Photo, Selvaraja Rajasegar
இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத விதத்திலான ஓர் அரசியல் அனுபவத்தை எதிர்கொண்டு வருகின்றது. போர் இடம்பெற்ற காலம், ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலம் அல்லது இனக் கலவரங்களின் காலத்தின் போது குறிப்பிட்ட சில இடங்களில் மக்கள் கடும் துன்பங்களையும், இழப்புக்களையும் அனுபவித்தார்கள். ஆனால், இன்று பெரும்பாலான இலங்கையர்கள் பல மாத காலமாக உண்மையான துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். இந்தச் சுமை மேலும் மேலும் அதிகரித்து, இப்பொழுது சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்து நின்ற நான்கு முதியவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் இதற்கு முன்னர் ஒரு போதும் பார்த்திராத காட்சிகளை இன்று நாங்கள் பார்க்கிறோம். நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் மக்களுடைய இயல்பான அரசியல் கருத்து வெளிப்பாடுகள் இடம்பெறுவதனையும் பார்க்க முடிகிறது. வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகளில் இருந்து வரும் மக்கள் தாம் உடனடியாக இதனைச் செய்ய வேண்டியுள்ளது என்ற உணர்வில் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்கு முன்வருகின்றார்கள். அரசியல் ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு ஒரு சோற்றுப் பார்சல் அல்லது வேறு ஏதேனும் பொருளை வழங்குவதன் காரணமாக அவர்கள் இதற்கு முன்வரவில்லை. பெற்றோர் புதிதாக பிறந்த குழந்தையுடனும், தனது பெண்மணி ஒரு குழந்தையை ஏந்திய வண்ணமும், வயது முதிர்தவர்கள் சுலோக அட்டைகளை தூக்கிப் பிடித்தவர்களாகவும், சிலர் நாய்களையும் கூட அழைத்து வந்து இந்த இயக்கத்தில் இணைத்திருக்கிறார்கள். இந்த அளவிலான ஒரு மக்கள் இயக்கம் இதுவரையில் இலங்கையில் எழுச்சியடைந்திருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இப்பொழுது நாடெங்கிலும் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கவித்துவமாக வர்ணிப்பதற்கான ஓர் உந்துதல் எனக்கு ஏற்படுகிறது. ஆனால், அவ்வாறு செய்யமாட்டேன். இந்த நிகழ்வுகள் அனைத்தும் எங்கு போய் முடியும் என்பதனை காலம் மட்டுமே சொல்ல வேண்டும். ஆனால், இந்தத் தருணத்தில் வாழ்ந்து வருபவர்கள் என்ற முறையில் நாங்கள் எம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, இந்த நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் நாங்கள் ஒரு புதிய இலங்கையைக் கட்டமைப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதாகும். நான் ஒரு அரசியல் விஞ்ஞானியோ அல்லது அரசியல் கருத்துரையாளரோ அல்ல. மக்கள் எதிர்ப்பு என்ற அடிப்படையில் இலங்கையின் இந்த அரசியல் தருணம் எதனைக் காட்டுகிறது? என்பது தொடர்பாக நான் இங்கு கருத்துக்களை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் யாப்பு ரீதியான ஆட்சியின் கண்ணோட்டத்திலிருந்து இதனையடுத்து எதனை நாங்கள் கற்பனை செய்து கொள்ள முடியும் என்பது குறித்து மட்டுமே நான் பேசுவேன். ஆனால், இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் நாங்கள் இன்று இந்த நிலைக்கு வந்து சேர்ந்திருப்பது ஏன், எப்படி என்ற விடயம் குறித்து சுருக்கமாக எடுத்து விளக்குவது பயனுள்ளதாகயிருக்குமென நினைக்கிறேன்.
