Photo, Dinuka Liyanawatte/Reuters, ALJAZEERA
“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை, கூட்டங்களில் பங்குபற்றுவோரை கைதுசெய்வதை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை”
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (வீடியோ)
“சுகாதார நடைமுறைகளை மீறுவது – ஜோசப் ஸ்டாலினா இருந்தாலும், லெனினாக இருந்தாலும், ஏன் கார்ல் மார்க்ஸாக இருந்தாலும் கூட வித்தியாசம் பார்க்காது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு உள்ளது.”
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி (வீடியோ)
கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள், தலைவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்தும், பலவந்தமாக தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பிவைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல மட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த நிலைமையிலேயே பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இருவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்கள்.
கொவிட் பெருந்தொற்றை காரணம் காட்டி மக்கள் நலன்களுக்கு விரோதமான அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுவரும் தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், மக்கள் என அனைவரும் கைதுக்குள்ளாகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள், தனிமைப்படுத்தல் சட்டம் அரசியல்வாதிகளை ஒன்றும் செய்யப்போவதில்லை. நேற்றுமுன்தினம் (16 ஜூலை 2020) நாவலப்பிட்டி நகரசபையின் அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியதை அடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் நாவலப்பிட்டி நகரில் பேரணி சென்றிருந்தனர்.
Sri Lanka: Is Police Minister Asleep? One country – two laws: Mahindananda holds marches in Nawalapitiya violating quarantine lawshttps://t.co/X1ZoJgjqHQ
පොලිස් ඇමති බුදි ද? එක රටක් – නීති දෙකක් : නිරෝධායන නීති කඩා මහින්දානන්ද නාවලපිටියේ පෙළපාලි යයි. https://t.co/hEyJrjKyHE
— Lionel Bopage (@Leonine111) July 16, 2021
இவர்களுக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர கூறியதைப் போன்றோ அல்லது அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சொன்னதைப் போன்றோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நாட்டு மக்களுடைய பேச்சுச் சுதந்திரத்தின் கழுத்து நசுக்கப்படுவது, இராணுவமயமாக்கப்படும் கல்வி, அரசாங்கத்தின் சர்வாதிகாரப்போக்கு குறித்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மாற்றத்துடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.
ருக்கி பெர்னாண்டோ, மனித உரிமை செயற்பாட்டாளர்
கருத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான – அமைப்புகளை உருவாக்குவதற்கான சுதந்திரம் என்பது வாழ்வாதாரத்திற்கான, சுகாதாரநலன்களிற்கான, உணவு, கல்வி மற்றும் பாரபட்சமின்மை ஆகிய உரிமை உட்பட எந்த உரிமைகளிற்கான போராட்டத்திலும் மிகவும் முக்கியமானது. தங்கள் உரிமைகள் ஒடுக்கப்பட்ட அல்லது உரிமை மறுப்பினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களிற்கும் மக்களிற்கும் இந்த உரிமைகள் குறிப்பாக முக்கியமானவை. போர், இயற்கை அனர்த்தங்கள் அல்லது பெருந்தொற்று போன்ற நெருக்கடி மிக்க தருணங்களில் அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிடுகின்றன. மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவர்கள் தங்களது நெருக்கடிகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி அவற்றிற்குத் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட முடியும் என்பதாலேயே இவை மிகவும் முக்கியமானவை.
தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் இந்த உரிமைகளை கட்டுப்படுத்துவது தற்காலிகமானதாகவும், அளவுக்கதிகமற்றதாகவும், பாகுபாடு அற்றதாகவும் சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்டதாகவும் காணப்படவேண்டும். சமீபத்தில் அரசாங்கம் சுதந்திரமாக தகவல் வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மருத்துவ துறைகளை சேர்ந்தவர்களை எச்சரிப்பது உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தை விமர்சிக்கும் அல்லது அரசாங்கத்திற்கு மாறான கருத்தை சமூக ஊடகங்கள் மூலமாகவும் வேறு வழிமுறை மூலமும் வெளியிடுபவர்களை பொலிஸார் விசாரணை செய்து கைதுசெய்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்களை காரணம் காட்டி பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கியுள்ளனர். ஆனால், அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் ஒன்றுகூடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். கைதுசெய்யப்படுபவர்களும் தடுத்துவைக்கப்படுபவர்களும் சித்திரவதை செய்யப்படுவதும் மோசமான விதத்தில் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் எவ்வாறான சூழ்நிலையிலும் தடைசெய்யப்பட்டவை.
அரசாங்கத்தின் கொள்கைகளை பல்வேறு வழிமுறைகள் ஊடாக விமர்சிப்பது, கண்டிப்பது அரசமைப்பினால் வழங்கப்பட்ட உரிமை என்பதை இலங்கை நீதிமன்றங்கள் பல தடவை வலியுறுத்தியுள்ளன. நியாயபூர்வமாக உடன்பட மறுப்பவர்களின் அமைதியான கருத்து வெளிப்படுத்தலை ஒடுக்குவது, என்றோ ஒரு நாள் அது வன்முறையாக வெடிக்கும் என்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் மார்க் பெர்ணான்டோவின் கருத்தினை பொலிஸாரும் அரசாங்கமும் செவிமடுக்கவேண்டும்.
