யுத்தம் முடிவடைந்து நாளை மறுநாளோடு 5 வருடங்கள் பூர்த்தியாகப் போகின்றன. தென்னிலங்கை இந்த வருடமும் கொண்டாட்டத்தில் மூழ்கப் போகிறது. வட கிழக்கு இம்முறையும் அடக்குமுறைக்கு உள்ளாகப்போகிறது. யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கழியப்போகின்ற நிலைமையில் இதுதான் உண்மையில் கிடைக்கப்பெற்ற பலன் என்று கூறலாம்.

யுத்தத்தின் பின்னர் வடக்கில் முழுவீச்சில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அரசு கூறிவருகிறது. இதையே சர்வதேச அரங்கங்களிலும் பறைசாற்றி வருகிறது. அதோடு, நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வடக்கில் தேர்தல் நடத்தியதன் மூலம் சிவில் நிர்வாகத்தை ஸ்தாபித்துள்ளதாகவும் மேடைக்கு மேடை தெரிவித்து சமாளிப்புக்களை செய்துவருகிறது இலங்கை அரசு.

ஆனால், 5 வருடங்கள் யுத்தம் முடிவடைந்தும் இறுதி யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும், யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் மக்கள் முகம்கொடுத்துவருகின்ற சிக்கல்களுக்கும் இதுவரை தீர்வுகாணப்படவில்லை. ஆனால், இன்னும் 5-10 வீத பிரச்சினைகள் மட்டும்தான் தீர்க்கப்படவிருக்கின்றன என்று இலங்கை அரசு பேசிவருகிறது.

இடப்பெயர்வு

இறுதி யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் 2006ஆம் ஆண்டு பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் இன்னும் குடியேற்றப்படாமல் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சம்பூரிலிருந்து வெளியேறி 8 வருடங்களை அவர்கள் நினைவுகூர்ந்திருந்தனர். சொந்த பூமியிலேயே சாவு நிகழவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 9,000 ஏக்கர்களை விழுங்கியிருக்கும் இலங்கை அரசு, மீள்குடியேற்றம் முற்றிலும் முடிவடைந்திருப்பதாக கூறுகிறது. ஆக, கைப்பற்றப்பட்டிருக்கும் காணிகள் மீண்டும் வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இலங்கை அரசு இருப்பது தெளிவாகிறது. இதேபோன்று, வலிகாமம், பலாலி, கேப்பாபிலவு, வவுனியாவில் இடம்பெயர்ந்த முகாம்கள் அமைந்த காணிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் கைப்பற்றப்பட்ட காணிகள் என பல்லாயிரக்கணக்கான காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.

காணாமல்போனோர்

2012ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தங்களிடம் இலங்கையில் காணாமல்போன 16,090 பேர் தொடர்பான முறைப்பாடுகள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இறுதி யுத்தத்தின்போது சாட்சிகளுடன் சரணடைந்த பலரின் நிலை குறித்து எந்தவிதத் தகவல்களும் இல்லை. இவர்களை கண்டுபிடிக்க – சர்வதேசத்தை சமாளிக்க – உண்மையை கண்டறிவதற்காக – இன்னுமொரு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. ஏலவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போன்றே இதன் செயற்பாடும்.

ஆனால், தற்போது காணாமல்போனவர்களின் பட்டியலில் உள்ள 90 வீதமானவர்களின் பெயர்களை நீக்கப்போவதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் ருவண் வணிகசூரிய தெரிவித்திருக்கிறார். அனைவரும் வெளிநாடுகளில் இருக்கின்றமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், காணாமல்போனவர்களை தேடியறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் எதற்காக ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும்? ஆணைக்குழு செய்யவேண்டிய செயற்பாடுகளில் ஏன் இராணுவத்தினர் தலையிடவேண்டும்? ஆக, இது விடயத்திலும் எந்தவித தீர்வும் கிட்டப்போவதில்லை என்பதே தெளிவாகிறது.

