படம் | Cphdox

1

சாவுகளால் ஓலமிடும்

கடற்கரை வெளியில் முளையிடுகின்றன

குழந்தைகளின் விரல்கள்.

 

2

காகங்களும் கரையாது

வெறித்து நீளும் கடலில்

அலைகளும் செத்தபின்

துயரங்களால் நிறைந்த காற்று

மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.

 3

பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது

அந்திச் சூரியன்.

குருதியின் நிறத்தை காறியுமிழ்ந்து போயின

நாட்கள்

போர் நாட்கள்.

 

4

சுட்டுவிரல் துண்டிக்கப்பட்டவனின் துப்பாக்கி

துருவேறித் துருவேறி

உப்பு மணலில் புதைகின்றது.

 

5

மரணம் நிரம்பிய கடற்கரை முற்றத்தில்

கால்களுக்குள் மிதிபட்டுச் சிதைந்துபோயிற்று

அவசரத்தில் மணமுடித்தவனின் கனவுகள்.

 

6

மாபெரும் பறை

தோல் கிழிந்து கிடக்கிறது.

வெற்றிக் களிப்பின் கீதங்களை

முணுமுணுக்கவியலாது

வயிறு பொருமித் துடிக்கிறது காற்று.

 

7

இலைகள் புலுண்டி மணக்க

மரங்களில் செத்துத் தொங்குகின்றன பறவைகள்.

பிணங்களை எரியூட்டிய தீயில்

புகைப்பிடிக்கிறான் படைவீரன்.

 

8

ஒப்பாரிகளும் ஓலங்களும் அடங்கிய நிலத்தில்

கொலையாளிகளின்

வெற்றிக் கூச்சலென இரைகிறது கடல்.

 

9

யாரும் திரும்பாத நிலத்தில்

பாலையை விரித்தபடி

கோபுரங்கள் உயர்கின்றன.

நினைவுகளை அழிக்க முடியாதவனின் குரலோ

அந்தரத்தில்…

 

10

சிதம்பிய கடலின் நுரைகளிலெல்லாம்

புழுக்கள்.

 

11

வானம்

கடல்

தரை

யாவுமே

கைகளற்றவனின் கனவுகளுக்கும் தொலைவில்.

 

12

கள்ளிகளும்

இன்னும் முட்செடிகளுமாய்

நினைவுகளின் புதரடர்ந்த நிலம்.

 

சித்தாந்தன்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.