Photo, Selvaraja Rajasegar
டிசம்பர் 19, 2021, யாழ்ப்பாண நகரம், காலை 6 மணி: மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, அவற்றின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்களிலும் கருப்பு உடையணிந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் அமர்ந்திருந்தனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சமூக வாழ்வினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக நாம் பாரிய முதலீடொன்றை மேக்கொண்டுள்ளோம்” – ஜனவரி 18, 2022 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை தொடர்பான உரையில் குறிப்பிடப்பட்டது.
யுத்தம் நிறைவுற்று கிட்டத்தட்ட 13 வருடங்கள் கடந்த நிலையிலும், வடக்கில் உள்ள சமூகங்கள் உள்நாட்டு யுத்தத்தின் சமூக, பொருளாதார, மற்றும் உளவியல் தாக்கங்களில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் காணப்படுகின்றன. கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பனவும் அம்மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் தள்ளியுள்ளன. குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இக்காரணங்களினால் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பின்மை காணப்படுவதுடன் வறுமை மிகவும் தெளிவாக இப்பிரதேசங்களில் தென்படுகின்றது. அதிகமான குடும்பங்கள், குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எந்தவித வருமானமுமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அவை நாளொன்றில் ஒரு தடவை மாத்திரமே உணவுண்பதாகக் குறிப்பிடுகின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபரொருவரின் மனைவி தனது ஐந்து வயது நிரம்பிய பிள்ளை மற்றும் கணவனின் இரண்டு சகோதர்களையும் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளார். அச்சகோதரர்களில் ஒருவர் தீவிர இதய நோயினாலும் மற்றவர் தீவிர மனநோயினாலும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எனவே, இவர்கள் இருவராலும் எந்தவித வருமானத்தையும் ஈட்ட முடியாத நிலை உள்ளது. அப்பெண்ணின் கணவரே இக்குடும்பத்தின் பிரதான வருமானமீட்டும் நபராக செயற்பட்டிருந்தார். வீட்டிலிருக்கும் சில தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்களை விற்பதன் மூலமே இக்குடும்பம் உயிர்வாழ்கின்றது. தனது குழந்தையைப் பராமரிக்க எந்த உதவியும் அற்ற அவரால் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்து வருமானமீட்டுவது முடியாத விடயமாகவுள்ளது. தீவிரவாத விசாரணைப் பிரிவு (TID) அவரின் கணவரை கைது செய்த வேளை, அவர்கள் அந்நபரின் கைத் தொலைபேசியையும் கைப்பற்றிச் சென்றனர். அதனால் கைத்தொலைபேசி ஒன்றை 4,900 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதற்காக தனது காதணியை அடவு வைக்க வேண்டியேற்பட்டது. அவரின் பெற்றோர் யுத்தத்தினால் கொல்லப்பட்டதுடன் எந்தவித குடும்ப ஆதரவும் அற்றவராக காணப்படுகின்றார். தன்னைச் சிறைக்கு வந்து பார்க்க வேண்டாம் எனவும், பிரயாணத்துக்கு செலவழிக்கும் பணத்தை குடும்பத்தின் உணவுத்தேவைக்குப் பயன்படுத்துமாறும் அவரின் கணவர் கூறியிருக்கிறார். “நாளாந்தம் உணவு உண்பது கூட சிரமமான விடயமாக மாறியுள்ளது” என அவர் கூறினார்.
53 வயது நிரம்பிய பெண்ணொருவரின் சகோதரியைத் தவிர அனைத்து குடும்ப உறுப்பினர்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அப்பெண் தனது சகோதரியின் மரணத்தின் பின்னர் அவரின் பதின்ம வயது பேரப்பிள்ளைகளை பராமரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மரக்கறிகளை வாங்கி சிறிய கடை ஒன்றில் விற்பதன் மூலம் வருமானமீட்டும் அவரின் வாழ்வாதாரம் கொவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தனது கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக சைக்கிளைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளை தனது கடைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார்.
யுத்தத்தின் போது தலையில் பலத்த காயமடைந்த பெண் ஒருவருக்கு அக்காயத்தின் விளைவுகளால் தொடர்ச்சியான சுகயீனம் ஏற்படுகின்றது. அவரின் கணவர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் அவரே குடும்பத்தில் வருமானமீட்டும் ஒரேயொரு நபராகக் காணப்படுகின்றார். நாளாந்த கூலித் தொழிலாளியாக செயற்பட்டு வந்த அவரின் வாழ்வாதாரம் கொவிட் பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரின் மூக்குக் கண்ணாடியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதும் அதற்குத் தேவையான 5,000 ரூபாய் பணம் அவரிடம் இல்லை.