அகிலன் கதிர்காமர், சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா அனர்த்தத்துடன் நீண்டகாலமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி கூர்மையடையும் அதேநேரம் இலங்கையின் ஆட்சி எதேச்சாதிகாரத்தில் மற்றும் இராணுவமயமாக்கத்தில் மூழ்கிப்போகிறது. அதாவது நாட்டினுடைய நெருக்கடிக்கு ஒரு வலிமைமிக்க ஆட்சியாளர் மற்றும் இராணுவ ரீதியான ஒழுங்குதான் தீர்வாக இருக்கும் எனும் கருத்தியல் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறான ஆட்சி என்பது சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட முஸ்லிம் விரோத அலையைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த ஆட்சி தொடர்ந்தும் நெருக்கடிகள் வரும் போது அதற்கு காரணம் முஸ்லிம் மக்களே என்கிறது. உதாரணமாக கொரோனாவினுடைய தொற்றுக் கூட முஸ்லிம் மக்களால்தான் பெருமளவாக உருவாகியது எனும் ஊகக் கருத்துக்களையும், கொரோனாவால் இறந்த முஸ்லிம் மக்களை அடக்கம் செய்யும் உரிமையை மறுத்தது. அதற்கு மேலாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னப் ஜஸீம் மற்றும் வேறுபலருடைய நீண்டகால தடுப்பு, மத்ரசா பாடசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் புர்காவை தடைசெய்வது போன்ற கருத்துக்களும் வெளிப்படையாக முன்வைக்கப்படுகின்றன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆழமாகிக்கொண்டு போகும்போது ஆட்சியாளர்கள் வேறுபல தரப்புகளையும் ஒடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது. கல்விசார்ந்த நடவடிக்கைகளுக்கு போராட்டம் செய்வோர்கூட கைது செய்யப்பட்டு கொரோனா தடுப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்களினுடைய பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் எதிர்ப்புகூறும் சுதந்திரம் எல்லாம் ஒடுக்கப்படுகிறது. அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் என்பது கல்வியை தனியார் மயப்படுத்துவது என்பதற்கப்பால் இராணுவ மயப்படுத்துவதற்கும் கல்வித்துறைக்குள் இருக்கும் அறிவுக்கான சுதந்திரம் மற்றும் சுயாதீனமான செயற்பாடுகளைகூட குழப்பும் நிலையை உருவாக்கலாம். பொருளாதார பிரச்சினைகள் கூர்மையடையும்போது அரசு இனரீதியாக மக்களை பிளவுபடுத்துவதுடன் எதிர்ப்பு போராட்டங்களையும் நொறுக்க முற்படுகிறது. இந்த விடயத்தை மக்கள் கவனத்தில் எடுத்து நாட்டில் இருக்கும் எதேச்சாதிகார மற்றும் இராணுவமயமாக்கும் திசையை ஐனநாயக மற்றும் பன்மைத்துவ திசைக்கு மாற்றவேண்டிய தேவையுள்ளது.
நதீ கம்மெல்லவீர, சிரேஷ்ட நடிகை மற்றும் சமூக ஆர்வலர்
ராஜபக்ஷ குடும்ப அரசாங்கம், எல்லா பக்கமாகவும் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அண்ணன் தம்பிகள், மகன்கள், மச்சான்கள், மருமகள்கள், மாமன்மார்களின் அரசாங்கம் எமது நாட்டை படுபாதளத்துக்கு இழுத்துக்கொண்டு போகும் வேகத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எனக்குள் பெரும் பீதியுணர்வு எழுகிறது. மக்களுக்கு எதிரான சட்டங்களை திருட்டுத்தனமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். நாட்டின் மிகவும் பெறுமதிமிக்க சொத்துக்கள் சீனாவுக்கும் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விற்கப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் கூட இராணுவமயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிராக எழும் குரல்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. கொவிட் தொற்றைக் காரணம் காட்டி மக்கள் எதிர்ப்பை வெளியிடக்கூடிய அத்தனை வழிகளையும் மூடப்பார்க்கிறார்கள். பொய்யான சுகாதார காரணங்களை முன்னிறுத்தி வீதியில் இறங்கும் மக்களை இழுத்துச்சென்று இராணுவ முகாம்களில் தடுத்துவைக்கிறார்கள்.
இன்னொடு பக்கம் சமூக ஊடகங்களில் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கும் மக்கள் அச்சுறுத்துப்படுகிறார்கள். விசாரணைக்காக சிஐடியினர் அழைக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம், ICCPR சட்டங்களைக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தி பேசும், எழுதும் மக்களை வருடக்கணக்காக தடுத்துவைத்திருக்கிறார்கள். அடிப்படைவாதத்துக்கு எதிராக தமிழில் கவிதை எழுதிய அப்பாவி இளைஞர் அஹ்னப் ஜஸீமுக்கு இழைத்திருக்கும் அநீதியைப் பாருங்கள்…
பேச்சுச் சுதந்திரத்தை நசுக்குவதன் மூலம்தான் ஒரு சர்வாதிகார அரசாங்கம் நாட்டை தன்னிச்சையான, எதேச்சாதிகார முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முதல் படியாகும். அரசாங்கத்தின், அரசாங்கத்தை நடாத்தும் திலித் ஜயவீரவின், ரெனோ த சில்வாவின் செனல்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடும் பொய்கள், ஏமாற்று வித்தைகளுக்கு மாத்திரம் இடமளித்துவிட்டு, ஏனைய அனைத்து சுதந்திர கருத்துடையோரை நசுக்குவதே அரசாங்கத்தின் தேவையாக உள்ளது.
