இருந்து வழிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த போராட்டங்கள் நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. அரசியல்வாதிகள், மக்கள் ஆணையினை துஷ்பிரயோகம் செய்வதற்கும் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஈடுப்படுவதற்கும் நாட்டில் பிரஜைகளே காரணம் என்பதனை இப்போராட்டங்கள் மீண்டும் நினைவூட்டிவுள்ளன.
பேராசியர் ஜயதேவ உயன்கொட கூறுவது போன்று, “கோடாகோகம” போராட்டக் களத்தில் வீசும் அரசியல் காற்று இலங்கை பிரஜைகளுக்கு புத்தாக்கத்தினை வழங்கியுள்ளது. ஆகவேதான் நூற்றுக்கணக்கான பிரஜைகள் காலிமுகத்திடலுக்கு அடிக்கடிச் சென்று தம்மை ஊக்கப்படுத்திக் கொண்டும் தாம் ஒரு பிரஜையாக பரிமாற்றம் அடையும் அனுபவத்தினை பெறுகின்றார்கள். இவ்வாறான பிரஜைகளின் ஈடுப்பாடு இலங்கையினுடைய ஜனநாயக பொது வாழ்க்கையில் நிரந்தரப் பண்பாகத் தொடரவேண்டும். அதில் எத்தகைய வேற்றுமைகளும் இன்றி சகல சமூகத்தவர்களும் பங்கேற்க வேண்டும். இது இலங்கையில் ஜனநாயகத்தினை மீளுருவாக்கம் செய்வதற்கு உதவும். அதன் மூலம் இலங்கையர்கள் இன, மதவாதமற்ற நாட்டினை, அரசியல் பொறுப்புகூறல், வெளிப்படைத்தன்மையுள்ள, மக்கள் பங்கேற்புடன் கூடிய ஆட்சி மற்றும் சமத்துவமான இலங்கையினைக் கட்டியெழுப்ப முடியும். நிச்சயமாக இது ஒரு நீண்டப்பயணம், புரட்சிகரப்பயணம் – அது கூட்டிணைந்த பயணமாக அமைய வேண்டும். இன்றைய போராட்டங்களின் இறுதி விளைவு மேற்கூறிய விடயங்களை அடியொட்டியதாக அமையவேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தினையும், இலங்கையில் மீள் ஜனநாயகமயப்படுத்தலையும் அடைந்துக்கொள்வதற்கான செயற்றிட்டத்தில் இவை அடிப்படையான அம்சங்களாக அமைய வேண்டும்.
மே 9 சம்பவமானது, பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சியில்லாத இடைக்கால அரசாங்கமொன்று அமைய வேண்டும் என்ற செய்தியினை வெளிப்படுத்தியுள்ளது – ஆர்ப்பாட்டக்காரர்களின் அன்மைக்கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன. ஆகவே, சமகி ஜன பலவேகய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி வழிநடாத்தும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன பங்குகொள்ளும் இடைக்கால அரசாங்கத்தினை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பிருக்கலாம். ஆனால், தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது பெரியளவிலான நம்பிக்கை இருப்பதாக தென்படவில்லை. அவர் ராஜபக்ஷ குடும்பத்தினை பாதுகாப்பதற்காகவே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஜனாதிபதி பதவி விலகாத நிலையில் பிரதமர் நியமனம் இடம்பெற்றிருப்பது எவ்வகையிலும் போராட்டங்களை கட்டுப்படுத்த உதவாது எனலாம். வருகின்ற நாட்களில் புதிய பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். அது ‘ரணில் கோ ஹோம்’ என்ற வகையில் அமையலாம். இந்நிலை தொடர்ந்தால் வருகின்ற நாட்களில் சமூக வாழ்க்கையில், ஆளுமை செயற்பாடுகளில், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக ஊகிக்கப்படுகின்றது. இதற்கு தற்போதைய அராஜக நிலையும் காரணமாக இருக்கலாம். இது மிகவும் ஆபத்தானது. தற்போதைய அரசியல் ஸ்த்திரத்தன்மையின்மைக்கு உடனடியான தீர்வுக்காணாவிட்டால் அடக்குமுறைகள் பல வடிவங்களில் வெளிப்படலாம்.
கலாநிதி இரா. ரமேஷ்
சிரேஸ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்