சிவில் சமூக நிறுவனங்கள் வாழ்வாதார உதவிகளை வழங்குகின்றன. எனினும், அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப இவ்வுதவிகளை வழங்க முடியாதுள்ளது. எனினும், இவ்வாறு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளில் பெரும்பாலானவை மக்கள் தமது அன்றாட உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதுமாகவுள்ளது. அது சேமிப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கோ போதுமானதல்ல. இக்குடும்பங்களின் பிள்ளைகள் சமூக முன்னேற்றத்தை மற்றும் பொருளாதார பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் கல்விக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதை தற்கால சூழ்நிலைகள் தடை செய்கின்றன. இதன் மூலம் வறுமையின் சுழற்சி முடிவில்லாமல் தொடருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள்
“எவ்வாறாயினும், நமக்கு தற்போது என்ன தேவை என்றால், கடந்த காலத்தின் இருள் நிறைந்த நினைவுகளை புறம் தள்ளிவிட்டு சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் சமாதானத்துடன் சகவாழ்வை மேற்கொள்ளக் கூடிய பாதுகாப்பான நாடு ஒன்றை கட்டியெழுப்புவதே ஆகும். யுத்தத்தில் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை குறிப்பிட்ட சமூகம் ஒன்றுக்கு மாத்திரம் தனித்துவம் மிக்கது அல்ல. அவ்வாறான நபர்கள் தொடர்பான உச்ச பட்ச நீதியை நாம் வழங்குவோம்” – ஜனவரி 18, 2022 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை தொடர்பான உரையில் குறிப்பிடப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதிக்கான தமது போராட்டத்தைக் கண்காணிப்பு மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்துள்ள அடக்குமுறை மிக்க சூழ்நிலை காணாமல் போனோரின் குடும்பங்கள் தமது உறவுகளைத் தேடி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு தடங்கலாக அமைந்துள்ளது.
கொவிட் பெருந்தொற்றினால் பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் மோசமான பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தத் தீவிர பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலும் அம்மக்கள் அரச கொடுப்பனவுகளை மறுத்து, தமக்கு உண்மை மற்றும் நீதி என்பனவே அவசியமானவை என ஆணித்தரமாகக் கூறுகின்றனர். அவ்வாறான பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கம் கூறுவதற்கு அல்லது உண்மை மற்றும் நீதிக்காக போராடும் குடும்பங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம் என இக்குடும்பங்கள் அஞ்சுகின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அல்லது ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற எந்தவொரு அரச பொறிமுறையிலும் இன்று வரை முறைப்பாட்டை பதிவுசெய்யாத குடும்பங்களும் காணப்படுகின்றன. எனவே, இந்த வகையில் அடங்கும் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் காணாமல் ஆக்கப்படல் அல்லது காணாமல் போனமை தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களிலோ அல்லது வலிந்து காணமாலாக்கப்பட்ட மற்றும் சம்மதமில்லாமல் காணாமல் போன நபர்கள் தொடர்பில் செயற்படும் ஐக்கியநாடுகள் சபையின் பணிக்குழு போன்றவற்றின் தகவல்களிலோ உள்ளடக்கப்படவில்லை.
ஒரு சிலர் தாம் ஜோசப் இராணுவ முகாமில் மாத்திரம் முறைப்பாடு செய்ததாக தெரிவித்தனர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது காணாமல் போன தனது கணவன் மற்றும் மகள் தொடர்பில் ஜோசப் இராணுவ முகாமில் முறைப்பாடு செய்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆவணம் தற்போது அவரின் கைகளில் இல்லை. அவர் ஒரு நாளாந்த கூலித் தொழிலாளி என்பதால் அவர்களுக்கு என்ன நடந்தது எனத் தேடுவதற்கு தனக்கு சூழ்நிலைகள் இடம் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார். ஒரு பெண்ணின் கணவர் 2006 இல் முகமாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின் போது காணாமல் போயிருந்தார். இச்சம்பவத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ICRC) மட்டுமே முறைப்பாடு செய்திருந்தார். அவரை தேடுவது தனது நாளாந்த வருமானத்தை மாத்திரமே இழக்கச் செய்யும் என்பதால் கணவரைத் தேடும் முயற்சியைக் கைவிட்டுள்ளார். ‘தீர்வு ஒன்று கிடைக்குமானால் அது அனைவருக்கும் ஒரே தீர்வாகவே அமையும் என அவர் நம்புகின்றார்.
இவ்வாறான நபர்களில் அதிகமானவர்கள், குறிப்பாக பெண்கள், தமது பிள்ளைகளைத் தவிர வேறு எந்தவித குடும்ப உறுப்பினர்களும் அற்றவர்கள். யுத்தம் நிறைவுற்ற பின்னர் காணாமல் போனோர்/ காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ் மற்றும் நட்டஈட்டைக் கூட சிலர் பெற்றுக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், தமது குடும்ப அங்கத்தவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றே அவர்கள் கருதுகிறார்கள். இவர்கள் நஷடஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குரிய காரணங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரச அதிகாரிகளின் அழுத்தம் என்பன அமைந்தன. ஒரு பெண்ணின் கணவர் மே 17, 2009 அன்று காயமடைந்ததைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைந்திருந்த இராணுவ மருத்துவ நிலையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் காணாமல் ஆக்கப்பட்டார். குறித்த பெண் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் மாத்திரமே முறைப்பாடு செய்திருந்தார். அப்பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன் அவர்கள் தற்போது பதின்ம வயதினை அடைந்துள்ளனர். தனது கணவரின் மரணச் சான்றிதழை பெற்ற வேளை அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் நட்டஈடு அவசியமாகவிருந்தது. ஏனெனில், அவரின் பிள்ளைகள் சிறியவர்களாக இருந்ததுடன், அவருக்கு பேண்தகு வகையில் அமைந்த எந்தவொரு வாழ்வாதாரமும் அமைந்திருக்கவில்லை. அத்துடன் குடும்ப ஆதரவும் காணப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உடனடிக் குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் காணப்படாத சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பங்களில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர்களே இது தொடர்பில் பேசுகின்றனர். உதாரணமாக, காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் பெற்றோர் இறந்துவிட்டதால் அவரின் தாயின் சகோதரியே அக்காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான உண்மை மற்றும் நீதியைத் தேடிக்கொண்டிருக்கின்றார். இச்சம்பவம் கூட செஞ்சிலுவைச் சங்கத்திடம் மாத்திரமே முறையிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது எனத் தேடிக்கொண்டிருக்கும் இவ்வாறான நபர்கள் அரசாங்கத்தால் குடும்ப உறுப்பினர்களாக கருதப்பட மாட்டார்கள. அத்துடன், காணாமல்போனவர்/ காணாமல் ஆக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் எந்தவொரு ஆதரவுக்கும் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள 6,000 ரூபாய் கொடுப்பனவு போன்ற உதவிகளைப் பெற இவர்கள் தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
அச்சுறுத்தலாக அமைவது யார்?
“தற்பொழுது எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இன்று மக்கள் பயங்கரவாதம் பற்றிய அச்சம் இன்றி வாழ்கின்றனர்” – ஜனவரி 18, 2022 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை தொடர்பான உரையில் குறிப்பிடப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது இராணுவமயமாக்கல் ஓரளவு தணிந்திருந்தது. எனினும், அதனை நிறுத்தவோ இராணுவமயமாக்கலை இல்லாதொழிப்பதற்கோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நவம்பர் 2019 இன் பின்னர் அது தீவிரமடைந்தது. இராணுவ மயமாக்கல் வெளித்தெரியும் வகையிலும் மறைவாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. பாரிய இராணுவ முகாம்கள், இராணுவம் நடத்தும் பண்ணைகள் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் வடிவில் அது வெளிப்படையான இராணுவமயமாக்கலாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட குழுக்களை உளவு பார்ப்பதற்கு உள்ளூர் நபர்கள் உள்வாங்கப்படும் வேளை அது மறைவான மற்றும் உள்ளார்ந்த இராணுவ மயமாக்கலாக அமைகின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலப்பகுதி கடந்த பின்னர் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. அவர்களைப் பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பது இன்னும் தொடர்கின்றது. அதிக எண்ணிக்கையான முன்னாள் போராளிகள் வசிக்கும் பிரதேசம் ஒன்றுக்கு விஜயம் செய்த வேளை தற்பொழுது பரிச்சயமான நடைமுறை ஒன்றை அவதானிக்க முடிந்தது. ஒரு சில நிமிடங்களுக்குள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பணிபுரிவதாக அறியப்படும் நபர்கள் சைக்கிள்களில் வந்தனர், அவர்கள் தமது சைக்கிள்களை குறித்த வீட்டில் இருந்து ஒரு சில மீட்டர்கள் தள்ளி நிறுத்தி வைத்து விட்டு முன்னாள் போராளியின் வீட்டுக்கு விஜயம் செய்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை வீதியோரம் இருக்கும் பாறை ஒன்றில் அமர்ந்திருந்தனர். பாதுகாப்பு அமைப்புகள் தம்மை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது வீடுகளுக்கு விஜயம் செய்து விசாரித்து சென்றதாக சில முன்னாள் போராளிகள் கூறினர். அதே வேளை வேறு சிலர் ஆறு மாதங்களுக்கு முன்னர் தமது வீடுகளுக்கு பாதுகாப்புத் தரப்பினர் விஜயம் செய்ததாகக் கூறினர். சிலர் இவ்விசாரணைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் முகங்கொடுத்தனர்.
