Photo: TAMILGUARDIAN

1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகவும் கடுமையான சட்டவாக்கமாக அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களின் சிவில் சுதந்திரங்களை அதிக அளவில் பறிக்கப்படுவதற்கு காரணமான சட்டமொன்றாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுடன் இச்சட்டத்தால் இலக்கு வைக்கப்படும் குறிப்பிட்ட சமூகங்களும் தீங்குகளை எதிர்கொள்கின்றன. மேலும், இச்சட்டம் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் என்பவற்றுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

தற்காலிக சட்டவாக்க ஏற்பாடாக உருவாக்கப்பட்ட இச்சட்டம் கேள்விக்குட்படுத்தக் கூடிய சூழ்நிலைகளின் கீழேயே நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்புக்கு முரணான ஏற்பாடுகள் இச்சட்டத்தில் உள்ளடங்கியுள்ளதை அவதானித்த அப்போதைய அமைச்சரவை இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் எனத் தீர்மானித்திருந்தது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இச்சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருப்பதுடன் இச்சட்டத்தை சீர்திருத்துமாறும் அகற்றுமாறும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியாக குரலெழுப்பப்பட்டு வருகின்றது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை திருத்துவதற்காக கடந்த ஜனவரி 27, 2022 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தச் சட்டமூலம் மிகவும் அபாயகரமான மற்றும் வரலாற்று ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு வரும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்துவதற்கு மேற்கொள்ளப்படும் இதயசுத்தியுடன் கூடிய முயற்சியாகவும் அமைந்திருக்கலாம். எனினும், மிகவும் வருந்தத்தக்க வகையில் இதன் ஆரம்ப வாசிப்புகளின் போது, இங்கு முன்மொழியப்பட்டுள்ள இந்த மிகக் குறைந்த சீர்திருத்தங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மிகவும் முக்கியத்துவம் மிக்க பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் காணப்படவில்லை. நிச்சயமாக, முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் இணைந்து காணப்படும் கீழே குறிப்பிடப்படும் முக்கிய பிரச்சினைகள் எவற்றையும் தீர்க்கும் விதத்தில் காணப்படவில்லை:

பயங்கரவாதம் என்பதன் வரைவிலக்கணம்: சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் எவற்றிலும் பயங்கரவாதம் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது பற்றி பிரேரிக்கப்படவில்லை. ஏற்கனவே காணப்படும் வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாகவும், அது பல எதேச்சையான கைதுகளுக்கு வழிவகுத்துள்ளதோடு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

நீதித்துறையின் மேற்பார்வை இன்மை: கைதுகள் மற்றும் தடுத்து வைத்தலுக்கான அதிகாரம் குறிப்பாக, முதற் தடவையின் போது நீதவான் ஒருவரின் முன்னிலையில் நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் உறுதி செய்யவில்லை. எதேச்சையான கைது அல்லது தடுத்து வைக்கப்படல் முன்தடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் நீதவானின் வகிபாகம் வெளிப்படையாக ஊக்குவிக்கப்படவில்லை.

குற்ற ஒப்புதல்கள்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 16 மிகவும் சர்ச்சைக்குரியதாகக் காணப்படுகின்றது. அது சந்தேக நபர்களிடம் இருந்து குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக சித்திரவதை மேற்கொள்ளப்படலை இயலுமாக்கும் ஒரு கவசமாக தொழிற்படுகின்றது. இவ்விடயம் புதிய சீர்திருத்த முன்மொழிவுகளில் மாற்றத்துக்கு உட்படுத்தப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் சித்திரவதை நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதை ஏதுவாக்கும் பிரிவாக இது நோக்கப்படுகின்றது.

