Photo: Tamilguardian

பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசு பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது எனக் கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைதுசெய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம்  இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை பொறுப்பேற்ற அரசாங்கங்கள் இச்சட்டத்தினை நீக்கவில்லை. மாறாக, அரசின் அதிகாரத்தை அதிகரித்த சட்டங்களை அல்லது திடகாத்திரமான மனித உரிமை பாதுகாப்புக்கள் அற்ற சட்டங்களையே அரசாங்கங்கள் முன்மொழிந்தன.

முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் அறிக்கைகளையும் முடிவுகளையும் மீளாய்வு செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையில்  பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்யத் தேவையில்லை என பரிந்துரை செய்தது என ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மாறாக, ஆணைக்குழுவானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய சில பரிந்துரைகளை முன்வைத்தது. இப்பரிந்துரைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை எவ்விதத்திலும் நிவர்த்தி செய்ய மாட்டாது.

முதலாவது பரிந்துரை, பிரிவு 9 இற்கு ஏற்ப தடுப்புக் கட்டளையின் கீழ் 3 மாதங்களோ அல்லது அதற்கு மேலதிக காலப்பகுதிக்கு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குறித்த வழக்கு முடிவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதேயாகும். இப்பரிந்துரையானது, தடுத்துவைக்கப்பட்ட அனைவருக்கும் எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான ஆதாரங்கள் கட்டாயமாக உள்ளன எனக் கருதுவதாகத் தென்படுகிறது. தடுத்துவைத்த எல்லோருக்கும் எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலையில் ஆதாரங்களை புனைவதற்காக தடுப்புக் காவலில் இருப்பவர்களை சித்திரவதை செய்து  ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்ளும் அபாயம் உள்ளது. தற்போது கூட இச்சட்டத்தின் கீழ் ஒருவரை தடுப்புக் கட்டளையின் கீழ் நீதிபதியின் கட்டளை இல்லாமல் மேற்பார்வையில்லாமல் 18 மாதங்களுக்கு தடுத்து வைக்க முடியும். இந்த அதிகாரமானது ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கு இடமளிக்கிறது.

மேலும், ஆணைக்குழு இச்சட்டத்தின் பிரிவு 11 இனை பயன்படுத்தி ஆட்களை தடுத்து வைக்கும் நிலையங்களில் அல்லாது அவர்களின் வீடுகளில் தடுப்புக் காவலில் வைப்பதை பரிந்துரை செய்கிறது. தடை உத்தரவுகளை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு பிரிவு 11 அதிகாரம் அளிக்கின்றது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் குறித்த உத்தரவின் மூலம் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ, பொது நிகழ்வுகளில்  பேசுவதையோ அல்லது அமைப்புக்களுக்கு ஆலோசனை வழங்குவதையோ கூட தடைசெய்யலாம். சட்டத்தின் இந்தப் பிரிவானது விரிவாக பயன்படுத்தப்படுமானால், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளையும் கூட மட்டுப்படுத்த முடியும். குறித்த தடையுத்தரவிற்கு எதிராக எந்தவொரு நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத படி இச்சட்டம் தடை செய்கிறது.

ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட மூன்றாவது பரிந்துரையானது, பிரிவு 13இன் கீழ் அனைத்து சமூகங்களிலிருந்தும் உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை சபையை நியமிப்பதாகும். இந்தச் சபை ஜனாதிபதியால் நியமிக்கப்படும். மேலும், தடுத்து வைக்கப்பட்டோர் இச்சபைக்கு செய்யும் முறைப்பாடுகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விதிகளை உருவாக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. ஆலோசனைச் சபையானது அமைச்சரின் கட்டுப்பாட்டினுள் இருப்பதனால் அமைச்சரின் செயல்களுக்கு எதிராக எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையும் இச்சபையானது பரிசீலித்துப் பார்க்காது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களின் சமூக அந்தஸ்த்து மற்றும் தராதரம் என்பவை அவர்கள் அரசு மற்றும் பொது மக்களால் மாத்திரமல்லாது மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட எந்தவிதத்தில் நோக்கப்படுகிறார்கள் மற்றும் நடாத்தப்படுகிறார்கள் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், சித்திரவதை செய்யப்பட்டவர்கள், பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் உரிய முறையில் நீதி முறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்படாதவர்கள் என பொதுவெளியில் அறியப்படாத பல நபர்கள் இருக்கின்றார்கள் என்பதை இத்தருணத்தில் நினைவூட்டுவது முக்கியமாகும்.