பல அரசாங்கங்களினால் துன்பங்களை அனுபவித்து வந்திருக்கும் இலங்கையர்கள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள் ஆகிய தரப்புக்கள் இலங்கை ஜனநாயகம் குறித்தும், அதன் தனித்தனிக் கூறுகள் குறித்தும் பல விடயங்களை கூறியிருக்கின்றார்கள். நீண்டகாலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் பல சந்தர்ப்பங்களில் அடிப்படை உரிமை மீறல்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள். இனத்துவச் சிறுபான்மையினர் மற்றவர்களை பார்க்கிலும் அதிக அளவில் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைப்பு என்பவற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். பல அரசாங்க அதிகாரிகளினால் உதாசீனத்திற்கும், பாரபட்சத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறுபான்மை சமூகங்களை எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் பல சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வண. கல்கந்தே தம்மானந்த தேரர், Youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் அவருடைய பகிரங்க செய்திகளில் இந்த பிரச்சினைகள் சிலவற்றை குறிப்பிட்டிருக்கிறார். விளிம்பு நிலையில் இருந்து வரும் (போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் அவ்வாறு குறிப்பிடுகின்றார்) மக்களை அரசாங்கம் நடத்தியிருக்கும் விதம், அந்தந்த அரசாங்கத்தின் நாணயம் மற்றும் நீதியுடன் ஆட்சி நடத்துவதற்கான கடப்பாடு என்பவற்றுக்கான அளவுகோலாக இருந்து வருகின்றது என அவர் கூறுகிறார். இவ்விதம் இந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் விடயம் குறித்து பெண் செயற்பாட்டாளர்களும், கல்விமான்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களிடம் குரல் எழுப்பி வந்துள்ளார்கள். கொள்கை வகுப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை பொதுப் புத்திசார்ந்த அணுகுமுறையின் அடிப்படையில் நடத்துவதனை அவர்கள் எதிர்த்து வந்துள்ளார்கள். நாட்டுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும், சம்பளம் இல்லாத குடும்பப் பாரமரிப்புத் துறையில் ஒரு முன்னணி பங்கினை வகித்து வருவதிலும், இலங்கைப் பெண்கள் மோசமான ஆட்சி மற்றும் சுரண்டல் என்பவற்றின் சுமையை தாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயத்தை அவர்கள் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுவதற்கு முயன்றுள்ளார்கள். பெண்கள் தொடர்பான எத்தகைய அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது உள்வாங்கலோ இல்லாத நிலையில் இந்த முயற்சிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. பொது மக்களின் நலன் உதாசீனம் செய்யப்பட்டமை, ஊழல் கலாசாரம் பார்க்குமிடமெல்லாம் ஊடுருவியிருக்கும் நிலை, இயற்கை வளங்களின் சுரண்டல் போன்ற பரவலான பிரச்சினைகளை என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும். மேலும், அரச நிறுவனங்கள் தமது பணிப்பாணைகளை நிறைவேற்றிவைக்கத் தவறியிருக்கும் விடயத்தினையும் என்னால் நினைவூட்ட முடியும். இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் எனது சொந்தப் பணியிடமான பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் இது தான் நிலைமை.
இலங்கையின் மீது இப்பொழுது எந்த அளவுக்கு உயர்வாக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்றால், இன்று இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் எழுப்பி, கலந்துரையாடி, அவற்றுக்கென போராடுவதற்கான ஓர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வெளி எமக்குக் கிடைத்துள்ளது. மேலும், அதிகம் அதிகமான மக்கள் இப்பொழுது பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இனத்துவச் சிறுபான்மையினர் மற்றும் வறியவர்கள் ஆகிய அனைவரும் தமது மிகக் கடுமையான, அதிர்ச்சியூட்டக் கூடிய அனுபவங்களை ஒரு பரந்த பின்புலத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் மீதான எதிர்த் தாக்குதல் கற்பனைக்கு எட்டாத அளவில் உச்ச மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. அரசியல் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் உரிமைகளை மதிக்கத் தவறும் போக்கு, வெகுவிரையில் ஏனையவர்கள் மத்தியிலும் விரிவாக்கப்பட முடியும். அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் இன்று (ஏப்ரல் 6) நான் காலையில் துயிலெழும் பொழுது இந்தப் பிரகடனம் ஜனாதிபதியினால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற விடயத்தை தெரிந்து கொண்டேன். இலங்கை குடியரசாக மாறிய பின்னர் அநேகமாக 2012ஆம் ஆண்டு வரையில் அது தொடர்ந்தும் அவசர காலச் சட்டத்தின் கீழேயே ஆளப்பட்டு வந்துள்ளது. அவசர காலச் சட்டத்தின் கீழான ஆட்சி நாட்டில் சர்வசாதாரணமாக இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், இன்று அலை மறு திசையை நோக்கித் திரும்புவதை பார்க்க முடிகின்றது. இலங்கையில் நிலவி வந்த அரசியல் கலாசாரம் மற்றும் காலனித்துவத்தின் ஏகாதிபத்திய மரபுரிமை என்பன (குறைந்தது அதன் ஒரு பாகம்) முடிவுக்கு வருவதன் ஓர் அடையாளமாக இது இருக்கின்றதா என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.