நபர் ஒருவரின் நடமாட்ட சுதந்திரத்தின் அடிப்படைப் பெறுமதியை அங்கீகரிக்க தவறியுள்ளமை: சுதந்திரத்தை எதேச்சையாக அகற்ற முடியாது என்ற விடயம் சர்வதேச சட்டங்களின் பிரிக்கப்பட முடியாத விடயமாக அமைந்துள்ளது. அவ்வாறாக சுதந்திரத்தை முடக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் எதேச்சையான முறையில் மேற்கொள்ளப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் – இதன் பொருள், சூழ்நிலைகளுக்கு போதிய அளவில் அந்நடவடிக்கைக்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். 12 மாதங்கள் வழக்கு விசாரணை இன்றி தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் பிணைக்கு விண்ணப்பிக்கும் உரிமையின் அறிமுகம் இங்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருள் நபர் ஒருவர் நீதிபதி ஒருவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு தனக்கு பிணை வழங்கப்படுவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன என வாதிட முடியாத நிலையில் 12 மாதங்களுக்கு தடுத்து வைக்கப்படலாம் என்பதாகும். அடிப்படையில் எந்த ஒரு தடுத்து வைத்தலும் அது ஒரு நாளாக இருப்பினும், அடிப்படைச் சுதந்திரத்தின் தீவிரமான மீறலாக அமையும் நிலையில், இந்தத் திருத்தங்களை முழுமையாக வாசிக்கும்போது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட முடியாத உரிமைகள் தொடர்பில் அவை கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகின்றது.

உண்மையில், முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தங்களில் பெரும்பாலானவை மேலோட்டமானவையாக அமைந்துள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மிகக் குறைந்த யதார்த்தம் மிக்க அர்த்தம் கொண்டனவாகவே காணப்படுகின்றன. கீழே காண்பிக்கப்பட்டுள்ளவாறுஇ முன்மொழியப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்களில் பெரும்பாலானவை நடைமுறைச் சாத்தியம் அற்றனவாகக் காணப்படுவதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்துடன் இணைந்துள்ள தீங்குகளை அகற்றும் சாத்தியம் அற்றனவாகவுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 3 தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்து சந்தேக நபர்களின் நல்வாழ்வு, நலன்புரி, மற்றும் தடுத்து வைத்தல் நிலைகள் பற்றி விசாரணை செய்யும் கடமை நீதவான்களுக்கு உள்ளது.

சிறைச்சாலைகளை மேற்பார்வை செய்வது நீதவான்களின் கடமைகளுக்குள் தற்போதும் உள்ளடங்கிய விடயமாக உள்ள நிலையிலும் அவர்களால் அவற்றை வினைத்திறனுடன் மேற்பார்வை செய்ய முடியாத விடயமாகவுள்ளது. எனவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தத்துக்கு எந்தவித நடைமுறைப் பெறுமதியும் இல்லை. எந்த ஒரு சம்பவத்தின் போதும் சித்திரவதைகள், கொடுமையாக நடத்தப்படல் மற்றும் மோசமான தடுப்புக்காவல் நிலைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பாதிக்கப்படும் நபர்கள் முறைப்பாடு செய்வது மிகவும் சாத்தியம் குறைந்த விடயமாகவே அமைந்துள்ளதை ஆய்வுகள் மற்றும் எமது அனுபவங்கள் என்பன எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக முறைமைகளுக்குள் இவ்வாறான தடுத்து வைப்புகள் தொடரும் சாத்தியம் உள்ள நிலையில் இவ்விடயங்கள் பற்றிய முறைப்பாடுகள் மேலெழும் சாத்தியம் மிகக் குறைவாகும்.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 3 தடுப்புக் காவல் ஆணையின் பிரதி ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

இது ஒரு பயன் மிக்க திருத்தம் எனத் தோன்றினாலும், சந்தேக நபர் எதேச்சையான கைது அல்லது நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பான மனக்குறைகளை தீர்க்கும் விடயத்தில் எந்தவொரு நடைமுறை மாற்றத்தையும் ஏற்படுத்தாததாகக் காணப்படுகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 4 மற்றும் 12 சந்தேக நபர்கள் தாம் தடுத்து வைக்கப்படுவதற்கு எதிராக மற்றும் எந்தவொரு பணிப்புரைக்கும் எதிராகவும் அடிப்படை உரிமைகள் மீறல் மற்றும் ரிட் மனுக்களை சமர்ப்பிக்கலாம்

இங்கு குறிப்பிடப்படும் நியாயாதிக்கம் உண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அணுகல் மிக்கதாக அமைந்துள்ளது. அத்துடன், இது பெரும்பாலும் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றை அணுகும் வழிகளைக் கொண்டவர்களால் காலத்துக்கு காலம் பயன்படுத்தப்படும் விடயமாகக் காணப்படுகின்றது.