இக்கதைகள் பொதுவெளியில் கண்களுக்குப் புலப்படாத, மறக்கப்பட்ட மற்றும் அரிதாகப் பேசப்படுகின்ற பல்வேறுபட்ட நபர்களின் கதைகளாகும். ஆனால், இவை மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் ஒரு மனிதாபிமானமற்ற சட்டத்தின் மிருகத்தனமான இயல்பினையும் அவை உண்டாக்கும் மனித அவலங்களையும் வெளிப்படுத்துகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் குறித்த விரிவான தகவல்களுக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலைப் பற்றிய அறிக்கை, அத்தியாயம் 20 மற்றும் 26 இனை பார்வையிடவும்.

  1. பர்மசிறி சந்தரய்யர் ரகுபதி ஷர்மா

பர்மசிறி சந்தரய்யர் ரகுபதி ஷர்மா 62 வயதான ஒரு இந்து மதகுரு ஆவார். அவர் நகர மண்டபம் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2000​ஆம் ஆண்டு கைதசெய்யப்பட்டு 20 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவரது வழக்கானது பொறிமுறை ரீதியான பாதுகாப்புக்கள் சித்திரவதையை தடுக்கவோ அல்லது முறையான நீதிமுறைச் செயன்முறையின் மீறலை தடுக்கவோ செயற்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 7(3) ஆனது, சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விசாரணை செய்வதற்காக பொலிஸ் அலுவலர்கள் விளக்கமறியலில் இருந்து வெளியில் எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இந்தப் பிரிவே ஷர்மா சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை இயலுமானதாக்கியது.

அவரின் கூற்றின் படி பொலிஸ் காவலில் இருந்த போது அவர் அனுபவித்த சித்திரவதைகள்:

அவர் அணிந்திருந்த பூனூலை பொலிஸார் வெட்டுதல், அவரது மத நம்பிக்கைக்கு முரணான வகையில் மாட்டிறைச்சி மற்றும் மதுபானங்களை ஊட்டுதல், தலைகீழாக தொங்கவிட்டு அடித்தல், மலக்குடலில் முட்கம்பிகளுடன் கூடிய ஒரு குழாயை சொருகி வெளியே எடுத்தல் மற்றும் அவரது பிறப்புறுப்பை அலுமாரியில் வைத்து நசுக்குதல்.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதையை நீதிபதிக்கு தெரிவிக்கக்கூடாது என பொலிஸ் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக 72 மணித்தியாலங்கள் சிறையிலிருந்து வெளியே எடுத்து தங்களது காவலில் வைத்திருப்பதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெற்றார்கள். குறித்த தற்காலிக தடுப்புக் காவலில் இருந்தபோதும் தான் அதே மாதிரியான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இதேபோல் இரண்டாவது முறையும் அவர் விளக்கமறியலில் இருந்து பொலிஸாரால் வெளியே எடுக்கப்பட்டு மேற்கூறப்பட்ட முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அவருக்கு புலமையில்லாத சிங்கள மொழியிலான அறிக்கைகளில் கையொப்பமிடுமாறு நிர்பந்திக்கப்பட்டார். அறிக்கையின் உள்ளடக்கங்கள் அவருக்கு விளக்கப்படுத்தப்படவும் இல்லை. இவ்வழியை பயன்படுத்தி மேலும் இரு தடவைகள் அவர் சிறைக்கு வெளியே எடுக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். விளக்கமறியலில் இருந்து குற்றப் புலனாய்வுத் துறையினரின் தடுப்புக் காவலுக்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அவர் சட்ட மருத்துவ அதிகாரியின் முன் கொண்டு செல்லப்பட்டார்.

