Photo: The New Humanitarian
இலங்கையில் உள்நாட்டுப்போர் நிறுத்தப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும், மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த போர் விட்டுச் சென்ற விளைவுகளின் தாக்கங்களை இன்றும் சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தவண்ணமே உள்ளனர். ஒரு பல்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த சமூகத்தில் போரின் பின்னர் சிறுபான்மை சமூகங்களிடையேயான பரஸ்பர இடைவினைகளின் இயக்கத்தை கண்டறிந்து ஊக்குவித்தலும் இன ஒற்றுமைப்பாட்டையும், இனநல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலும் போரிற்குப் பின்னரான ஆய்வாளர்களின் முக்கிய பணிகளிலொன்றாக அமைகிறது. போரில் பலியானவர்களினுள் பலியாகிய இனமாக (victim of the victims) வடக்கில் மீளக்குடிதிரும்பி வாழும் முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். 1990 இல் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் தற்போது மீளக்குடியமர்ந்து வடக்கில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வாதாரம்சார் சவால்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.
சர்வதேச கூட்டுறவுக்கான ஜேர்மன் சமூகம் எனும் அமைப்பின் அனுசரனையில் ‘இலங்கையில் நல்லிணக்கச் செயன்முகைளைப் பலப்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழ் இவ்வாய்வு செய்யப்படுகிறது. இவ்வாய்வு முஸ்லிம் பெண்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகள், அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்ற தளங்களில் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சோனகத்தெருவில் வசிக்கும் சில முஸ்லிம் பெண்களுடனான ஆரம்ப கலந்துரையாடல்களின் போது பெற்றுக்கொண்ட தகவல்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.
இலங்கை தேசிய இனப்பரப்பில் முஸ்லிம் சமூகத்தின் மீது இடம்பெறும் தொடர்ச்சியான அழுத்தங்களைத் தரும் சம்பவங்களாக, வடக்கின் இனச்சுத்திகரிப்பு, அக்குறன, திகன சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தற்போது கொரோனா தொற்றுக்குட்பட்டு இறக்கும் முஸ்லிம் உடல்களை தகனம் செய்தல் வேண்டும், முஸ்லிம் பெண்கள் பொதுவெளிகளில் முகம் மறைத்து செல்லக் கூடாது என்ற அரசின் ‘தேசிய பாதுகாப்பின் பேரிலான’ முன்னெடுப்புக்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீதான இனரீதியான ஒடுக்கு முறைகளாகவே உணரப்படுகின்றன. இவை இலங்கை ஒரு பன்மைத்துவ தேசமாக நிலைபெறுவதற்கு நீண்டகாலம் செல்லும் என்பதையும் கோடு காட்டி நிற்கின்றன.
முஸ்லிம் இனக்குழுமம் ஒரு சிறுபான்மை இனமாக பேரினவெளியில் இருந்து எதிர்கொள்ளும் மேற்குறித்த சவால்களுக்கு அப்பால், முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உள்ள சில சமூக உராய்வுகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. இங்கு குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மீது சிறுபான்மை இனம், பால்நிலை, பாலியல், வகுப்பு, மதம், பிராந்தியம், மீள்குடியேறியோர் என்ற அடையாளங்கள் இடைவெட்டும் கருத்தமைவு (intersectionality) வழியான புறநிலைப்படுத்தல்களும் அவர்களின் வாழ்வாதார, முன்னெடுப்புக்கள், ஆதரவு வலையமைப்பு, வலுவூட்டல் என்பவற்றில் நேர்நிலையாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
யாழ்ப்பாண சோனகத்தெரு, நகர மையமாகையால் இங்கு இடவசதி என்பது முதனிலை மட்டுப்பாடாக உள்ளது. இதனால் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் வர்த்தகம், வியாபாரம் ஆகிய இரண்டையுமே தமது முக்கிய வாழ்வாதாரத் தொழில்களாகக் கொண்டுள்ளனர். பெண்கள் 1990க்கு முன் வெளியில் வேலைக்குச் செல்லவில்லை. ஆண்கள் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி வந்தமையால் பெண்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவையும் எழவில்லை. தற்போது நிலைமை மாறிவிட்டன. புத்தளம், நீர்கொழும்பு போன்ற பிற மாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்த முஸ்லிம் பெண்கள் பலர் புடவைத் தொழிற்சாலை, உப்பு உற்பத்தி நிலையம் போன்ற பல வெளியிடங்களிற்கு வேலைக்குச் சென்றனர். தற்போது வடக்கிற்கு திரும்பி வரும் முஸ்லிம்கள் இரண்டாம் தலைமுறையே. மீள்குடியமர வருவதாக பதிவுசெய்த கிட்டத்தட்ட மூவாயிரம் (3000) குடும்பங்களில் அறுநூறு (600) வரையான குடும்பங்களே மீளக்குடியமர வந்திருந்தார்கள். திருமணங்கள் அதிகரித்ததன் காரணமாக தற்போது ஆயிரத்து நானூறு (1400) குடும்பங்கள் வரை வாழ்கிறார்கள். நிலமற்றவர்கள் வாடகை வீடு, உடைந்த வீடுகளிலேயே குடியிருக்கிறார்கள். சொந்தக் காணி இல்லாது பலர் வீட்டுத்திட்டம் எதுவும் பெறுவதற்கும் வாய்ப்பு இல்லை.