இந்தத் திருத்தம் எந்த ஒரு புதிய சட்டப் பாதுகாப்பையும் வழங்காததோடு வெறுமனே ஏற்கனவே காணப்படும் ஒரு உரித்துடைமையை வெளிச்சப்படுத்திக் காண்பிக்கின்றது. மேலதிகமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் உள்ள நபர்களுக்கு வினைத்திறன் மிக்க சட்ட உதவியை வழங்குவதற்கான திட்டம் ஒன்று இல்லாமல், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளுக்கு இந்தச் சீர்திருத்தம் எந்தவித நடைமுறைப் பெறுமதியையும் வழங்காது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 5 சட்டத்தரணிகள் சந்தேக நபர்களை அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்களை அணுகும் உரிமை மிக்கவர்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக் காவலில் உள்ள நபர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடுவதற்கான உரிமை மிக்கவர்கள்.

மீண்டும் இலங்கைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளோருக்கான உரித்துடைய உரிமைகளே இவையாகும். இவ்வுரிமைகள் சட்டத்தினால் வெளிப்படையாகக் கூறப்படுவது ஒரு சிறந்த விடயமாகக் காணப்படும் அதே வேளை, இதன் உண்மையான பெறுமதியைக் கருத்திற்கொள்ளும் வேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் எதிர்கொள்ளும் பல கட்டுப்பாடுகளை எடுத்துரைக்க இத்திருத்தம் தவறியுள்ளது. உதாரணமாக, சில நபர்கள் அவர்களின் வாழிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இது குடும்ப உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டவர்களை காணச் செல்லும் இயலுமையை பாரிய அளவில் குறைக்கின்றது.

சட்டத்தரணிகளின் அணுகலைக் கருத்திற்கொள்ளும் வேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும் வேளை சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு இருப்பதாக அல்லது கூறும் விடயங்களை கேட்கும் தூரத்தில் இருப்பதாகவும் அடிக்கடி சட்டத்தரணிகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் இது தொடர்பில் நிகழந்த சம்பவமொன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்தரணி மற்றும் தடுப்புக் காவலில் உள்ள நபர் இடையே இடம்பெற்ற உரையாடலில் குறுக்கீடுகளை மேற்கொண்டு கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய பதில்கள் தொடர்பில் பணிப்புரைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

எனவே, சட்டத்தரணி ஒருவருக்கான அணுகல் போன்ற வெறுமனே குறிப்பிடப்படும் உரிமை, தொடர்பாடலை மேற்கொள்ளும் வேளை அவசியமான இரகசியத்தன்மை பேணப்படாமல் வழங்கப்படுவது எதிர்பார்க்கப்படும் பிரயோசனத்தை ஏற்படுத்தாது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 6 சித்திரவதை புகார்களை கண்காணிப்பது தொடர்பான ஏற்பாடுகளில் பிரிவு 11 இன் கீழ் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவானது பல்வேறு சிவில் சுதந்திரங்களாக நடமாடும் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றனவற்றை மட்டுப்படுத்தும் வகையில் அமைச்சர் பிறப்பிக்கும் கட்டுப்பாட்டு ஆணைகள் பற்றியதாகும்.

உண்மையில், பிரிவு 11 இன் கீழ் மேற்கொள்ளப்படும் ஆணைகள் நீதித்துறையின் ஆணைகள் அன்றி நிறைவேற்றுத் துறையின் ஆணைகளாகும். இவ்வாறான தீவிர அடிப்படை சுதந்திரங்களின் மீதான கட்டுப்பாடுகளின் கண்காணிப்பை நீதித்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான சீர்திருத்த முன்மொழிவும் முன்வைக்கப்படவில்லை. பிரிவு 11 ஆல் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான சித்திரவதை புகார்களுக்கு செலுத்தப்படும் கவனம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள நபர்களின் அனுபவங்களுக்கு ஒத்திசைவானது அல்ல. ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பான பிரிவு 16 உடன் தொடர்புடைய சித்திரவதை நடைமுறை தொடர்பான உண்மையான தீவிர கரிசனைகளுடன் இது ஒப்பிட்டு நோக்கப்பட வேண்டும் – இது முன்மொழியப்பட்ட திருத்தங்களில் உள்ளது மற்றும் இரத்துச் செய்யப்படவில்லை.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 8 – நாளாந்த வழக்கு விசாரணைகளை அறிமுகப்படுத்தும் வகையில் பிரிவு 15 இல் மேற்கொள்ளப்படும் திருத்தம்