இவற்றுக்கு எதிராக நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். நான் கூறுவது, அழுத்தத்தைப் பிரயோகிக்கக்கூடிய பதவிகளில் உள்ள சட்டத்தரணிகள், அதிகாரிகள், நீதிமன்ற சேவையோடு தொடர்புபட்ட ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், நாடு குறித்து அக்கறையுள்ள வர்த்தகர்கள் என அனைவரும் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஓரணியில் திரண்டு குரல்கொடுக்கவேண்டும். இல்லையென்றால் இன்னும் சில வருடங்களின் பின்னர் ராஜபக்ஷாக்களின் அடிமை நிலமொன்று எஞ்சுமே ஒழிய இலங்கை என்று ஒன்று நமக்கு இருக்காது.
அம்பிகா சற்குணநாதன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி
இலங்கையில் வரலாற்று ரீதியாக பார்த்தோமானால், அரசாங்கங்கள் மாற்றுக்கருத்துக்களையும் பேச்சு சுதந்திரத்தையும் முடக்க சட்டத்தைப் பாவிப்பது புதிதல்ல என்பது தெளிவாகும். நல்லாட்சி அரசாங்கம் கூட இதுக்கு விதிவிலக்காக இல்லாதபோது, மாற்றுக்கருத்துக்கு சகிப்புத்தன்மை இல்லாத, ஜனநாயகத்தை அவமதிக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் இவ்வழிமுறையை பாவிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ICCPR சட்டம் ஆகியவை முக்கியமாக அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளை எதிர்ப்பவர்களை கைது செய்யவும், தடுத்துவைக்கவும் பயன்படுத்தப்பட்டன. தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, மே மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் போரால் கொல்லப்பட்டோரை நினைவு கூர்ந்தோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
பெரும்தொற்றை காரணம் காட்டி தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பாவித்து தென் இலங்கையில் தடைசெய்யப்படும் போராட்டங்களை பற்றியே பெரும்பாலும் பேசப்படுகிறது. வட கிழக்கில் பெரும்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் மற்றும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள் பெற்றுக்கொள்ள போராடும் கேப்பாபிலவு மக்கள் ஆகியோரின் போராட்டங்கள் இச்சட்டத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்டன. அதையும் மீறி மக்கள் எத்தனையோ விதங்களில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் ஜனநாயகம் பெயரளவில் இருந்தாலும் ஜனநாயகக் கொள்கைகள் உள்வாங்கப்படவில்லை. ஆகையால், ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் அதிகாரம் பலவீனமாகும் போது சர்வாதிகார முறைகளையே மக்களின் குரல்களை மௌனமாக்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள். இத்தருணங்களில் சட்டம் மக்களைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படாமல் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஆயுதம் ஆகிறது.
ஷ்ரீன் சரூர், மனித உரிமை ஆர்வலர் மற்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்
கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடியவர்களை வயது வித்தியாசம் கூட பார்க்காமல் மிருகத்தனமாக நடத்திய விதம் பிழையானது. நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுதலை செய்தும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களைக் பட்டப்பகலில் நீதிமன்றின் முன்னால் ஊடகங்கள் பார்த்துக்கொண்டிருக்க கடத்திச்சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை கொவிட் தொற்ளைத் தடுக்கும் நடவடிக்கையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒரு கடத்தல் சம்பவமாகவே பார்க்கிறோம். இதனூடாக அரசாங்கத்துக்கு எதிரான, மாற்றுக் கருத்துள்ளோரை அச்சுறுத்தவதற்கு – குரல்வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் எத்தனிக்கிறது. எதிர்காலத்தில் சம்பள உயர்வு கோரி போராடும் தோட்டத்தொழிலாளர்கள், உரம் கேட்டு போராடும் விவசாயிகள், அரசாங்கத்தின் லஞ்ச ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை கேள்விக்குட்படுத்தும் எவருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடும். இவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பித்திருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.
கொவிட் காரணமாக ஒன்றுகூட முடியாத ஒரு சூழ்நிலையில் இப்போது சமூக ஊடகங்களில்தான் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்போது அவர்களது கருத்துக்களையும் நசுக்குவதற்கு புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சிசெய்து வருகிறது. இப்படியே போனால் இந்த நாடு சர்வாதிகாரம் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட நாடாக, ஊடகங்களுக்கோ, சிவில் சமூகத்தினருக்கோ, சாதாரண மக்களுக்கோ தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத ஒரு நாடாக மாறிக்கொண்டுவருவது நன்றாகத் தெரிகிறது.