பல முஸ்லிம்கள் இருபது வருட இடப்பெயர்வின் பின் தமது சொந்த நில உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை கூடியமையினால் குடியிருப்புப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறுகின்றனர். நிலத்திற்கான தேவை உள்ளது. ஆனால் அது பூர்த்தி செய்யப்பட்டதாக இல்லை.
நகரவாழ்வைப் பொறுத்த வரையில் நிலையான நீடித்த வேலைவாய்ப்பு என்பதும் கடினமாகவே உள்ளது. இதனால் வருமானம் தேடும் செயற்பாடுகளில் ஒரு நிலையான தன்மை இல்லை. ஒரு நிலையான வருமானம் இன்றி திட்டமிட்ட வாழ்வைக் கொண்டு நடத்துவது என்பதும் இங்கு கடினமானது.
பெண்கள் சிலர் பிட்டு, இடியப்பம், சோற்றுப்பார்சல் விற்றல் போன்ற வருமானம் ஈட்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களால் தொடர்ந்து இவ் வருமானம் ஈட்டும் செயற்பாட்டில் ஈடுபடவும் முடியாது உள்ளது. ஏனெனில், முதலீடுகள் போதியளவு இன்மையால் தனியாள் சுயதொழில் முயற்சிகள் பல உரிய விளைவுகளைத் தரவில்லை. உதாரணமாக உணவு செய்து விற்கும் பெண்கள் உணவு செய்து கொடுத்த பின்னரே அதற்கான கூலியைப் பெறுகிறார்கள். இதற்கு முன் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வாங்குவதற்கு நிதி வேண்டும். அத்துடன், உடைகள் தைத்து விற்கும் போது சிலர் கடனுக்கு வேண்டிச் சென்று நீண்டகாலத்தின் பின்பே உரிய பெறுமானத்தை வழங்குகின்றனர். அத்துடன் சந்தையில் எப்போதும் போட்டி நிலவுகிறது. ஒரே தொழிலில் இன்னொருவர் ஈடுபடத் தொடங்கும் போது இதுவரை கிடைத்த வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. பொம்மைவெளி பிரதேசத்தை அண்டிய பெண்கள் சிலர் கடற்கரைக்குச் சேர்ந்து சென்று மட்டி பிடித்து விற்கிறார்கள்.
அமைப்புக்களால் வழங்கப்படும் வருமானம் ஈட்டும் திட்டங்கள் பொருத்தப்பாடு இல்லாது வழங்கப்படுதலும் இங்கு இடம்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாடசாலை செல்லும் பிள்ளைகளும் கல்வியில் அதிக அக்கறை காட்டுவது இல்லை. பலர் க.பொ.த சாதாரண தரத்தை பூர்த்தி செய்வதற்கே இங்கு சிரமப்படுகின்றனர். உயர்தரம் படிக்கும் ஆர்வம் பலரிடம் இல்லை. கட்டிளமை பருவத்தினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சென்று தொழிற்பயிற்சி பெறவும் ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லை. இளையோர் மத்தியில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையும் குடும்பங்களில் வன்முறை அதிகரிப்புக்கும், உறவுகளின் விரிசல்களுக்கும் காரணமாகியுள்ளது. கல்வியில் குறைந்தளவு நாட்டம் காட்டுவதன் காரணமாக ஒரு சில குறிப்பிட்ட மக்களே அரசாங்கத் தொழிலில் உள்ளனர்.