2002இல் வெளியிடப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையானது, அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், எரிகாயங்கள் மற்றும் தழும்புகள் என்பன சித்திரவதையின் மூலம் ஏற்பட்டதுதான் என அவரது வாக்கு மூலத்திற்கு ஏற்ப உறுதிப்படுத்தியது. அவர் ஐந்தாவது முறை குற்றப்புலனாய்வு துறையின் தடுத்துவைப்பிற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு ஆளாக்கப்பட்டதுடன் அது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்தார். குறித்த புகாரானது சிறைச்சாலை அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆறாவது தடவையாக அவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்ட போது எந்தவிதமான சித்திரவதைக்கும் உள்ளாக்கப்படவில்லை.

அவரது வழக்கு நடவடிக்கையின் விசாரணைகளின் போது குறைந்தபட்சம் பதினெட்டு மாதங்கள் சட்ட பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தார். அதன் பின்னர் அவரை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணியும் கூட நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு முன் ஷர்மாவுடன் பேசி எந்தவொரு முன்னாயத்தங்களையும் செய்யாமல் வழக்கு விசாரணையின்போது தான் தன்னிடம் கேள்விகளைக் கேட்டதாக ஷர்மா கூறினார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் புனையப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்தார். ஷர்மா பின்வமாறு கூறினார்,

“ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு நபர் தனக்குத் தேவையான சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதைத் தடுப்பது பிழையான விடயமாகும். எனது கைகள் விலங்கிடப்பட்டு இருந்ததுடன் எனக்காக ஒரு சட்டத்தரணியும் இருக்கவில்லை. இதன் காரணாக, 300 வருடங்கள் சிறைதண்டனை விதித்து எனக்குத் தீர்ப்பளிக்கப்பட்டது.”

அவரது வழக்கு 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்யப்பட்டது.

நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஷர்மா, தனக்கு தொடர்ச்சியாக செய்யப்பட்ட சித்திரவதைகளின் காரணமாக தன்னால் சரியான முறையில் எழுந்து நடமாடவும் முடியாது என்று தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு தனக்கொரு சக்கர நாற்காலி தருமாறு சிறைச்சாலையில் வேண்டுகோள் விடுத்ததுடன், அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறினார். அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் எந்த பலனையும் அளிக்கவில்லை எனவும் விசனப்படுகிறார். அவர் சிறைவாசம் அனுபவிக்கும் போது கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி படுத்தபடுக்கையானதுடன் மிகவும் நோய்க்கும் உள்ளானார்.

மிக நீண்ட காலமாக நோய் நிலைக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வந்த ஷர்மாவின் மனைவி அவர் கைது செய்யப்பட்டு சில வாரங்களில் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் சில மாதங்கள் வைக்கப்பட்டதுடன் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டார். 15 வருட விளக்கமறியலின் பின்பு அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களில் இருந்தும் 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

  1. விக்னேஷ்வரநாதன் பார்த்தீபன்

44 வயதான விக்னேஷ்வரநாதன் பார்த்தீபன் கிட்டத்தட்ட 25 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 1996இல் அவர் 19 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது கைதிற்கான காரணம் சொல்லப்பட்டிருக்கவில்லை.

“நான் அந்த நேரம் மலாயன் வீதியில் வசித்து வந்தேன், மக்கள் அங்கும் இங்குமாக ஓடியவாறு குண்டு வெடித்துள்ளதாக கூக்குரலிட்டனர். நான் மட்டும்  தமிழில் அலறியதன் காரணமாக அங்கு சூழ்ந்திருந்த மக்கள் நான் ஒரு தமிழ் புலி என சத்தமிட்டனர்” என அவர் தெரிவித்தார்.

