படம் | AP Photo, Eranga Jayawardena, Aljazeera

சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டபொழுது அதே சமயத்தில் கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் வர்க்கங்கள் மற்றும் பால் தொடர்பான தமது சமூக விஞ்ஞானக் கொள்கையினை வெளியிட்டனர். வரலாற்றின் போக்கு அங்கு பொருந்தும் பொருளாதார நலன்கள் சார்ந்த குழுமங்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்று நிறுவி சமூக விஞ்ஞானத்திலும் கூர்ப்புக் கொள்கையினை நிலைநாட்டினர். உண்மையில் பார்க்கப் போனால் விலங்குகளோ மனிதர்களோ கோள்களோ கலங்களோ இவை யாவையும் இப்பிரபஞ்சத்தில் ஒரே விதிகளுக்குக் கீழ் இயங்குவதை நாம் பார்க்கலாம். இதேபோலவே விஞ்ஞானி ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடும் சமூகக் கோட்பாடுகளுடன் பொருந்துவதைக் காணலாம். இதனை சமூக விதிகளுக்குப் பிரயோகித்தால் இப்படிக் கூறலாம். நாம் எதை எப்படிப் பார்க்கின்றோ​மோ அதுவே நாமாகின்றோம். எமது நடத்தைப் போக்குகள் நாம் குறிக்கும் இன்னொன்றின் நடத்தைப் போக்குகளின் சார்பாகவே உருவாகின்றன. அதாவது, ஒரு பிரச்சினையை எப்படி உருவகிக்கின்றோமோ அப்படியே எமது இயல்புகளும் அமைகின்றன என்பதாகும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை சிங்கள தேசம் பயங்கரவாதம் என உருவகித்தது. அது பயங்கரவாதம் எனில், தான் இந்தப் பயங்கரவாதத்தினை வெற்றி கொள்ளும் இன்னும் பெரிய பயங்கரவாதியாக மாற வேண்டியதாயிற்று. மாறாக, இப்போராட்டத்தினை அரசியல் பிரச்சினையாக அவர்கள் உருவகித்திருந்தால் நிலைமையே வேறாகியிருக்கும். தாம் இராஜதந்திரிகளாகவும் தீர்க்கதரிசனம் கொண்ட அரசியல்வாதிகளாகவும் உருமாறியிருப்பர். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாது, 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுற்றபோது, இனி சமாதானமும் அபிவிருத்தியும் மலரும் என்று தென்னிலங்கையே கொண்டாடியது. ஆனால், விடுதலைப் புலிகளைப் பூதம் என்று அடையாளமிட்டு அழிக்கப் போய் தானே மிகப்பெரிய பூதமாக மாறியதை அது உணரவில்லை. ஏன், இன்றும் கூட தமது ஜனநாயக முறைமைகளுக்கு இந்தக் காலத்தில் என்ன நடந்தது என மூக்கால் அழுகின்றனர். நந்திக்கடலில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு யுகம் முடிவடைந்து இன்று ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்திற்குள் இப்பூதம் இன்னும் வளர்ந்த நிலையில் அது என்ன உருக்கொண்டிருக்கின்றது என நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

