Photo, Selvaraja Rajasegar
தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில் அவை அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களாக முனைப்படைந்து இன்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
பௌத்த சிங்கள பேரினவாத போதையை ஊட்டி தங்களை பிழையாக வழிநடத்திய ராஜபக்ஷக்கள் நாட்டை வங்கரோத்து அடையச் செய்துவிட்டார்கள் என்ற புரிதல் சிங்கள சமுதாயத்தின் கணிசமான பிரிவினர் மத்தியில் வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் தமிழர்களின் அபிலாசைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிட்டார்கள் என்றோ, மாறுவார்கள் என்றோ நான் கூறவில்லை. ஆனால், அந்தப் புரிதல் மேலும் அவர்கள் மத்தியில் விரிவடையக்கூடியதான ஒரு தந்திரோபாயத்தையே தமிழர் அரசியல் சக்திகள் கையாளவேண்டும்.
அதை விடுத்து நாம் கஷ்டப்பட்டபோது நீங்கள் குரல் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் கஷ்டப்படும் போது நாம் ஒருமைப்பாட்டைக் காட்டமாட்டோம் என்று விதண்டாவாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது. காலமாற்றத்துக்கேற்ப நாம் சிந்திக்கவேண்டும்.
தமிழர்கள் நெடுகவும் கடந்த காலத்தில் வாழக்கூடாது. கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று புதிய பாதையை வகுக்கவேண்டும். மாறிவரும் உலகில் புதிய வாய்ப்புக்களை நாம் தவறவிடவும் கூடாது. இன்று ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அவர்களை வீட்டுக்குப் போகுமாறு கேட்பவர்கள் தென்னிலங்கையின் புதிய தலைமுறையினர். தற்போதைய போராட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, அவர்களும் நாங்களும் சந்திக்கக்கூடிய பல புள்ளிகள் இருக்கின்றன. அதை பயன்படுத்துவதன் மூலம் வரும் காலத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கு வழியை சிறிது சிறிதாக திறக்க வாய்ப்புக்கள் வரலாம். அது ஒரு நீண்டகால செயன்முறை.
காலங்காலமாக இனவாத அரசியலுக்குள் மூழ்கியிருந்த ஒரு சிங்கள சமுதாயத்தின் இன்றைய தலைமுறையினர் காலிமுகத்திடலில் வெளிப்படுத்துகிற கோசங்களின் ஆரோக்கியமான அம்சங்களை நாம் அடையாளம் காணவேண்டும். மூன்று தசாப்தகால போரின்போதான பொருளாதார இடர்பாடுகளை எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாம், தற்போதைய நெருக்கடியையும் கடந்து செல்வோம் என்று கூட சிலர் பொருந்தாத்தன்மையாக பேசுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
அதைவிடுத்து எம்மையும் அவலத்துக்குள்ளாக்குகிற பொருளாதார இடர்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும் அந்த இடர்பாடுகளுக்கு காரணமான ஆட்சியாளர்களை விரட்ட வேண்டியும் நடைபெறுகின்ற போராட்டங்களில் இருந்து எம்மைத் தூரவிலக்குவதன் மூலம் நாம் சாதிக்கப்போவது எதுவும் இல்லை.
வீரகத்தி தனபாலசிங்கம்