பொலிஸ் விசாரணைகளின் போது, அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார். தினசரி இரு வாரங்களாக அவர் விசாரணையின் போது தாக்கப்பட்டதுடன் தலை கீழாக தொங்கவிடப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். அவரது பிறப்புறுப்பில் சுடு தண்ணீரை ஊற்றியதுடன், மிளகாய் தூளும் தேய்த்துள்ளனர். அவரது முகத்தை பெற்றோல் நனைத்த பையால் மூடியுள்ளனர்.

அவர் குறித்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ளாவிடில் இந்த சித்திரவதைகள் தொடரும் என அவருக்கு சொல்லப்பட்டது. சிங்கள மொழியால் எழுதப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட்டால் மாத்திரமே அவரை சித்திரவதை செய்வது நிறுத்தப்படும் என கூறப்பட்டதாகத் தெரிவித்தார். கையொப்பமிடுவதற்காக கொடுக்கப்பட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் அவருக்கு விளக்கப்படுத்தப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் ஐந்தாறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகைத் தந்தபோது உத்தியோகத்தர்கள் பார்த்தீபனையும் தடுத்து வைக்கப்பட்ட ஏனையோரையும் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு காட்டாது வேண்டுமென்றே மறைத்தனர் என்று கூறினார்.

அதே வருடத்தின் ஜூன் மாதமளவில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட முன்பு அவர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் கொண்டு செல்லப்பட்டார். சட்ட மருத்துவ அதிகாரியிடம் அவருக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற நடத்தை தொடர்பில் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

நீதிமன்றத்திலும் கூட, சிங்கள மொழியறியாத பார்த்தீபனினால் நீதிபதியிடம் சரியான முறையில் தன் பக்க நியாயத்தை எடுத்தியம்ப முடியவில்லை. நீதிமன்ற முறைமை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூட அறியாததனால் தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை தொடர்பில் நீதிபதியிடம் புகாரளிக்க முடியும் என்பதை கூட அவர் அறிந்திருக்கவில்லை. பார்த்தீபன் கைதுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்களின் பின்பே அவரது குடும்பத்தினரால் அவரைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

1997ஆம் ஆண்டு புதிய மெகஸின் சிறையில் ஏனைய கைதிகளுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை முழந்தாலிடச் செய்து அடித்தனர். அதன் பின்னர் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடிய பாதுகாப்பற்ற சம்பவங்கள் நடந்த களுத்துறை சிறைச்சாலைக்கு தண்டனை வழங்கும் முகமாக மாற்றப்பட்டார்.

மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் சிங்கள மொழியில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழங்கப்பட்ட தமிழ் பொருள்கோடல் துல்லியமானதாக இல்லாததன் காரணமாக பார்த்தீபனால் 50% ஆன வழக்கு நடவடிக்கைகளை மாத்திரமே புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். 2002ஆம் ஆண்டு அவருக்கு குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் ஆயுள் தண்டனையுடன் 20 வருடங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இது ஒரு உயர்பீடங்கள் சம்பந்தமான வழக்காக இருந்தமையால் சட்டத்தரணிகள் அவரை நீதிமன்றில் பிரதிநிதித்துவப்படுத்த மறுத்ததால் அரசால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘தண்டனை வழங்கப்படும் போது நபரின் வயது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என’ அவர் மேலும் தெரிவித்தார்.

2002இல் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்தார். 2018 ஆம் ஆண்டிலும் அவ்வழக்கு நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. மேன்முறையீட்டு வழக்கிற்கான தவணைத் திகதிகள் வருடத்திற்கு ஒரு முறை தனக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

“யாரேனும் தீய பழக்கங்கள் எதுவுமின்றி சிறைச்சாலைக்குள் வருகை தந்தால் இந்த இடத்தை விட்டு மோசமான நபராகத்தான் வெளியில் செல்வார். சிறைச்சாலை என்பது ஆட்களை சீர்த்திருத்தும் இடமில்லை, இது அனைத்து கெட்ட பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்ளும் இடம்” என்றும் அவர் தெரிவித்தார்.

  1. வேலாயுதம் வரதராஜா

வேலாயுதம் வரதராஜாவிற்கு 47 வயது. 21 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2000ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.