ஸ்ரீலங்கா அரசின் தன்மைகள் இரண்டு. ஒன்று குடும்ப அடிப்படையிலான ஆட்சியாகும். அடுத்து, இன மத அடிப்படையிலான மேலாதிக்கத்திற்கு ஆதரவான குழுக்கள் பிரயோகித்த செல்வாக்காகும். இது எமது நாடு சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு தொடர்ந்திருந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே வலிமை பெற்று வளர்ச்சியடைந்தது. இதற்கு மேலாக, ஈழ யுத்தத்தினை முன்னெடுத்த விதத்தில் அது இராணுவமயப்பட்டும் விட்டது. இராணுவ ஆதரவுத் தளத்தில் அது இயங்க ஆரம்பித்ததனால் குடும்ப ஆட்சியும் மதக் குழுக்களின் அட்டகாசமும் முன்னெப்போதும் பார்த்திராத அளவில் இன்று வலிமை பெற்றிருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நகைச்சுவைத் துணுக்கு கொழும்பவர்கள் மத்தியில் பரவ விடப்பட்டது. ஒவ்வொருவரும் தமது பெயரை ராஜபக்‌ஷ என மாற்றிக்கொள்வதற்கு முனைந்ததனால் ஆட்பதிவுத் திணைக்களத்தில் அவ்வளவு கூட்டமாம். அந்த அளவுக்கு ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தேசிய, மாகாண உள்ளுர் மட்டங்களில் அரசியல் பதவிகளையும், அமைச்சு மட்டங்களில் உயர் பதவிகளையும் வகிக்க ஆரம்பித்திருந்தனர். அது மட்டுமல்லாது, அரச அபிவிருத்தித் திட்டங்களின் ஒப்பந்தங்கள் யாவையுமே இவர்கள் கைகளில் விழுந்தன. தன்னைச் சுற்றி உறவினர்களை அரணாகக் கட்டி வைத்ததில் பெரும் பாதுகாப்பையும் எமது ஜனாதிபதி தமக்குத் தேடிக்கொண்டுள்ளார். அவர்கள் யாவரும் இவருடைய சிலாக்கியத்தினாலேயே முக்கிய பதவிகளை வகிக்கும் வாய்ப்பினைப் பெற்ற தன்மையினால் ஒருபோதும் அக்கட்டமைப்பைச் சிதைக்க ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் முக்கிய பதவிகள் யாவற்றிலும் உட்கார்ந்திருக்கும் தன்மையினால், அவர்களுடைய ஒத்துழைப்பின்றி இக்கட்டமைப்பினைச் சிதைக்கவும் முடியாது. இதேபோலவே அரசுக்கும் தீவிரவாத மதக்குழுக்களுக்கும் இடையிலான உறவுகள் வளர்க்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. அதிகாரத்தில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலிருக்கின்ற பாதுகாப்பு அமைச்சரின் செயலர், பொதுபலசேன அமைச்சின் நிகழ்வுகளுக்கு வருகை தருவதும், அதன் அராஜக நடவடிக்கைகளுக்குப் பொலிஸ் பாதுகாப்புக் கொடுப்பதும், அந்தக் கோட்பாடுகளுடைய வேட்பாளரொருவருக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் முன்னுரிமை கொடுத்ததும் நாட்டு மக்களுக்கே இந்த அரசு கொடுக்கும் செய்தியாகத்தான் பார்க்கவேண்டும்.