இந்தச் சட்டத்திருத்தம், விசாரணைக் கட்டத்துக்கு வருவதற்கு முன், சந்தேக நபர்கள் எதேச்சையாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நீண்ட வருடங்கள் மற்றும் விசாரணையை நடத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பல வருடங்களைக் கருத்திற்கொள்ளவில்லை. நீதி விசாரணைகளின் கால தாமதம் தொடர்பான உதாரணங்களைக் கருத்திற்கொள்ளும் வேளை வழக்கு விசாரணைகள் உரிய நேரத்தில் இடம்பெறும் என நம்பிக்கை கொள்வதற்கு முடியாமல் உள்ளது. வழக்கு விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் நடத்துவதற்கு, தினசரி வழக்கு விசாரணை முறைமைகளுக்கு அப்பால் நடைமுறை சாத்தியம் மிக்க வழக்கு முகாமைத்துவ முறைமையின் மீதான தீவிர அர்ப்பணிப்பு அவசியமாகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம்: பிரிவு 10 12 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் உள்ள நபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் பிணையைக் கோர உரித்துடையவர் என இப்பிரிவு குறிப்பிடுகின்றது

இந்த முன்மொழியப்பட்ட பிரிவின் வினைத்திறன் இதே பிரிவின் 2ஆவது உப பிரிவின் மூலம் குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. குறித்த உப பிரிவு வழக்கு விசாரணை நிறைவுறும் வரை குறித்த நபரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை அரசினால் உயர் நீதிமன்றத்திடம் கோர முடியும் என குறிப்பிடப்படுவதன் மூலம் இந்த குறைமதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது. அதே பிரிவுக்குள் உள்ள இன்னொரு ஏற்பாடு, குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு 12 மாதங்கள் கடந்த பின்னரும் வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் இருந்தால் பிணை கோரலாம் எனக் குறிப்பிடுகின்றது.

இது மிகவும் வினைத்திறனற்ற பிரிவாக அமைந்துள்ளது. ஏனெனில், குறித்த சந்தேக நபரை பிணை கோர முடியாத நிலைக்கு தள்ளுவதற்கு அரசு செய்ய வேண்டியது வழக்கு விசாரணையைத் தொடங்க வேண்டியது மாத்திரமேயாகும். அதாவது, வழங்கப்பட்ட 12 மாதங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு நாளாவது வழக்கு விசாரணை நடத்துவது இங்கு போதுமானதாக அமைகின்றது. இந்த ஏற்பாடுகள் முற்றுமுழுதான வினைத்திறனற்றனவாக அமைந்துள்ளதுடன் நீடிக்கப்பட்ட காலப்பகுதி ஒன்றுக்கு நபர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அரசுக்கு வழங்கும் வகையில் காணப்படுகின்றன.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களில் காணப்படும் ஒரேயொரு சிறந்த விடயமாக பிரிவு 7 அமைந்துள்ளது. இதில் பிரசுரங்களைத் தடைசெய்வதுடன் தொடர்புடைய பிரிவு 14 ஐ நீக்குகின்றது.

மேற்கூறப்பட்ட அனைத்து திருத்தங்களும் முன்மொழியப்பட்ட வடிவத்தில் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டாலும், நடமாட்ட சுதந்திரத்தின் அடிப்படைக் கருதுகோள்களை மீறுவதாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் ஆதாரங்களில் தங்கியிருக்கா நிலை மற்றும் அக்கறை கொண்டோரின் பங்கேற்பு இன்மை என்பவற்றை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை யதார்த்தங்கள் இங்கு கவனத்திற்கொள்ளப்படவில்லை.

விடயங்களை மேம்படுத்தாமல் வெறுமனே அழகுபடுத்தல் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட தெரிவு மனச்சாட்சியற்றதாகவும், நேர்மையற்றதாகவும், இலங்கை மக்களின் சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமையை கருத்திற்கொள்ளாததாகவும் அமைந்துள்ளதுடன் இவ்வகை சுதந்திரங்களை பாதுகாக்கும் முதன்மை பாதுகாவலராக செயற்பட வேண்டிய சர்வதேச கடப்பாடுகளை புறந்தள்ளுவதாகவும் அமைந்துள்ளது.

ஏர்மிஸா டீகல்

‘தி மோர்னிங்’ பத்திரிகையில் Initial reactions to PTA Amendment Bill: Failure to reform என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.