வவுனியாவில் வைத்து காரணம் சொல்லப்படாமல் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் கண்கள் கட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டிருந்ததுடன் தான் அழைத்துச் செல்லப்பட்டது ஜோசப் முகாமிற்கு என்று பின்புதான் அவர் தெரிந்துக் கொண்டார். அங்கு ஒரு மாத காலம் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய நேரங்களில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த விசாரணைகளின் போதும் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டார். நகங்களின் சதையில் ஊசியினால் குத்துதல், கட்டி வைத்து அடித்தல், தண்ணீரடித்தல் (waterboarding), பிறப்புறுப்பில் உதைத்தல் மற்றும் பெற்றோல் சுற்றப்பட்ட பையினைக் கொண்டு முகத்தைச் சுற்றுதல் போன்றன அவருக்கு செய்யப்பட்ட மனிதாபிமானற்ற செயல்களில் உள்ளடங்குபவையாகும்

“விசாரணைகளின் போது எங்களுக்கு தெரிந்திருந்ததோ இல்லையோ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த பதிலை நாங்கள் வழங்கும் வரைக்கும் எங்களை சித்திரவதை செய்கின்றனர்” என அவர் வேதனையடைந்தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பெயர் தலைப்பாகயிடப்பட்ட வெற்றுக் காகிதங்களிலும், சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த ஒப்புதல் வாக்கு மூலத்திலும் கையொப்பம் வைக்கும் படி வரதராஜா கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதையின் காரணமாக நீண்டகால உடல் நிலை பாதிப்பிற்கும் நோய் நிலைக்கும் ஆளானார்.

அவர் கொழும்பு தீவிரவாத புலனாய்வுப் பிரிவில் ஒரு மாதமும் குற்றப்புலனாய்வு பிரிவில் ஏழு மாத காலங்களும் தடுத்து வைக்கப்பட்டார். தீவிரவாத புலனாய்வு பிரிவில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிடுமாறு மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தப்பட்டார். அவர் கையொப்பமிட்ட ஆவணங்களின் உள்ளடக்கம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது தண்ணீர் கொண்டு தாக்கப்பட்டார் எனக் கூறினார். ஆவணங்களில் கையொப்பமிடுவதைத் தவிர தனக்கு வேறு எந்த வழி இருக்கவில்லை என அவர் மேலும் வருத்தம் தெரிவித்தார். தீவிரவாத புலனாய்வு பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மருத்துவ உதவியினை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும் கூறினார்.

கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு மாதங்களின் பின்புதான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தினை அவரது குடும்பத்தினர் அறிந்துக் கொண்டனர். சர்வதேச செஞ்சிலுவை சங்க தரப்பினர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு சென்ற போது, வரதராஜாவை அவர்களுக்கு காட்டாது மறைத்து விட்டனர்.

“நீண்ட காலங்களின் பின்பு, எனது காயங்கள் ஆறிய போதுதான் அவர்கள் என்னை சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தரப்பினரிடம் காட்டினர். சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு உதவியதுடன் நான் வீட்டிற்கு கடிதம் அனுப்ப வேண்டுமா என்றும் என்னிடம் வினவினர்” என தெரிவித்தார்.

நிர்வாக தடுப்பில் ஒன்பது மாதங்கள் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு தடுப்புக் கட்டளையின் ஒரு பிரதியேனும் வழங்கப்படவில்லை. நீதிமன்றில் வரதராஜாவை முன்னிலைப்படுத்த முன்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டதுடன், இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகள் தொடர்பில் வெளிப்படுத்தக் கூடாது என அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டார்.  அவரை பரிசோதிக்கும் போது கூட சட்ட மருத்துவ அதிகாரி அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. கைதுசெய்யப்பட்டு ஒன்பது மாதங்களின் பின்பு அவர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிபதி சிங்கள மொழியில் பேசியதன் காரணமாக அவரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு என்வெனில், 2002ஆம் ஆண்டு மே மாதம் நகர மண்டப குண்டு வெடிப்பிற்கு உதவி செய்து உடந்தையாக இருந்தமையாகும். குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இரண்டாம் முறையாக அவர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது சித்திரவதையினால் உண்டான 27 காயங்களை அவரது உடலில் சட்ட மருத்துவ அதிகாரி குறித்துக் காட்டினார்.