ஆகவே, அடுத்து என்ன? தேவைப்படும் அடுத்த காரியம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து விடுவதாகும் என நான் நம்புகிறேன். அது ஒரேயொரு படிமுறை மட்டுமல்லாமல், அத்தியாவசியமான படிமுறையாகவும் இருந்து வருகின்றது அந்தப் படிமுறையை முன்னெடுக்காமல் எமக்குத் தேவைப்படும் அரசியல் மாற்றத்தையும், மக்கள் கோரி வரும் அரசியல் மாற்றத்தையும் நாங்கள் சாதித்துக் கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பு ஜனநாயகத்தின் கோளாறுகளுக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை ஏன் மூல காரணமாக இருந்து வருகின்றது என்ற விடயம் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் உறுதிப்பாடு என்பன எங்கள் ஜனாதிபதி முறையின் உயரிய குறிக்கோள்களாக இருந்து வருவதாகக் கருதப்பட்டது. ஆனால், 40 ஆண்டுகளின் பின்னர் வரலாறு காணாத ஒரு நெருக்கடியில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். சரியாக சொல்லப் போனால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடியாகும். ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயம் தொடர்பாக இன்னும் எவருக்காவது சந்தேகமிருந்தால், ஜனாதிபதிகளால் மீண்டும் மீண்டும் எவ்வாறு நீதித் துறையின் சுயாதீனம் குலைக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை அவர்கள் வாசிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் ஊடாக அவர்கள் முன்னெடுத்த அதிகார துஷ்பிரயோகங்களையும், மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அண்மையில் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தன என்பதனையும், ஓய்வுபெறும் ஜனாதிபதிகள் தமக்குரிய ஓய்வு அனுகூலங்களை எவ்வாறு பெற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதனையும் ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சந்தேகங்களை கொண்டிருப்பவர்கள் சற்றுப் பார்க்க வேண்டும்.
எமது நிறைவேற்று ஜனாதிபதிகளின் கடந்த காலச் சாதனைகள் அரசியல் யாப்பு ரீதியான ஆட்சியைப் பொறுத்தவரையில் மிக மோசமானவையாகவே இருக்கின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்துபோதிலும், அவற்றை இங்கு நான் விரிவாக எடுத்துக் கூறப் போவதில்லை. அந்த நிலையில், நிறைவேற்று ஜனாதிபதியின் அத்துமீறல்களை அரசியல் யாப்புக்கு ஊடாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருந்து வந்துள்ளது. இலங்கை அரசியல் யாப்பு, ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை கோட்பாட்டு ரீதியில் கொண்டுள்ளது (உறுப்புரை 30 தொடக்கம் 40). பின்வரும் நிலைமைகள் உருவாகியிருப்பதாகக் கூறி நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை நிறைவேற்றி வைப்பதன் மூலம் அந்த நடைமுறையை தூண்டி விட முடியம்: ஜனாதிபதி தனது அலுவலகக் கருமங்களை நிறைவேற்றி வைக்கும் விடயத்தில் நிரந்தர இயலாமையைக் கொண்டுள்ளார் அல்லது அரசியல் யாப்பை வேண்டுமென்றே மீறுதல், தேசத் துரோகம், ஊழல், ஜனாதிபதிப் பதவியை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றை அவர் இழைத்துள்ளார் அல்லது ஒழுக்கச் சீர்குலைவு தொடர்பான குற்றச் செயலை இழைத்துள்ளார் என்ற அடிப்படையில் அதனை மேற்கொள்ள முடியும். உண்மையில் இதுவே தற்போதைய நிலையாக இருக்கின்றது என பலர் வாதிட முடியும். எவ்வாறிருப்பினும், அத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி, ஒரு முடிவுக்கு வர வேண்டும். உச்ச நீதிமன்றம் இதற்கு உடன்படும் விதத்தில் அதன் முடிவை வெளியிட்டால் நாடாளுமன்றம் ஒரு பிரேரணையின் மூலம் ஜனாதிபதிக்கு எதிராக ஒரு குற்றப் பிரேரணையை கொண்டு வர முடியும். இது கொள்கை ரீதியில் சாத்தியமானதாக இருந்தாலும் கூட, இந்த வழிமுறையை முன்னெடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் (உண்மையிலேயே அவ்வாறு நீண்ட காலம் எடுக்க வேண்டும்).
அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு தெரிவு இராஜினாமா செய்வதாகும். ‘சபாநாயகரிடம் தனது கைப்பட இராஜினாமாக் கடிதத்தை எழுதிக் கொடுப்பதன் மூலம்’ ஜனாதிபதி அவ்வாறு இராஜினாமா செய்ய முடியும். இது உடனடியாக அமுலுக்கு வரும். அந்த வெற்றிடம் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் பூர்த்தி செய்யப்படுவதுடன், அவர் எஞ்சியுள்ள பதவிக் காலம் வரையில் பதவி வகிப்பார் (உறுப்புரை 40(1)).
இந்த இரு தெரிவுகளில் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் தெரிவு, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயத்திற்கு ஜனாதிபதி தலைமைத்துவத்தை வழங்கி, அதன் பின்னர் இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகும். அதன் மிகப் பாரதூரமான, சீர்குலைவுகளை எடுத்து வரக் கூடிய இந்த நெருக்கடியை இலங்கை ஒரு புதிய ஆரம்பத்துடன் கையாள முடியுமென நாட்டுப் பிரஜைகளாகிய நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால், நாங்கள் எமது அரசாங்கத்தின் மீது உயர் மட்டத்திலான நம்பிக்கையை கொண்டிருத்தல் வேண்டும். பொது மக்கள் மத்தியிலான அத்தகைய ஒரு நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டுமானால் தற்போதைய அரசியல் தலைமைத்துவம் மாற்றமடைய வேண்டும். குறைந்தது அந்தக் காரணத்திற்காவது தற்போதைய அரசியல் தலைமைத்துவம் மாற்றமடைதல் வேண்டும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டால் புதிதாக கொண்டுவரப்படும் முறை எந்த வகையானதாக இருக்க முடியும்? இது தொடர்பான விபரங்கள் மிகவும் கவனமான விதத்தில் உருவாக்கப்படுதல் வேண்டும். எனினும், அது நாடாளுமன்ற ஜனநாயகமாக இருந்து வருவதுடன், அநேகமாக சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இருந்த முறைக்கு இணையானதாக இருக்க வேண்டும். பிரதமர் அமைச்சரவைத் தலைவராக இருப்பதுடன்;, ஜனாதிபதி பெயரளவில் அப்பதவியை வகித்து வருவார். அரசியல் யாப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் முதலியவை அந்தத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட முடியும். இந்த முறையின் அனுகூலங்கள் எவை? அமைச்சரவையின் தலைவர் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டியவராக இருப்பது மட்டுமன்றி, அவர் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும். தலைமைத்துவம் ஒரு தனிநபர் மீது ஒன்றுதிரண்டிக்காது கூட்டுத் தலைமைத்துவமாக இருக்கும். நாடாளுமன்ற முறையின் முக்கியமான பிரதிகூலம் அரசாங்கங்கள் நிலையற்ற தன்மைகளை எதிர்கொள்வதாகும். எவ்வாறிருப்பினும், இந்த முறை அரசியல் யாப்பு ரீதியான ஆட்சிக்கான ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதுடன், அதிகார துஷ்பிரயோகத்திற்கான வாய்ப்புக்களை குறைக்கிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் (‘ஏதேச்சாதிகார இயல்பிலான’) முதலாவது குடியரசு யாப்புக்கு மாறான விதத்தில் சோல்பரி அரசியல் யாப்பு சுயாதீனமான ஒரு அரசாங்க