இராணுவமயமாக்கல்

அதேவேளை, யுத்தம் முடிந்த கையோடு இராணுவத்தினர் வடக்கிலேயே குடிமர்ந்துவிட்டனர். கைப்பற்றப்பட்ட அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைப்பதற்காக மக்களது காணிகளை சண்டித்தனமாக அபகரித்துவருகின்றனர். இத்தோடு இவர்களது செயற்பாடுகள் நில்லாமல் வட மாகாணத்தின் சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றனர். அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பது, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவது, உத்தியோகபூர்வ அறிவிப்புடன் மக்களை கண்காணிப்பது, ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயற்படுவது, வியாபாரத்தில் ஈடுபடுவது, மக்களின் காணிகளை அபகரிப்பது என அனைத்து விதமான அத்துமீறல்களிலும் இராணுவம் ஈடுபடுகிறது. வடக்கு மாகாண சபையை முறையாக நடத்திச் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பலதடவைகள் கூறியுள்ளார். அண்மையில் சர்வதேச நெருக்கடிகள் குழு வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இராணுவமயமாக்கல் தொடர்பாக விரிவாக பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

வடக்கில் இராணுவத்தின் இருப்புக்கான நியாயமான காரணத்தை சர்வதேசத்துக்கு கூறியாகவேண்டிய ஒரு கட்டாய நிலை காணப்படுவதால், புலிகள் மீளுருவாக்கம் பெறுகின்றனர் என கடந்த மார்ச் மாத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு தெரிவித்திருந்தது. ஆகவே, புலி பூச்சாண்டியைக் காட்டி வடக்கிலிருந்து இராணுவத்தை மீள அழைப்பது என்பது நடக்காத காரியமே.

நல்லிணக்கம்

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து விளக்கேற்ற இம்முறையும் இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி விளக்கேற்றினால் கைதுசெய்யப்படுவர் என இராணுவம் தெரிவிக்கிறது. உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதென்பது அடிப்படை மனித உரிமையாகும். யுத்தத்தின் உயிரிந்தவன் விடுதலைப் புலியாகவிருந்தாலும் அவர் ஒரு தாயின் மகனாகவோ அல்லது சகோதரனாகவோ, கணவனாகவோ, தந்தையாகவோ, நண்பனாவோ இருந்திருக்கக்கூடும். அந்தவகையில் அந்த நபரை நினைவுகூர்ந்து விளக்கேற்றவாவது அனுமதிக்கலாம். ஆனால், இலங்கை அரசோ முடியாதென்கிறது.

“யுத்தத்தின்போது வெவ்வேறு தினங்களில் உறவுகள் உயிரிழந்திருக்கலாம். ஆகவே, மே மாதம் 18ஆம் திகதி என்ற ஒரு நாளில் ஏன் நினைவுகூறவேண்டும். உயிரிழந்த தினத்தில், அதுவும் வீடுகளுக்குள்ளேயே நினைவுகூறல்களை மேற்கொள்ளவேண்டும் என யாழ். இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். அவர் சொல்வதிலும் நியாயம் உள்ளது என்றாலும், இறுதி யுத்தத்தின்போது உறவுகள் எந்த தினத்தில், எங்கு, எப்படி உயிரிழந்தார்கள் என்றே தெரியாமல் பலர் இருக்கின்றனர் என்றும் அவரிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அவர்களை எவ்வாறு நினைவுகூர்வது? அதனால்தான் யுத்தம் முடிவடைந்த நாளன்று உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூர்ந்து விளக்கேற்ற உறவுகள் நான்கு வருடங்களுக்கு முன்னரே முடிவுசெய்திருந்தது. ஆனால், இதுவரை அதையும் செய்யவிடாமல் தமிழர் பகுதிகளை சிறைவைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஆகவே, தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிகட்டவேண்டுமாக இருந்தால் இனப்பிரச்சினைக்கு அர்த்தபுஷ்டியான தீர்வு வழங்கப்படவேண்டும். தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைப்பதலால் நியாயமான தீர்வு வழங்கப்படப்போவதில்லை என்பதை யாவரும் அறிவார்கள். இருந்தாலும் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், “இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தெரிவிக்குழுவில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை வற்புறுத்தங்கள்” என இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது.

சர்வதேசத்தை நம்பி வாழ்வது மட்டுமே தமிழர்களால் செய்யக்கூடிய ஒன்று. சர்வதேச நாடுகளும் தங்களது நலன்களுக்கு ஏற்ப செயற்படுமாக இருந்தால் தமிழர்களின் அடையாளமே அற்று போகக்கூடிய ஒரு காலம் உருவாக நேரிடும்.

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் பூர்த்தி தொடர்பாக விருது வென்ற எமது சகோதர இணையதளமான www.groundviews.org விசேட பக்கமொன்றை ஒதுக்கி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அத்தோடு, www.vikalpa.org என்ற சகோதர தளமும் யுத்த பூர்த்தியை முன்னிட்டு கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது.