வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்.
கணவரைத் தேடி அன்றைய தினம் (24.01.2010) ஆரம்பமான சந்தியா எக்னலிகொடவின் போராட்டம் இன்று கொழும்பு முகத்துவாரம் கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியது வரை, 12 வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்த 12 வருடங்களில் பலதரப்பட்ட நபர்களைச் சந்தித்தும், பல அமைப்புக்களிடம் முறையிட்டும் தனது கணவருக்கு என்ன நேர்ந்தது? எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பதை அறிந்துகொள்வதற்காக – நீதியை அடைவதற்காக நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த 12 வருடங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு போராடி வந்த பிரகீத்தின் மனைவி சந்தியாவுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும், தனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் தான் ஓயப்போவதில்லை என்றும், எத்தனை தடைகள் வந்தாலும் தனது போராட்டம் இன்னும் கூர்மையடையுமே ஒழிய, அவற்றுக்கு அஞ்சி போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் சந்தியா எக்னலிகொட உறுதியாகக் கூறுகிறார்.
இன்று கொழும்பு முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலை முடியை காணிக்கையாக செலுத்தி, நீதியில்லாத நாட்டில் நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.