முஸ்லிம்கள் சிலர் பொதுவங்கிகள், கடனடிப்படையில் பொருள்களை விற்கும் நிறுவனங்கள் போன்றவற்றில் வட்டி கட்டி பல உதவித்திட்டங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆனால், அதுவே ஒரு கிராமமட்ட உள்ளூர் அமைப்பினால் செய்யப்படும் போது விமர்சனங்களிற்கு உரியதாகிறது. ஒரு முஸ்லிம் ஆண் தனது மனைவி வெளியில் சென்று வேலை செய்வதற்கு ஆதரவு வழங்கினாலும் வெளியில் உள்ள பல முஸ்லிம் ஆண்கள் வேலைக்கு வெளியில் செல்லும் பெண்களை விமர்சிப்பர். முஸ்லிம் பெண்களுக்கு இதுவும் ஒரு சவாலாகவே இருக்கிறது. கொவிட்-19, தற்போது நகர்ந்து திரிந்து உடைகள் விற்றல், அழகுசாதனப் பொருட்கள் விற்றல், தைத்த உடைகளை சந்தைப்படுத்தல், உணவுகள் செய்து கொடுத்தல் போன்ற தொழில்கள் சார்ந்து பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அபிவிருத்தி மையத்தால் (WDC) தமிழ், முஸ்லிம் பெண்கள் இணைந்து தையல் வேலைகளைச் செய்தனர். அல்லைப்பிட்டி, சாவற்கட்டு, சாத்தியக்காடு, நாவற்குழி போன்ற இடங்களில் தமிழ் வாடிக்கையாளர் நல்ல மரியாதையுடன் ஆண் – பெண் முஸ்லிம்களை நடத்துவதாகக் கூறுகின்றனர்.
நகரத்தில் நிலவும் தொடர்ச்சியான நிலப்பற்றாக்குறை, குடியிருப்புப் பற்றாக்குறை, மீள்குடியேறிய முஸ்லிம்கள் இழந்த நில உரிமைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள், சனத்தொகை பெருக்கம், முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளேயான பால்நிலை, வகுப்பு என்பன ஒன்றையொன்று இடைவெட்டும் பெண்கள் மீதான புறநிலைப்படுத்தல்கள், இஸ்லாம் கூறும் வட்டி சார் நியமம், நிலையான வேலைவாய்ப்பு – வருமானம் இன்மை, முதலீடு இன்மை முதலிய சவால்களும், அதிகரித்த சந்தை போட்டிகளும், பொருத்தமில்லாத நிறுவனம் சார் திட்டங்களும், மேல்கூறிய எல்லாவற்றிலும் கொரோனாவின் தற்போதைய தாக்கமும் மக்கள் பங்குபற்றுதலுடனான முன்னுரிமைப்படுத்தலுடனும் பல்பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாட்டுடனும் அணுகப்படவேண்டியவை; தீர்க்கப்படவேண்டியவை. கல்வியில் ஆர்வம் இன்றி இருக்கும் இளைய தலைமைமுறையை கல்வியின் பால் நாட்டம் அதிகரிக்க செய்யவேண்டிய சவால் நிறைந்த பணியும் சோனகத்தெரு முஸ்லிம் சமூகத்திடம் உள்ளது. ஒரு சமூகம் வாழ்வதற்கான அடிப்படைக் கட்டுமானங்கள் அற்ற நிலையில் ஆக்கபூர்வமான மீள்குடியேற்றம் என்பது சாத்தியமற்ற விடயம் என்பதையும் மேற்குறித்த சில விடயங்கள் சுட்டிநிற்கின்றன.
கலாநிதி பகீரதி ஜீவேஸ்வரா ராசனன்
விரிவுரையாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்