2015ஆம் ஆண்டு 30 வருடங்களுக்குள் நிறைவேற்றப்படக் கூடிய 290 வருட சிறைவாசத்திற்கு அவர் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தடுப்புக் காவலில் செலவிட்ட 15 வருடங்கள் குற்றத் தீர்ப்பளிக்கப்படும் போது கணக்கிலெடுக்கப்படவில்லை. தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த போதிலும், மேன்முறையீட்டு வழக்கானது இரண்டரை வருட காலங்களின் பின்பே நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் இன்னும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அவரது குடும்ப உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற காரணத்தினாலும், பொருளாதார நெருக்கடிகளினாலும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள்தான் அவரை வந்து பார்வையிடுகின்றனர். சிறையில் காணப்படும் வருகைத் தருவோரை சந்திக்கும் இடத்தின் மோசமான நிலைமையின் காரணமாக தனது குடும்பத்தினரின் முகத்தை வரதராஜா மிக அரிதாகவே பார்க்கக் கூடியதாகவுள்ளது. அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.

தான் அனுபவித்த இதய நோய்கள் சம்பந்தமாகவும் ஏனைய நோய் நிலைமைகள் தொடர்பாகவும் மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார். நோயாளர்கள் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வரை தங்க வைக்கப்படுவதற்காக வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் போது ஏனைய நோயாளர்களை போல கட்டில் வழங்கப்படுவதற்குப் பதிலாக இவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர் என்றபடியால் சிறைகூடத்தில் அடைக்கப்பட்டார்.

வெலிக்கடை சிறை வைத்தியசாலையின் சிறைக் கூடங்களானவை, இயற்கையாகவே வெளிச்சம் மற்றும் காற்றுப் போகக் கூடிய வசதிகளற்றவை என்பதுடன் நோயாளர்கள் தரையில்தான் படுத்துறங்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், அவர் வெறுமனே வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பொது வைத்தியசாலையில் மருத்துவ சேவைக்காக அழைத்துச் செல்லப்படாமலே மீண்டும் புதிய மெகஸின் சிறைக்கு கூட்டிச் செல்லப்படுவார். ஏனென்றால், குறைந்த எண்ணிக்கையிலான சிறை அதிகாரிகள்தான் கைதிகளுக்கு உதவுவதற்காக வைத்தியசாலைக்கு வருகைத் தருவதுடன், ஒன்று அல்லது இரண்டு பாதுகாப்பதிகாரிகள் கைதிகளுடன் பஸ்ஸில் தரித்திருக்கும் போது மற்றவர்கள் ஒவ்வொருவராக மருத்துவ சேவையைப் பெறுவதற்காக கைதிகளை அழைத்துச் செல்வர். வைத்தியசாலையில் வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டி நேரிடுவதால் வைத்தியசாலையில் மருத்துவ சேவை வழங்கும் இடம் மூடப்படுவதற்கு முன்பு அனைவரையும் அழைத்துச் செல்வது சாத்தியமற்றுப் போகிறது.

மருத்துவ சேவையைப் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படுவதில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் புகாரளித்தப் போது, சிறை அதிகாரி சிறை வைத்தியசாலையில் இருந்த ஏனைய கைதிகளிடம் “நான் புகாரளித்ததற்காக எனக்கு நல்லதொரு பாடத்தை புகட்டப்போகிறேன் என தெரிவித்திருந்தார் என மற்ற கைதிகள் எனக்கு கூறினார்கள்” என்று கூறினார்.  மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சிறை அதிகாரிகளால் சிறை வைத்தியசாலையில் வைத்து தாக்கப்பட்டதாகவும்  கூறினார்.

அம்பிகா சற்குணநாதன்