சேவைக்கான ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. உண்மையில் சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் ஆட்சி செய்வது என்பது பெருமளவுக்கு பிரச்சினைக்குரியதாக இருந்தது என்பதனை நாங்கள் அறிவோம்: 1956ஆம் ஆண்டின் சிங்கள மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை இதற்கான மிகச் சிறந்த உதாரணம். ஆனால், ஓர் அரசியல் அமைப்பு வடிவமைப்பின் வரையறைகளை அந்த இடத்திலே நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அந்தத் தூரம் வரையில் மட்டுமே அது எம்மை எடுத்துச் சொல்ல முடியும். அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மக்கள் (தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும்) மற்றும் நிறுவனங்கள் (அரச நிறுவனங்கள், சமய அமைப்புக்கள், பாடசாலைகளன் முதலியவை) தமது வகிபாகத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும். நாங்கள் அதனைச் செய்யும் பொழுது, இதுவரையில் சாத்தியமற்றது எனக் கருதப்பட்ட விடயங்கள் சாத்தியமாகும். இலங்கையின் இந்தத் தருணத்தில் அந்தப் பாடத்தையே நாங்கள் எல்லோரும் கற்று வருகின்றோம்.
மற்றொரு விடயமும் இங்கு தெளிவுபடுத்தப்படுதல் வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக எமக்கு ஒரு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுகின்றதா? இதற்கு சாத்தியமான இரு பதில்கள் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளை நாங்கள் கவனத்தில் எடுத்தால் “ஆம், அதற்கு நாங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்று தான் கூறுவோம். இந்தக் கேள்வி இன்று மக்களிடம் முன்வைக்கப்பட்டால் இந்தப் பதவியை ஒழிக்கும் விடயத்திற்கு மக்கள் உடன்படுவார்கள் என நான் நினைக்கிறேன். உண்மையிலேயே அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு செலவு கூடியதாகவும், அதிக காலத்தை எடுக்கக்கூடியதாகவும் இருந்தாலும் கூட, மக்களுடைய ஒப்புதலைப் பெற்றுக்கொள்வது அரசியல் ரீதியில் விரும்பத்தக்கதாக இருக்கும் என நான் வாதிடுகிறேன். இதற்கான மற்றைய பதில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதல் இதற்குத் தேவையில்லை என்பதாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை உருவாக்கும் உறுப்புரை மிக இறுக்கமானதாக இருந்து வரவில்லை (அதாவது, அது திருத்தப்படும் பொழுது அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை). எனவே, சட்ட ஏற்பாடுகளை வாசித்துப் பார்க்கும் பொழுது, ஜனாதிபதி முறையை நாடாளுமன்றத்தில் 2/3 உறுப்பினர்கள் அதற்குச் சாதகமாக வாக்களிப்பதன் மூலம் ஒழிக்க முடியும். அரசியல் யாப்பு நிறைவேற்று ஜனாதிபதி முறையை வேரூன்றச் செய்யும் இயல்பைக் கொண்டிராது விட்டாலும் கூட, பலரின் அரசியல் கற்பனையில் – குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொருள் கோடலில் – அது அவ்விதமே நோக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோட்பாட்டு ரீதியில் இரு பக்கங்களிலும் நின்று இது தொடர்பாக வாதாட முடியும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை இப்பொழுது ஒழிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும் அதே வேளையில், அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் என்பன அதற்கான சாத்தியப்பாட்டிற்கு இடமளிக்காதிருப்பின், 2018ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்ட 