சமீபத்தில், கொழும்பிலும் பின்னர் அம்பாந்தோட்டையிலும் ஒரு சர்வதேச இளைஞர் மாநாடு நடந்தது. இம்மாநாட்டின் மூலம் இலங்கையில் எவ்வாறு மனித உரிமைகள் பேணப்படுகின்றன என உலகுக்குக் காட்டவேண்டும் என அரசு கங்கணம் கட்டியிருந்தது. அதற்காக அதில் பங்கு கொள்ளும் இளைஞர் யுவதிகளுக்கு மாநாட்டுக்கு முன்பதாகவே இரு நாள் கருத்தரங்கு நிகழ்ந்தது. இக்கருத்தரங்குக்கு பிரதான பயிற்சியாளர்களாக வந்தவர்கள்… இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்கவும், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேராவுமாகும். இலங்கை அரசும் இராணுவமும் இணைந்து எவ்வாறு பயங்கரவாதத்தினை வெற்றி கொண்டது என்பதும், அது திரும்பத் தலை தூக்கா வண்ணம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றது என்றும் பங்குபற்றுனர்களுக்கு விளக்கப்பட்டது. “வடக்கில் ஒவ்வொரு வீட்டிலும் யார் வசிக்கிறார்கள், யார் வந்து போகிறார்கள் என்று அவர்கள் பற்றிய சகல விபரங்களும் எமக்குத் தெரியும். அப்படித்தான் அவர்களை எமது கட்டுப்பாட்டுக்குள் நாம் வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது…” என விளக்கினார்களாம். இராணுவமயப்படுத்தல் என்பது இராணுவத்தின் பிரசன்னம் மட்டுமல்ல, அதன் பேரால் உருவாக்கப்படும் கோட்பாட்டுத் தளமுமாகும். இதுவும் மதத் தீவிரவாதக் கோட்பாடுகளும் ஒன்றிணையும்பொழுது மக்கள் மத்தியில் வேற்றின மக்கள் குறித்த சகிப்புத் தன்மை இன்றிய குட்டிப் பயங்கரவாதிகளாகத்தான் சிங்கள மக்கள் அனைவரும் உருமாறும் நிலை ஏற்படுகின்றது. அம்பாந்தோட்டையில் இளைஞர் மாநாட்டில் பங்குகொண்ட வெளிநாட்டு யுவதிகள், குறிப்பாக வெள்ளைத்தோல் அழகிகள் யாவரும் அங்கு தாம் எதிர்கொண்ட பாலியல் இம்சைகளைப் பற்றி முறையிட்டிருக்கின்றனர். தாம் நிம்மதியாக அந்த ஊரில் போய்வர முடியாத நிலை ஏற்பட்டது எனக் கூறியிருக்கின்றனர். இந்த குறுகிய மதத் தீவிரவாதம் இணைந்த இராணுவக் கோட்பாடு எப்படி எங்கெங்கு ஊடுருவுகின்றது என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மதத் தீவிரவாதிகள், இராணுவ சக்திகள், அரசியலணைவு இம்மூன்றும் அரசு என்கின்ற ஓரிடத்தில் குவியும் தன்மையினால் இந்தத் தளத்தில் புத்திஜீவிகளின் இயக்கம் தடைப்படுகின்றது. இங்கு புத்திஜீவிகளுக்கு இடமேயில்லை என்றாகிறது. இதனால்தான் எமது பல்கலைக்கழகங்கள் வெகு விரைவாக அரசியல்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. நல்ல கல்விமான்கள் தேவையில்லை என்பதனால் அரசின் அடிவருடிகள் மட்டுமே பல்கலைக்கழக பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். பல்கலைக்கழக சபைகளில் அரசியல் ஆதரவாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். அச்சபையினர் சந்திக்கும் முன்னரே அரசியல்வாதிகள் அவர்களைச் சந்தித்து அவர்களது கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதைக் கட்டளையிடகிறார்களாம். சுதந்திரக் கல்வி என்பது எமது நாட்டில் பழங்கதையாகி விட்டது. ஒரு நாட்டின் சரிவுக்கு இதை விட வேறென்ன வேண்டும்? மிகவும் பிற்போக்குவாத சிந்தனைகள் கொண்ட ஒரு குழு இந்நாட்டைத் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து விட்டது.

இங்குதான் சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா அரசு தோல்விடையப் போவதன் காரணிகளை நாம் அடையாளம் காணலாம். சிறுபான்மையினரை ஆளுவதற்கு அருகதையில்லாதவர்களாக சிங்கள ஆளும் வர்க்கம் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளது. இவ்வாறு சமாதானம் பற்றிய தரிசனம் இல்லாத நிலையில், சிங்கள தேசியவாதத்தினை ஒன்றிணைந்த தேசியவாதமாக மாற்ற முடியாத நிலையில், சிங்கள அரசியல் உயர் குழாம் தமிழ் அரசியல் உயர் குழாமிடம் தோற்றுப் போகப் போகின்றது. அடுத்த ஐந்து வருடங்களில் இந்தப் போக்கினை நாம் அவதானிக்கலாம்.

சாந்தி சச்சிதானந்தம்

###

IMG_1852

‘மாற்றம்’ தளத்தின் விசேட வௌியீட்டுக்காக 5 வருட யுத்த நிறைவு குறித்து கட்டுரையாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, “5 வருடங்கள் பூர்த்தி | இன்னும் முடிவுறாத யுத்தம்” என்ற தலைப்பில் ‘மாற்றம்’ தளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரையையும் இங்கு காணலாம்.