ஏனைய ஓரங்கட்டப்பட்ட குழுக்களைப் போன்றே முன்னாள் போராளிகளின் நிச்சயமற்ற பொருளாதார நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் அதிகமான முன்னாள் போராளிகள் கூலித் தொழில் அல்லது விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். கொவிட் பெருந்தொற்றின் காரணமாக கூலித் தொழில் குறைவடைந்துள்ளதுடன் உரங்களுக்கான இறக்குமதித் தடை காரணமாக விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. தான் ஒரு கட்டடத் தொழிலாளியாக பணி புரிந்ததாகவும் மணல் மற்றும் சீமெந்து என்பவற்றுக்கான விலையதிகரிப்பு காரணமாக தற்போது கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஒரு முன்னாள் போராளி தெரிவித்தார்.
வாழ்வாதாரத்துக்கான வழிகள் அற்ற சூழ்நிலை காரணமாக சிலர் சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு போன்ற நீதிக்குப் புறம்பான வாழ்வாதார முறைகளை நோக்கி தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது, அவர்கள் சிறைத்தண்டனை பெற்று குற்றவாளிகளாக முத்திரை குத்தப்படுவதற்கு சாத்தியமான சூழ்நிலையை உருவாக்குகின்றது. இந்நிலை வறுமை, சிறையில் அடைக்கப்படல் மற்றும் ஓரங்கட்டப்படல் என்ற சுழலுக்குள் அவர்கள் சிக்கித்தவிக்கக் காரணமாகின்றது.
நிச்சயமற்ற வாழ்வின் மத்தியில் வளமான எதிர்காலத்துக்கான நம்பிக்கை எங்கே?
நாடு தற்போது காணப்படும் இருண்ட சூழ்நிலையில் தேசிய நல்லிணக்க தொடர் செயன்முறையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமே ஒரேயொரு சிறந்த விடயமாக காணப்படுகின்றது – ஜெஹான் பெரேரா, “நல்லிணக்கத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்குதல் மற்றும் அழித்தல்”, கொழும்பு டெலிகிராப், ஜனவரி 11, 2022
உதவித்திட்டங்களின் போது மக்களால் அதிகமாகக் கோரப்படும் பொருள் ஒரு நீரிறைக்கும் இயந்திரமேயாகும். அல்லது கோழிக் குஞ்சுகள் அல்லது பசு ஒன்றுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இவ்வாறான கோரிக்கைகள் சிறிய அலகுகளில் அமைந்த பயிர்ச்செய்கை அல்லது வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாத்திரமே போதுமானவையாக அமைகின்றன. எனினும், அவர்கள் கேட்பது இவை மாத்திரம்தான். அவர்கள் இவ்வாறு மிகச் சிறிய உதவிகளைக் கோருவது நீண்ட காலமாக அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான அடிப்படை விடயங்களை பூர்த்தி செய்வதிலேயே கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற யதார்த்தத்தை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது.
உயிர் வாழ்வதற்கான அவர்களின் போராட்டம் ஒரு தாங்கு திறனாக மெச்சப்படுகின்றது. உயிர் வாழ்தலை ஒரு அடைவாகக் கருதும் நிலையில் அவர்கள் காணப்படுவது மற்றொரு யதார்த்தமாகும். தமது சொந்த வாழ்வு பற்றிய அவர்களின் அபிலாசைகள் உயிர் வாழ்தலுக்கு அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் இந்நிலைக்கு அரசாங்கம் மட்டுமல்ல அரசியல் கட்சிகள் மற்றும் சமூகமும் கூட வெவ்வேறு வழிகளில் பொறுப்புக் கூற வேண்டும்.
இம்மக்களுக்கு தமது எதிர்காலம் செழிப்பாக அமையும் என்ற நம்பிக்கை கொள்வதற்கு கூட முடியாத நிலை உள்ளது.
அவர்கள் தமது வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. தற்போது மாத்திரமல்ல, அவர்களால் நீண்ட காலமாகவே தமது வாழ்வில் எவ்விதமான முன்னேற்றத்தையும் காண முடியாத நிலையே இருந்துள்ளது.
அம்பிகா சற்குணநாதன்