20ஆவது வரைவுத் திருத்தம் முன்னோக்கிய பயணத்திற்கான ஒரு வரைவை வழங்க முடியும். இந்த உத்தேசத் திருத்தம் ஜனாதிபதி நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட வேண்டுமென்ற ஏற்பாட்டைக் கொண்டிருந்தது. இந்தத் திருத்தம் உத்தேசிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 19ஆவது திருத்தம் அமுலில் இருந்தது. இன்று இந்தப் பாதையில் திரும்பிச் செல்வதற்கு நாடாளுமன்றம் 2015ஆம் ஆண்டின் 19ஆவது திருத்தத்துடன், 2018இல் உத்தேசிக்கப்பட்ட 20ஆவது திருத்தத்தையும் சேர்த்து, 19ஆவது திருத்தம் மற்றும் யோசனை என்பவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும். இந்த நிலையில், ஜனாதிபதி (நேரடியாக மக்களிடமிருந்து அல்லாது) நாடாளுமன்றத்திலிருந்து தனது பணிப்பாணையை பெற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் யாப்பு முறையை நாங்கள் கொண்டிருப்போம். அப்பொழுது ஜனாதிபதி குறைந்த அதிகாரங்களுடன் செயற்பட்டு வருவார். இந்தப் பின்னணியில், ஏனையவற்றுக்கு மத்தியில் நியதிபூர்வமான ஆணைக்குழுக்கள் மற்றும் பகிரங்க நிறுவனங்கள் என்பன சுயாதீனமாக செயற்படும். இந்தத் திட்டத்தில், அரசின் நிறைவேற்றுப் பதவி என்ற உச்ச மட்டத்தில் ஒரு தனிநபருக்கு பரலான தற்துணிபு அதிகாரங்களை மறுக்கும் குறிக்கோளுக்கு நாங்கள் மிக அருகில் இருக்கின்றோம்.
எம்மை மீண்டும் சுற்று வட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையை அல்லாமல், இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் எடுத்து வரக் கூடிய ஒரு பாதையை இலங்கை தெரிவு செய்ய வேண்டும். சங்கீதக் கதிரை விளையாட்டு எமக்குத் தேவையில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் தாம் சுயநல அக்கறையுடன் செயற்படுபவர்கள் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள். மக்கள் தன்னியல்பிலான ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். இந்த நெருக்கடிக்கான ஒரு தீர்வை அவர்கள் கோரி நிற்பதுடன், நபர்கள் மாற்றப்பட வேண்டும் எனவும் கோருகிறார்கள். எனது அபிப்பிராயத்தில் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே எம்மால் அதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது, அந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் மையமாக இருந்து வருதல் வேண்டும். ஹிட்லரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்து வந்த ஜேர்மனிய சமய அறிஞர் டீட்ரிச் போன்ஹோபர் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீங்கள் பிழையான ரயில் வண்டியில் ஏறியிருந்தால், ரயில் பெட்டிக்குள் எதிர்திசையில் ஒடிக் கொண்டிப்பதில் எந்தப் பிரயோசமில்லை.” இலங்கையில் இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்கு இந்த மேற்கோள் உதவியாக இருக்கும்.
ரயில் வண்டி வேகத்தை குறைத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. ஆனால், இன்னமும் அது தனது பயணத்தை மேற்கொள்ள முயல்கின்றது. நாங்கள் ரயில் பெட்டிக்குள் எதிர்திசையில் ஓடிக்கொண்டிருக்கும் காரியத்தையே செய்து கொண்டிருக்கிறோம். அந்த ரயில் வண்டியிலிருந்து கீழே இறங்கி, ஏறுவதற்கு மிகவும் உசிதமான ரெயில் வண்டியை நாங்கள் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
தினேசா சமரரத்ன
07.04.2022 அன்று கிறவுண்விவ்ஸ் தளத்தில் “What is Next?” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.